“மம்மி திஸ் ஒன் இஸ் சோ ப்ரெட்டி..” என்று கையில் இருந்த சிறிய, பித்தளை உருளி ஒன்றைக் காட்டினாள் கவிதாஞ்சலி.
தாரணியோ “அழகா தான் இருக்கு. ஆனா இது எதுக்கு?” என,
“ம்மா.. திலக் ஓட அம்மா, இதுபோல ஒரு பாத்திரத்துல தான் கிச்சடி, உப்மா, கலந்த சாதம் எல்லாம் பண்றாங்க. டேஸ்ட் வாஸ் யம்மி டு தி கோர்…” என்று கண்களை மூடி, தான் உண்ட உணவின் சுவையை இப்போதும் ரசித்து அவள் சொல்ல, அவளறியாமல் அவளை ரசித்துக்கொண்டு இருந்தான் ஒருவன்.
என்னவோ படத்தில் பார்த்ததை விட, இப்போது அவளது நகக்கண் கூட, அவனை அவள்பக்கம் சுண்டி இழுப்பது போலிருந்தது. வலக்கை மோதிர விரலில், மோதிரத்திற்கு பதிலாய் பட்டையாய் டாட்டூ போட்டிருந்தாள். ஒரு டெனிம் சட்டை போல மேலாடையுடன், அழகாய் பூக்கள் தெளித்துவிட்டது போன்றிருந்த ஸ்கர்ட் அணிந்து, பார்க்கவே மிகவும் ஸ்டைலாய் இருந்தாள். கண்ணதாசனோ பார்வையை நகர்த்த பெரும்பாடு பட்டுக்கொண்டு இருந்தான்.
மனதோ ‘இவளுக்கு எந்த ட்ரெஸ் போட்டாலும் செமயா இருக்கும் போல..’ என்று குரல் கொடுக்க, நீ கொஞ்சம் அடங்கு என்று தன்னை தானே அடக்கியவன், பார்க்கும் தொழிலின் நிமித்தம், அவனும் ஏதேனும் ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டிய நிர்பந்தத்தில் இருக்க, இவளோ பேசிக்கொண்டே இருந்தாள்.
ஆம், கவிதாஞ்சலி பேசிக்கொண்டே தான் இருந்தாள். தாரணி அளந்து பேசினார். சுஷ்மிதா வாயே திறக்கவில்லை. ஆனால் கவிதாஞ்சலி அனைவருக்கும் சேர்த்து வைத்துப் பேச, கடையில் வேலை செய்பவர் கூட “வெள்ளந்தி புள்ள போல..” என்று சொல்லிவிட்டார்.
“தேங்க்ஸ்..” என்று அதற்கும் தலையை ஆட்டிச் சொன்னவள் “ம்மா இது எனக்கு வேணும்..” என்று, அந்த உருளியைப் பார்த்துச் சொல்ல,
“நான் வாங்க வந்தது வாங்கிட்டேன்..” என்று முடித்துவிட்டார் தாரணி.
“ஓகே..” என்று தோள்களைக் குலுக்கியவள், மீண்டும் பார்வையை ஓடவிட, சரியாய் கண்ணதாசனுக்கு பின்னிருந்த ஷெல்ஃபில், ‘மினியேச்சர்..’ எனும் சிறிய ரக அலங்காரப் பொருட்களும், வீட்டு உபயோகப் பொருட்களும் இருக்க
“வாவ்..!” என்று அதனைப் பார்த்து சொல்லிக்கொண்டே வந்து கண்ணதாசன் முன்னே நிற்க, இவனுக்கோ சட்டென மூச்சடைத்துப் போனது.
அவனுக்கு அவனைப் பார்ப்பது போலவே இருக்க, அவளோ அவன் பின்னிருந்த ஷெல்ஃபை கை காட்டி “இந்த ஜாடி எடுங்க..” என,
“ஹா?!” என்று ஒருமாதிரி விளித்து, புரியாமல் பார்த்துக் கேட்டான்.
“இதோ.. அங்க.. உங்களுக்கு பின்னாடி.. அந்த குட்டி ஜாடி இருக்கே..” என, ஒருவழியாய் தன்னை சுதாரித்துக்கொண்டவன், அவள் காட்டிய பக்கம் பார்க்க, அங்கே சிறு சிறு பித்தளைப் பொருட்கள் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
அதெல்லாம் அழகாய் இருக்கிறது என்பதே, அதனை கவிதாஞ்சலி கைக் காட்டிய பிறகுதான் அவனும் உணர்ந்துகொள்ள முடிந்ததுவோ என்னவோ.
“யா..” என்று தலையை ஆட்டியவன், இடக்கை கட்டை விரலால் லேசாய் அவனின் நாசியை நிரடிக்கொண்டவன் “இதுல எது வேணும்..” என,
“அதோ அந்த குட்டி ஜாடி.. அந்த குட்டி கிண்ணம்.. அப்படியே அந்த செட் முழுக்க வேணும்..” என, அவளை ஒருமாதிரி திரும்பிப் பார்த்தான் கண்ணதாசன்.
