“நேத்… யூ க்னோ ஒன் திங். அப்பா அண்ட் அம்மா ரெண்டு பேரும் பாலி ட்ரிப் ப்ளான் பண்ணிருக்காங்க டா..” என்று கவிதாஞ்சலி, அண்ணனிடமும் எடுத்துவிட,
“இஸ் இட்?! ரியல்லி?!” என்று கண்களை பெரிதாக்கிய நேத்ரன், அப்பாவையும் அம்மாவையும் பார்க்க,
தாரணியோ “ஏய் வாலு. சும்மா இரு..” என்று மகளை செல்லமாய் அதட்ட,
“ம்மா அஞ்சுவ ஏன் சொல்ற நீ? எப்போன்னு சொல்லு நான் ஸ்பான்சர் பண்றேன்..” என்ற மகனையும் பாசமாய் முறைத்தார் அம்மா.
பாஸ்கரோ “என்னாடா பேச்சு?!” என்று கேட்டாலும் “நானும் என் பொண்டாட்டியும், நிஜமா ஒரு ட்ரிப் போகத்தான் போறோம். உங்களோட தொல்லைங்க இல்லாம..” என்று, வேண்டுமென்றே கொசு விரட்டுவது போல செய்ய,
“ஓ!” என்று சத்தம் எழுப்பினர் மகனும், மகளும்.
“சுஷ்.. நம்மகூட பாலி போகல டி. இவங்களை பாரேன்..” என்று மனைவியையும் பேச்சினில் இழுத்து வைத்தான் நேத்ரன்.
சுஷ்மிதாவோ ‘அய்யே..‘ என்று ஒரு பாவனையைக் காட்டியவள், அவர்களின் ஒன்றரை வயது மகள் கயல்விழியை கையினில் தூக்கி வைத்துக்கொண்டு, இரவு நேர உணவினை ஊட்டக் கிளம்ப,
தாரணியோ “நீ உக்காந்து சாப்பிடு சுஷ். நான் ஊட்டுறேன்..” என்று பேத்தியை வாங்கிக்கொண்டு, மருமகளை சாப்பிட அமர்த்தினார்.
பாஸ்கரோ பிள்ளைகளின் கலாட்டாவை ஒரு மென் புன்னகையோடு பார்த்துக்கொண்டு இருந்தவர், பேத்திக்கு உணவூட்டும் வேலையில் தானும் மனைவியோடு இணைந்துகொள்ள, மகன், மருமகள், மகள் என்று மூவரும் அமர்ந்து உண்டுகொண்டே பேசிக்கொண்டு இருந்தனர்.
“நாளைக்கு ப்ளான் எப்படிப்பா?!” என்று பேச்சினூடே நேத்ரன் கேட்க,
“அங்க ஃபோர் டேஸ் ஸ்டே நேத். நான் ஸ்ட்ரைட்டா அங்க இருந்தே பெங்களூர் கிளம்பிடுவேன்..” என்றாள், அப்பாவிற்கு முந்திக்கொண்டு.
“ஓ! அல்ரடி ப்ளான் பண்ணியாச்சா?” என்று சுஷ்மா கேட்க,
“இதுமட்டும் தான் எனக்கு தெரியும் சுஷ். இதுக்குமேல அப்பாவும் அம்மாவும் தான் சொல்லணும்..” என்று அண்ணியிடம் கவி சொல்ல, சுஷ்மிதாவோ மாமியார் முகம் பார்த்தாள்.
“எனக்கு மட்டும் அங்க என்ன தெரிய போகுது? எல்லாம் உங்கப்பா தான் சொல்லணும்..“ என்று தாரணியும், பாஸ்கர் முகம் பார்க்க,
“எங்க சித்தி வீட்ல ஸ்டே. என்னோட கசின்ஸ், அவங்க பேமிலி எல்லாம் வருவாங்க. கண்டிப்பா குலசாமி கோவில் போகணும். அடுத்து பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி, இப்படி சில டெம்பிள்ஸ் போகணும். அடுத்து ரொம்ப க்ளோஸ் ரிலேடிவ்ஸ் வீட்டுக்கு போகணும். கவிக்கு நல்ல அலையன்ஸ் பார்க்க அங்க சொல்லி வைக்கணும்.
