கவிதை – 1

“கற்பக விநாயகம்..” ஜவுளி மாளிகை, காரைக்குடியின் பிரதான சாலையில் அமைந்திருக்கும், ஒரு அளவான ஜவுளிக்கடை. அதனை அப்படியே ஒட்டினாற்போல “கற்பக விநாயகம்..” பித்தளைப் பாத்திரக்கடையும் சேர்ந்தே இருக்க, இவ்விரு கடையுமே ஓரளவு அங்கே பிரசித்தி என்றே சொல்லலாம்.

காரணம், பல தலைமுறை தாண்டியும், அதன் தரம் குறையாமல் தன்னகத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களின் மனம் கண்டு, விருப்பம் கண்டு வியாபாரம் செய்யும் விதத்தில், இன்றளவும் அக்கடை நடத்தும் குடும்பத்தாரை, தாழ விடாமல், தாங்கிப் பிடிக்கிறது வியாபாரம்.   

“மூர்த்தி.. அங்க பாரு அந்தபக்கம் சாம்பிராணி புகை போடு. பார்த்து போடு.. கவனம்..” என்றபடி, அன்றைய தினத்தின் வியாபரத்தைத் தொடங்க, கல்லாவில் அமர்ந்தார் விநாயகம்.

என்ன வெயில், மழை என்றாலும், எப்படிப்பட்ட சூழல் என்றாலும், அனுதினமும் காலையில் எட்டுமணிக்கு எல்லாம் கடை திறந்து, பூஜை போட்டு, தினமும் கடையில் சாம்பிராணி புகையும் போட்டுவிடுவார் மனிதர். அப்படியே பாத்திரக்கடை வியாபாரத்தையும் சேர்த்தே பார்த்துக்கொள்வார்.

வாழ்வின் நிதர்சனம் அத்தனையும் கண்ட மனிதர். அதனால் எங்கே தாழ்ந்து, எங்கே நிமிர்ந்து, எங்கே தாட்டியம் காட்டி நடந்துகொள்ள வேண்டும் என்பது, அவருக்கு அத்துபடி. அவரின் தாத்தாவின் அப்பா ஆரம்பித்த சின்ன துணிக்கடையை, இன்று பத்து ஆட்கள் வேலை செய்யும், வியாபார ஸ்தாபனமாய் மாற்றிய பெருமை இவரைத்தான் சேரும்.

என்னவொன்று, காலங்கள் மாற, புதுமைகள் கூட வியாபாரம் கொஞ்சம் அவ்வப்போது மட்டுப்பட்டாலும், அதற்கெல்லாம் மனம் தளராமல் இன்றளவும் நிற்கிறார். பாத்திரக்கடை எப்போதுமே கை கொடுக்கும் ஒன்றுதான். இம்மியளவு கிண்ணியில் இருந்து, பித்தளையில் எத்தனை பெரிய பாத்திரங்கள் வேண்டுமோ, அத்தனையும் அங்கே இருக்கும்.

காரைக்குடியில் யாரிடம் கேட்டாலும் ‘விநாயகம் கடைக்கு போங்க..’ என்றுதான் சொல்வார்கள். அப்படித்தான் பேச்சிலும், சிந்தையிலும் நற்பெயர் பெற்றிருந்தார் மனிதர்.               

அடுத்தடுத்து முஹூர்த்த தினங்கள் வரிசையாய் வருவதால், அப்படியொன்றும் அதிகம் கூட்டமில்லை என்றாலும், ஆட்களே வராமலும் இல்லை. பெரிய வியாபரம் இல்லை என்றாலும், ஓரளவு தாக்குப்பிடிக்கும் வகையில் வியாபாரம் நடந்துகொண்டு தான் இருந்தது.

நேரம் நீண்டுகொண்டே போக, மதிய உணவு நேரம் வரவுமே, சரியாய் அவருக்கு அழைப்பு வந்துவிட்டது, மனைவி மகாலட்சுமியிடம் இருந்து.

“என்னங்க மாமா, சாப்பாடு குடுத்து விடவா?” என்று மனைவி கேட்கவும்,

“சரி மகா..” என்றவருக்கு, எண்ணம் அறிந்து மனைவி கேட்ட கேள்வி, மனதிற்கு இதமாய் இருந்தது.