“என்னாச்சு?!” என்று நெற்றி சுருக்கி, கைகளை விரித்துக் கேட்க,
“ஓ!” என்றவள் “சுஷ்.. நம்ம பாப்பாக்கு வாங்கலாமா?” என்று அண்ணியைக் கேட்க,
“இருக்கிற திங்க்ஸ் போதும் கவி. இதெல்லாம் என்னால ஹேண்டில் பண்ண முடியாது. வாங்கிட்டு போனாலும், டெக்கர் ஐடமா தான் டிஸ்ப்ளேல வைக்கணும்..” என்று, மறுப்பாய் தோள்களைக் குலுக்கிவிட்டாள்.
கவியோ அடுத்து அம்மாவைப் பார்க்க “குழந்தைங்க திங்க்ஸ் உனக்கு எதுக்கு?“ என,
“நானும் உனக்கு குழந்தை தானம்மா..” என்றாள், பாவமாய் இழுத்து.
அவள் அப்படி பாவமாய் உதட்டை பிதுக்கிக் கேட்ட விதத்தில் ‘அச்சோ செல்லக்குட்டி.. வெல்லக்கட்டி.. என் கவிக்குட்டி..’ என்று கொஞ்சிடத் தோன்றியது, பக்கத்தில் நின்றிருந்த கடைக்காரனுக்கு.
ஒருநொடி தானே அதிர்ந்து போனான், தன்னுள்ளம் எண்ணிய விதத்தைக் கண்டு. அதிலிருந்து அவன் மீளும் முன்னமே, கவிதாவோ “ம்மா கிட்ஸ் ஐட்டம்ஸ்னா, வாங்கக் கூடாதா?! இப்போ என்ன எனக்கு கல்யாணத்துக்கு பாக்குறீங்க தானே?! அடுத்து என்னாகும், பேபி வருமே..” என்று இரு புருவத்தையும் மாறி மாறி தூக்கி, கண்களை சிமிட்டி அவள் அம்மாவிடம் மெல்ல மெதுவாகவே கேட்டாலும், அது அப்படியே ஸ்பஷ்டமாய் இவனின் பாம்புக் காதுகளில் விழுந்து வைத்தது.
“கவி..!” என்று தாரணி மகளை அதிர்ந்து பார்த்தாலும், பின் அவரும் அவள் பேசியதை பெரிதாய் எடுக்கவில்லை.
“போக்கிரி படவா. யார் வந்து உன்கிட்ட மாட்டிட்டு முழிக்கப் போறாங்களோ..” என்று மகளை செல்லமாய் திட்டிக்கொள்ள, இங்கே இவனுக்குத்தான் என்னவோ கற்பனை குதிரைகள் கண்டபடி பறந்து, கொஞ்சம் வெட்கமாய் கூட போனது.
‘என்னென்ன பேசுறா..?!’ என்று, அவளையே கொஞ்சம் வியப்பாய் பார்த்தான்.
ஆனால் எதற்கும் அலட்டிக்கொள்ளாத கவியோ “யார் மாட்டினாலும் என்ன, பதிலுக்கு நானும் கொஞ்சம் மாட்டிக்கிறேன்..“ என்று இலகுவாய் மொழிந்தவள், கண்ணதாசனை ஏறிட்டு “இந்த செட் புல்லா வேணும். அதேபோல, அந்த சின்ன உருளி வேணும்.. தென்..” என்று பார்வையை மேலும் சுழற்ற, அவனோ எச்சில் கூட்டி விழுங்கினான்.
அவன் கண்ணெதிரே நின்றுகொண்டு அவளிருக்க, அவனுக்கோ நேர்கொண்டு பார்த்திட முடியாத ஒரு தவிப்புப் பிரவாகம் உள் எழுந்து, அவனைக் கொஞ்சமல்ல நிறையவே இம்சைப் படுத்தியது.
“தென்?!” என்று அவனையும் மீறி, ஒரு சொல் எழுந்துவிட,
“ம்ம்..” என்று எதையோ கண்டுகொண்ட பாவனையில் “அதோ மேல இருக்கே, டபரா செட் அது வேணும்..” என,
“நேத் வந்திருந்தா, இந்நேரம் சுஷ் வாங்கிருப்பா..” என்று அண்ணியை வம்பிழுத்தவள், அடுத்து தனக்கு வேண்டும் என்பதை எல்லாம் வாங்கிட, மொத்தமாய் அறுபதாயிரம் தொட்டது அனைத்தும்.
