“ம்மா, அப்பாவும் தான் எத்தனை நாளைக்கு ஓட முடியும்?! போதும்மா நீயும் அப்பாவும் பாரத்தை தாங்கினது எல்லாம் போதும். உங்க காலத்துக்கு நீங்க வீடு எடுத்து கட்டிட்டீங்க, பிள்ளைங்களை படிக்க வச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க. ஆனா அடுத்து என்னோட காலத்துக்கு நானும் என் பிள்ளைகளுக்கு சேர்க்கணும் தான. என்னோட ஓராளு சம்பளம் போதுமா?!” என, அதற்கும் மகா இல்லை என்று தலையை ஆட்டினார்.
“அப்போ என் பொண்டாட்டி சம்பாரிக்கிறான்னா, நாங்க சேர்ந்தே ஒரு வீடு கட்டுவோமா?! அதேபோல அக்காங்கள எடுத்துக்கோ, ஆளுக்கு ஒரு பொண்ணு பையன்னு நாலு டிக்கட் இருக்கு. நாளைக்கு தாய் மாமாவா நான் எல்லாத்துக்கும் செய்யணும் தானே. விலைவாசி இருக்க காலத்துல, எல்லாருக்கும் நானே பண்ணி, நாளைக்கு எனக்கு பிறக்குற குழந்தைக்கும் நானே பார்த்து, யோசிம்மா, கல்யாணம் பண்ணேன்னா என் பொண்டாட்டி பிறந்த வீட்டுக்கும், நான் செய்ற சூழ்நிலை வந்தா, கண்டிப்பா பின்வாங்க மாட்டேன். இத்தனைக்கும் நானே கிடந்தது தவிக்க முடியுமா?” என, மகாவோ மகனது பேச்சினில் வெகுவாய் குழம்பி இருந்தார்.
“என்னம்மா நான் சொல்றது எல்லாம் நிஜம் தானே. நடக்காத ஒன்ன, நான் சொல்லலை. கல்யாணம் ஆகிருச்சுன்னா, என்னோட பொண்டாட்டி பேச்சுக்கும் நான் முக்கியத்துவம் கொடுப்பேன். எங்கம்மா தான் பெருசு, எங்கப்பா கஷ்டப்பட்டு வளர்த்தாருன்னு எல்லாம் பாடமாட்டேன். ஏன்னா, எல்லா பெத்தவங்களுக்கும், அவங்கவங்க பிள்ளைங்கள கஷ்டப்பட்டு தான் வளக்குறாங்க. அந்த பொண்ணயும் அப்படிதான் வளத்திருப்பாங்க…” என்று சொல்ல,
‘எப்படி எப்படி வாழப் பழத்துல ஊசி ஏத்துறான் இவன்..’ என்று சிறு புன்னகையோடு பார்த்துக்கொண்டு இருந்தார் விநாயகம்.
சந்தடிசாக்கினில், திருமணத்திற்கு பிறகு நான் எப்படி நடந்துகொள்வேன் என்பதனை சொல்லாமல் சொல்லிவிட்டானே. பலே ஆள் தான் என்று எண்ணிக்கொண்டார் விநாயகம்.
மகாவோ என்னவோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல அமர்ந்திருக்க “என்னம்மா நான் சொல்றது சரிதானே..” என்று சொல்ல,
“வெரி குட் ம்மா..” என்றவன் “ப்பா இப்போ உங்களுக்கு.. அம்மாவோட விருப்பத்தையும் நம்ம கொஞ்சம் புரிஞ்சுக்கப் பார்க்கணும். நம்ம ஊர்லையே படிச்சு வேலைக்கு போறாங்க பொண்ணுங்க இல்லவே இல்லையா?! எதுக்கு நம்மளே ஒரு எல்லை வைக்கணும். உள்ளூர் வெளியூர் எந்த ஊரா இருந்தா என்ன? எல்லா இடத்துலயும் பாப்போம். நமக்கு எது ஒத்து வருதோ அதை முடிப்போம்…” என, மகாவின் முகம் சட்டென பளிச்சிட்டது.
விநாயகமும், ஒன்றும் உடனே பதில் சொல்லாமல், கண்ணதாசனை வெறுமெனே பார்த்திருக்க “என்னப்பா?!” என்றவன் அழுத்திக் கேட்க,
“ம்ம் நீ சொல்றதும் சரிதான் கண்ணா.. பாப்போம்..” என்றவர் “சரி நான் கடைக்கு போறேன்..“ என்று எழுந்து சென்றுவிட்டார்.
