Advertisement

அத்தியாயம்….6

ஷ்யாம் பதிவு அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு செல்லாது நேராக அலுவலகத்திற்க்கு வந்து விட்டான். ஏனோ அவனுக்கு  மனது  இடறி கொண்டே இருந்தது. தன் முன் வந்து நின்ற பெண்ணை யாரோ என்று நினைத்து தான் அவன் அவ்வாறு பேசினான்.

பின் தெரிந்தும்  அப்போது அவன்  பெரியதாக அலட்டி கொள்ளவில்லை தான். இதில் என் தவறு என்ன இருக்கிறது…?  சொந்தம் பார்க்காது வளர்ந்தது என் தவறு கிடையாது. சொந்த தங்கை எனக்கு தெரியவில்லை.  என்னிடம் பழக விரும்பும் மற்றைய பெண்கள் போல என்று நினைத்து விட்டேன் .

தெரியாது போனதற்க்கு யார் காரணம். இது தான்  அப்போதும் அவன் நினைத்தான். ஆனால் அப்போது அந்த பெண் பார்த்த பார்வை. இப்போது அவனை பலமாக தாக்கியது.

இந்த நிலைக்கு நான் காரணம் இல்லை என்பது எவ்வளவு நிச்சயமோ, அதே தானே அந்த பெண்ணும் காரணம் இல்லை என்பது நிச்சயமே,

“அண்ணா.” என்ற அந்த உறவு எவ்வளவு உன்னதமானது. 

இப்படி பேசி.  இப்படி பார்த்து விலகும் உறவா.? மற்றவர்கள் யாராவது தவறாக  பார்த்தாலோ, பேசினாலோ, நான் போய் நிற்க வேண்டும். ஆனால் நானே பேசி விட்டு வந்து இருக்கிறேன். இப்போது என்னை பற்றி என்ன நினைப்பாள்.

எனக்கு அன்னை இருந்தும் இல்லாதது போல்,  தனக்கு அண்ணன் என்று ஒருவன் இருந்தும் இல்லாதது போல்  என்று தானே அவள்  நினைப்பாள். என்று இங்கு ஷ்யாம் நினைத்துக் கொண்டு இருக்க.

அங்கு கெளசல்யா வீட்டில் ஒருவர் கிடையாது ஒரு பத்து  பேர் இருக்கும்.  “ உன் புருஷன் இவ்வளவு வாங்கினார். அவ்வளவு வாங்கினார்.”  என்று ஆள் ஆளுக்கு பேசுவது ஒரு பக்கம் என்றால், வந்தவர்களில் ஒரு  சிலர் பார்க்க ரவுடி போல் இருப்பதும், அவர்களின் பார்வை தன் பெண்களின் மீது அத்து மீறி படிவதையும் பார்த்து,  கெளசல்யாவுக்கு மனது ஏனோ தட தடக்க ஆரம்பித்து விட்டது.

கால் ஒரு நிலையில் இல்லாது ஆட்டம் காண. அப்படியே வெளியில் இருக்கும் திண்டில் அமர்ந்து விட்டார். அப்போதும் விடாது தான் இரு பெண்கள் இரு பக்கமும் நிற்பது,  கெளசல்யாவுக்கு ஆறுதலாக தான் இருந்தது.

ஆனால் வேண்டாம். இவர்கள் எதிரில் தன் மகள்கள் நிற்க வேண்டாம் என்று நினைத்து “ நீங்க உள்ளே போங்க. நான் தாத்தாவை கூப்பிட்டு இருக்கேன். இப்போ வந்து விடுவார். உள்ளே போ.” என்று சொல்லியும் இரு பெண்களும் உள்ளே  போகாது தன் அன்னை பக்கத்தில் தான் நின்று கொண்டு இருந்தனர்.

ஏன் என்றால் வந்தவர்களில் ஒருவர் பேச்சு கூட சரியானதாக இல்லை. வேறு மாதிரி. இது வரை அவர்கள் அது போல் வார்த்தைகள் எல்லாம் கேட்டது கூட இல்லை என்று சொல்லலாம்.

