Advertisement

பொள்ளாச்சி வந்து இறங்கியதும் ஜீவாவிற்கு அழைப்பு விடுத்தான் திவாகர். காலைநேர வெயிலே பிற்பகலில் சுட்டெரிக்கும் சூரியனை போல பிடரியில் அடித்து ஓடி ஒழிய வைத்தாலும் வெயிலோடு சேர்ந்து தென்றல் காற்றும் இயைந்து சற்று குளுமை தர சிலிர்த்து அடங்கியது அவன் உடல்.

ஜீவா போனை எடுக்கலை நீங்க இங்கயே இருங்க ஆட்டோ பிடிச்சிட்டு வறேன்என்று கூறிவிட்டு பேருந்து நிலையத்தின் வெளியே சென்றான் திவாகர்.

ஸ்டேண்டில் இருந்த ஆட்டோவை கைதட்டி அழைத்தவன் இடத்தை கூறி பேரம் பேசி, ஷியாமளாவையும் தன்வந்திரியையும் அழைத்து  ஏற சொல்லி உடமைகளை உள்ளே வைத்துவிட்டு இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

என்னடா திவா எதையும் மறந்துட்டியா?”, ஷியாமளா கேட்க,

நா எதையும் மறக்கலை ம்மா மறுபடியும் உங்க ரெண்டுபேருக்கும் ஞாபக படுத்தலாம்னு நினைக்கிறேன்என்றான் முகவாயை தேய்த்து கொண்டே.

என்ன ஞாபகபடுத்த போற அதான் கிளம்பும் போதே கன்டிஷன் போட்டுடியே இனி என்ன இருக்கு! நாங்க எதையும் மறக்கல நீ முதல ஏறு ஆட்டோகாரன் நம்மளையே பாத்துட்டு இருக்கான்“.

நீங்க எங்க எப்டி பல்டி அடிப்பிங்கன்னு எனக்கு தெரியாதா வீட்டுக்கு போனதும் ஏதாவது சாக்கு சொல்லி ஏமாத்திட்டு எங்கயாவது போனீங்க அப்டியே பேக்கப் பண்ணி ஊருக்கு அனுப்பிடுவேன் சொன்னதை செய்வேன், இந்த விஷயத்துல நோ கம்பரமைஸ்.

கல்யாணத்தை பத்தோமா ஆசீர்வாதம் பண்ணோமா சாப்பிட்டோமா சொல்லிட்டு கிளம்புனோமான்னு இருக்கணும் அபிம்மா கிட்ட சொல்லி ஏதாவது பிளான் பண்ணிங்க கல்யாணம் பண்ணி வைக்கனுமன்ற எண்ணத்தையே மறக்க வேண்டியதா இருக்கும்என்று எச்சரித்து வாகனத்தில் ஏறி கொள்ள, மூன்று சக்கர வாகனம் கிளம்பியது

அவன் பேச்சில் முகம் சுருங்கினாலும் வகுத்த திட்டத்தில் இருந்து பின் வாங்க போவதில்லை என்ற உறுதி இருவர் மனதிலும் சம்மணமிட்டு அமர்ந்திருந்தது.வழியெங்கும் மரகத நிறத்தில் பசுமை மனதை மயக்கி கண்களுக்கு விருந்தளித்தது.

ஏங்க இந்த ஊர்ல திவாக்கு பொண்ணு கிடைச்சா எப்டி இருக்கும்“, அப்போதும் அவனின் திருமணத்தை பற்றி ஷியாமளா பேச,

உனக்கு வாயில வாஸ்து சரியில்லை ஷியாமா இன்னைக்கு உனக்கு சந்திராஷ்டமம் கொஞ்சம் வாயை அடக்கிக்கோ அதான் நல்லது. அவன் காதுல விழுந்தது ஜீவா வீட்டுக்கு போக மாட்டோம் நேர ரயில்வே ஸ்டேஷன் தான் போவோம்,

டிரெயின் ஏத்திவிட்டு விட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பான் அதனால இப்போதைக்கு அமைதியா வா மாற்றம் வரும் என்ன பண்ணலாம்னு அங்க போய் யோசிப்போம் யார்கிட்ட சொல்லணுமோ அவங்ககிட்ட விஷயத்தை சொல்லியாச்சு நிச்சயம் அவனோட மனசு மாறும்என்று ரகசிய குரலில் பேசி மனைவியின் ஆர்வம் மிகுந்த மனதை அமைதிபடுத்தினார் தன்வந்திரி.