வீட்டினில் அம்மாவும், மகனும் மட்டுமே இருக்க, கண்ணதாசனும் “சரிம்மா நான் வேலைக்கு உக்காரணும்..” என்று எழ, மகாவின் அலைபேசி அடித்தது.
கண்ணதாசனின் முதல் அக்கா வரலட்சுமி தான் அழைப்பது என்று தெரிந்து, மகாவும் “சொல்லு வரா..” என்று ஆரம்பிக்க,
“சரிதான்..” என்று முனுமுனுத்தபடி அவனின் அறையில் நுழைந்துகொண்டான்.
அங்கே வரலட்சுமியோ “ம்மா என்னம்மா தாத்தாவும் பாட்டியும் வந்து என்னென்னவோ சொல்றாங்க?” என்று கேட்க,
“ம்ம் ஆமா வரா..” என்றார் மகா.
என்னதான் ஒன்றுவிட்ட தாய் மாமாக்களை திருமணம் செய்துகொண்டாலும், இன்று வரையிலும் தனாவும், வராவும் அவர்களை தாத்தா பாட்டி என்றுதான் அழைப்பது. பிறந்ததில் இருந்து அழைத்து பழக்கப்பட்டதால், அவர்களுக்கும் வித்தியாசமாய் எதுவும் தெரிவதில்லை.
“ஏன் ம்மா அப்பாக்கு இப்படியொரு ஆசை? தம்பியும் எதுவும் சொல்லாம இருந்தான் போல..” என்று வரா தூண்டில் போட,
“ஆமா டி. எனக்கும் கேட்கவும் திக்குன்னு தான் இருந்தது. அப்புறம் இப்போதான் தம்பியும் சிலது எல்லாம் எடுத்துச் சொன்னான். எனக்கும் சரின்னு தான் படுது..” என்று மகா பேச,
“என்ன சொன்னான்?!” என்று கேட்டாள் மகள்.
“அது இருக்கட்டும் விடு.. என்னத்துக்கு பேச்சு நீட்டிக்கிட்டே போகணும்..” என்ற மகா “குட்டிங்க ரெண்டும் ஸ்கூல் போயாச்சா?” என்று வினவ,
“ம்மா.. பயங்கரமான ஆளும்மா நீ..” என்று வரா நகைக்க, அதற்குள் அலைபேசியை தனா வாங்கி இருந்தாள்.
“ம்மா..” என்று தனலட்சுமி ஆரம்பிக்க,
“சொல்லு டி..” என்றார் மகாவும் ஒரு புன்னகையோடு.
“சின்னவனுக்கு ரெண்டாவது மொட்டை போடணும் ம்மா…” என,
“போடுங்க..” என்றார் மகாலட்சுமியும்.
“என்னம்மா இப்படி சொல்ற?!” என்று மகா சிணுங்க.
“என்ன சொல்லிட்டேன் நான்?! இப்போதான் வீட்ல கல்யாண பேச்சு எடுத்திருக்கோம். இந்நேரம் போய் மொட்டை அது இதுன்னு சொல்ற நீ. ஏன் அங்க வீட்ல ரெண்டு தாத்தா பாட்டி உங்களுக்கு இருக்காங்க தானே. பெரியவங்க கிட்ட பேசி, முடிவு பண்ணுங்க. நான் வர்றோம்..” என்று நாசூக்காய் முடித்துக்கொண்டார் மகாலட்சுமி.
அவருக்குத் தெரியாதா என்ன, மொட்டை என்று பேசி பொறுப்பு மொத்தத்தையும் இவர்களின் தலையில் கட்டிவிடுவார். கடைசியில் இவர்கள் என்னவோ விசேச வீட்டு ஆட்கள் போலவும், அவர்கள் என்னவோ விருந்தினர்கள் போலவும் வந்து செல்வார்கள். ஏற்கனவே விநாயகம் ஒரு ஆட்டம் ஆடி முடித்திருக்கிறார்.
இப்போது இதனை வேறு சொன்னால், மனிதர் கொதித்து விடுவார் என்று மகா கண்டுதான் வைத்திருந்தார்.
“ம்மா இதெல்லாம் ஓவர் ம்மா.. நம்ம அகிலுக்கு ரெண்டாவது மொட்டைக்கு அப்பாதானே எல்லாம் எடுத்து பண்ணாரு..” என்று அக்காவின் இரண்டாவது மகனின், இரண்டாவது மொட்டை பற்றி தனா பேச,
“ஆமா டி. ஏன் எல்லா பிள்ளைகளுக்கும் நாங்களே தான் எல்லாம் செய்யணுமா? ஏன் உங்க வீட்ல ஆளுங்களே இல்லையா. இந்த தடவையாவது நீங்க எடுத்து செய்ங்க. நாங்க வந்து செய்முறை செய்றோம்..” என்று பேச்சை நிறுத்திக்கொண்டார் மகா.