ஏனெனில், அன்றைய தினம் வெயில் சற்று கூடுதலாய் இருக்க, பசி வேறு எப்போதோ எடுத்திருந்தது. வீட்டிற்கு உண்பதற்கு என்று சென்றால், அப்படியே உடல் சிறு ஓய்வை வேறு கேட்கும். கடையில் இருந்தால், உள்ளிருக்கும் அறையில் உண்டுவிட்டு, கொஞ்சம் கண்ணயர்ந்து கொள்வார்.  ஆட்கள் யாரேனும் நிறைய வந்துவிட்டால், அப்படியே எழுந்து வந்துவிடலாம். அலைச்சல் கம்மியல்லவா.

சிறு வயதில் இருந்து போட்ட உழைப்பினால், வயது கூட கூட, இப்போதெல்லாம் உடல் அடிக்கடி ஓய்வு கேட்பது மனிதருக்கு புரியாமல் இல்லை.

இரண்டு பெண் பிள்ளைகள், அவர்களுக்கு அடுத்து ஒரு மகன்.

வரலட்சுமி, தனலட்சுமி – இருவரையும் மகாலட்சுமியின் ஒன்றுவிட்ட தம்பிகளுக்கே திருமணம் செய்து கொடுத்தாகிவிட்டாது. அவர்களும் உள்ளூர்வாசிகள் தான். இரு மருமகன்களும் கல்லூரி பேராசிரியர்களாய் இருக்க, மகள்களின் வாழ்வு பற்றி, அவருக்கு எவ்வித கவலையும் இல்லை.

அவர்களுக்கு அடுத்து, கண்ணதாசன். நம் நாயகன்.    

இக்கால ‘ஐடி’  இளைஞன். இரு அக்காக்களுக்கு பிறகு பிறந்த ஆண் பிள்ளை என்பதால், வீட்டினில் அனைவருக்கும் அவன் என்றால் ஒருவித பாசமும், பரிவும் கூடுதல் தான். அவனும் அதற்கு ஏற்பத்தான் இருப்பான். குடும்பம் தான் முதலில். என்னதான் படித்து, நல்லதொரு உத்தியோகம், கைநிறைய சம்பாதனை என்று இருந்தாலும், இன்றளவும் அவன் எண்ணங்களில் முதலில் வந்து நிற்பது அப்பா, அம்மா, அக்காமார்கள் தான்.

மிகவும் முற்போக்குவாதியும் இல்லை, பிற்போக்குவாதியும் இல்லை. அனைத்தையும் குடும்பத்தை மனதினில் வைத்து யோசிக்கும் ஒருவன். அவன் வளர்ந்த விதமோ, இல்லை அவனை வளர்த்த விதமோ கூட இதற்கு காரணமாய் இருக்கலாம்.

‘எம். டெக்..’ படிப்பு முடியவுமே, அவனுக்கு மும்பையில் வேலை கிடைத்தது. அவனும் சந்தோசமாய் சென்றான் தான். ஆனால், அவனாலும் அங்கே இருக்க முடியவில்லை. அவனைவிட்டு இங்கே அம்மா மற்றும் அக்காக்களினாலும் இருக்க முடியவில்லை.

“அம்மா கண்ணுக்குள்ளயே நிக்கிற கண்ணா நீ..” என்று அம்மா ஒருப்பக்கம் ஆரம்பித்தால்,

வராவும், தனாவும் “டேய் அங்க முடியலைன்னா, ஒன்னும் பிரச்சனை இல்லை. நீ வா பார்த்துக்கலாம்..” என்று தினமும் இன்னொரு பக்கம் பேச,

விநாயகம் ஒருவர்தான் “நாடு விட்டு நாடு போய் வேலை பாக்குறதே, இப்போல்லாம் சர்வசாதாரணமா நடக்குது கண்ணா. நீ என்ன இங்க இருக்கிற மும்பைக்கு போயிருக்க. அதுக்கு இத்தனை பாடா..” என்று மகனுக்கு தைரியம் சொல்வார்.

ஆனால் கடைசியில், மகாலட்சுமி பேசி பேசியே, மகனை ஒருவழியாய் சென்னையில் வேறொரு வேலைக்கு மாற்றலாகி வரவைத்துவிட்டார்.

“நான் கண்ணுக்கு கண்ணா, ஒரே ஒரு மகன்னு பெத்து வளர்த்தா, அவன் அங்க எங்கயோ போய் இருக்கவா, இத்தனை பாடு மாமா. என்ன இருந்தாலும் சென்னை வேற தான், மும்பை வேறதான். இதுன்னா அவனுமே அடிக்கடி வந்துப்பான்..” என்ற மனைவியை முறைக்கமட்டுமே அவரால் முடிந்தது.