அபிராமியிடம் விஷயத்தை சொல்லி இருந்தாலும் அது எப்போது ஈடேறுமோ என்ற கவலை ஷியாமளாவின் மனதை வாட்டமுற செய்தது

சற்று நேரத்தில் ஜீவாவின் இல்லம் வந்து இறங்க, திவாகரின் அலைபேசி சிணுங்கியது. எடுத்து பார்த்தவன் திரையில் மின்னிய பெயரை கண்டு இதழ் சுளித்து உயிர்ப்பித்து காதில் வைத்தான்.

சாரி திவா போனை வீட்டுல வச்சுட்டு வெளிய போயிட்டேன் இப்போ தான் உன்னோட கால் பாத்தேன் சாரிஎன்றவன்சரி எங்க வந்துட்டு இருக்க பொள்ளாச்சி வந்துட்டியா இல்லையா?” என்று ஜீவானந்தம் கேட்க,

கொஞ்சம் கீழ எட்டி பாருடா பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டல இருக்கேனா இல்லை வீட்டுக்கு வெளிய இருக்கேனான்னு தெரியும்என்றதும்,

என்னடா சொல்ற?” என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தியவன் வேகமாக கீழே இறங்கி வர

காய் நறுக்கி கொண்டிருந்த அபிராமி ஜீவாவின் வேகம் கண்டு என்னவோ ஏதோ என பதறி போனார்

டேய் ஜீவா இவ்ளோ வேகமா எங்க போறஎன்ற அபிராமியின் குரலையும் காதில் வாங்காது வாசலுக்கு விரைந்தவனை தொடர்ந்து அபிராமியும் சென்றார்.

குடும்பமாய் வந்து இறங்கியவர்களை கண்டதும் அபிராமியின் முகத்தில் அளவில்லா புன்னகைடேய் திவாஎன அணைத்து கொண்டான் ஜீவாந்தனம்.

என்னமோ பாத்து பத்து வருஷம் ஆனா மாதிரி ரியாக்ட் பண்ற போன வாரம் தானே விட்டுட்டு வந்தஎன்று கிண்டல் மொழிந்தான் திவாகர்.

எதையும் தன்மையாவே பேச மாட்டியாடாஎன்று மகனை கண்டித்த ஷியாமளாஎப்டி இருக்க ஜீவாஎன்று நலம் விசாரிக்க,

நல்லா இருக்கேன் ஆன்ட்டி வாங்க உள்ள போய் பேசலாம்என அழைத்து சென்றான். திவாகரிடம் முறைப்பு காட்டியபடிஉள்ள வாடாஎன்று கோபகுரலில் அழைத்து விட்டு வீட்டின் உள்ளே சென்றார் அபிராமி.

அவர் அழைப்பே தினுசாய் இருக்க காரணம் தெரியாமல் குழப்பத்துடன் உள்ளே சென்றவன் அபிராமியின் முகத்தை பார்த்தான்.அவன் பார்வை அறிந்தும் கண்டுகொள்ளாமல் வந்தவர்களை உபசரித்து கொண்டிருந்தார்.

எப்டி இருக்கீங்க அபி ம்மா ராகவ் அப்பா எங்க காணோம்என்று கேட்டான் திவாகர் வீட்டை சுற்றி பார்வையை பரப்பியபடி.

