Advertisement

அடர்ந்த கருமை நிற வானத்தில், நட்சத்திரங்கள் கண் சிமிட்டி கொண்டிருந்த காட்சி வெகு இரம்யமாக தான் நறுமுகைக்கு, வானில் உலா வந்த இரு நிலவுகளை அவள் பார்க்கும் வரை.

அதை பார்த்து அதிர்ச்சியுற்றவள்,

“எ..ப்..ப..டி, எப்படி வானத்துல இரண்டு நிலா இருக்கு”

என்று வானத்தை நோக்கி சாளரம் வழியே கையை நீட்டி, நிலவை சுட்டி காட்டி கேட்க, அவள் சுட்டி காட்டும் திசையை பார்த்த இருவரின் பார்வையும், நறுமுகையின் மீது வெவ்வேறு விதத்தில் பாய்ந்தது.

மாறவர்மனின் பார்வை வெகு கூர்மையுடன் நறுமுகையை துளைக்க, அழகம்மையோ அவளை பரிவுடன் பார்த்தார்.

ஆனால் அது எல்லாம் கணநேரம் மட்டும் தான். அடுத்த நொடி எல்லாம் அவரின் முகம் வழமையான சாந்தத்திற்கு திரும்ப, தன் வழக்கமான குரலில் நறுமுகையிடம்,

“சதுர் கிரகத்தில் ஆதியில் இருந்தே இரண்டு மதிகள் தான்”

என்று சொல்ல, ‘மதி’ என்பது நிலாவை குறிக்கும் சொல் என்பது உரைக்கவே நறுமுகைக்கு இரண்டு வினாடிகள் பிடித்தது.

“அது எப்படி சாத்தியம்”

என்று அவள் யோசிக்கும் போது தான், அவர் சொல்லிய ‘சதுர் கிரகம்’ என்ற வார்த்தை நினைவுக்கு வர,

“எ…ன்…ன…து ச..து..ர் கி..ர..க..மா?????”

என்று தான் கேட்டதை மீண்டும் உறுதிப்படுத்தி கொள்ள கேட்க, அழகம்மை ‘ஆமாம்’ என்று தலையசைத்தார்.

அவரின் சொல்லில் அளவில்லா திகைப்படைந்த நறுமுகை, தனக்குள் கேட்பதாக நினைத்து வாய்விட்டு,

“அப்போ இது பூமி இல்லையா, நான் வேற கிரகத்துக்கா வந்து இருக்கேன்”

என்று சிறிய குரலில் கேட்க, அறையில் நிலவிய அமைதியின் விளைவாய், அங்கு இருந்த இருவருக்குமே நறுமுகை பேசியது தெளிவாக கேட்டது.

இரண்டு நிலவுகளை தன் கண்ணால் கண்டிரா விட்டால், இப்போதும் நறுமுகை தான் வேறு ஒரு கிரகத்தில் இருக்கிறோம் என்று நம்பி இருக்கவே மாட்டாள் தான்.

ஒரே இரவில் தான் வாழ்க்கையே அடியோடு மாறி போயிருக்க, தன் தலையை இரு கைகளாலும் அழுத்தி பிடித்து கொண்டாள் நறுமுகை.

முன்பின் அறியாத இடத்தில், வேற்று கிரகத்தில், நீரில் இருந்து வாளை உருவாக்க கூடிய திறமையுள்ள ஒருவனின் பிடியில் தான் சிக்கியிருக்கிறோம் என்பது அவளுக்குள் கிலியை விதைக்க போதுமானதாக இருந்தது.

இது எல்லாம் வெறும் கனவாக இருந்து, கண் விழித்ததும் எல்லாம் பழைய நிலைக்கு சென்றுவிடாதா என்று ஏக்கமாகவும் இருந்தது நறுமுகைக்கு.

அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்வுகளில் கணம், அவளின் சுய சிந்தனையின் விளைவு என, நறுமுகையின் பலவீனமான உடல் லேசாக நடுங்க, தலை லேசாக கிறுகிறுத்தது.

எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில், அருகில் இருந்த இருக்கையை, ஆதரவாக பற்றி அதில் பொத்தென்று அமர்ந்தாள் அவள்.

அவளின் செயல்களையே கூர்ந்து பார்த்து கொண்டிருந்த ஆழி தேசத்து இளவரசனுக்கு, நறுமுகை உரைப்பதில் குற்றம் இருப்பதாக தோன்றவில்லை.

நறுமுகையின் வார்த்தைகளை விட, அவளின் முககுறிப்பை, உடல் மொழியை உற்று உள்வாங்கியவனுக்கு, அவளின் பயம், பதற்றம், அதிர்ச்சி என எதுவும் நடிப்பாக தெரியவில்லை.

