விநாயகம் அனைத்தையும் பார்த்து,உருப்படி கணக்குப் போட்டு, பின் அதில் எத்தனை குறைக்க முடியும் என்று பார்க்க, கவிதாஞ்சலியோ “இவ்வளோ வாங்கிருக்கோம்.. கிப்ட் எதுவுமில்லையா?!” என்று கேட்க,

“டிஸ்கவுன்ட் இருக்கு ம்மா..” என்றான் ஒரு சிறு புன்னகையோடு.

“அதுவும் இருக்கும்.. ஆனா இத்தனை வாங்குறப்போ, கிப்ட்டா எதுவும் வாங்கலைன்னா எனக்கு சங்கடமா இருக்குமே அங்கிள்..” என்றவள், மீண்டும் பார்வையை சுற்ற விட,

‘கடைய காலி பண்ணிட்டு தான் போவா போல..’ என்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தேவிட்டான் நாயகன்.

படுத்தேவிட்டான் ஐய்யா போல இவன் அமர்ந்தேவிட்டான்.

“சும்மா இரு கவி..” என்று தாரணி மகளின் தோளைத் தட்ட,

“ம்மா.. நான் ஹெவி பர்ச்சேஸ் பண்ணிருக்கேன்..” என்றவள் “சொல்லுங்க அங்கிள்..” என்று கேட்க, அவள் நிஜமாகவே தான் கேட்கிறாள் என்று அப்போதுதான் புரிந்தது.

“அறுபத்தி மூணாயிரம் மொத்தம்.. அதுல இவ்வளோ டிஸ்கவுன்ட்..” என்று ஒரு தொகையைச் சொன்னவர், “பார்சல் அனுப்புறது எங்க பொறுப்பு..” என்றும் சொல்ல,

“அது எல்லா இடத்துலயும் இருக்கிறது தானே அங்கிள்..” என்றாள் இவளும்.

வெள்ளந்தி என்று சொன்ன மனிதர், இப்போது ‘நல்ல விவரமான புள்ளதான்..’ என்று முணுமுணுப்பது காதில் கேட்டது கண்ணதாசனுக்கு.           

“அடடா.. சரிம்மா.. கிப்ட் தானே வேணும்..” என்றவருக்கு நிஜமாய் அவளுக்கு ஏற்றது போல என்ன கொடுப்பது என்று தெரியவில்லை.

மகனைப் பார்க்க, இந்த விளையாட்டிற்கு நான் வரவில்லை என்பதுபோல ஒரு பக்கம் அமர்ந்திருக்க, அவனுள் ஓடும் இம்சைகள் எல்லாம் அவருக்கு எங்கே தெரியப் போகிறது.

“ஆயிரம் ரூபாய் குள்ள, குடுக்கிற மாதிரி இருக்க பொருள் எடுத்துட்டு வா..” என்று கடையில் இருப்பவரிடம் சொல்ல,

“தவுசன்ட் ருப்பீஸ் தானா அங்கிள்?!” என்று அவள் கேட்டதும், கண்ணதாசனுக்கு அப்பாவின் நிலைகண்டு சிரிப்போ சிரிப்பு.

ஆனாலும் பேச்சினை மாற்றும் விதமாய் “உங்க அட்ரஸ் சொல்லுங்க..” என்றவன், பேப்பர் பேனாவோடு எழுந்துவர, அவளோ தானே எழுதவென்று கை நீட்டினாள்.

கண்ணதாசனும், அவளிடம் பேப்பர் பேனாவை நீட்ட, வாங்கி கடகடவென எழுதிக் கொடுத்தாள் கவிதாஞ்சலி. அவள் எழுதி இருந்ததைப் படித்துப் பார்த்தவன் “மொபைல் நம்பர் போடுங்க..” என்று சொல்ல,

“ஓ! சாரி..” என்றவள் அவளின் அலைபேசி எண்ணை எழுதிக் கொடுக்க, நொடியில் மனனம் செய்துவிட்டது மனம்.

‘பேன்சி நம்பர்..’ என்ற மனதை தட்டியவன் “ஓகே.. அனுப்பிடலாம்..” என்றவன், அவள் எழுதிக் கொடுத்த பேப்பரை மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.       