என்னதான் சொந்தத்தில் திருமணம் செய்து கொடுத்தாலும், இரு பெண் பிள்ளைகளையும் படிக்கவைத்து, திருமணமும் செய்து கொடுத்து, அதுவும் எவ்வித குறைவும் இல்லாமல், ஒவ்வொருவருக்கும் நாற்பது பவுனும், சீர்வரிசையும் குறைவில்லாமல் செய்து, அடுத்து அப்படியே வரிசையாய் இரு பெண் பிள்ளைகளுக்கும் இரண்டு, இரண்டு  பேறுகாலம் பார்த்து, பிள்ளைபேருக்கான செய்முறை செய்து என்று, மனிதர் ஒருவழியாகி விட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

இதெல்லாம் முடிந்து, எல்லாம் ஓய்ந்து நிற்கையில் கண்ணதாசனுக்கு இதோ திருமண வயது எட்டிவிட்டது. இருபத்தி எட்டு முடியும் நிலை. இதுவே அதிகம் என்றுதான் எண்ணினார். இருபத்தி ஆறு முடியும்போதே, ஜாதகம் விட்டு இருபத்தி ஏழு முடிவதற்குள் மகனுக்கு குடும்பம் அமைத்துக் கொடுத்துவிட எண்ணினார் விநாயகம்.

ஆனால், நாம் நினைப்பது எல்லாம் நடந்துவிடுமா என்ன.

“எடுத்தோம் கவுத்தோம்னு எல்லாம் பண்ணக் கூடாது மாமா. அவனே மனசு வந்து சென்னைல இருந்து இப்போதான், வீட்ல இருந்து வேலை செய்றதுக்கு மாத்திட்டு வந்திருக்கான். அவனுக்கு நேரம் எப்படி இருக்கு, குருபலன் இருக்கான்னு எல்லாம் பார்க்கணும்..” என்று ஜாதகம் பார்க்கச் செல்ல,

ஜோசியரோ “இருபத்தி எட்டு முடியணும்..“ என்று ஒரேதாய் முடித்து அனுப்பிவிட்டார்.

மகாவும் “பார்த்தீங்களா மாமா. நான் சொன்னதுக்கு முறைச்சீங்க தானே. நம்ம கண்ணனுக்கு என்ன குறை? எப்போ ஜாதகம் விட்டாலும், அடுத்த மாசமே பொண்ணு அமைஞ்சிடும்…” என்று சொல்லி, கணவரின் வாயை மூடிவிட்டார் பெண்மணி.

இதோ இந்த ஓராண்டும் அப்படியே ஓடிவிட, தனக்கு மதிய உணவு எடுத்துக்கொண்டு வந்த மகனிடம் “நீ சாப்பிட்டியா கண்ணா?!” என்று விசாரிக்க,

“ஆச்சுப்பா…” என்றவன், அப்பாவிற்கு அவனே தட்டு வைத்து, எல்லாம் எடுத்து வைக்க

“ம்ம்..” என்றவர், முதல் வாய் உணவை கடவுளை வேண்டிக்கொண்டு வாயில் வைக்க, கண்ணதாசனோ ஒரு புன்னகையோடு அப்பாவைப் பார்த்து இருந்தான்.

‘கண்ணா இப்படித்தான் முதல் வாய் சாமிக்கு வேண்டி, அடுத்து நம்ம சாப்பிடணும்..’ என்று, அவனுக்கும் சிறுவயதில் இருந்து பழக்கப்படுத்தியவர்.

இன்றளவும் என்றில்லை, எப்போதுமே அவரின் இப்பழக்கம் மாறாது என்பது அவனுக்கும் தெரியும். அவர் சொல்லிக்கொடுத்த இப்பழக்கம், அவனுக்கு மறக்காது என்றும் புரியும்.

“வீட்டுக்கு வந்து, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரலாம் தானே ப்பா..” என்றான் ஆதுரமாய்.

“வந்துட்டு வந்தா, அடுத்து சாயந்திரம் ஆறுமணி வரைக்கும் உங்கம்மா இழுத்து உக்கார வச்சிடுவா…”

“அதுனால என்னப்பா?! இன்னமும் நீங்க ஓடிட்டே இருக்கணுமா? பேரப்பிள்ளைங்க வந்தாச்சு. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கப்பா..”