தங்களில் இருந்து வேறுபட்டிருக்கும் அவளின் உடை, மொழி மற்றும் சற்று முன்பு மதியை கண்டதும் அவள் அடைந்த அதிர்ச்சி என எல்லாமே, அவள் வேற்று கிரகத்தை சேர்ந்தவளாக இருக்கலாம் என்று தான் இளவரசனை எண்ண வைத்தது.

ஆனால் உண்மையில், தங்கள் கிரகத்தை போல வேறு கிரகங்கள், வானவெளியில் இருக்கின்றனவா????

அந்த கிரங்களிலும் தங்களை போலவே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கீறார்களா???

அப்படி இருக்கும் பட்சத்தில், தாங்கள் மட்டும் ஏன் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை????

ஒருவேளை தங்களை விட அந்த கிரகத்து மக்கள் வலிமையானவர்களோ, அவர்கள் நினைத்தப்படி, நினைத்த நேரம் இங்கு வந்து செல்ல முடியுமோ????

இப்படி பல கேள்விகள் அவனுள் புற்றில்இருந்து வெளிப்படும் ஈசலென கிளம்ப, அக்கேள்விகளுக்கு உடனே பதிலை அறியும் வண்ணம், நறுமுகையை நோக்கினான் அவன்.

ஓய்ந்து போய் அமர்ந்திருந்த நறுமுகையை பார்த்தவனுக்கு, இந்த செய்து எப்படிப்பட்ட அதிர்ச்சியாக, தன் முன்னால் இருப்பவளுக்கு இருக்கும் என்பதை, அவனால் முழுதாக புரிந்து கொள்ள முடிந்தது.

சோர்வுடன் அமர்ந்திருந்த அவளை பார்த்தவனுக்கு, அவனின் இயல்பை மீறி, அவனே அறியாமல், அவளின் மீது நெஞ்சின் ஓரம் ஒரு பரிவு சுரப்பதை, அப்போது அவனால் உணர முடியவில்லை.

நடந்ததை ஏற்று கொள்ள, அவளுக்கு கால அவகாசமும், தனிமையும் தேவையென புரிய, தன் தொண்டையை கனைத்து அவளின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவன்,

“இரண்டாம் சாமம் (இரவு 9 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை) முடிய போகிறது, இன்று இரவு தாங்கள் இந்த அறையிலேயே ஓய்வு எடுத்து கொள்ளலாம், மற்றவற்றை நாளை பார்த்து கொள்வோம்”

என்று சொன்னான். பரிவுடன் சொல்லப்பட்ட வார்த்தைகள் தான், ஆனால் கட்டளை போல தான் இருந்தது மாறவர்மனின் தொணி.

மன்னரின் மிடுக்குடன், நறுமுகையின் பதிலுக்கு காத்திராமல் அவன் வெளியே செல்ல, நறுமுகையோ அவனின் சொற்களை மட்டுமே காதில் வாங்கியவள், தொணியை எல்லாம் கவனிக்க இல்லை.

அவளின் மனம் இன்னும், சற்று முன்பு உணர்ந்த உண்மையை சீரணிக்க முடியாமல் திணறி கொண்டிருந்தது.

மாறவர்மனை பின் தொடர்ந்த அழகம்மை, நறுமுகையை கடக்கும் முன்பு அவளிடம்,

“மூன்று தினங்களுக்கு பிறகு இன்று தான் மூர்ச்சை தெளிந்து இருக்கிறீர்கள், அதிகம் உடலை அலட்டி கொள்ளாமல், ஓய்வு எடுங்கள்”

என்றவர், அவளின் முக பாவனையை கண்டும் காணாதவர் போல வெளியே சென்று விட்டார்.

“என்னது மூணு நாளா மயக்கத்துல இருந்து இருக்கேனா நானு”

என்று யோசித்த நறுமுகைக்கு, வேற்று கிரகத்தில் இருக்கிறோம் என்ற பெரிய கோட்டின் அருகே, வரையப்பட்ட சிறிய கோடேன மேற்கூறிய செய்தி இருக்க, அது ஒன்றும் அவ்வளவு திகைப்பை தந்து விடவில்லை.

மாறாக இந்த அறையில் தங்குவதை நினைத்து பயந்தவளுக்கு, மூன்று நாட்கள் தான் மயக்கத்தில் இருந்தபோதே தனக்கு, எந்த வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை, சுயத்தில் இருக்கும் போது கவலைப்பட எதுவுமில்லை என்ற நம்பிக்கை உதயாமானது.