அதற்குள் விநாயகம் கேட்டது போல பொருட்களை எடுத்துக்கொண்டு ஆள் வர, “இதுல உனக்கு எது வேணுமோ எடுத்துக்கோ ம்மா ..” என்று அவர் சொல்லவும்,

“ரியலி.. தேங்க்ஸ் அங்கிள்..” என்று பாந்தமாய் மொழிந்தவள், அப்பொருட்களை எல்லாம் ஆராய, தாரணியும் என்னவென்று எடுத்துப் பார்க்க “ம்மா இதுவும் எனக்குத்தான்..” என்றாள் வேகமாய்.

“வச்சுக்கோ.. நீ ஒன்னும் எனக்குத் தரவேணாம்..” என்று அம்மா நொடித்துக்கொள்ள, அதற்குள் இவர்களை அழைத்துச் செல்லவேண்டு நேத்ரன் வந்துவிட்டான் கடைக்கு.

அவன்தான் வந்து இறக்கிவிட்டுப் போயிருந்தான். இப்போது அவனே வந்துவிட, கண்ணதாசனுக்கு அவனைப் பார்த்ததுமே பக்கென்று ஆனது. நல்ல கட்டுமஸ்தான உடல்வாகோடு இருந்தான் நேத்ரன். கண்ணதாசனும் வடிவான உடல்வாகுதான். அதற்காக ஜிம் பாடி எல்லாம் இல்லை. ஓரிரு உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக வைத்திருந்தான். ஆனால் நேத்ரனோ, பார்த்ததுமே தெரிந்துபோனது அவன் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கென்றே பல மணி நேரங்கள் செலவு செய்பவன் என்று.

“நேத்.. இங்க பாரு.. இதெல்லாம் நான் வாங்கினேன்..“ என்று அண்ணனிடம் தான் வாங்கியதைக் கேட்க,

“சூப்பர்ப் அஞ்சலி..” என்றவன் அம்மாவைப் பார்த்துவிட்டு, பின் மனைவியைப் பார்த்து “நீ சுஷ்?!” என்றிட,

“நான் எதுவும் வாங்கல..” என்றாள்.

“வொய்?! வேணாமா எதுவும்?” என,

“நாட் இன்ட்ரஸ்டட் இன் திஸ் திங்க்ஸ் நேத்..” என்று தோள் குலுக்கிய மருமகளைப் பார்த்து தாரணி புன்னகைக்கவே செய்தார்.

ஒன்றுமட்டும் நன்றாய் புரிந்தது, மகளோ மருமகளோ அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் பெரியவர்கள் அதிகம் தலையிடுவுது இல்லை என்று.

இதற்கிடையில், கவிதாவும் “இது எடுத்துக்கிறேன்..” என்று பித்தளையில் இருந்த ஒரு பன்னீர் சொம்பினை எடுக்க “இது எதுக்கு டி..?” என்றார் தாரணி வேகமாய்.

“பன்னீர் சொம்பு.. பன்னீர் தெளிக்க..” என்று கூலாக அவள் கூற “அதான் அது எதுக்கு உனக்கு?!” என்றார் அடுத்து.

“ம்மா.. அழகா இருக்கும்மா. பூஜை ரூம்ல வைக்கலாம் இல்லையா.. பாரு கீழ பூன் போட்டிருக்கு..” என்று அதன் வேலைப்பாட்டை காட்ட, விநாயகத்திற்கு என்னவோ கவிதாஞ்சலியை மிகவும் பிடித்துப் போனது.

காசிருக்கிறது என்று கண்டதையும் வாங்கவில்லை அவள். அதேநேரம் அவள் வாங்கிய பொருட்கள் எல்லாம், பத்தோடு பதினொன்றாய் இல்லை. எல்லாமே ஒரு தனித்துவமாய் இருந்தது தான் அவருக்கு வியப்பு. சிலருக்கு சில விருப்பங்கள் இருக்கும் இல்லையா. அதுபோல அவள் வாங்க, பணத்தையும் அவள் பட்டென தூக்கிக் கொடுத்திடவில்லையே.