அவர்கள் வீட்டு பெண்கள் எப்போதும் கழுத்தில் இரண்டு ஜெயின். கையில்   ஆறு ஆறு வளையல் என்று போட்டு கொண்டு தான் இருப்பார்கள். அது பார்த்திபனின் கட்டளை.

வீட்டில் இருக்கும் பெண்களை வைத்து தான் ஒரு ஆணுக்கு வெளியில் கவுரவம் என்பது அவர் எண்ணம். அதாவது நகைகளை பார்த்து பரவாயில்லை அந்த ஆண் நல்ல முறையில் தான் வைத்து கொள்கிறார்கள் என்று  நினைப்பார்கள் என்று.

இதை பார்த்திபன் சொன்னது  கிடையாது.  கணவனின் குணம் அறிந்து கெளசல்யா எப்போதும்  அவர் சொன்னது போல் தான் நகை போட்டு கொண்டு இருப்பார்.

ஆனால் இந்த காலத்து பெண்கள். நகை என்பது அந்த காலத்து பேஷன் என்று  மாறி போனதால்,  வித விதமாக  ஆட்டிபிஷல் போட்டு கொள்ள தான் விரும்புவர். அதனால் தனுஜாவும் சரி, ஷைலஜாவும் சரி வீட்டில் போட்டு கொள்பவர்கள்.  வெளியில் போகும் போது  தன் கை பையில் வைத்து விடுவர்.

திரும்பவும் வீட்டுக்கு வந்தால்,  போட்டு கொள்வர். இதை ஒரு நாள் பார்த்து விட்ட பார்த்திபன். “ என்னை எல்லோரும் பிச்சைக்காரன் என்று நினைக்கனும். அதுக்கு தானே வழி செய்யிறிங்க. இனி கழட்டுங்க பார்.” என்று ஒரு ஆட்டம் ஆடி  தீர்த்து விட்டார்.

அதில் இருந்து பெண்கள் கூட நகையை கழட்டாது இருந்து விட்டனர். இப்போது அதுவே வந்தவர்கள் கண்ணுக்கு பெரியதாக தெரிந்தது போலும்.,

“ நகை நட்டுன்னு போட்டு இருக்கிங்க, ஆனா வாங்கின காசு கொடுக்கனும்,  என்ற எண்ணம் இல்ல போல.” என்று ஒருவர் சொன்னார்கள் என்றால். இன்னொருவரோ.

“நகை மட்டுமா பெரியதாக தெரிகிறது. பார்த்திபன் நம்ம கிட்ட வாங்கின காசை பெண்டாட்டி, பெண்ங்களுக்கு பாதம். பிஸ்த்தா. என்று வாங்கி கொடுத்து இருப்பார் போல.” என்று  சொன்னவனின் பார்வை சென்ற இடத்தை பார்த்து அந்த வயதிலும், கெளசல்யாவுக்கு கூனி குறுகி விட்டது.

 அப்படியே தோளை  குறுக்கி கொண்ட கெளசல்யா .. தன் பின்னே தன் இரு மகள்களையும் மறைத்து கொண்டு தான்.

“ உள்ளே போ. போ” என்று சொன்னதும். அவருக்குமே அங்கு நிற்க முடியவில்லை. ஆனால் தன் தந்தை வரும் வரையாவது யாராவது  ஒருவர் வெளியில் நிற்க வேண்டுமே, இல்லை என்றால் இவர்கள் வீட்டுக்கு உள்ளே வந்து விட்டால், அந்த பயம் தான்.

அப்படியும்  கூட ஒருவன். “ வீட்டில் போய் பேசலாமே, இத்தனை  பேர் கிட்ட வாங்கி இருக்கார். அது  என்ன  விவரம் என்று  அவங்களும் பார்க்கனும் தானே. படித்த பெண்கள் எல்லாம் விவரமா பார்ப்பாங்க.” என்று சொன்னவனின் பார்வையே  சொன்னது, அவன் ஏன் வீட்டுக்குள்  சென்று  பேசலாம் என்று சொல்கிறான் என்று.

