கவிதை – 4

கண்களோ இமைக்கவும் மறந்திருக்க, விரல்களோ அசைய விரும்பாது  கணினித் திரையில், அவள் படத்தின் மீதுதான், பார்வையும், மனதும் லயித்து நிற்கவேண்டும் என்று, வேலை செய்யாமல் அப்படியே இருந்தது.

‘கவிதாஞ்சலி..’ என்று கண்ணதாசனின் அழுத்தமான இதழ்கள் அவளின் பெயரை ஒருமுறை உச்சரித்துப் பார்க்க,  பார்வையோ அவள் முகத்தினில் படிந்து, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் அவளது முழு தோற்றத்தையும் அளவீடு செய்ய, ‘வாவ்…!’ என்று அவனது ஆண்மனம் சட்டென அதனின் உணர்வை வெளிப்படுத்த, வாழ்வில் முதல்முறையாய் ஒரு பெண்ணை இத்தனை ரசித்துப் பார்க்கிறான் போலும்.

பெண்களை ரசித்திடாதவனே இல்லை கண்ணதாசன். அந்தந்த வயதிற்குரிய ரசனைகள் அவனிடமும் உண்டு. ஆனால் இப்படி, சட்டென சுற்றியிருக்கும் அனைத்தும் மறந்து, மனதும் உடலும் ஒருமித்த ஒருநிலையில், அவனின் மொத்த கவனமும் அவள்மீது அந்நொடி குவியுமேன்பது, அவனே அறியாத ஒன்றல்லவா?!

கண்ணதாசனின் அனுமதியின்றியே ஒரு பெருமூச்சு வெளிப்பட்டு, கவிதாஞ்சலி பதிவேற்றி இருந்த, மற்றொரு புகைப்படத்தைப் பார்த்தது அவனது கண்கள். அழகாய் தரை நீல அளவுகொண்டு ஒரு பேன்சி கவுனில் இருந்தாள். சேலை என்னவோ இளம் ரோஜா நிறமென்றால், இந்தவுடையோ அடர்ந்த காப்பி நிறத்தில் இருந்தது. இதுவும் அவளுக்கு அழகாய் பொருந்தி, அவளது தோற்றத்தை இன்னும் எடுப்பாய் காட்ட, பார்க்கையிலேயே தெரிந்தது அதிகப்பட்ச ஒப்பனைகள் எதுவுமில்லாமல், இயல்பாய் எடுத்த படமென்று.

பின்னே காதில், கழுத்தில் என்றுகூட கூடுதலாய் ஒன்றும் நகைகள் இல்ல. வழக்கமாய் வீட்டிலிருக்கையில், வேலைக்குச் செல்கையில் பெண்கள் போட்டுக்கொள்வது போல, ஒரு சிறு தொங்கட்டானும், இருக்கிறதா இல்லையா என்றே தெரியா ஒரு சங்கிலியும், கழுத்தினில் அணிந்திருந்தாள். அதுகூட அச்சங்கிலியின் டாலர் பார்த்துதான் தெரிந்துகொள்ளவே முடியும்.

இப்படியாக அடுத்த ஒரு பத்து நிமிடத்திற்கு, அவளது இரு படங்களை மட்டுமே ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தவன், பின்னே என்ன நினைத்தானோ ஒருவித சிறு வெட்கம் கலந்த புன்னகையோடு ‘டேய் கண்ணதாசா..’ என்று தன்னை தானே சொல்லி, தலையை அழுந்த கோதிக்கொண்டு, லேசாய் பிடணியை தட்டிக்கொண்டவன், அவளது சுய விபரங்களை எடுத்துப் பார்க்க, பார்த்ததுமே கண்ணில் முதலில் பட்டது ‘சொந்த ஊர் காரைக்குடி..’ என்பதுதான்.

“நம்ம ஊரா?!” என்று உள்ளம் ஒருநொடி துள்ள, வேகமாய் பார்வையை ஓடவிட்டான்.