அறையில் தனித்து விடப்பட்ட நறுமுகை, விளக்கின் ஒளியில் தங்கமென மின்னிய அறையை முழுவதுமாக ஒரு முறை சுற்றி வந்தாள்.

தன் பிரிய எழுத்தாளர்களான கல்கி மற்றும் சாண்டில்யன் கதைகளில் அவர்கள் உருவகிக்கும் அரச மாளிகை ஒன்றின், அறையில் தான் இருப்பதை போல பிரேமை அவளுக்கு.

ஒரு பெருமூச்சுடன் மஞ்சத்தில் விழுந்தவளுக்கு பல எண்ணங்கள் ஆட்டி படைக்க, வெகுநேரம் படுக்கையில் உருண்டபடியே இருந்தாள்.

இந்த விதி இன்னும் தனக்கு என்னவெல்லாம் வைத்திருக்கிறது என்று அறியாமல், மூன்றாம் சாமம் (நள்ளிரவு 12 மணியில் இருந்து, விடியற்காலை 3 மணி வரை) முடியும் தருவாயில் உறங்கினாள் நறுமுகை.

அந்த இரவின் இரண்டாம் சாமத்தின் தொடக்கத்தில், வல்லை தேசத்தில் இளவரசி நற்சோணை தனது நந்தவனத்தில், இளம்பச்சை நிற உடையணிந்து, உயிர்த்தெழுந்த கொடியென, நடைப்பயின்று கொண்டிருந்தாள்.

நந்த வனத்தில் இருந்த அந்த பெரிய மரத்தின் அடியில் நின்று கொண்டு, இளவரசி நடைப் பயில்வதை பார்த்த அவளின் பணிப்பெண்ணும், தோழியுமான அலர்விழி கவலையுடன்,

“தங்களுக்கு என்னவாயிற்று இளவரசியாரே, கடந்த இரண்டு தினங்களாக தாங்கள் இப்படி தான் சாதா எதோ சிந்தனையிலே மூழ்கி இருக்கிறீர்கள்”

என்று கேட்க, அவளை பார்த்து மெலிதாக புன்னகை புரிந்தாள் இளவரசி.

தன் சொப்பணத்தை தன் தந்தையான, வல்லை தேசத்து மன்னரிடம் சொல்ல துணியாத இளவரசி, தன் தோழியிடம்,

“ஒன்றும் இல்லை அலர்விழி, இரண்டு தினங்களுக்கு முன்பு சொப்பனம் ஒன்று கண்டேன்”

என்று அதை விவரித்தார். அதை கேட்டதும் பேய் அடித்ததை போல நின்ற, அலர்விழிக்கும், இது ஒன்றும் நல்ல சகுணமாக படவில்லை.

இன்னும் சில திங்களில், ஆழி தேசத்தின் முடிசூட்டு விழா வர இருக்கிறது. அதற்கு முன்பு முடி மன்னரை தேர்ந்தெடுக்கும் முக்கிய நிகழ்வு இருக்கிறது.

இது ஆழி தேசத்தின் தலைவிதியை மட்டுமல்ல, வல்லை தேச இளவரசியின் தலையெழுத்தையும் நிர்ணயிக்கும் நிகழ்வு அல்லவா.

பின்னே ஆழி தேசத்தின் முடி மன்னரை தானே, வல்லை தேச இளவரசி மணந்து, ஆழி தேசத்திற்கு மாகராணியாக செல்ல வேண்டும்.

இது ‘ஆழி அரிமா’ என்ற ஆழி தேசத்து இளவரசரின் சாபம் காரணமாக, கடந்த ஐநூறு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழமை.

இப்படி இளவரசியாரின் திருமணம் எதிர்நோக்கி இருக்கையில், நற்சோணை கண்ட சொப்பனம், அவள் மீது உண்மையான அன்பு கொண்ட, அலர்விழியின் நெஞ்சத்தை வெகுவாக கணக்க செய்தது.

சில நிமிட யோசனைக்கு பிறகு, இளவரசியை பார்த்த அலர்விழி,

“பஞ்சதேச கடவுள்களின் சாட்சியாக சொப்பனங்களுக்கு விளக்கம் தரும் ஒருவரை நான் அறிவேன், நாளை நாம் இருவரும் சென்று, அவரை சந்தித்து வந்தால் என்ன”

என்று சொல்ல, அதில் எல்லாம் நம்பிக்கை இல்லாத இளவரசி கேலி புன்னகையுடன்,

“இவற்றில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை அலர்விழி”

என்று சொல்ல, அலர்விழியோ,

“தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை, அரசரே ஒருமுறை அவர் கண்ட சொப்பனத்தை ஆராய்ந்து, அதற்கேற்றபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் தானே நம்மால், வரவிருந்த பெருவெள்ளத்தை தடுக்க முடிந்தது”

