Advertisement

அத்தியாயம் 5

 

         என்றும் இல்லாமல் அன்று காலை எழ நேரமாகி விட்டது அம்மாவின் அதட்டல் ஒலியில்தான் எழுந்தாள்…

     மித்ரா மித்ரா என்று மெதுவாக எழுப்பி பார்த்தவர் சத்தம் இல்லை என்றதும் எந்திரிக்கியா…  இல்லையா என்று ஒரு கத்து கத்தவும் போர்வையை உதறிவிட்டு அவசரமாக எழுந்து வந்தாள்…  எவ்வளவு நேரம் காலேஜ் போகிற ஐடியா இருக்கா இல்லையா….  நேற்றிலிருந்து நீ சரியில்லை என்று சத்தம் போடவும் இல்லம்மா…. கொஞ்சம் தூங்க லேட்டாகிருச்சி….  அதுதான் எந்திரிக்க லேட் ஆயிடுச்சு என்று சொல்லி ஏதேதோ வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்து விட்டு கிளம்ப அறைக்குள் ஓடினாள்….

    மித்ராவின் வீட்டில் தாத்தா பாட்டியோட தான் இருந்தார்கள்…சில வருடங்களுக்கு முன் அப்பாவின் தங்கையும் ,  கணவனும் குழந்தைகளோடு இங்கு வந்து இருந்துவிட்டனர்…. அதனால் எப்போதும் வீட்டில் ஆள் இருந்து கொண்டே இருக்கும்…. தாத்தா ரிட்டயர்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்., அப்பாவோ பேங்கில் வேலை பார்ப்பவர்., அம்மா ஸ்கூல் டீச்சர்… மாமா கஸ்டம்ஸில் வேலை பார்ப்பவர்…அத்தை பிரைவேட் கம்பெனி ஒன்றில் வேலை பார்ப்பவர்… பாட்டி குடும்பத்தலைவி இதுதான் அவர்களது குடும்பம் அத்தையின் பிள்ளைகள் இருவரும் சிறியவர்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பும் நான்காம் வகுப்பும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்…

     அத்தைக்கு குழந்தை இல்லாமல் பல வருடங்கள் கழித்தே இரண்டு குழந்தை கிடைத்தது. மித்ராவின் அப்பா வேணுகோபால் அம்மா அமராவதி இவர்களது மூத்த பெண் மித்ரா அடுத்ததாக மகன் மகேந்திரன்….

     மகேந்திரன் இவளை விட நான்கு வயது இளையவன் இப்போது பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறான்… இவள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முடிக்கப் போகிறாள்…

     கட்டுக்கோப்பான குடும்பம்…  தாத்தா வைத்ததுதான் சட்டம்…. வீட்டில் ஏகப்பட்ட விதிமுறைகள் உண்டு… பெண் குழந்தைகளாக இருந்தாலும் சரி ஆண் பிள்ளைகளாக இருந்தாலும் சரி….

அப்படிப்பட்ட கட்டுக்கோப்பில் வாழ்பவள் தான் மித்ரா….

     அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டியது இருப்பதால் அன்று அவள் கல்லூரிக்கு கிளம்ப நேரமாகிவிட்டதை உணர்ந்தே அவள் தாயார் அவளிடம் கோபமாக பேசியது…. மற்றபடி வீட்டில் அவள்  தாத்தா பாட்டியும் அப்பா அத்தையும் தான் அதிகாரம் செய்வார்கள்…. மற்றவர்களெல்லாம் ஓரளவு அடங்கி செல்பவர்கள் அத்தையின் கணவர் வேலை என்று காலையில் சென்றால் இரவில் லேட்டாக தான் வருவார்….. அவர் இவ்வீட்டில் ஏதோ சத்திரம் போல் வந்து செல்லக்கூடிய ஒரு ஆள்….  அதிகமாக அவரை பார்க்க முடியாது அவரிடம் பேச முடியாது….

    கட்டுப்பாட்டை சொல்லிக் கொடுக்கிறோம் என்று சில நேரங்களில் அத்தை அதிகமான உரிமை எடுத்துக்கொண்டு அதட்டுவார்…..  மித்ராவின் அம்மாவிற்கு தான் கஷ்டமாக இருக்கும் தன் பிள்ளைகளை ஆளாளுக்கு அதட்டி வைப்பது இருந்தாலும் வேறு வழி இல்லாமல் ஒரு கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இருப்பவர் சற்று விட்டுக் கொடுத்து தான் போக வேண்டும்…. என்பதற்காக அமைதி காத்துக் கொள்வார்… அதற்காகவே  இன்று வேறு யாரும் அதட்டி விடக்கூடாது என்பதற்காகவே தட்டி எழுப்பி விட்டார்….