மகள்கள் தானே, பேரப்பிள்ளைகள் தானே என்று பாசத்தில் அதை இதை என்று உளறிக்கொட்டி, இங்கே வீட்டினில் அவரால் சூழலை கெடுத்துக்கொள்ள முடியாது. அதுவும் கொஞ்ச நேரத்திற்கு முன்னே மகன் பேசியது எல்லாம், புத்தியில் நன்றாய் ஏறி நின்றது.
தனாவிற்கு அம்மாவின் பேச்சு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், பதில் ஒன்றும் பேசாமல் “சரிம்மா..” என்று வைத்தவள், அக்காவிடம் “என்னக்கா அம்மா இப்படி சொல்லுது..” என்றாள்.
“அங்க என்னவோ நடந்திருக்கு டி. அப்பாவும், தம்பியும் எதையோ பேசி அம்மா மனச குழப்பி விட்டிருக்காங்க. அதான். விடு விடு.. ரெண்டாவது மொட்டை தானே நம்மளே பார்த்துப்போம். கல்யாண செலவு வேற இனி அங்க இருக்கும் இல்லையா..” என்று வரா கொஞ்சம் பொறுப்புணர்ந்து பேச,
“ம்ம்..” என்றவளுக்கு மனதே ஒரு நிலையில் இல்லை.
இங்கே வேலையில் அமர்ந்திருந்த கண்ணதாசனோ, அப்பா சொன்னதுபோல மேட்ரிமோனி தளங்களில் பதிவதற்கான விபரங்களை பார்த்துக்கொண்டு இருந்தான். அவனிடம் இருக்கும் அவனது புகைப்படங்களே அவனுக்கு அத்தனை பிடித்தமாய் இல்லை.
“ஒரு போட்டோ கூட உருப்படி இல்லை.. இதுல அப்பா எந்த போட்டோவ ப்ரோக்கர் கிட்ட குடுத்தார் தெரியலை..” என்றவன், அது இது என்று பார்த்துவிட்டு, எதோ கொஞ்சம் அவனுக்கு பரவாயில்லை என்று தோன்றிய ஒரு புகைப்படத்தை பதிவேற்றி, பணமும் கட்டிவிட்டு முடிக்க, மனது சும்மா இருக்குமா?!
ஏற்கனவே பதிவில் இருக்கும், பெண் பிள்ளைகளின் விபரங்களை பார்க்கலாம் என்று தோன்ற ‘நம்மலே பார்க்கலாமா வேணாமா?!’ என்று ஒரு சந்தேகம் வேறு.
‘ச்சே என்ன கண்ணா, எல்லாத்துக்கும் இப்படி யோசிக்கிற?!’ என்று லேசாய் தலையை அழுந்தக் கோதியவன், அவனது விருப்பங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்ற வகையில் இருக்கும் வரன்களை வடிகட்டிக்கொண்டு இருந்தான்.
கண்ணதாசன் ஒன்றும் மிகவும் பெரிய இடமாகவும், அதிகம் படித்து நிறைய சம்பாரிக்கும் பெண்ணை எல்லாம் எதிர்பார்க்கவில்லை. இவர்களை போல ஓரளவு நடுத்தர வர்க்கமாய் இருந்தாலும், நல்லதொரு படிப்பிலும், ஓரளவு ஒரு சம்பாத்தியத்தில் இருந்தாலும் சரி, குடும்பமும் பெண்ணும் மனதிற்கு ஏதுவாய் இருந்தால் போதுமென்றே தான் எண்ணினான்.
அப்படித்தான் அவனின் தேடல்களும் இருக்க, பார்க்கும் பெண்களின் முகம் எதுவும் அப்படியொன்றும் மனதில் பதியவில்லை. முதலில் விபரங்கள் பார்க்கிறோமோ இல்லையோ, புகைப்படத்தை தானே பார்க்க நேரிடுகிறது.
அப்படித்தான் நகர்த்திக்கொண்டே வந்தவனின் கரமும், கண்ணும் சட்டென தன் வேலையே நிறுத்த, மனதோ கண்ணிமைக்கும் நொடியில் ஒருநிலைப்பட்டு, தன் மொத்த கவனத்தையும் திரையில் குவித்துப் பார்க்க, அழகாய் புன்னகைத்து, பாந்தமாய் இள ரோஜா நிற ஆர்கன்சா புடவையில், அடர் நீல நிற காரின் மீது சாய்ந்து நின்று, பளீர் புன்னகையோடு பார்த்திருந்தாள் பெண்ணொருத்தி.