கெளசல்யா மகள்களை வீட்டுக்குள் போ என்று சொல்லியும், அவர்கள் போகவே இல்லை. பெண்கள் ஆன அவர்களுக்கும் தெரிந்து தான் இருந்தது. ஆண்களின் வக்கிர பார்வை. அதுவு இரு பெண்களும் சின்ன பெண்கள் எல்லாம் இல்லையே. ஒரு பெண்ணுக்கு இருபத்தியெழு வயது. ஒரு பெண்ணுக்கு இருபத்தி மூன்று வயது. தெரியாதா ஆண்களின்  பார்வையில் இருக்கும் வேற்றுமை.

தெரிந்தது. தெரிந்தே தான்  அன்னையின் பக்கத்தை விட்டு அங்கும் இங்கும் நகராது இருந்தனர். ஏன் என்றால் அவர்களின் பார்வை பெண்களின் மீது மட்டும் படவில்லை. அன்னையின் மீதும் படிவதை பார்த்து,   இது வரை   தான் பெண்ணாய் பிறந்ததுக்கு பெருமை பட்டு கொண்டு இருந்த ஷைலஜா,  முதல் முறை நான் ஆணாக இருந்து இருந்தால், என் அம்மாவை  பார்த்த இவன்களை நான் சும்மாவா விட்டு இருப்பேன்.

அந்த வீட்டின் மூன்று பெண்களுக்குமே வீட்டில் ஒரு ஆண் இல்லை என்றால்,  எவ்வளவு பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டி உள்ளது என்று உணர்ந்தார்கள்.

பார்த்திபன் இது வரை வீட்டு பெண்களை, அண்ணிய ஆண்கள்  எதிரில் விட மாட்டார். அப்படி ஒர் கண்டிப்பு. வெளியில் போக வேண்டும் என்றால் கூட, காரணம் இல்லாது போக கூடாது.

பார்த்திபன் ஆண் ஆதிக்கவாதியாக இருந்தாலும், வீட்டில் பெண்கள் பாதுகாப்பாக தான் இருந்தார்கள். இன்று அவர் இல்லாததால் இவர்களின் நிலை இப்படி ஆனதா.? இல்லை பார்த்திபன் முதலில் இருந்தே தொழிலை பற்றியும்,  இருக்கும்  நிலையை பற்றியும் வீட்டு பென்களிடம் சொல்லி  இருந்து இருந்தால், இந்த நிலை வராது இருந்து இருக்குமோ, அப்படி வந்தாலும் அதை சமாளித்து இருப்பார்களோ. ஆனால் பார்த்திபன் இறந்து அந்த வீட்டின் பெண்களின் நிலை சொல்லி கொள்ளும் படி இல்லை என்று ஆனது தான் நிஜம்.

கெளசல்யா எதிர் பார்த்த அவர் தந்தை சொக்கலிங்கமும் வந்தார் தான். ஆனால் வயது முதிர்ந்தவர். அவரால் என்ன செய்ய முடியும்…? சொக்கலிங்கத்தால் முடியவில்லை. அது வந்தவர்களுக்கும் தெரிந்தது தான் இன்னும் பிரச்சனையை கூட்டியது.

ஒருவன் சொக்கலிங்கத்தை பார்த்து “ பெருசு உனக்கு என்ன தெரியும்.” என்று மரியாதை இல்லாது கூட பேசி விட்டார்கள்.

அதோடு சொக்கலிங்கத்திற்க்கும் இந்த பைனான்ஸ் பற்றி எல்லாம் தெரியாது. வியாபரம். துணிக்கடை. பாத்திரக்கடை.  இரண்டுமே அவருக்குஅவர்  மாமனார் வைத்து கொடுத்தது.