“ஆகலாம்.. ஆகலாம். உனக்கும் ஒரு வாழ்க்கை அமைச்சுக் கொடுத்துட்டா, எனக்கு நிம்மதியாகிரும் கண்ணா. ஐப்பசி பிறக்கவும், குலசாமி கோவில்ல வச்சு, ஒரு பூஜை பண்ணிட்டு ஜாதகம் வெளிய விடலாம்..” என,

“சரிப்பா..” என்ற மகனை ஒரு பார்வை பார்த்தவர்,

“சரி சொல்லு, உனக்கு எப்படி பொண்ணு வேணும்?” என்று கேட்க, கண்ணதாசன் முகத்தினில் ஒரு புன்னகை.

“என்ன கண்ணா, பதில் சொல்லாம சிரிக்கிற?”

“என்னன்னு சொல்லப்பா, அக்காங்களை சொந்ததுக்குள்ள கொடுத்து, இப்போ வரைக்கும் நம்ம எல்லாம் ஒரே குடும்பமா, ஒன்னுமண்ணா பழகிட்டு இருக்கோம். நம்ம குடும்பத்துல ஒரு ஆளா, எல்லாரோடவும் கலந்து பழகி, வித்தியாசம் காட்டாத பொண்ணா இருந்தா, போதும் ப்பா..” என்று சொல்ல,

“ஓ!” என்றார் விநாயகம்.

“என்னப்பா?! நான் தப்பா எதுவும் சொல்லலையே?!” என்று கண்ணதாசன், அப்பாவின் முகத்தில் தெரிந்த திருப்தியின்மை கண்டு கேட்க,

“நீ சொன்னதுல எந்த தப்பும் இல்லை கண்ணா. ஆனா வாழ்க்கைல நீ தனிப்பட்ட முறைல, முன்னேறனும்னு நான் நினைக்கிறேன். ஒரே வட்டத்துக்குள்ள இருந்தா, வாழ்க்கை முன்னுக்கு நம்மள கொண்டு போகாது கண்ணா..” என்றார் மகனிடம்.

“ப்பா..! இப்போ நமக்கு என்ன குறை?!” என்று கண்ணதாசன் வினவ,

“குறைன்னு எதுவுமில்லை கண்ணா. ஆனா பாரு, பெருசா உனக்கு நான் என்ன சேர்த்து வச்சிருக்கேன். அஞ்சு செண்ட்ல ஒரு இடம் வாங்கி போட்டிருக்கேன். அவ்வளோதான். படிப்புக்கு கூட நீ லோன் போடலாம்னு சொல்லி, வேலைக்கு சேரவும் நீயே அதை கட்டிட்ட. அக்காங்களுக்கு செஞ்சதை விட, உனக்கு எல்லாமே கம்மிதான் கண்ணா..” என,

“ப்பா.. இதுல என்னப்பா இருக்கு?!” என்றான் விளங்காமல்.

“இல்ல கண்ணா. உனக்கு இன்னமும் வாழ்க்கையோ சூட்சுமம் புரியலை. நிதர்சனம் தெரியலை. நம்ம எல்லாம் ஒரே குடும்பமா பழகுறோம் செய்றோம் தான். ஆனா நல்லா யோசி, என்னதான் சொந்தத்துல குடுத்து இருந்தாலும், நம்ம எல்லாமே செய்றதுனால, அவங்க எல்லாம் நல்லா பழகுறாங்க அவ்வளோதான்..“ என்றார் ஒருவித கசந்த குரலில்.

நிஜம் அதுதான். விநாயகத்திற்கு இதனை எல்லாம் மனைவியிடம் சொல்லி புரியவைக்க முடியாது. அப்படியே சொன்னாலும், வீட்டையே இரண்டு செய்துவிடுவார் மகா.

மகாலட்சுமிக்கு, அவரின் பதின்ம வயதிலேயே அப்பா அம்மா, ஒரு விபத்தினால் காலமாகிவிட, இரண்டு சிட்தப்பாமார்களின் வளர்ப்பில் தான் வளர்ந்தார். ஒரே குடும்பம். பிரிக்காத சொத்து. இன்றளவும் கூட அப்படித்தான். மூத்த அண்ணனுக்கு ஒரே மகள், அது மகாலட்சுமி. அடுத்து இரண்டு சித்தப்பாக்கள். இருவருக்குமே ஒரு ஒரு ஆண் பிள்ளை.

நோகாமல், மகள்களையே தம்பிகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார் மகா.