ஆனால் அவளது முழு விபரத்திலும், பூர்வீக ஊர் காரைக்குடி என்றும், குடும்பம் இருப்பது சென்னையில் என்றும், அவள் பணிபுரிவது பெங்களூரில் என்றும் தகவலிருக்க, சற்றே சோம்பியது மனம். அடுத்தோ, அவள் படிப்பைப் பார்த்தான். அவனைப்போலவே கணினித் துறையில் முதுகலை முடித்திருந்தாள். ஆனால் படித்தது என்னவோ சென்னை ஐஐடியில். பொதுவாய் எங்கே படித்தார்கள் என்கிற விபரமெல்லாம் குறிப்பிடமாட்டார்கள் தானே.

ஆனால் இதினால் குறிப்பிட்டு இருக்க, ‘பார்ரா..’ என்று கண்கள் விரிந்து, உதடுகள் லேசாய் வளைய, அடுத்து அவள் வேலைப்பார்க்கும் விபரமோ இன்னும் அவனை அதிர வைத்தது.

பெங்களூருவில் இருக்கும் முதல் ஐந்து தரவரிசையில் இருக்கும், புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனமொன்றில், ஓரளவு உயர்பதவியில் இருந்தாள். இதனை எல்லாம் பார்க்கையில் மெதுவாய், அவளது சம்பளத்தின் மீதும் பார்வை செல்ல, ‘அம்மாடி..’ என்றுதான் ஆனது அவனுக்கு.

பின்னே அவன் வாங்குவதை விட ஒரு பகுதி அதிகம். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் அவள் மாதச் சம்பளம்.

‘இது நமக்கு ஒத்துவராது..’ என்று, மனதை சட்டென அதன் ஓட்டத்திலிருந்து நிறுத்தியவன்,  ஒருமாதிரி அழுத்தத்தோடு நெஞ்சினை நீவிக்கொண்டான். காரணமின்றி ஒரு சிறு ஏமாற்றம், அவனுள் பரவுவது நன்றாய் உணர்ந்துகொள்ள முடிந்தது.

அதற்குமேல் அவள் யார், அவளின் குடும்ப விபரம் எல்லாம் பார்க்க அவனுக்கு மனது ஒப்புதல் கொடுக்கவில்லை. பார்த்து என்ன செய்யப் போகிறோம் என்கிற எண்ணம்தான். அவள் பார்க்கும் வேலையிலும், சம்பளத்திலுமே, இவன் எத்தனை அடிகள் பின்னால் நிற்கிறான் என்பது, அவனுக்கே தெரிந்த உண்மை தான்.

“நோ..” என்று தானாய் அவன் உதடுகள் உச்சரிக்க, அதற்குமேலே யாரின் விபரங்களையும் பார்க்க, அவனுக்கு அப்போது மனமில்லை.

ஒருநொடி புகைப்படத்தில் பார்த்த பெண்ணொருத்தி, மனதில் இப்படியொரு தாக்கத்தை கொடுப்பாள் என்று, அவனுமே தான் நினைக்கவில்லையே..

“ச்சில் கண்ணதாசா..” என்று சொல்லிக்கொண்டவன், அவனது வேலையில் கவனம் வைக்க முயல, அதுவும் அவனால் முடியவில்லையே.

‘ஐயோ! என்னதிது?!’ என்று அவனுக்கே அவனை எண்ணி விந்தையாய் போனது. மனது சொல்பேச்சு கேளாமல் முரண்டு பிடிக்க ‘டேய் சொல்றதை கேளுடா. அந்தபொண்ணு வேற லெவல். மகாலட்சுமிக்கு எல்லாம் மருமகளா வரமாட்டா..’ என்று, அவன் மனதை அவனே சரி செய்யப் பார்க்க,

ம்ம்ஹும் என்று சண்டித்தனம் செய்தது, கண்ணதாசனின் தடுமாறிய உள்ளம்.

“இதென்னடா இது?!” என்று தானே சொல்லிக்கொண்டு, முக்கிய வேலைகள் எதுவும் இருக்கிறதா என்று பார்த்தவனுக்கு, அப்படியொன்றும் இல்லை என்பது அறிந்து, அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு ‘பெர்மிசன்..’ போட்டு எழுந்துகொண்டான்.