 அவர் சரஸ்வதியை திருமணம் செய்யும் போது, அவர்  அரசு வேலையில் தான் இருந்தார். தொழில் அமைத்து கொடுக்கவும், அரசு வேலையை விட்டு விட்டு முழு நேரம் தொழிலில் இறங்கி விட்டார். தொழிலும் அவரை கை விடாது ஏற்றி தான் விட்டது.

அதனால்  கடன் வாங்குவது. கொடுப்பது. அதில் இருக்கும் பிரச்சனைகள் என்று அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

அந்த பெரியவருக்கும் தெரிகிறது. வந்தவர்கள் நியாயத்திற்க்கு கட்டுப்பட்டவர்கள் கிடையாது என்பதும். அவர்களின் பார்வையை பார்த்து பெண்களிடம் இவர்கள் கன்னியத்தையும் கடை பிடிக்க மாட்டார்கள் என்பதும்.

சொக்கலிங்கம் வந்தவர்களிடம்  கை கூப்பி . “ஒரு வாரம். ஒரு வாரம் டைம் கொடுங்க. நான் ஏதாவது ஏற்பாடு செய்கிறேன்.” என்று அவரின் வயதையும் மறந்து. தன் பெண், பேத்திக்காக கீழ் இறங்கி கேட்டு கொள்ளவும் தான் அவர்களும்.

“ சரி பெருசு. இப்போ போறோம்.ஆனா அடுத்த வாரம் இதே நேரத்தில் நான்  இருப்பேன்.” என்று சொன்னவன்.

பெண்களின் மீது பார்வை இட்ட வாறே. “ ஆனா இந்த ஒரு வாரத்தில் அப்படி பெருசா என்ன நீ கிழித்து விடுவ. தெரியும் உனக்கு பாத்திர கடை , ஜவுளிக்கடை இருக்கு என்று. வீடு. இந்த வீடு. எல்லாம் வித்தா கூட இவ்வளவு கடனை அடைக்க முடியாதே. ம் ஏதோ பார்த்து செய் பெருசு,” என்று சொன்னவன் போகும் போது கூட கடைசியாக பெண்கள் பக்கம் பார்வையை வீசி விட்டே சென்றான்.

அலை அடித்து ஓய்ந்தது போல் தான் இருந்தது. அவர்கள் எல்லாம் சென்ற பின் அந்த இடம். ஆனால் இது நிறந்தரம் கிடையாதே, அவன்  சொன்னது போல் அனைத்தும்  விற்றாலும்,  கடன் அடைக்க முடியாத அளவுக்கு  அல்லவா பார்த்திபன் கடன் வாங்கி இருக்கிறார்.

கெளசல்யா. “அப்பா இப்போ என்னப்பா செய்யிறது.?” என்று பயந்து போய் கேட்டார். வெளி உலகமே அறியாதவர் கெளசல்யா. பெரியவர்கள் சொல் கேட்டு தான் இது வரை அவர் வாழ்க்கை சென்று இருக்கிறது.  அதன் படி தந்தையின் தீர்வுக்காக  அவரிடம் கேட்டார்.

ஷைலஜா தான். “ அண்ணன் கிட்ட சொல்லலாம் மா. கண்டிப்பா அவங்க ஏதாவது செய்வாங்க.” என்று நம்பிக்கையுடன் சொல்லும் தன் மகளை வேதனையுடன் பார்த்தார் கெளசல்யா.

எந்த உரிமையில் மகனிடம் போய் நிற்பது. தனக்கு நிற்க தகுதி இருக்கிறதா.? என்று கெளசல்யா யோசிக்க சொக்கலிங்கம் நீண்ட நாட்கள் கழித்து தன் பழைய சம்மந்தி கிருஷ்ண மூர்த்தியை அழைத்து அனைத்து விசயமும் சொன்னவர்.

“ ஷ்யாம் ஏதாவது செய்தா. இங்கு ஐந்து  ஜீவன் உயிர் தங்கும். இல்லேன்னா மானம் போய் இருப்பதை விட போவதே மேல் என்று நாங்க ஏதாவது விஷம்  குடித்து  போய் சேர வேண்டியது தான். 

