Advertisement

நறுமுகை தடைசெய்யப்பட்ட கானகத்தின் புல்தரையில் விழுந்த அதே நேரம், பஞ்சணையில் சுகமான நித்திரையில் இருந்த நற்சோணைக்கு கனவு ஒன்று விரிந்தது.

அந்த கனவில் அவள் ஓர் அடர்ந்த கானகத்தின் நடுவே, மரங்களற்ற சாதாரண புல்வெளியாய் இருந்த ஓர் பகுதி இருக்கிறாள்.

மழை பன்னீராய் தூவி கொண்டிருக்க, அவளுக்கு வெகு அருகே நதி ஒன்று பாயும் ஓசையும் கேட்கிறது அவளுக்கு.

தன் நீள பச்சைநிறப் பட்டு பாவாடையை உயர்த்தி பிடித்தப்படி, யாருக்காகவோ காத்திருக்கும் பாவனையில், வானில் உலவிய நிறைமதியை பார்த்தபடி நடை பயின்று கொண்டிருக்கிறாள் நற்சோணை.

திடிரென அவள் முன்னே நீள தாடி வைத்த மனிதர் ஒருவர் தோன்றி,

“இக்காரியத்தை செய்ய என்ன துணிச்சல் உனக்கு, ஹ்ம்ம்”

என்று உரும, கனவில் நற்சோணையின் முகம் பயத்தில் வெளுக்க, உறக்கத்தில் இருந்த முகமும் அதே பாவனையையே தான் காட்டியது.

இவள் பதில் சொல்ல வாய்ப்பே அளிக்காத அந்த மனிதர், கையை சுழற்ற அவரின் கையில் நீல நிறத்தில் கத்தி ஒன்று முளைத்தது.

“தான் பிறந்த குலத்தை மறந்து, ஆசை வைக்க கூடாததின் பெயரில் ஆசை வைத்த மங்கையே மடிந்து போ”

என்ற படி, அவர் கத்தியை வீச, அது குறி தவறாமல் அவளின் நெஞ்சில் பாய, கனவில் வலியில் நெஞ்சை பிடித்து கொண்டு நற்சோணை துடிக்க, திடீரென கனவில் இருந்து விழித்து கொண்டாள் அவள்.

இப்போதும் அவள் கை, இடது பக்க நெஞ்சை அழுத்தி பிடித்திருக்க, அப்போது நிஜத்திலும் அவ் வலியை உணர்ந்தாள் அம்மங்கை.

அறையில் மெல்லிய விளக்கொளியில், தன்னை ஒரு குனிந்து பார்த்து கொண்டவளுக்கு, தனக்கு ஒரு ஆபத்தும் இல்லை, தான் தன் அறையில் பத்திரமாக தான் இருக்கிறோம் என்று புரியவே பல நிமிடங்கள் பிடித்தது.

கண்ட கனவின் பயனாய் சுவாசம் ஒழுங்கற்று இருக்க, முகத்தில் பூத்திருந்த வியர்வையை இடது கையால் ஒத்தி எடுத்தப்படி, மஞ்சத்தில் இருந்து இறங்கி, சாளரத்தின் அருகே வந்து நின்றாள் நற்சோணை.

குளிர்ந்த காற்று வந்து முகத்தில் மோத, சில நிமிடம் அசைவின்றி அப்படியே நின்றிருந்தாள் நற்சோணை.

கண்டதை வெறும் கனவு என்று அவளால் எளிதாக ஒதுக்க முடியவில்லை. ஏனோ அந்த நிகழ்வு உண்மையாக நடந்ததை போலவே இருந்தது.

இத்தனை வருடத்தில் அவளுக்கு இப்படி எல்லாம் துர் சொப்பனங்கள் வந்ததே இல்லை. கனவில் வந்த இடத்திற்கு இதற்கு முன்பு அவள் சென்றதே இல்லை.

முழுமையான நிறைமதியில், ஆழி தேசத்து முடிவிழா நெருங்கும் நேரத்தில், அவளது வாழ்க்கை துணையை, அவள் தேர்ந்தெடுக்க வேண்டிய இந்நேரத்தில், இப்படி ஒரு சொப்பனம்.

ஏனோ நற்சோணைக்கு மனம் எல்லாம் பாரமாக இருக்க, அந்த இரவு அவளுக்கு தூங்காத இரவாகவே விடிந்தது.

அதே நேரம் ஆழி தேசத்தில் கடற்கரையோரம் இருந்த சிறிய மாளிகையில், மாறவர்மனும், பல எண்ணங்கள் அலைக்கழிக்க உறங்காமல் தான் இருந்தான்.