கண்ணதாசன் கூட கொஞ்சம் மலைத்துத் தான் போனான். இத்தனை தூரத்திற்கு எல்லாம், அவனாய் தனிப்பட்டு பிடிக்கிறது என்று எதுவும் வாங்கியதில்லை. அப்படித் தோன்றியதும் இல்லை. ஏதேனும் விசேஷங்கள் என்றால், குடும்பத்தில் இருந்து அனைவரும் சென்று பொதுவில் வாங்குவதுதான். இதுநாள் வரைக்கும் அவனின் பிறந்தநாளுக்கு கூட, அப்பாவும் அம்மாவும் தான் வாங்கித் தருகிறார்கள்.
அவனாய், அவனுக்காக வாங்கியது என்று சொன்னால் அவனது அலைபேசியும், அவனது ஸ்மார்ட் வாட்ச் மட்டுமே. அதுவும் கூட ஆன்லைனில் பார்த்து ஆர்டர் செய்து தருவித்துக் கொண்டது.
இவள் என்னடாவென்றால், கண்ணில் பார்த்ததை எல்லாம் பிடிக்கிறது என்று சொல்லி வாங்குகிறாள். அதற்கு வீட்டினரும் மறுப்பு சொல்வதில்லை.
“ம்ம்..” என்று ஒரு பெருமூச்சு அவனுள்.
“சுஷ் உனக்கு நிஜமாவே எதுவும் வேணாமா?” என்று திரும்ப கவி கேட்க,
“நோ கவி.. வேணாம்..” என்று அவள் உறுதியாய் மறுக்கவும் “ஓகே.. அப்போ இதெல்லாம் பில் போட்டுடுங்க..” என்றாள்.
“பேர் போடவேணாமா?!” என்று ஊழியர் கேட்க,
“என் பேர் எனக்கே தெரியுமே.. இதுல பாத்திரத்துக்கு வேற சொல்லணுமா?” என்று அவள் கேட்ட தினுசில், அவர் ‘ங்கே’ என்றுதான் விழித்தார்.
கண்ணதாசனோ ‘கண்டிப்பா இவக்கிட்ட மாட்டினவங்க பாவம்தான்..’ என்று நினைக்க, ”பெரிய பார்சலா வருமோ?!” என்று அவனிடமே உதடு குவித்துக் கேட்க,
“ஆமா..” என்று தலையை ஆட்டினான்.
“ம்மி.. என்ன பண்றது? பார்சல் போடச் சொல்லிடலாமா?” என்று கேட்க,
“குட் ஐடியா கவி..” என்றவர் “இதெல்லாம் பெங்களூருக்கு பார்சல் அனுப்பணும்..” என்று கண்ணதாசனிடம் கேட்க, அதற்குள் அங்கே விநாயகம் வந்துவிட்டார்.
“அங்கயும் ஆளுங்க வந்துட்டாங்க. அதான் அங்க போக வேண்டியாதாகிப் போச்சு..” என்றவர் “முடிச்சிட்டீங்களா ம்மா..” என்று தாரணியைப் பார்த்து பேச,
ஏற்கனவே திருமண வீட்டில் பார்த்திருந்ததால் “ஆச்சுங்க ண்ணா. இதெல்லாம் பொண்ணுக்கு அங்க அனுப்பணும்..” என்று அவரிடமும் சொல்ல,
“அதுக்கென்னம்மா பார்சல் அனுப்பிக்கலாம். நீங்க அட்ரஸ் கொடுத்துட்டு போங்க..” என்றார்.
கன்னடமும், ஆங்கிலமும் கலந்துகட்டி புதியதொரு பாசையில் அவள் பேசுவது போலவே இருந்தது கண்ணதாசனுக்கு. அவள் பேசும் ஆங்கிலமெல்லாம் அவனுக்கு இதுநாள் வரைக்கும் நாவில் ஒட்டியதில்லை. ஒரு அடிப்படை நாகரீக ஆங்கிலமே அவன் கண்டது. அதுசரி அவள் இருக்கும் இடம், பார்க்கும் வேலை, பழகும் ஆட்கள், சூழல் எல்லாம் அவளை மெருகேற்றி இருக்கிறது என்று எண்ணிக்கொண்டான்.
மகள் பேசிவிட்டு வரும்வரைக்கும் பொறுமையாய் இருந்த தாரணி “இந்த பில் தனி.. இது தனி..” என்றார், இரண்டையும் பிரித்து.
“தனி தனி பில்லா?!” என்று வினாயகம் கேட்க,
“இதெல்லாம் பொண்ணு வாங்கினது. அவதான் பே பண்ணனும்..” எனும்போதே “எஸ் ம்மா..” என்றவள் “எவ்வளோ ஆச்சு அங்கிள்?” என்று கேட்க, விநாயகம் மகனை ஒரு பார்வை பார்த்தார். அப்பார்வையில் ஆயிரம் அர்த்தங்களுக்கும் மேலே இருந்தது.