நான் மானம்  என்று சொன்னது  பணம் காசை வைத்து கிடையாது. நான் சொன்னது புரியும் என்று நினைக்கிறேன்.  வந்தவங்க பார்வை சரியில்லை. எல்லாம் உங்க கையில் தான் இருக்கிறது.” என்று சொல்லி  வைத்து விட்டார்.

இங்கு அலுவலகத்தில் சூர்யாவும் ஷ்யாமிடம். “அங்கு நிலமை சரியில்லை என்று நினைக்கிறேன் ஷ்யாம்.” என்று சொன்னவனுக்கு தலையாட்டலை மட்டுமே பதிலாக கொடுத்தானே ஒழிய வாய் திறந்து எதுவும் பேசவில்லை.

தெரியும். அவனுக்கு அனைத்தும் தெரியும். பார்த்திபனும், ஷ்யாமும்  ஒரே  லைனில் இருப்பதால், பார்த்திபன் அந்த அரசியல்வாதிக்கு  கோடி கணக்கில்  பணத்தை முதலில் கடன் கொடுதத்து.

பின் அவர்கள் உன்னை  நாங்க ஆரம்பிக்கும் கன்செக்க்ஷனில்  பங்குதாராய் சேர்த்து கொள்கிறேன் என்று சொன்னதும். பின் பார்த்திபன்  இன்னும் இன்னும் கடன் வாங்கி அந்த அரசியல்வாதியிடம்  கொடுத்தது. அனைத்துமே அவன் அறிவான் தான்.

இன்னும் கேட்டால் பார்த்திபன் அறியாத ஒன்றான, அந்த பணம் முதலை வாயில் போனது போல்,  இனி வரவே வராது என்பதையும் தான்.

ஆனால் இப்படி அவர் இதை நினைத்து மன உளச்சலில் இறந்து போவார் என்று அவன் நினைத்து  பார்க்கவில்லை. நினைத்து பார்த்து இருந்தாலும்,  தான் என்ன செய்து இருக்க முடியும்.

பார்த்திபன் இறந்த பின் அவன் நினைத்தது. கண்டிப்பாக பார்த்திபன் இறந்த பின் பணம் கொடுத்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக படை எடுப்பார்கள்  என்பது அனுக்கு தெரியும்.

தானும்  பணம் கொடுத்தவர் ஒருவர் இறந்து விட்டால், அவர் வீட்டில் போய் நிற்போம்.   அவர்கள் கொடுக்க கூடிய நிலையில் இருந்தால், எப்போதும் போல் வட்டியோடு வாங்குவது. இல்லை என்றால் தாங்கள் கொடுத்த பணத்திற்க்கு  ஈடாக  அவர்களிடம் சொத்து இருந்தால், அதை பைனாஸ்  பெயருக்கு  பத்திர பதிவு செய்து கொள்வது என்று.

 அப்படி கொடுக்க முடியாது. சொத்தும் இல்லை என்றால்,  ஒரு சிலர் வேறு மாதிரி. அது அவனுக்கு தெரியும். ஆனால் செய்தது கிடையாது.

நடந்த பிரச்சனை. இனி நடக்க போகும் பிரச்சனை. அனைத்தும் சூர்யா சொல்லி தான் அவனுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை. அதனால் சூர்யா சொன்னதற்க்கு, பதில் சொல்லவில்லை என்றாலுமே,  அவன் மனது பலதும் யோசித்துக் கொண்டு  தான் இருந்தது.

இதை அறியாத சூர்யா. “ ஒரு முறை பார்த்த பெண்ணுக்கு நாற்பது லட்சம் விட்டு கொடுப்ப, ஆனால்  உன் அம்மாவுக்கு” என்று  மேலும் சூர்யா என்ன சொல்லி இருப்பானோ, கண்கள் சிவக்க எழுந்து நின்றவன் கோபத்தில் சூர்யாவை அடிக்க கையை ஓங்கி விட்டான்.