அவனின் எண்ணம் முழுக்க, அப்பெண் எப்பொழுது கண் விழிப்பாள், என்பதாக தான் இருந்தது.

யாரென்று தெரியாத ஒரு பெண் மீது தனக்கு ஏற்படிருக்கும் இந்த அக்கறை, அவனுக்கு ஒரு அசௌகரியத்தை கொடுக்க,

“அப்பெண் யார், எவரென்று தெரியவில்லை, உளவாளியா அல்லது வழி தவறி வந்த பாதசாரியா என்று தெரியவில்லை, அப்பெண் விழித்தால் தானே எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும், அதனால் தான், தான் அப்பெண் கண் விழிக்க காத்திருக்கிறேன்”

என்று தனக்கு ஒப்பும் வகையில் ஒரு காரணத்தையும் தனக்கு தானே கற்பித்தும் கொண்டான்.

அன்று இரவு முழுவதுமே நறுமுகை கண்விழிக்க வில்லை. அடுத்த நாள் காலையில் குணசிம்மன் தன் நண்பணிடம்,

“மாறவர்மா, நான் உரைத்த அனைத்தையும் நினைவில் வைத்து கொள், தடைசெய்யப்பட்ட கானகத்திற்கு எக்காரணத்தை கொண்டும் மீண்டும் செல்லாதே”

என்று சொல்ல, மாறவர்மன் அமைதியாகவே இருக்க, ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்த குணசிம்மன்,

“அப்பெண் விழித்தும், இளவரசனாக தீர விசாரித்து அவசியமானதை செய் நண்பா”

என்று அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை அழுத்தி சொன்னான்.

“அப்பெண்ணின் மீதான உன் இனம்புரியாத உணர்வுகளால் விசாரணையை ஒருதலை பட்சமாக செய்யாமல், நேர்மையாக இளவசரனை போல நடத்து”

என்பது தான் நண்பன் சொல்லிய கூற்றின் உட்கருத்து என்பது, மாறவர்மனுக்கும் நன்றாக புரிந்தது.

இரவு முழுவதும் உறங்காமல், உறங்க முடியாமல் தான் நடைப்பயின்றதை, நண்பன் அறிந்ததின் விளைவு தான் இது என்பதிலும் மாறவர்மனுக்கு ஐயமில்லை.

மாறவர்மனின் முகமாற்றத்தை கவனித்தும் கவனிகாதவன் போல, விடைபெற்று தன் தேசத்திற்கு தன் யாளியில் கிளம்பினான் குணசிம்மன்.

மாறவர்மனின் நிலையை அறியாமல், பஞ்சணையில் மயக்கத்தில் இருந்த நறுமுகையோ, மூன்று நாட்கள் ஆகியும் கண் விழிக்கவில்லை.

மூன்று நாட்களும் அவளை சுத்தப்படுத்தி, வேறு உடை அணிவித்து, உடலிற்கு வலுகூட்டும் நீர் ஆகாரத்தை வாயை திறந்து வலுக்கட்டாயமாக புகட்டி, காயத்திற்கு மருந்திட்டு என அவளை ஒரு குழந்தை போல பார்த்து கொண்டார் அழகம்மை.

நறுமுகையை பார்க்கும் போது எல்லாம் உள்ளத்தில் கிளரும் தாயின் பரிவையும், பாசத்தையும், சாமர்த்தியமாக கண்களில் காட்டாமல் மறைத்தும் கொண்டார்.

மூன்றாம் நாள் இரவு, அழகம்மை தன் வேலைகளை முடித்து, நறுமுகையின் அறையில் இருந்து வெளியே வர, அவரை அறை வாயிலில் எதிர்கொண்டான் மாறவர்மன்.

மூன்று நாட்கள் ஆகியும் அப்பெண் கண் விழிக்காததில் கவலையுற்றிருந்த இளவரசன், அதை முகத்தில் காட்டாமல் சாதாரணம் போல,

“இன்னும் ஏன் அப்பெண் கண் விழிக்கவில்லை”

என்று அழகம்மையிடம் கேட்க, அவனின் உள்ள கிடங்கை அறிந்த அவரோ உள்ளுக்குள் சிரிப்புடன், வெளியில் சாதாரணமாக,

“அப்பெண்ணின் உடல் மிகவும் பலவீனமாக இருக்கிறது இளவரசே, அதனால் தான் கண் விழிக்க தாமதமாகிறது, கவலைப்படும் படியாக வேறு ஒன்றும் இல்லை”

என்று சாந்தமான குரலில் சொல்ல, அப்போது நறுமுகை இருக்கும் அறையில் ஏதோ சத்தம் கேட்க, இருவரும் அங்கு விரைந்தனர்.

