“நான் கட்டாயம்லா படுத்தல மகா. இந்த இடம் என் மனசுக்கு நல்லதா படுது..”
“எது நல்லது? அவங்க மகன் காதல் கல்யாணம் பண்ணிருக்கான். சம்பந்திக்கு சம்பந்தி வேற ஆளுங்க. நாளைக்கு எம்மவன் புள்ளைக்கு, அவன் மடியில தாய் மாமான்னு உக்காரவச்சு மொட்டை போடணுமா? மகனைக் கட்டி தனியா வச்சுட்டாங்க. மகளை தூரத்துல வேலைக்கு அனுப்பிட்டாங்க.. என்ன குடும்பம்..” என்று மகாலட்சுமி சட்டென பேசிவிட,
“ம்மா..!” என்று குரலை உயர்த்தியவன் “என்ன பேச்சு இது?” என்றான் கண்டனமாய்.
“ஏன் கண்ணா, இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன். அவங்க குடும்பம் இப்படித்தானே இருக்கு. பணம் காசு வசதி இருந்துட்டா போதுமா? குடும்பம்னு ஒரு அமைப்பு, கட்டுசிட்டு வேணாமா?” என்று படபடக்க,
“ஆமா, நீ எல்லாம் பார்த்து ரொம்ப கண்டுட்ட..” என்று விநாயகமும் கோபத்தில் சினந்தார்.
“என்ன காணல?! உங்கள கட்டிட்டு வந்து, இதோ இப்போ வரைக்கும் குடும்பத்தை இழுத்து பிடிச்சு கொண்டு போகலையா?” என்று மகா ஆரம்பிக்க,
கண்ணதாசனோ “ப்பா.. எனக்கு இப்போதைக்கு கல்யாணமே வேணாம்..” என்று எழுந்துவிட, பெற்றோர் இருவரும் அதிர்ந்தே போனார்கள்.
“கண்ணா!” என்று இருவரும் அதிர்ந்தே ஒருசேர விளிக்க,
“பின்ன என்னம்மா?! நானும் அன்னிக்கு இருந்து சொல்றேன், கல்யாணம் பண்றது வாழ்க்கைல ஒருதடவ. அதை சந்தோசமா என்ஜாய் பண்ணி பண்ணனும். நீயும் அப்பாவும் நல்லவிதமா எனக்கு அதை செஞ்சு வைக்கணும். அதைவிட்டு ஆளுக்கு ஒண்ணா பேசி, ப்பா ப்ளீஸ் ப்பா. இது வேணாம்.. கொஞ்ச நாள் போகட்டும் வேற பாப்போம்..” என்றான் முகத்தை சுருக்கி.
விநாயகமோ மனைவியை எரிச்சலுடன் பார்க்க, மகாவோ “அதுக்கு எதுக்கு கொஞ்ச நாள் போகணும்? இப்போ எத்தனை பார்த்து அலுத்துட்டோம்..” என்றவர் “எல்லாம் உங்கனால தான் மாமா..” என்று ஆரம்பிக்க, கண்ணதாசனோ எழுந்து அறைக்கே சென்றுவிட்டான்.
அதற்கும் மகா “என்ன மாமா எந்திரிச்சு போறான்..” என்று சொல்ல,
“உனக்கு கொஞ்சமாவது ஏதாவது விளங்குதா இல்லையா மகா?” என்றார் அயர்வாய் விநாயகமும்.
“என்ன மாமா?!”
“கண்ணனுக்கு அந்த பொண்ண பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்..” என்று கணவர் சொல்லவும்,
“மாமா அவனே வேணாம்னு சொல்றான்..” என்று ஆரம்பித்த மனைவியை அமைதியாய் இருக்கும்படி சொன்னவர் “உன் மகன் போன்ல அந்த பொண்ணு போட்டோ எதுக்கு இருக்கு?” என கேட்க,
“அது..” என்று எதையோ சொல்ல வந்தவர், பதில் தெரியாமல் முழிக்க,
“சொல்லு மகா, முந்தாநேத்து நம்ம போட்டோ கேட்கவும், அவன் மேட்ரிமோனில இருந்து எடுத்துக்காட்டல. போன்ல இருக்க போட்டோவ காட்டுனான்..” என்றார் அர்த்தமாய்.