‘இருந்திருந்து ஒரு பொண்ணு போட்டோ பார்த்ததுக்கே, இத்தனை அலம்பலா டா கண்ணதாசா?! அய்யாக்கு அம்புட்டு வெறி..’ என்று உள்ளுக்குள் ஒரு கேலிக்குரல் எட்டிப்பார்க்க,

‘புதுசா பொண்ணு தேடுனா, அப்படிதான் இருக்கும்..’ என்று அவனே சொட்டிக்கொண்டான்.

அறைவிட்டு வெளிவந்த மகனை, கேள்வியாய் மகா பார்க்க, அவனோ “டயர்டா இருந்தது ம்மா. மதியம் வரைக்கும் பெர்மிசன் போட்டிருக்கேன்..” என,

“என்னடா என்னாச்சு? ரொம்பவும் முடியலையா?!” என்று வேகமாய் எழுந்தார் அம்மா.

“ம்மா ம்மா! இல்லம்மா. சும்மாதான் ஒருமாதிரி இருந்தது..” என்று சொல்லியபடி, அங்கே சோஃபா மீதிருந்த ஒரு தலையணை எடுத்து, தரையில் போட்டுக்கொண்டு, அம்மாவிடம் கை நீட்ட, அவரோ ஒன்றுமே சொல்லாமல் தன் கையில் இருந்த டிவி ரிமோட்டை மகன் கையில் கொடுத்தார்.

“குடிக்க எதுவும் வேணுமா கண்ணா?!” என,

“இல்லம்மா. கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுக்கிறேன்..” என்றவன், கவனத்தை தொலைகாட்சியில் பதிக்க,

மகாவோ “அப்பா மேட்ரிமோனில பதியச் சொன்னார்ல கண்ணா, இப்போ நீ ப்ரீதானே, நம்ம அதை என்னன்னு பார்க்கலாமா?” என்றார் ஒருவித ஆர்வமும், ஆசையும் கலந்து.

‘விதிடா கண்ணதாசா உனக்கு..’ என்று நொந்தவன் “ம்மா.. நானே சிஸ்டம்ல உக்கார்ந்துட்டு இருக்கிறது, எப்படியோ இருக்குன்னு தான் வந்து படுத்திருக்கேன்..” என்று கடுப்பாக மொழிய,

“ம்ம்.. சரி..” என்றவர், தானும் அப்படியே மகனருகே கீழேயே அமர்ந்துகொள்ள, தலையணையில் தலை வைத்திருந்தவன், கொஞ்சம் நகர்ந்து அம்மாவின் மடியில் தலை வைத்துக்கொண்டவன், தலைக்கு வைத்திருந்த தலையணையை எடுத்து, இரு கால்களுக்கும் இடையில் வைத்துக்கொண்டான்.

மகாவோ முகத்தினில் தோன்றிய ஒரு புன்னகையோடு, மகனது தலையை தடவிக் கொடுத்தவர் “தனா மகனுக்கு, ரெண்டாவது மொட்டைக்கு கேட்டா கண்ணா. நான் அவங்களையே பார்த்துக்க சொல்லிட்டேன். நம்ம செய்முறை மட்டும் செஞ்சுக்கலாம்..” என்றிட,

“ம்மா..!” என்றான் கண்டனமாய்.

“என்ன கண்ணா?! அன்னிக்கு கோவில் போயிட்டு வந்ததுக்கே அத்தனை செலவாச்சுன்னு அப்பா சங்கடப்பட்டார் தான. அதான் இப்போ நானும் அவங்களையே பார்த்துக்க சொன்னேன். வராவோட பிள்ளைகளுக்கு, ரெண்டு மொட்டைக்கும் நம்மளே தான் எல்லாம் எடுத்துக்காட்டி செஞ்சோம். முறையா பார்த்தா அவங்கதான் ஏற்பாடு செய்யணும்.