என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்ததை நினைவு கூர்ந்து சொன்னான். அது உண்மை தான் என்பதால் நற்சோணையும் அமைதியாக நிற்க, தொடர்ந்த அலர்விழி,

“நாளை நாம் பார்க்க போகும் நபரின் புகழ், வல்லை தேசத்தை கடந்தும் பரவி இருக்கிறது இளவரசியாரே, ஒரு முறை முயற்சி செய்து தான் பார்ப்போமே”

என்று சொல்ல, இளவரசி நற்சோணைக்கும் ‘சரி சென்று தான் பார்ப்போமே’ என்று தோன்ற, தன் தோழியிடம்,

“நாளை காலை சென்று அவரை பார்க்க ஏற்பாடு செய், இந்த செய்தி மன்னரின் காதை எட்டாமல் பார்த்து கொள்”

என்று சொன்ன இளவரசி, நாளை தனக்கு அங்கு காத்திருக்கும் அதிர்ச்சியை பற்றி அந்நேரம் நிட்சயம் அறிந்திருக்கவில்லை.

அதன்பின்னர், இளவரசியும் அவரின் தோழியும், ஏதோ பேசி சிரித்தப்படி, தங்களின் பிறிவிற்கு சென்று உறங்க ஆயுத்தமாகினார்கள்.

மறுநாள் காலை, அங்கு கடற்கரை மாளிகையில் நறுமுகை துயில் கலைந்து எழவும், அழகம்மை சில பணி பெண்களோடு உள்ளே வரவும் சரியாக இருந்தது.

இவளை பார்த்து புன்னகை செய்த அழகம்மை,

“தாங்கள் நீராட அனைத்தும் தயார் செய்து விட்டேன்மா, நீராட செல்லலாமா”

என்று கேட்க, ஒன்றும் பேசாமல் சம்மதமாக தலையாட்டிய நறுமுகை அவரை பின்தொடர்ந்தாள்.

அவள் தங்கியிருந்த அறையில் இருந்து வெளிவந்து, இடப்பக்கம் திரும்பி கொஞ்ச தூரம் சென்றதும் வந்த ஒரு அறைக்குள் நுழைந்தார் அழகம்மை.

அங்கு ஒரு தொட்டியில் வெதுவெதுப்பான நீர் நிரப்பப்பட்டிருக்க, அருகில் நீராட தேவையான வாசனை பொருட்கள் எல்லாம் வைக்கப்படிருந்தன.

இதை எல்லாம் பார்க்கும் போது, ஏதோ கால சக்கரத்தில் ஏறி, மன்னர் காலத்திற்கு சென்றதை போல தோற்ற மயக்கம் நறுமுகைக்கு.

ஒருவிதமான மோன நிலையுடனே நறுமுகை நீராடிவிட்டு வர, அவளுக்கான உடைகள் அங்கு தயாராக இருந்தது.

இளம் மஞ்சள் நிறத்தில் நீள பாவாடையும், அதே நிறத்தில் இடுப்பு வரையிலான தலையால் மாட்ட கூடிய சட்டையும் இருந்தது.

அந்த சட்டையின் இடுப்பு பகுதியில் இருந்து, புடவை முந்தானையை போல விசிறி அமைப்பு மாராப்பாக நீண்டும் இருந்தது.

உடலை உறுத்தாத அந்த உடையை அவள் அணிய பணி பெண்கள் உதவி செய்தனர்.

பின்பு நறுமுகையின் அறைக்கு வந்ததும், அவளை இருக்கையில் அமர வைத்த அழகம்மை, அவளின் நீல குழலை கங்குகளை கொண்டு உலர்த்த ஆரம்பித்தார்.

தன் முன்னால் இருந்த நிலைகண்ணாடியில் அவரை பார்த்த நறுமுகை அவரிடம்,

“இந்த சதுர் கிரகத்தை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் பாட்டி”

என்று கேட்டாள். இங்கு எப்படி வந்தோம் என்றோ, மீண்டும் தன் கிரகத்திற்கு செல்லும் மார்க்கமோ நறுமுகைக்கு தெரியாது.

இன்னும் இங்கு எத்தனை நாட்கள் இங்கு இருக்க வேண்டும் என்று அறிந்திராத போது, குறைந்தபட்சம் தான் இருக்கும் இடத்தை பற்றியேனும் அறிந்து கொள்ளும் எண்ணம் அவளுக்கு.

நறுமுகையின் கேள்வியில் உள்ளுக்குள் சிரித்து கொண்ட அழகம்மையும், சதுர் கிரகத்தை பற்றி சொல்ல தொடங்கினார்.

Advertisement