“ம்ம்ம்” என்று மகாலட்சுமி நெற்றி சுருங்கக் கேட்க,
“இங்க பாரு மகா, அது இதுன்னு பேசாம, கண்ணதாசன் வாழ்கையை மட்டும் மனசுல வச்சு யோசி. பொண்ணு வீட்ல பிக்கல் பிடுங்கல் இல்ல. கேட்டு வாங்குற இடத்துல அவங்க இல்லை. குடுத்து செய்ற இடத்துல இருக்காங்க. நாளைக்கு எதுன்னாலும், இவனுக்கு கைக் கொடுக்க, படிச்சு பதவியில இருக்க மாமனார் மச்சாண்டார் உறவு இருக்கு. நம்மூர் ஆளுங்க, கௌரவமா வாழ்ற ஆளுங்க.
அதையும் தாண்டி அந்த பொண்ணு, படிச்சும் நல்லதொரு வேலையில இருக்கு. இவனுக்கு எல்லா விதத்துலயும் கை குடுக்கும். நீ மத்ததை யோசிக்காம, மகன் வாழ்க்கை அதுல அவனுக்கு இருக்குற நிம்மதி அமைதியை யோசி..” என, மகாவின் மனதோ குழம்பிய குட்டையாய் ஆனது.
“நாளைக்கு அவங்க கல்யாணத்துக்கு வர்றாங்க. நம்மளும் தானே போறோம்.. நேர்ல பாப்போம்..” என்று சொல்ல,
ஆனால் மகாலட்சுமியின் வாயும் மனதும் சும்மா இருக்குமா என்ன? கணவர் வெளியில் செல்லவும், மகள்களுக்கு அழைத்து விபரத்தை சொல்லி “இப்போ என்ன டி பண்றது?” என்று கேட்க,
“என்ன பண்றதுன்னா, அப்பா சொல்றதும் சரிதானே ம்மா. நீ பொண்ணு வீடு பத்தி எல்லாம் யோசிக்காத. நாளைக்கு நேர்ல பார்த்தா என்னன்னு விபரம் தெரியப் போகுது..” என்று முடித்தனர் பெண்கள் இருவரும்.
ஆனாலும் மகாவிற்கு மனம் அப்படியொன்றும் தெளிவாய் இல்லை. பெரிய இடத்தில் கால் வைத்துவிட்டு, மகனை அங்கே தாரைவார்த்துக் கொடுத்தது போல ஆகிவிடக் கூடாதே என்கிற ஒரு பயம் உள்ளுக்குள் எழுந்தது.
‘உள்ளூர்ல என்ன பொண்ணா கிடைக்காது.. அப்படியே இதையே தான் பார்க்கணுமா?’ என்று புலம்பியவருக்கு, மகனை எண்ணி வேறு வயிறு கலங்கியது.
ஏதேனும் முக்கியமான மீட்டிங் என்றால் மட்டுமே, கண்ணதாசன் இப்படி உள்ளே அறையை பூட்டிக்கொள்வான். மகாவும் இப்போது அப்படித்தான் நினைத்தார். ஆனால் கண்ணதாசனோ அவனின் கட்டிலில் விழுந்து, அலைபேசியில் புன்னகைத்துக் கொண்டு இருக்கும் கவிதாஞ்சலியைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.
என்னதான் வேண்டாம் வேண்டாம் என்று மனதை அடக்கி அடக்கி வைத்தாலும், நீரில் அமிழ்த்திய பந்து போல, அவளின் எண்ணங்கள், அவளோடான கற்பனைகளும் இதயத்தில் மேலே மேலே எழுந்து வந்தது. இந்த இரண்டு நாட்களாய் மனதளவில் படாதபாடு படுகிறான் கண்ணதாசன். மூடிய கண்களுக்குள் இதழ் விரித்து சிரித்து வந்து நிற்கும் அவளை என்ன செய்தால் தகுமாம்?!
அக்காக்கள் இருவரும், மேட்ரிமோனியில் பல பெண்களின் விபரங்களை இவனுக்கு அனுப்பிக்கொண்டு தான் இருந்தனர். ஆனால் ஒன்றை கூட இவன் திறந்து பார்க்கவில்லை. பார்க்க முடியவில்லை என்பதுதான் நிஜம். என்னவோ யாரென்றே தெரியாத ஒருத்தி இப்படி மனதை போட்டு அலைக்கழிப்பது அவனுக்கு அதுவும் ஒருமாதிரி தான் இருந்தது. ஆனாலும், இருவரின் நிலையையும் ஒப்பீடு செய்து, மனம் பின்னே தான் காலெடுத்து வைக்கிறது.