தென் மேரேஜ் முடிச்சிட்டு, கவிய சென்ட்டாஃப் பண்ணிட்டு நம்ம வந்துடலாம். இதுக்கு நடுவில உங்களுக்கு வேறென்ன வேணும்?” என்று பாஸ்கரும் வினவ, இவரைத்தவிர, அந்த குட்டி பாப்பா கயல்விழியையும் தவிர, மற்ற நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளென்று நகைத்துவிட்டனர்.
பின்னே பாஸ்கர் இப்படித்தான் என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன?!
எங்கே, எந்த ஊருக்குப் போனாலும், அங்கிருக்கும் கோவில்களுக்குச் செல்வது தான் அவரின் முதலாவது திட்டமாய் இருக்கும். படித்து, நல்லதொரு வேலையில் இக்காலத்திற்கு ஏற்றவகையில் இருந்தாலும், மிகவும் இறை பக்தி கொண்டவர்.
“பாஸ்கர் உங்களைப் பத்தி தெரிஞ்சும், என்ன ப்ளான்னு கேட்டது எங்க தப்புதான்..” என்று தாரணி கேலிப் புன்னகையோடு பேச,
“ஹேய்..! இது என்னோட ப்ளான். தட்ஸ் ஆல்.. பட் அங்க வந்து உங்களுக்கு வேற வெளிய போகணும்னு தோணினா, போயிட்டு வாங்க. ஐ ஜஸ்ட் வான்ட் டு ஸ்பென்ட் சம் டைம் வித் மை கசின்ஸ் இன் மை நேட்டிவ்..” என்று கைகளை விரித்தவரை, பிள்ளைகள் இருவரும் கொஞ்சம் பெருமையாய் பார்த்தனர்.
பின்னே, இதுநாள் வரைக்கும் பிறரின் விருப்பங்களில் பாஸ்கர் கருத்து சொன்னதே இல்லை. பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது எடுத்துச் சொல்வார். அதற்குமேலே முடிவெடுப்பது பிள்ளைகள் தான். மனைவியிடமும் கூட இப்படித்தான். பின்னே தாரணி, இரண்டு பிள்ளைகள் பெற்றபிறகு தானே வங்கி தேர்விற்கு படித்து, பரீட்சை எழுதி வேலைக்கு சேர்ந்ததே. பிள்ளைகள் விசயத்தில் இப்போது இருவருமே அப்படித்தான். அவர்களின் விருப்பங்கள் சரியாய் இருக்கும் பட்சத்தில் பெற்றவர்கள் உறுதுணையாய் இருப்பர்.
நேத்ரனின் காதல் திருமணத்திற்கும் அப்படித்தான். கவிதாஞ்சலி படிப்பு முடியவும், பெங்களூரு சென்று வேலைப் பார்க்கப் போகிறேன் என்று சொன்னபோதும் அப்படித்தான்.
தாரணியும் கணவரின் குணம் கண்டு, அதற்கேற்றார் போல தானும் மாறிக்கொண்டார். ஓரளவுக்கு மேலே யாரையும் இழுத்துப் பிடிப்பது இல்லை. அதனாலே தான் இன்றளவும் இத்தனை ஒட்டுதலாய் இருக்க முடிகிறது என்பது அவர்களின் கருத்து.
இப்படியே அனைவரும் பேசிமுடித்து, உண்டு முடித்து, உறங்கி எழுந்து, மறுநாள் அதிகாலை வேலையில் காரில் காரைக்குடி நொடி கிளம்பிவிட்டார்கள்.
அங்கே காரைக்குடியிலோ, அந்த காலை உணவு வேளையிலேயே கண்ணதாசன் வீட்டினில் அனைவரும் வந்திருந்தார்கள். வேறென்ன, மகா தான் தனலட்சுமியின் இரண்டாவது மகனுக்கு, இரண்டாவது மொட்டை போடுவதைப் பற்றி, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்க, அதனைப் பற்றி பேச சித்தப்பாக்களின் மொத்த குடும்பமும் வந்துவிட்டது.
விநாயகம், குளித்து முடித்து, காலை நேர வேண்டுதல் எல்லாம் முடித்து, மகா சமைத்து வாய்த்த உணவையும் உண்டுகொண்டு இருக்கையில் தான் அனைவரும் வந்தது.