அறையில் இரும்பென கனத்த கண் இமைகளை வெகு சிரமப்பட்டு திறந்த நறுமுகைக்கு, முதலில் ஒன்றுமே புரியவில்லை.

பின்பு ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தும் நினைவுக்கு வர, கடைசியாக ஒருவன் கையில் வாளுடன் தன் முன் நின்றதும் நினைவுக்கு வந்தது.

அந்த நினைவே பயத்தை தர, ஒரு முறை உடலை உலுக்கி கொண்டவள், தன்னை ஒரு முறை குனிந்து பார்த்து கொண்டாள்.

தான் அணிந்திருக்கும் உடையை தவிர, தன் உடலில் எந்த மாற்றமும் தென்படாததும், தான் நறுமுகைக்கு சுவாசம் சீரானது.

சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தவள், அறையில் யாரும் இல்லாததை கவனித்த நறுமுகை, பஞ்சணையில் இருந்து இறங்க முயன்றாள்.

தரையில் கால் வைத்த நறுமுகைக்கு, கண்களை இருட்டி கொண்டு வர, பிடிப்புக்கு அருகில் இருந்த மேசையை பிடிக்க, அவளின் கை பட்டு, அதன் மேல் இருந்த நீர் குவளை தரையில் உருண்டது.

இந்த சத்தம் கேட்ட அழகம்மையும், மாறவர்மனும் ஒருவர் பின் ஒருவராக அறைக்குள் நுழைந்தனர். அறையில் இருந்த மெல்லிய ஒளியிலும், மாறவர்மனை அடையாளம் கண்டு கொண்டாள் நறுமுகை.

அப்போது தான் தன்னை நிலைப்படுத்தி கொண்டு நின்ற நறுமுகை, இளவரசனை பார்த்ததும், பயத்தில் இரண்டடி பின்னால் வைக்க, பஞ்சணையின் கால் தடுக்கி, மீண்டும் அதன் மீதே பொத்தென விழுந்தாள்.

அனிச்சை செயலாக கீழே விழுந்தவளை தாங்கும் நோக்கோடு, எட்டு எடுத்து வைத்து, அவளை நெருங்க நினைத்த மாறவர்மன், அவளின் முகத்தில் இருந்த பயத்தை பார்த்ததும், அடுத்த அடி வைக்காமல் அப்படியே நின்று விட்டான்.

அவள் கண் விழித்து விட்டாள் என்பதில் தன் மனதுக்குள் இருந்த பாரம் இறங்க, ஏனோ தன்னை பார்த்ததும் அவளின் முகத்தில் விரிந்த பய உணர்வு, மாறவர்மனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை.

உள்ளத்தில் பல எண்ணங்கள் ஊர்வலம் சென்ற போதும், முகத்தில் எதையும் காட்டாமல், தன் கணீர் குரலில்,

“யாரங்கே”

என்று அழைக்க, குரலுக்கு ஓடி வந்த இரண்டு வேலையாட்களிடம்,

“தீபங்களை தூண்டி விடுங்கள், பருக பானம் கொணர்ந்து வாருங்கள்”

என, ஒருவர் அறையில் இருந்த தீபங்களை தூண்டி அறை முழுவதும் பளீரென வெளிச்சம் பரவ செய்ய, மற்றோருவரோ மின்னல் வேகத்தில் நீரை கொணர்ந்து வந்தார்.

வேலையாட்கள் வேலையை முடித்து வெளியே செல்லும் வரை அந்த அறையில் அமைதி மட்டுமே நிலவியது.

இன்னும் லேசாக கிறுகிறுத்த தலையை பிடித்து கொண்டு குனிந்து அமர்ந்திருந்த நறுமுகை, அறையில் நடந்த எதையும் அவள் கவனிக்கவில்லை.

நறுமுகையை நெருங்கிய அழகம்மை தன் சாந்தமான குரலில்,

“அச்சம் வேண்டாம், தாங்கள் கானகத்தில் திடிரென மூர்ச்சையுற்று விட்டீர்கள், நான் தான் தங்களுக்கு மருத்துவம் பார்த்தேன், இங்கு தங்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் ஒருவரும் இல்லை”

என்று அவள் அடுத்து கேட்க இருக்கும் அனைத்து கேள்விகளுக்கும், அவள் கேட்காமலே விடை அளித்தார்.

அதே சமயம் அவளின் பயத்தை உணர்ந்தவராக, அவளின் பாதுகாப்பையும் உறுதி செய்தார்.