இதேது, கவிதாஞ்சலி சாதாரண வேலையில், சம்பளத்தில் இருந்திருந்தால், கண்ணதாசன் இந்நேரம் அவளிடமே கூட பேசியிருப்பான் போல. அந்தளவிற்கு அவனோடு அவன் முட்டி மோதிக்கொண்டு இருந்தான். ஆனால் இப்போதோ நிறைய நிறைய யோசித்தான். அதிலும் அவன் வீடும், குடும்பமும், குடும்பத்து ஆட்களின் குணங்களும் என்று அனைத்தையும் முன்னிறுத்தி யோசித்தவன், ‘அவளுக்குத்தான் கஷ்டம்..’ என்று நினைத்தே இன்னும் பின்வாங்கினான்.
என்ன செய்வது?!
என்ன முடிவு செய்தாலும், மனமொரு குரங்குதானே. வேண்டாம் என்பதனைத் தானே வேண்டும் என்பதாய் நினைக்கும். ஒரு பக்கம் கவிதாஞ்சலி கவிதாஞ்சலி என்று கண்ணதாசனின் மனம் அடம் செய்து சிறுபிள்ளைபோல் சிணுங்கிக்கொண்டு நின்றது.
அவள் ஊருக்கு வந்திருக்கும் செய்தி தெரிந்ததில், இன்னொரு தவிப்பு வேறு. ஒருமுறை நேரில் தான் பார்த்திட, ஆசையாய் ஒரு ஆர்பரிப்பு உள்ளுக்குள்ளே.
‘வேணாம்னு சொல்லிட்டு, என்னடா பாக்குறதுக்கு துடிக்கிற?’ என்று கேட்ட மனதை,
“நேர்ல எப்படி இருப்பான்னு பாக்கணும்னு ஆசையா இருக்கு..” என்று தனக்கு தானே பதில் சொல்லிக்கொண்டான்.
‘நேர்ல இதைவிட அம்சமா தான் இருப்பா. அதுக்காக..’ என்று அடுத்த கேள்வி வர,
“ம்ம்ம்..” என்று சுனங்கிப்போனான்.
இருந்தும் ஒருமுறை நேரில் கண்டுவிடேன். கொஞ்சம் ஆசைகொண்ட மனது அமைதிப்படுமே என்று, உள்ளிருந்து ஒரு குரல் அவனை தூண்டில் போட்டு இழுக்க,
“டேய் கண்ணா..” என்று தானே சிரித்துக்கொண்டான்.
ஒரு விந்தையான நிலையில் அவனிருப்பது அவனுக்கே தெரிந்தது. இதென்னடா இத்தனை நாள் இல்லாமல் இப்போது புதிதாய் இதெல்லாம் என்று அவனுக்கு புரியாமல் இல்லை. காதலா என்றெல்லாம் யோசிக்கவில்லை. இருந்தும் ஒரு பெண்ணின் வதனமும், அவளைப் பற்றிய கற்பனைகளும், இத்தனை உவகையை கொடுக்குமா என்கிற கேள்விக்கு, இப்போது அவன் பதிலுணர்ந்து கொண்டு இருந்தான்.
இதயந்தின் நான்கு அறைகளிலும் பலவிதமான உணர்வுகள் அவனுள்ளே. வேண்டாம் என்கிற முடிவு ஒருப்பக்கம் இருக்க, அவளைக் காண வேண்டும் என்கிற அவா, மிகவும் உறுதியாய் விஸ்தாரமாய் எழுந்து நின்றது அவனுள்.
இருந்தும் ஆழ மூச்சுக்கள் எடுத்துவிட்டு, நெஞ்சை நீவிக்கொண்டவன் “பி ஸ்டெடி கண்ணா..” என்று சொன்னவன், தன்னை இழுத்துப் பிடித்துக்கொண்டு வேலையில் கவனம் செலுத்தினான்.
மறுநாள் பொழுது, அக்காக்கள் குடும்பம் எல்லாம் மொத்தமாய் தயாராகி இங்கே வந்துவிட்டனர். எல்லாம் ஒன்றாய் சேர்ந்து கிளம்புவதாய் இருக்க, அவர்கள் வந்து பேசியதிலேயே, விநாயகம் மனைவியை பார்த்துவைத்தார்.
அன்றைய தினம் வாரவிடுமுறை தினமென்பதால், காலையில் சீக்கிரமே சென்று கடையை திறந்து, பூஜை போட்டு வீட்டுக்கு வந்தவர் “கண்ணா நீ போய் பார்த்துக்கோ. நாங்க கல்யாணத்துக்கு போயிட்டு வந்துடுறோம்..” என்றுமட்டும் சொல்லியிருந்தார்.