சரி நம்ம ஒரு விருப்பத்தின் பேர்ல செஞ்சோம். இப்போ உனக்கு அடுத்தடுத்து கல்யாண வேலையும், செலவும் இருக்கே. இப்போ முடியாதுன்னு சொல்லிட்டேன். ஏன் ஒரு பிள்ளைக்காவது அவங்க செய்யட்டுமே. மூணாவது மொட்டைக்கு அவங்களையே போய் குடும்பமா போட்டுக்க சொல்லிக்கலாம்..” என்று படபடக்க,

“ம்மா.. அப்பா சொன்னார்னு இப்படி சொல்றியா?! இல்லை நிஜமாவே நீயே எல்லாம் புரிஞ்சு இப்படி சொல்றியா?!” என்றவன், கொஞ்சம் தலை நிமிர்த்தி அம்மாவின் முகம் பார்க்க,

“ஏன் இப்போ நான் சொன்னதுல என்ன தப்பு?!” என்று மகா கேட்க,

“இல்லம்மா, இப்போ என்னோட கல்யாண வேலை, செலவெல்லாம் இல்லைன்னு வை, அப்போ அக்கா இப்படி சொல்லிருந்தா, இந்நேரம் நீ அங்க இருந்திருப்ப. என்ன செய்றது, எப்போ போறதுன்னு இந்நேரம் பாட்டிங்க கூட சேர்ந்து ஒரு லிஸ்ட் ரெடி பண்ணிட்டு, அதுக்கு அப்பாவ எல்லாம் செய்ய வச்சிருப்ப. ஆனா விஷயம், நம்ம பணம் செலவு செய்றது இல்ல. ஏன் அவங்க செய்யக் கூடாதுன்னு தான் கேள்வியே?! முறையே அவங்க செய்றது தான். அப்படியிருக்கப்போ..” என்று மகன் இழுத்து நிறுத்த,

“எனக்கு பெத்தவங்க இல்லை. கூட பிறந்தவங்க இல்லை. நீங்க மூணு பேர் பிறந்ததுக்கும், அங்கதான் எல்லாம் பண்ணாங்க. அக்காங்க சடங்குக்கு கூட, தாய்மாமா முறைக்குன்னு ரெண்டு தாத்தாங்க தான் முறை செஞ்சாங்க. அதுபோக, உங்களோட மொட்டைக்கும் அவங்க தான் பண்ணாங்க..” என்று மகாலட்சுமி பதிலுக்கு ஒன்றை சொல்ல,

“இதெல்லாம் அவங்க சும்மா செஞ்சாங்களா ம்மா?!” என்று கேட்டுவிட்டான் கண்ணான்.

இதுநாள் வரைக்கும், கணவரிடம் இக்கேள்வியை எதிர்கொண்டு இருந்திருக்கிறார். ஆனால் மகனிடம், இதனை இப்போதும் எதிர்பார்த்திருக்கவில்லை போல.

“கண்ணா?!” என்று கேள்வியாய், கொஞ்சம் அதிர்ச்சியாய் பார்க்க,

“ம்மா.. ம்மா.. நான் தப்பா எல்லாம் எதுவும் கேட்கல. உடனே நீ எதையாவது நினைக்காத. அங்க வாழ்றது என்னோட அக்காங்க தான். ஆனா அதேநேரம், அவங்க பிள்ளைங்களுக்கு செய்றதைக் கூட, அப்பா பொறுப்புல விட்டா எப்படிம்மா?” என்று அவன் எடுத்துச் சொல்ல,

“என்னவோ உரிமை இருக்குன்னு கேட்டுட்டாங்க..” என்றார், முகத்தை திருப்பிக்கொண்டு.

“அதே உரிமை உனக்கும் இருக்குல்ல..” என்றவன் “சரி நான் ஒன்னு மட்டும் கேக்குறேன். இப்போ எனக்கு கல்யாணம் நடக்கப்போகுதுன்னு வை, தாத்தாங்க ரெண்டு பேரும், உன் பிறந்த வீட்டு முறைக்கு, தாய்மாமா சீர் செய்வாங்களா, இல்லை சம்பந்தி முறைக்கு, செய்முறை செய்வாங்களா?  அக்காங்க பேச்சை விட்டுடு. இதுக்கு மட்டும் பதில் சொல்லும்மா..” என, மகாவிற்கே இந்தகேள்வி இப்போதுதான் உள்ளுக்குள் உதித்தது.