பின்பு வேலையாள் கொணர்ந்த பானத்தை பித்தளை குவளையில் ஊற்றி அவளிடம் கொடுத்தவர்,

“இதை முதலில் பருகுங்கள்”

என்று அவளின் உலர்ந்திருந்த தொண்டையை அறிந்தவராக சொல்ல, அவரை நன்றியுடன் பார்த்த அவள், மறுபேச்சு பேசாமல் பருகினாள்.

பருகிய பானத்தின் விளைவாக, புலன்கள் எல்லாம் முற்றிலும் விழிக்க, சற்றே ஆசுவாசமாக தெரிந்த நறுமுகையிடம்,

“தங்கள் பெயர் என்ன”

என்று அழகம்மை கேட்க, அவளோ சிறிய குரலில்,

“நறுமுகை”

என்றாள். அப்பெயரை கேட்டதும், மெல்லிய கோடாக புன்னகை ஒன்று அழகம்மையின் முகத்தில் தோன்ற,

“அழகான பெயர்”

என்று சிலாகித்தவர், ஒரு சில நொடிகள் அமைதிக்கு பிறகு,

“தாங்கள் எந்த தேசத்தை சேர்ந்தவர்”

என்று அடுத்த கேள்வியை கேட்க, அப்போது தான் அழகம்மையின் தமிழ் சற்றே வித்தியாசமாக இருப்பதாக தோன்றியது நறுமுகைக்கு.

அதுவும் அவர் எந்த தேசம் என்று கேட்க, ‘தேசமா’ என்று குழப்பத்துடன் அவரை பார்த்தவள்,

“என்னோட ஊர் அத்தியூர்”

என்று சொன்னவள், அவர்களின் முகத்தில் இருந்த குழம்பத்தை பார்த்தவள்,

“இது தமிழ் நாடு தானே”

என்று அடுத்த கேள்வியையும் கேட்டாள். வித்தியாசமாக இருந்தாலும், இவர்கள் பேசுவது தமிழ் தானே என்ற எண்ணம் அவளுக்கு.

ஆனால் தன் முன்னால் நின்ற இருவரின் முகமும் இன்னும் குழப்பத்தை கூடுதலாக காட்ட, அழகம்மை,

“இது ஆழி தேசம்”

என்று சொல்ல, இப்படி ஒரு பெயரை கேள்வி பட்டிராத நறுமுகையின் முகம் முதலில் வியப்பை காட்டி, பின்பு இயல்பானது.

முதலில் ஊரின் பெயர் வித்தியாசமாக இருக்க வியப்பானவள், பின்பு தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து ஊர்களும் தனக்கு தெரியாது தானே, என்று தன்னை தானே தேற்றி கொண்டவளாக,

“உங்க போன் கொஞ்சம் கொடுங்களேன், வீட்டுக்கு கால் பண்ணனும், பயந்து போய் இருப்பாங்க”

என்று பெரியவீட்டம்மாவையும், அவரின் மகனையும் நினைத்து சொல்ல, இன்னும் குழம்பிய அழகம்மை, பின்னால் திரும்பி மாறவர்மனை ஒரு பார்வை பார்த்து விட்டு, அவன் இடவலமாக தலையசைத்தும்,

“தா…ங்…க…ள் தாங்கள் கேட்பது என்னவென்று நான் அறியேன் தாயே”

என்று சொன்னார். நறுமுகையின் முகமோ,

“எது போன் என்னனு தெரியாதா???”

என்று அப்பட்டமாய் அதிர்ச்சியை காட்ட, அப்போது தான், தான் விழுந்த இடம் நினைவுக்கு வர,

“ஒருவேளை இவர்கள் வெளி உலகத்தோடு தொடர்பே இல்லாத காட்டு வாசிகளாய் இருப்பாங்களோ”

என்று எண்ணி கொண்டே நிமிர்ந்தவளுக்கு, தான் இருக்கும் அறையின் அமைப்பும், தன் முன்னால் நிற்பவர்களின் உடையில் இருந்த நேர்த்தியும், அவர்களை காட்டு வாசிகள் என்று நம்பவிடவில்லை.

தொடர்ந்து யோசிக்க, யோசிக்க தலை எல்லாம் வலிக்க ஆரம்பித்தது அவளுக்கு.