எல்லாம் உள்ளேயே கணக்குப் போட்டுக்கொண்டு இருந்தார் மனிதர். மகனோ, அவளது அத்தனையும் பிடித்தாலும், அவளையே மொத்தமாய் அள்ளிக்கொள்ளும் வேகம் உள் எழுந்தாலும், ஒருவித அமைதியில் தான் இருந்தான். இப்பெண் சுதந்திர பறவை என்கிற நினைப்பு மட்டுமே அவனுக்கு.  அவன் வீடும், குடும்பமும் அவளுக்கான வானமில்லை என்பது திண்ணம்..      

இப்படியாக எல்லாம் முடிந்து, பணத்தைக் கொடுத்துவிட்டு, எடுத்துச் செல்ல முடியுமாய் இருக்கும் பொருட்களை மட்டும் எடுத்துக்கொள்ள, அவர்களின் முன்னேயே பெங்களூர் விலாசம் எழுதி, பார்சலும் கட்டியாகிவிட்டது.

“எப்போ ரீச் ஆகும்?” என்று கவி கேட்கவும்,

“உங்களுக்கு எப்போ ரிசீவ் பண்ணனும்?” என்று கண்ணதாசனும் கேட்க,

“ம்ம் நாளைக்கு கிளம்பிடுவேன்.. நாளன்னைக்கு ஓகே..” என்று கண்களை உருட்ட,

“ஓகே.. அனுப்பிடலாம்..” என்று ஒருநொடி கண்ணதாசன் இமைகளை மூடித் திறக்க, அவள் பார்வை அந்நொடி அவன் முகத்தினில் நிலைத்து போல ஒரு உணர்வு.

ஒருவழியாய் அனைவரும் எல்லாம் முடித்து, காரில் ஏறியமர்ந்து வீடு நோக்கிச் செல்ல, சில நிமிடங்கள் கடக்கவும்  சுஷ்மிதா தான் “நேத், கவி அறுபதாயிரம் செலவு பண்ணி, நல்லா சைட் அடிச்சிட்டு வந்திருக்கா..” என்று கணவனிடம் சொல்ல,

“ஹா! அஞ்சலி ரியலி?!” என்றான் அண்ணன்.

தாரணியோ மருமகள் வார்த்தைகளை கேட்டுவிட்டு, மகளைப் பார்க்க “ம்மா..” என்று கண்களை அகல விரித்தவள் “டேய் அண்ணா..” என்றும் சிணுங்க,

“ட்ரூ ஆன்ட்டி ட்ரூ..” என்றாள் வேகமாய் சுஷ்மா.

உடனே ரோஷமாய் “ஆமா பார்த்தேன்.. இப்போ என்ன? அவன் ஹென்ட்சமா இருந்தான். சோ பார்த்தேன்..”   என்று கவிதாஞ்சலி சொல்லவும்,

“இசிட்?! பெங்களூர்ல இல்லாத ஹென்ட்சம் கைஸ்ஸா அஞ்சு?” என்றான் அண்ணன்காரன்.

“ண்ணா.. அதெல்லாம் ஒருமாதிரி, சொல்லத் தெரியலை. பட்.. இங்க பார்த்தோமே.. இவன்.. ம்ம்ச் பாரேன் பேர் கூட கவனிக்கல. இவன் சம்திங் என்னவோ.. ஊர்க்காரன் போலவும், கொஞ்சம் மார்டனாவும், ஒருமாதிரி ரெண்டு கலந்து மேன்லியா இருக்கான்ல..” என, தாரணி பட்டென மகளின் தோளில் தட்டினார்.

“என்ன ம்மா?!” என்று தோளை தடவிக்கொண்டே கேட்க,

“இங்க இப்படில்லாம் பேசக் கூடாது கவி..” என்றார் கொஞ்சம் கண்டிப்பாய்.

“அட நமக்குள்ள தானே ம்மா..” என்றவள் “ம்ம்.. ம்மா நீ கேட்ட தானே, உனக்கு எப்படி மாப்ள வேணும்னு. இதோ இப்போ பார்த்தோமே, அவனைப் போல இருந்தா டபிள் ஓகே..” என்று சொல்லி கண் சிமிட்ட, தாரணிக்கே மகளது இப்பேச்சில் கொஞ்சமல்ல நிறையவே வியப்பு தான்.