அதுதானே..!

பெண்பிள்ளைகளின் திருமணத்திற்கு கூட அவர்கள் தனியாய் எதுவும் செய்யவில்லையே. சடங்குகள் எல்லாம் முன்னமே வைத்திருக்க, திருமணத்தின் போது, அது அவர்களுக்கும் வீட்டின் விசேசமாய் இருக்க, இதுநாள் வரைக்கும் தனிப்பட்டு என்று எதுவும் செய்யவில்லை. இப்போது கண்ணதாசனின் திருமணமெனில் செய்யத்தானே வேணும்.

மகாவின் அமைதியை கண்டே, கண்ணதாசனோ “ம்மா உன்னை கன்பியூஸ் பண்ண நினைக்கலை. ஆனாலும் அப்பாவோட எண்ணங்களை கொஞ்சம் புரிஞ்சுக்கப் பாருன்னு தான் சொல்றேன். சொந்தம் முக்கியம்தான்.. ஆளுங்க முக்கியம்தான். ஆனா இது ஒரே பக்கமாவே போகுது. இதுக்குத்தான் அப்பா எனக்கு வெளிய பார்க்கனும்னு சொல்றார்..” என்றவன் எழுந்துகொண்டான்.

“என்னடா எழுந்துட்ட?!” என்று கேட்க,

“சாப்பாடு எடுத்துக் குடும்மா. அப்பாக்கு குடுத்துட்டு வர்றேன்..” என, மகாவும் பதிலேதும் சொல்லாமல், கணவருக்கு சாப்பாட்டு கட்டிக் கொடுக்க, கண்ணதாசனுக்கோ, அத்தனை நேரம் நன்றாய் இருந்த மனது, மீண்டும் கவிதாஞ்சலியை எண்ணி கவிதை பாடத் தொடங்கியது.

‘என்னடா இது பெருந்தொல்லையா இருக்கு..’ என்றவன், வாய்வழியாய் காற்றினை ஊதி வெளியிட, மகாவும் வந்து சாப்பாட்டு பையை கொடுக்க, அதனை வாங்கிக்கொண்டு அவர்களின் கடையை நோக்கிச் சென்றான் கண்ணதாசன்.

இங்கே இப்படியெனில், அங்கே சென்னையிலோ கவிதாஞ்சலி “பா வாட் இஸ் திஸ் பா?! ஐஐடில படிச்சதை எல்லாம் போடணுமா?! என்னப்பா இது?!” என்று ஒருமாதிரி இன்பமாய் சலித்துக்கொண்டிருக்க,

அவளின் அப்பா பாஸ்கரனோ “இதுல என்னடா இருக்கு?! அது உன்னோட பெருமை இல்லையா?!” என்றார், இப்போதும் மகள் மீதிருக்கும் வாஞ்சை குறையாமல்.

“ஆனாலும் இதெல்லாம் ஓவர் டாடி..” என்று மகள் அங்கலாய்க்க,

“ஹா ஹா.. இப்போ என்னடா கவி இதுல ப்ராப்ளம்?!” என்று பாஸ்கர் கேட்கும்போதே,

“என்ன பாஸ்கர், உங்க பொண்ணு ஐஐடில படிச்ச பெருமையை, போஸ்டர் அடிச்சு ஒட்ட முடியாதுன்னு, இப்படி அவளோட ப்ரோபைல்ல போட்டு வச்சிருக்கீங்க…” என்று தாரணியும் கேட்டுக்கொண்டே வந்தமர,

“ம்மா பாரும்மா..” என்றாள் மகளும்.

தன்னை கேலி செய்யும், மனைவியையும், மகளையும் ஒருசேரப் பார்த்தவர் “போஸ்டர் அடிச்சு ஒட்ட முடியாதே. அதான் இப்படி பண்ணேன். இருக்கட்டும் விடு..“ என்றவர், மனைவி தாரணியிடம் “என்ன தாரு? லீவா நீ?!” என்று கேட்க,

”எஸ் பாஸ்கர். கொஞ்சம் ஷாப்பிங் போலாம்னு ப்ளான்..” என்று சொல்ல,

“அம்மாவும் மகளும் நல்லா என்ஜாய் பண்ணுங்க. நாளைக்கு ட்ராவல்க்கு எல்லாம் ரெடி பண்ணிடுங்க. நான் கிளம்புறேன்..” என்று, பாஸ்கர் அவரின் வேலைக்கு கிளம்பிவிட்டார்.