பின் தன்னை நிலை படுத்தி  கொண்டவன்  தன் விரல்  நீட்டி எச்சரிப்பது போல் செய்தவன். “ பார்த்து பேசு. யாரை யாருக்கு இணை கூட்டுற. சக்தி.  அவள்  பெயருக்கு ஏத்த சக்தி கொண்டவடா அவள்.

அன்னைக்கு பார்த்த தானே அந்த பையனை. எப்படி இருந்தான். ஆனா தன் அக்கா குழந்தைக்காக அவனை உதறினாடா அவள்.

அவளின் அந்த செயல்,  உனக்கு சாதரணமா தெரியலாம். ஆனால் எனக்கு, பெத்த தாய் ஐந்து வயது வரை அவள் மட்டும்  தான் இருந்த குழந்தையை,  மொத்தமாக தலை முழுகி விட்டு,   தனக்கு என்று ஒரு வாழ்க்கை அமைத்து கொண்டவருக்கு பிறந்த எனக்கு தான்டா சக்தி அன்னைக்கு செய்த அந்த விசயத்தின்  மதிப்பு  தெரியும். உனக்கு தெரியாது.” என்று ஷ்யாம்  உணர்ச்சி வசப்பட்டு பேசி கொண்டு இருந்தவனின்  முகம் கோபத்திலும். இயலாமையிலும் தத்தளித்துக் கொண்டு இருந்தவனின் தோளை பற்றி.

“ சாரிடா மச்சான். அங்கு இருப்பது உன் அம்மா. தங்கச்சி. உனக்கே தெரியும்.  கடன்  கொடுத்தவன் எல்லாம்   என்ன என்ன செய்வாங்க என்று.  அப்படி இருந்தும் நீ அமைதியா இருக்கவும் தான் நான் அப்படி பேசிட்டேன் டா.

ஆனால் எனக்கு உன்  மனதும் புரியுதுடா சாரி.” என்று  சூர்யா மன்னிப்பு கேட்கவும். சரி என்பது போல் அமர்ந்தவன்.

“ நான் உனக்கு பதில் சொல்லவில்லை என்றால், எதுவும் செய்ய மாட்டேன் என்று நினைச்சிட்டியா.?  என்ன செய்யனும். அது தான் யோசிச்சிட்டு இருக்கேன்.

இதே அவங்க வீடு போக போகுது.  நகை. ஏன் அவங்க உயிரே போக போகுதுன்னா கூட நான் அவங்க விசயத்துக்கு என்று எதுவும் செய்ய மாட்டேன்.

ஒரு அண்ணனா. ஒரு மகனா இருந்து  அவங்க மானம் போக  விட்டு விடுவேன்னா. அவங்க எனக்கு செய்ய வேண்டிய கடமை செய்யல. ஆனா நான்.” என்று பேசிக் கொண்டு வந்த ஷ்யாம் பின்  சிறிது நேரம் அமைதி காத்தான்.

பின் ஏதோ முடிவு செய்தவனாக. “ பார்த்திபன்  கிட்ட பணம் வாங்கிய அந்த அரசியல் வாதிக்கு போனை போடு.” என்று ஷ்யாம் சொன்னதுமே, சூர்யாவின் முகம் அந்த சூரியனை  போலவே பிரகாசமாகி விட்டது.

“ இதோ மச்சான்.” என்று சொல்லி பேசியில் அவனை அழைக்க, அந்த பக்கம் அல்ல கை. நொல்ல கை என்று கை மாறி அந்த அரசியல்வாதி ராஜாங்கத்தின் கையில் பேசி அடைந்ததும்,  சூர்யா ஷ்யாமிடம் பேசியை கொடுத்து விட்டு, கொஞ்சம் விலகி இருந்து  ஷ்யாம் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தான்.