அன்றையதினம் ஒரு அரசு விடுமுறை நாள் என்பதால், மாப்பிள்ளைகளும் சேர்ந்தே வந்திருக்க, வந்ததுமே வரா அம்மாவின் காதில் “இன்னும் யாரும் டிபன் சாப்பிடலை ம்மா..” என்று ஓதிவிட்டாள்.
விளைவு, தங்களுக்கு மட்டும் செய்திருந்த இட்லியையும், சாம்பாரையும் முதலில் பேரப்பிள்ளைகளுக்கு வைத்துக் கொடுத்தவர், மேற்கொண்டு சமையல் செய்ய அடுப்படி நுழைந்துகொண்டார் மகா.
“மகா ஏன் மாப்ள திடீர்னு இப்படி சொல்லுச்சு?” என்று சித்தப்பாக்கள் இருவரும், விநாயகத்திடம் கேட்க, அவரோ அடுப்படியை எட்டிப்பார்த்தார்.
கண்ணதாசனோ ‘ஆரம்பிச்சுட்டாங்க..‘ என்ற முனங்களோடு “சரி மாம்ஸ். நீங்க பேசுங்க.. லாகின் டைம் ஆச்சு..” என்று, தன் இரு அக்கா கணவர்களிடமும் தலையை ஆட்டிவிட்டு, அறைக்குள் வந்துவிட்டான்.
வரலட்சுமியோ தம்பியின் பின்னோடு வந்தவள் “என்ன கண்ணா, எல்லாம் வந்திருக்கோம். நீ பாட்டுக்கு உள்ள வந்துட்ட. மணி ஒன்பது கூட ஆகல..” என,
“அதுக்கு.. ஒரு விசேசம் பத்தி பேச வந்தா, தாய் மாமா நீ தானடா. சும்மாவே தனா நேத்திருந்து உம்முன்னு இருக்கா…” என்று கடிய,
“நேத்தே நான் பெர்மிசன் போட்டுட்டேன் க்கா. இன்னிக்கு சீக்கிரம் லாகின் பண்ணனும். அப்பாவும் அம்மாவும் பேசுறாங்க தானே..” என்றவன், வராவோடு பேசிக்கொண்டே அவனது மடிக்கணினியை உயிர்பிக்க, பதிலே பேசாமல் தம்பியை ஒரு பார்வை பார்த்த வரா,
“என்னவோடா, அம்மா நேத்து அப்படி சொல்லவும், எனக்குமே சங்கடமா போச்சுதான். ஆனாலும் எங்க வீட்ல பண்றதும் தப்புதான். எல்லாத்தையுமே அப்பா தலையில கட்டிவிட்டுடுறாங்க. அம்மாவும் இடம் குடுக்குது அதுக்கு..” என்று, மனதில் இருப்பதை வெளிப்படையாய் தம்பியிடம் பேச,
அக்காவின் முகம் பார்த்து அழகாய் சிரித்தவன், அவள் தலையில் லேசாய் தட்டி “இந்த புரிதல் இருந்தா போதும் க்கா. போ.. போய் அங்க பாரு. அம்மா கிட்சனால் உருட்டிட்டு இருக்கு..” என்று மூத்த அக்காவை அனுப்பிவைத்தான்.
வரலட்சுமி இப்படித்தான். இரு குடும்பத்தின் சாதக பாதகங்களையும் பார்த்து, சமயத்திற்கு ஏற்றார் போல, வார்த்தைகளை வெளியுடுவாள். அவள் நிஜமாகவே நல்லதை தான் சொல்கிறாளா, இல்லை அதில் சுயநலமும் அடங்கி இருக்கிறதா என்கிற கேள்விகளுக்கு எல்லாம், பதிலே இருக்காது. பிறந்த வீட்டின் மீதிருக்கும் நேசத்திலும், பாசத்திலும் எவ்வித குறையும் இல்லை.
அதே சமயம், புகுந்த வீட்டிலும் எதுவும் பாதகம் வராதவாறு நடந்துகொள்வாள். என்னதான் பிறந்ததில் இருந்து வளர்த்த தாத்தாக்களும், பாட்டிக்களும் தான் மாமனார் மாமியார் என்றாலும், திருமணம் ஆனதுமே ஒருசில வித்தியாசங்களை, உணரவே முடிந்தது. அவளுக்குத் திருமணம் முடிந்ததும் அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் தனலட்சுமிக்கு திருமணம்.