“இவர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை, முதலில் இங்கிருந்து தன் வீட்டிற்கு செல்லும் வழியை பார்க்க வேண்டும்”

என்று தனக்குள் யோசித்த நறுமுகை, தன்னிடம் பேசிய முதிய பெண்மணியின் பின்னால், இளம் நீல நிறத்தில் உடையணிந்து அரச தோரணையில் நின்றிருந்தவனை ஒரு பார்வை பார்த்து விட்டு,

“இந்த ஆழி தேசத்தில் இருந்து எப்படி வெளியே போறது, ஐ மீன் சிட்டிக்கு எப்படி போறது”

என்று கேட்க, இவள் பேசிய பல வார்த்தைகள் அவர்களுக்கு புரியவில்லை என்பது அவர்களின் முகத்தில் இருந்தே புரிந்தது நறுமுகைக்கு.

ஒரு பெரு மூச்சு விட்டவள், ஆங்கிலம் தவிர்த்து தமிழில் சொல்ல நினைத்து, வாயை திறக்க, அதற்குள் இவள் இங்கு இருந்து செல்ல நினைக்கிறாள் என்பதை மட்டும் புரிந்து கொண்ட மாறவர்மன்,

“அன்றிரவு, தடை செய்யப்பட்ட கானத்திற்கு தாங்கள் எப்படி வந்தீர்கள்”

என்று மரியாதையாக கேட்க, அவனின் இரும்பை ஒத்திருந்த குரலில் லேசாக பயம் துளிர்க்க நறுமுகை,

“நான் எங்க பண்ணையில் இருந்தேன், அப்போ சடன் அஹ பிளாக் கலர்ல இருந்த ஒன்னு என்னை உள்ள இழுத்துச்சி, எதோ பள்ளதுல விழுந்த மாதிரி இருந்தது, திரும்ப கண்ணு முழிச்சி பார்த்தா, அந்த காட்டுல இருந்தேன்”

என்று தன்னிடம் ஒருவன் தவறாக நடக்க முயன்றான் என்பதை சொல்ல விரும்பாமல், அதை தவிர்த்து நடந்த மற்றதை மட்டும் சொன்னாள்.

அவள் பேசிய மொழி தங்களின் மொழியை ஒத்திருந்தாலும், நடுநடுவே வேறு மொழி எதையோ அவள் கலந்து பேசுவதாக தோன்றியது அவனுக்கு.

அந்த மொழி என்ன என்று அவனுக்கு தெரியவில்லை. ஐந்து தேசத்தில் யாரும், இந்த மொழியை பேசி அவன் கேட்டதில்லை. இப்படி ஒரு மொழி இருப்பதாக கூட அவன் கேள்விப்பட்டதில்லை.

தன் முன்னால் இருக்கும் பெண்ணின் உடை, மொழி என அனைத்தும், தங்களில் இருந்து வெகுவாக வேறுபட்டிருக்க, ஏதோ எங்கோ தவறாக இருப்பதை போல தோன்றியது மாறவர்மனுக்கு.

ஒரு இளவரசனாக நறுமுகை மீது அவனுக்கு சந்தேகம் துளிர்க்க, அதேநேரம் அவளின் மீது இனம்புரியா உணர்வும் ஒரு பக்கம் கிளர்ந்தது.

அவன் பல விதமான உணர்வுகளுடன் நறுமுகையை கூர்ந்து பார்க்க, அவனின் பார்வை நறுமுகைக்கு அசௌகர்யத்தை கொடுக்க, அவளால் அவன் முன்பு அங்கு உட்கார முடியவேயில்லை.

முகத்தில் பொடி பொடியாய் வேர்வை துளிர்க்க, அந்த அறையில் காற்றில் கணம் கூடியது போல இருக்க, வெளிக்காற்றிற்காக சாளரத்தை நெருங்கிய நறுமுகை, திரைசீலையை விளக்கி, குளிர்ந்த காற்றை ஆழ்ந்து உள்ளிழுத்தாள்.

சாளரத்தின் வழியே வெளியே நறுமுகை பார்க்க, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, அடர்ந்த அந்தகாரம் மட்டும் தான். அது அவளுக்குள் ஒரு பயத்தை விதைக்க, அதை தவிர்க்க வானத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

ஆகாயத்தை பார்த்தவள், தான் காணும் காட்சியை நம்ப முடியாமல், கண்களை கண்களை கசக்கி விட்டு மீண்டும் பார்க்க, இப்போதும் கண்ட காட்சியில் சிறிதும் மாற்றமில்லை.

நறுமுகை அதிர்ச்சியில் வெளியில் தெரித்துவிடும் அளவில் பெரிதான முட்டை கண்களுடன்,

“எ..ப்..ப..டி, எப்படி வானத்தில இரண்டு நிலா இருக்கு”

என்று திரும்பி அழகம்மையிடம் கேட்க, மாறவர்மனின் நறுமுகை மீதான பார்வை இன்னும் கூர்மைனையானது.

Advertisement