அந்த பக்கத்தில் இருந்த ராஜாங்கம் . “ மகேந்திரன் பைனான்ஸ் ஷ்யாம் தம்பிங்களா.? என்ன தம்பி நீங்களா என்னை கூப்பிட்டு இருக்கிங்க. ரொம்ப அதிசயம் தான் போங்க.

 என்ன தம்பி யாராவது பணம் வாங்கிட்டு கொடுக்காது  இருக்காங்களா.? நான் வந்து பஞ்சாயத்து ஏதாவது பண்ணனுமா.

 சொல்லுங்க தம்பி செய்து முடித்துடலாம். நம்ம பசங்கள  கொஞ்சம் கவனித்தா போதும். காரியத்தை கச்சிதமா முடிச்சி கொடுத்து விடுவாங்க.” என்று ராஜாங்கத்தை பேச விட்ட  ஷ்யாம்.

பின். “ என் கிட்ட ஆளுங்கட்சியே  இருக்கும் போது. ஆட்சியில் இல்லாத, அடுத்தும் வர வாய்ப்பு இல்லாத உங்க கிட்ட நான் ஏன் உதவிக்கு வர போறேன். அதுவும் பணம் வசூலிக்க முடியலேன்னு.

 என் கிட்ட இருக்கும் பசங்க காரியத்தை கச்சிதமா என்ன, நான் காட்டும் ஆளுங்களையே கச்சிதமா முடிச்சி கொடுத்துடுவாங்க.” என்று ஷ்யாம் பேச பேச, பேசியில் அந்த பக்கம் இருந்த  ராஜங்கம்.

“ இவன் கிட்ட நாம எந்த வம்பையும் வைத்து கொள்ளவில்லையே. இவன் ஏன் இப்படி  துள்ளுகிறான்.” என்று மனதில் நினைத்தாலுமே, வெளியில் மிக பவ்யமாக.

“ எனக்கு தெரியாதா தம்பி உங்களை பத்தி. இதோ அடுத்த தேர்தலுக்கு ஆளுங்கட்சிக்கு உங்க கிட்ட இருந்து தான் பெரிய  தொகையே போகும் என்று. அப்போ நீங்க கை காமிக்கிற இடத்தில்  அவங்க வெட்டி சாய்த்துட்டு போவாங்க என்று தெரியுமே.” என்று  தனிந்து பேசிக் கொண்டு இருந்தார் ராஜாங்கம்.

“ ம் தெரிந்தால் சரி தான். விசயம்  வினையம் இல்லாது முடிந்து விடும்.” என்ற ஷ்யாமின் பேச்சில்

“ என்ன விசயம் தம்பி. நீங்க ஏதோ பொடி வெச்சி பேசுவது போலவே  எனக்கு தோனுது.” என்று ராஜாங்கம் சொன்னதுமே,

ஷ்யாம். “ சரி நான் நேராக விசயத்திற்க்கே வர்றேன். பார்த்திபன் பைனான்ஸ் அவர் கிட்ட இருந்து ***** இவ்வளவு கோடி  வங்கியின் மூலமே பரிவர்த்தனை நடந்து இருக்கு, அதாவது ஒயிட் மணியாவே இவ்வளவு கொடுத்து இருக்கிறார்.

ப்ளாக் மணி எவ்வளவு கொடுத்தார். அதை நீங்க எப்படி கொடுக்க போறிங்க.?  எப்போ.?  இதை பத்தி பேச நீங்க   என் இடத்துக்கு வர்றிங்களா.. இல்ல நான் உங்க இடத்துக்கு வரட்டுமா.? ஏது என்றாலும் பரவாயில்லை.

ஆனால் இன்னைக்கு இதுக்கு ஒரு  முடிவு கட்ட வேண்டும். எனக்கு வேண்டியது அவ்வளவு தான்.” என்று ஷ்யாம் பேச பேச. பேசியில் இந்த பக்கம் இருந்த ராஜாங்கத்துக்கு வேர்த்து விட்டது.