தங்கைதான் தன்னுடைய ஓரகத்தி என்றாலும், அங்கேயும் சில விஷயங்கள் இடிக்கவும் செய்யும். வீட்டின் மூத்த மருமகள் என்கிற பொறுப்பு, வராவிற்கு நிறையவே உண்டு. சின்ன பொண்ணுதானே என்கிற சலுகை தனாவிற்கு இப்போதும் உண்டு.
அதனால் தான் இதோ, இப்போது இந்த காலை வேளையில் வந்து பிறந்தவீட்டினில் கூடும் நிலை. நேற்றைய தினமே, வரா “இதை பெருசு பண்ணாத தனா. அம்மா சொன்னா எதுவும் காரணம் இருக்கும்..” என்று சொல்லியிருந்தும்,
தனலட்சுமி “அம்மா இப்படி சொல்லிட்டாங்க..” என்று கணவன் மற்றும் பெரியவர்கள் முன்னிலையில் சொல்லிவிட்டாள்.
“ஷ்! தனா..” என்று வரா தங்கையை அதட்டியும் கூட, அவள் அதனை கண்டுகொள்ளவில்லை.
உடனே மகாவின் சின்ன சித்தி, அதாவது தனாவின் மாமியார் பாட்டியோ “எதுக்கு.. எதுக்கு மகா இப்படி சொன்னா? ஏன் வரா உன் பசங்க ரெண்டு பேருக்கும், ரெண்டு மொட்டைக்கும் உங்க வீட்ல தானே பண்ணாங்க. இப்போ என்ன புதுசா? சரி வித்தியாசமில்லாம அவங்களே எடுத்துக்கட்டி செய்றாங்க, மகா யாரு, இந்த வீட்டு பொண்ணுன்னு நாங்களும் விட்டோம். மூணாவது மொட்டை, எல்லா பிள்ளைகளுக்கும் ஒரேதா எடுத்துக்கலாம். அப்போ அவங்களை எல்லாம் திருப்திக்கு கூட்டிட்டு போகலாம்னு ஒரு எண்ணத்துல விட்டுட்டோம்.. இப்போ என்னாச்சு?!” என்று படபடக்க,
வராவின் கணவன் சபரியோ “ஏன் வரா என்னாச்சு?” என்று மனைவியிடம் கேட்க,
தனாவின் கணவன் சுபாஷோ “தனா முதல்ல அழுதுட்டே பேசுறதை நிறுத்து..” என்று மனைவியை அதட்ட, பெரிய தலைகள் நான்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
ஆம் தனலட்சுமிக்கு இதனை சொல்லும்போது அழுகையே வந்திருந்தது. என்னவோ பெற்றவர்கள் அவளுக்கு மட்டும் பாகுபாடு பார்த்தது போல தோன்றிவிட, அம்மா பட்டென இப்படி சொன்னதை அவளால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை.
பெரியதாத்தாவோ “விடு தனா.. என்னன்னு பேசிக்கலாம். இப்போ என்ன நம்ம புள்ளைக்கு நம்மலே செய்யலாம்.. அவங்க இத்தனை நாள் செஞ்சாங்க தானே..” என்று சொல்ல,
“இத்தனை நாள் செஞ்சாங்க தானே தாத்தா.. அப்போ இப்போ மட்டும் ஏன் அப்படி சொல்லணும்?! என்ன எதுன்னு பொறுமையா சொல்லிருந்தா கூட சரி. பட்டுன்னு அம்மா சொல்லிருச்சு..” என,
சின்ன பாட்டியோ “சரி விடு தனா.. இதுக்கு போயி அழுதுக்கிட்டு. கண்ணதாசனுக்கு கல்யாணத்துக்கு பாக்குறாங்க இல்லையா. அதுல ஏதாவது உங்கம்மா டென்சனா இருந்திருப்பா..” என்று சமாதானம் செய்ய, யாரின் சமாதானமும் அங்கே தனலட்சுமியிடம் எடுபடவில்லை.