      கிளம்பி வந்து உணவு உண்ண அமரும்போது தாத்தாவிடம் முதல் அறிவுரை தொடங்கியது…

     பொம்பள பிள்ளைங்க இப்படி இருக்க கூடாது மா…. நேரம் காலத்தோடு எந்திரிச்சி வாசலில் கோலம் போட  கத்துக்கணும்…. சமையலில் கூட மாட உதவி செய்ய கத்துக்கணும்…. நீ என்ன வர வர சின்னப்பிள்ளையா காலேஜ் போயிட்ட… இன்னும் கொஞ்ச நாள்ல காலேஜ் முடித்து விடுவ.,  அப்புறம் உனக்கு கல்யாணம் பண்ணி ஒரு வீட்டுக்கு அனுப்பனும் இல்ல., இப்படி இருந்தா நல்லா இருக்குமா என்று முதல் தொடங்கவும்…..

     தாத்தா ப்ளீஸ் காலையிலேயே ஆரம்பிக்காதீங்க….  நான் பிஜி பண்ணனும்…  படிச்சு முடிச்சுட்டு எக்ஸாம் எழுதி  நானும் ஒரு வேலைக்கு போயிட்டு அதுக்கப்புறம் தான் தாத்தா மேரேஜ் எல்லாம்….

    இருக்கட்டும் டா செல்லம் தாத்தா சொல்றது உன் நல்லதுக்கு தானே சொல்லுதேன்….  எல்லா வேலையும் கத்துக்கணுமா என்று அமைதியாக பேசினாலும்…. அவர் சொல்வது பெண் பிள்ளைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைக்குள் தான் இருக்க வேண்டும் என்பதைப் போல…

     மனதிற்குள் பல்லைக் கடித்துக் கொண்டாள்…. வேறுவழியில்லை சரி இப்பொழுது இருக்கும் உலக நடவடிக்கைகளில் தாத்தா சொல்வதும் சரிதான் என்று கேட்டாலும் சில நேரங்களில் அவளுக்கு எரிச்சல் வரும் அளவிற்கு அறிவுரை நடக்கும்…. இருந்தாலும் வாயை மூடிக்கொண்டு வேறுவழியில்லாமல் பதில் பேசாமல் சாப்பிட தொடங்கினாள்…..

     அடுத்த அறிவுரை அத்தையிடம் இருந்து தொடங்கியது..,  பிஜி முடிச்சி நீ எக்ஸாம் எழுதி வேலைக்கு போய் எப்ப கல்யாணம் பண்ண…..   எனக்கு காலாகாலத்தில் கல்யாணம் பண்ணியும்  குழந்தை கிடைப்பதற்கு லேட் ஆச்சு….  இந்த வீட்டுப்படி அப்படி ஆயிருச்சுன்னா என்ன பண்ண என்று தொடங்கும் போது…..

    அவளது பாட்டி சத்தம் போட்டார்…. எந்த நேரத்தில் எந்த பேசுறது இல்லையா உனக்கு…. இப்படியா முதன்முதலில் சொல்லுவ அவ சின்ன பிள்ளை தானே படிக்கட்டும் விடு…. கல்யாணம் மெதுவா பேசலாம் நீ எதுக்கு அதுக்குள்ளே இப்படி அவசர படுற….

   மித்ராவின் அம்மாவோ மனதிற்குள் அவள் கணவனின் தங்கையை திட்டி கொண்டாலும் வெளியில் சொல்ல முடியாமல் அமைதி காத்தாள்….. பாவி பாவி வாயில் என்ன வார்த்தை வருது எப்படி பேசுகிறாள் என்று மனதிற்குள் திட்டிக் கொண்டாள்….

  மித்ராவும் படிக்கிற பத்தி பேசினா…. எல்லார் பேச்சும் கல்யாணத்துக்கு போயிருச்சு பாரு….  வயசு 20 கூட தாண்டல அதுக்குள்ளே  கல்யாணம்  கடவுளே என்று யோசித்துக் கொண்டிருந்தாள்…

மகேந்திரனும் அக்கா முழிக்கும் முழியைப் பார்த்துக்கொண்டு மனதிற்குள் ஏதோ திட்டிக் கொண்டிருக்கிறாள்…. என்பதை மட்டும் அறிந்து கொண்டு மெதுவாக அவளைப் பார்த்து கண்ணை காட்டி என்ன திட்டுற என்று சைகையில் கேட்டான்….