பார்த்திபனுக்கு இவன் யார். ? அவனுக்கு இரண்டும் பெண் என்பதால் தானே, நான் அவனை தேர்ந்து எடுத்தேன்.

இப்போ இவன் இதுக்குள் ஏன் நுழையறான்  இவன் விவரம் பிடித்தவனும், வில்லங்கமானவனும், கூடவே ஆளுங்கட்சி  சப்போட் வேற  இவனுக்கு இருக்கு  என்று நினைக்கும் போதே ஓ அப்படியும் இருக்குமோ என்று நினைத்து.

“ என்ன தம்பி பார்த்திபன்  பெண்ணை நீ பார்க்கிறியா.?” என்று அவனுக்கு தெரிந்த அந்த  பாஷையில் கேட்டவனின் காது கிழியும் அளவுக்கு.

“ பேச்சில் மரியாதை தேவை. இப்போ பேச்சு பார்த்திபன். அவருக்கு கொடுத்த பணம். அது அது மட்டும் தான் இருக்கனும். இடையில் வீட்டு பெண்கள் பத்தி பேச்சில கூட இருந்தாலும் நீ எடுக்க கூடாது.” என்ற கத்தலில் ராஜாங்கம் ஷ்யாமிடம்   பெட்டி  பாம்பாக அடங்கி போனவனாக.

“ சரி தம்பி.  சரி தம்பி.” என்று பணிந்து பேசியவன் பின். “ நீங்க ஏன் தம்பி இங்குட்டு எல்லாம் அலையனும். நான் வர்றேன் தம்பி.” என்று ராஜாங்கம் சொல்லவும்.

“ம்.” என்ற சொன்ன ஷ்யாம் பேசியை அணைக்கும் போது .. “ வரும் போது பார்த்திபனிடம் வாங்கிய  பணத்துக்கான முழு  விவரத்தையும் கொண்டு வாங்க. நீங்க கொண்டு வரலேன்னாலும் எனக்கு தெரியும் தான்.

என்ன  ஒன்னு  நானே தெரிந்து கொண்டால், உங்களுக்கு இன்னும் இன்னும் தான் பிரச்சனை  கூடும்.” என்று சொல்லி தான் ஷ்யாம் பேசியை அணைத்தான்.

இந்த பக்கம் பேசியை வைத்த  ராஜாங்கம் தன் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தவனிடம் . “ பார்த்திபனுக்கும், ஷ்யாமுக்கும்   இடையில் என்ன.? என்று விசாரி.” என்று சொன்ன அடுத்த இரண்டு மணி நேரத்தில் ராஜாங்கத்துக்கு தெரிந்து விட்டது.

பார்த்திபனுக்கு  ஷ்யாம் என்ன உறவு என்று.? அதை தெரிந்ததும் ராஜாங்கம் பெரியதாக அதிர்ந்து தான் போனான்.

“ ஏன்டா. ஏன்டா அந்த ஆள் ஒரு தடவை கூட இதை சொல்லவில்லை.” என்று.

ஆம் உண்மை தான். ஷ்யாம் பெயரை ஒரே முறை பார்த்திபன் உபயோகித்து இருந்தால் கூட, அவர் இறக்கும் படி ஆகி இருக்காது தான்.

பார்த்திபன் பற்றி ஒன்று சொல்லியே ஆக வேண்டும். ஷ்யாமின் நிழல் கூட தன் குடும்பத்தில் பட கூடாது என்று நினைத்தவர்,  அதை கடைசி வரை கடை பிடித்தார்.

அதுவும் அவரை பற்றி தெரிந்தவர்கள் சொன்ன. “ நீங்க ஷ்யாம் கிட்ட கூட போக வேண்டாம். அவனுக்கும் உனக்கும் உண்டான உறவாவது சொல்.” என்று எத்தனை முறை சொல்லியும், அதை அவர் சொல்லவே இல்லை. அது வரையில் பார்த்திபனை பாராட்டியே ஆக வேண்டும்.

Advertisement