சென்னையின் தனியார் பல்கலைகழகத்தில், வேதியல் துறை தலைவராய் பணியாற்றுகிறார் பாஸ்கர். தாரிணியோ வங்கியில் மேலாளர். இருவருக்கும் பெற்றோர் பார்த்து, நிச்சயித்த திருமணம் தான். ஆனாலும் பார்க்கும் யாரும் காதல் திருமணமா என்று கேட்கும்படிதான் இருப்பர்.

கவிதாஞ்சலிக்கு அண்ணன் ஒருவன் உண்டு. நேத்ரன். அவனும் ஐடி துறையில் நல்லதொரு பதவியில் இருக்க, உடன் வேலைபுரியும் பெண்ணான சுஸ்மிதாவை காதலித்து, இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டான்.

ஆகமொத்தம், கவிதாஞ்சலியின் குடும்பம் இக்காலத்திற்கு ஏற்றவகையில், காலத்தின் போக்கில் தங்களிடம் மாற்றங்களை கொண்டு, பிள்ளைகளின் விருப்பங்களை முன்னிறுத்தி வாழும், உயர்மட்ட வாழ்வாதாரம் கொண்ட குடும்பம்.

கவிதாஞ்சலிக்கு, இதுநாள் வரைக்கும் கவலைகள் என்பதே இருந்ததில்லை. படிப்பு நன்றாய் வரும். அன்பு, பாசம், மகிழ்ச்சி, வசதி என்று எதற்கும் குறைவே இல்லை. அதேபோல் அழகுக்கும் அவளிடம் குறைவில்லை. இதனை எல்லாம் விட, குணத்தில் எங்குமே அவளை குறை சொல்லிவிட முடியாது.

நிறைகுடம் தளும்பாது என்பதற்கிணங்க தான், அவர்கள் அனைவருமே இருப்பர்.

“ம்மா… லீவ் ஏன் போட்ட நீ?!” என்றவள், அங்கிருந்த பீன் பேக் ஒன்றில் அப்படியே சாய,

“பின்ன.. நீ லீவ் போட்டுட்டு வர்றதே பெரிய விஷயம். உங்கப்பா, அவர் சின்னதாத்தா மகனோட மகளுக்கு கல்யாணம்னு, நாளைக்கு காரைக்குடி போகணும்னு கிளம்பிருக்கார். அங்க போனா, நேரம் போறதே தெரியாது. உன்னோட கொஞ்சமாவது டைம் ஸ்பென்ட் பண்ணனும் இல்லையா கவி?” என,

“ம்ம்ம்.. அப்போ வீட்லயே இருக்கலாம். நோ ஷாப்பிங்.. நோ அவுட்டிங்..” என்றாள் சோம்பலாய் புன்னகை பூத்து.

“தெரியுமே. நீ ஒரு வீட்டு பறவை டி.. உன் வயசுல நானெல்லாம்..” என்று தாரணி ஆரம்பிக்கும் போதே,

“இனஃவ் ம்மா… கேட்டு கேட்டு இட்ஸ் கெட்டிங் போர். என் வயசுல, நீ எனக்கு அம்மா ஆகிட்ட அப்படித்தானே?” என்று கிண்டல் செய்ய,        

“உனக்கு இருபத்தி ஆறு முடியப்போகுது கவி.. இதொண்ணும் பெரிய ஏஜ் இல்லைதான். பட் நீயும் லைப்ல செட்டில் ஆகிட்ட, எனக்கும் அப்பாக்கும் இன்னும் ப்ரீயா இருக்கும்..” என்ற அம்மாவை பார்வை மாறாது பார்த்தவள்,