     அவள் அவனைப் பார்த்து கண்ணை உருட்டி சத்தம் போடாம கிளம்பு  என்று விரட்டிக் கொண்டிருந்தாள்…

    அனைவரும் அலுவலகம் பள்ளி என செல்வதால் காலை நேரம் அந்த வீடு மிகவும் பரபரப்பாகவே இருந்தது….

    மித்ராவும் ஏதோ ஒரு மனபாரம் அழுத்தினாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இவர்கள் பேசியது எதையும் காதில் வாங்காமல் கல்லூரிக்கு கிளம்புவதில் இருந்தாள்….. இருந்தாலும் மனதிற்குள் இவர்கள் ஏன் இவ்வளவு சீக்கிரமாக கல்யாணத்தைப் பற்றி பேசுகிறார்கள் என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது….

     நீளமான முடி என்பதால் எப்போதும் மித்ராவின் அம்மாதான் தலைப்பின்னல் போட்டு விடுவார்.,. அன்றும் காலையில் அவர் பள்ளிக்கு கிளம்ப வேண்டிய அவசரத்தில் மித்ராவை திட்டிக் கொண்டே தலையை பின்னலிட்டு கொண்டிருந்தார்….

     தானா   பின்ன கற்றுக்கோ….  ஒவ்வொரு நாளும் நானே செஞ்சுட்டு இருக்க முடியாது…  நான் ஸ்கூலுக்கு கிளம்பு வேணா இல்ல உனக்கு பின்னிட்டு. இருப்பேனா…..  நீ என்ன சின்ன பிள்ளையா., இதுக்கும்  எனக்குத்தான் திட்டு விழும்….

  மம்மி நீ எப்ப பாத்தாலும் திட்ற எல்லாம் உங்க குடும்ப குணம் அப்படியே உனக்கும் வருது ன்னு நினைக்கிறேன்….. திட்டாத…  உன் மாமனார் , வீட்டுக்கார், நாத்தனார் ன்னு எல்லா காத்தும் உன் பக்கம் அடிக்குதா திட்ட கத்துக்கிட்டு   இருக்க….

  ஏண்டி பேசமாட்ட காலைல நான் எழுப்பாமல் விட்டு இருந்த அத்தனை பேரும் சேர்ந்து அர்ச்சனை உனக்கு பண்ணியிருப்பாங்க….. ஐயோ பாவம் என்று நான் கத்தி  எழுப்பி விட்டுட்டு போனேன் இல்லாடி இன்னைக்கு உனக்கு தான் அர்ச்சனை நடந்திருக்கும்….

     செல்ல மம்மி இல்லை அப்படி எல்லாம் மாட்டி வைத்து விடாதே…..  உன் பொண்ணு பாவம் அம்மா….

    நீ கொஞ்சுறத  நிறுத்திட்டு காலேஜுக்கு கிளம்பு பஸ் போயிற போது…

     எப்படி மம்மி இந்த குடும்பத்தில் குப்பை கொட்டுற…..

      உன்னையும் உன் தம்பியும் பெத்துட்டேன் இல்ல….  உங்க ரெண்டு பேருக்காக  தான் பல்ல கடிச்சுட்டு அப்படியே போய்கிட்டு இருக்கேன்….. என்ன பண்ண நீங்க ரெண்டு பேரும் நல்லா இருந்தா எனக்கு அது போதும்…. அப்ப தான்,  நான் இத்தனை நாள் இந்த குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போய் வாழ்வதிலும் ஒரு அர்த்தம் இருக்கும்…. அதுக்காக தாண்டி உன்னை படி படின்னு முட்டிக்கிறேன்….. நீ என்னவோ அவரெஜ் லெவல் ல  போயிட்டு இருக்க…

     நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன்….  வர்ற அளவுக்கு தானே படிக்க முடியும் சாதாரணமாக டிகிரி செய்றேன்னு சொன்னேன்…. இந்த தாத்தா தான் என்னை பிடித்து இன்ஜினியரிங் தான் ன்னு, கொண்டு போய் சேர்த்து விட்டார்…..  இன்ஜினியரிங் கஷ்டமா….  ஏதோ எங்க சீனியர் கொஞ்சம் எனக்கு சொல்லிக் கொடுக்க போய் தப்பிச்சுக்க முடியுது….   இனிமேல் அதுவும் கொஞ்சம் கஷ்டம்தான்….

Advertisement