“பட், நீயும் அப்பாவும் சூப்பர் பெர்சன்ஸ் மம்மி. நேத்ரனுக்கு மேரேஜ் ஆகவும், தனிக்குடித்தனம் வச்சிட்டீங்க. அவனோட ப்ரைவசில இப்போவரைக்கும் என்டர் ஆகுறது இல்லை. இப்போ நானே அல்ரடி தனியா தான் இருக்கேன். என்னையும் செட்டில் பண்ணிட்டு, ரெண்டு பேரும் என்ன பண்ற ப்ளான்ல இருக்கீங்க?” என்று மகள் கண் சிமிட்டிக் கேட்க,

“ம்ம்.. பாலிக்கு ஒரு ட்ரிப் போலாம்னு இருக்கோம்…” என்று அசராமல் சொன்ன அம்மாவைப் பார்த்து, அடக்கமாட்டாமல் சிரித்தாள் கவிதாஞ்சலி.

“பாலிக்கா?! ம்மா ரியல்லி?!” என்று கண்களை உருட்டி, கைகளை விரித்து, களைந்து விழுந்த கேசத்தையும் சட்டை செய்யாமல் கேட்ட மகளிடம்,

“ஏன் கவி நாங்க போகக் கூடாதா?! ஸ்டில் வி ஆர் யங் ம்மா!” என்று பாவனையாய் தாரணி சொல்ல,

“சான்ஸ்லேஸ் ம்மா..” என்று உதடு வளைத்து, தலையை ஆட்டிக்கொண்டவள் “என்ஜாய் ம்மா. போயிட்டு வாங்க. இப்போவே கூட போங்க. நானே டிக்கட் போடுறேன்..” என்று வேகமாய் அவள் அலைபேசியை எடுக்க,

“ஏய் போக்கிரி! அப்படி எதுவும் பண்ணி வைக்காத. பட் நிஜமா எனக்கும் பாஸ்கருக்கும், ஒரு ட்ரிப் ப்ளான் இருக்கு..” என்ற தாரணி “காரைக்குடி போறதே, உன்னோட கல்யாணத்தையும் மனசுல வச்சுத்தான் கவி. அப்பாக்கு உன்னோட மேரேஜ் அங்க செய்யனும்னு ஆசை. நேத்ரன் லவ் மேரேஜ், சோ இங்கயே முடிச்சிட்டோம். நீ அப்படில்லாம் எதுவுமில்லைன்னு சொல்லிட்ட, சோ நேட்டீவ்ல ஊர் கூட்டி செய்ய ஆசைப்படுறார் மனுஷன்…” என,

“ம்ம் ஐ க்னோ தட்.  என்னதான் இங்க செட்டில்ட்னாலும், அப்பாக்குள்ள ஒரு ஊர்க்காரர் இருக்கார். அலையன்ஸ் பாருங்க, எனக்கும் பிடிச்சதுன்னா, மேற்கொண்டு ப்ரோசீட் பண்ணலாம். பட் ஒன் திங் ம்மா.. ஆப்டர் மேரேஜ், நான் வேலை பார்த்துதான் ஆகணும், இல்லை வேலையை விடணும்னு எல்லாம் எந்த கண்டிசனும் இருக்கக் கூடாது. வேலை என்னோட விருப்பம். அதுக்கேத்தது போல நான் பேமிலி டைமிங் மேனேஜ் பண்ணிப்பேன்…” என்றாள் மிக மிக உறுதியாய்.

“அப்போ உனக்கு பெங்களூர்ல வேலை பாக்குற மாப்ள தான் பாக்கணும்..” என்று தாரணி சொல்ல,

“நாட் லைக் தட் ம்மா. எந்த ஊரா இருந்தா என்ன?! நான் பெங்களூர்லயே இருக்கணும்னு எதுவும் கட்டயாமா? தோணிச்சுன்னா பேப்பர் போட்டுட்டு வந்துடுவேன்..” என்று தலையை உலுக்கினாள் மகள்.

அவள் அப்படித்தான் என்று தாரணிக்கும் தெரியுமே. அதனால் மேற்கொண்டு எதுவும் பேசலாம், மறுநாள் காரைக்குடி செல்வதற்கான வேலையில் இறங்கினர் அம்மாவும் மகளும்.