ஜீவா நா யாருக்கிட்டயும் பேச தயாரா இல்லை சொல்லிருஎன கோபத்துடன் கூறியவர்ஷியமாளா நீயும் அண்ணனும் போய் குளிச்சிட்டு வாங்க டிஃபன் எடுத்து வைக்கிறேன்என்று அவர்கள் தங்கும் அறையை காட்டிவிட்டு அனுப்பி வைத்தவர் திவாகரை முறைத்து கொண்டே சமையல் அறை சென்று மறைந்து கொள்ள,

சிறு சிரிப்புடன் திவாகர் கொண்டு வந்த உடமைகள் அடங்கிய பையை எடுத்து கொண்டு ஜீவா அறைக்கு செல்ல, அபிராமியின் கோபத்திற்கான காரணம் தெரியாமல் குழப்பத்துடன் அவனை பின் தொடர்ந்து சென்றான்.

சரிடா குளிச்சிட்டு வா நிறைய வேலை இருக்குஎன்றவனை பிடித்து வைத்து கொண்டவன்,

வேலை இருக்கட்டும் முதல எனக்கு அபிம்மா கோபமா இருக்குற விஷயத்தை கிளியர் பண்ணு. நா என்ன பண்ணேன் ரெண்டு நாள் முன்னாடி போன்ல பேசும் நல்லா தானே பேசுனாங்க நேர்ல பாத்ததும் வேண்டாத விருந்தாளி மாதிரி பேசிட்டு போறாங்க, என்னடா ஆச்சு என்ன பத்தி என்ன சொல்லி வச்சிருக்கஎன்று கேட்டான் காரணத்தை அறிந்து கொள்ளும் முனைப்புடன்.

நீ பண்ற வேலைக்கு கோபப்படாம இருப்பாங்களா நேத்து நைட்டு ஆன்ட்டி பெரியம்மாவுக்கு போன் பண்ணி பேசுனாங்க என்ன பேசிகிட்டாங்கன்னு டீட்டைலா தெரியாது, ஆனா… உன்னோட கல்யாண விஷயம்னு மட்டும் தெரியும்என்று கூறிவிட்டு விலகி சென்றவனை பிடித்து நிறுத்தினான் திவாகர்.

என்னோட கல்யாணமா…? அதை பத்தி பேசுறதுக்கு என்ன இருக்கு! முடிவை தான் சொல்லிட்டேனேஎன்றவன்அப்பா வேகமா பேசும் போதே நினைச்சேன் ஏதாவது கோல்மால் பண்ணிருப்பாங்கன்னு அதான் ஜாதகத்தை வீட்டுல வச்சிட்டு வர சொன்னாறா?” என்று பல்லை கடித்தபடி கோபத்தை வெளிப்படுத்தியவனை புருவங்கள் இடுங்க பார்த்தான் ஜீவானந்தம்.

இப்போ எதுக்கு இவ்ளோ கோபம். பெத்தவங்க ஆசைப்படுறதுல என்ன தப்பிருக்கு திவா உனக்கு நல்லது பண்ணனும்னு நினைக்கிறாங்க அதை ஏன் வேற கண்ணோட்டதுல பாக்குற கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு என்னடா கஷ்டம்“. 

எல்லாம் தெரிஞ்ச நீயே இப்டி கேட்கலாமா?” என்றான் திவாகர் வருத்தம் இழையோட,

முடிஞ்ச விஷயத்தை பேசலை இனிமே ஆரம்பிக்க போற விஷயத்தை பத்தி பேசுறேன் பாஸ்ட் இஸ் பாஸ்ட் திவா கடந்து போறது தான் வாழ்க்கை“. 

இல்லைடா என்னால முடியலை ஒரு மாதிரி குற்றவுணர்ச்சியா இருக்கு கல்யாண பேச்சை எடுத்தாலே ஞாபகம் வர்றது என்னவோ அவளும் அவளோட அழுகையும் தான் அதை மறக்க முடியலை சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தேன்ற மாதிரி படிச்சிட்டு இருந்தவள என்னோட சுயநலமான எண்ணத்தால பலி ஆகிட்டேன் அதை நினைச்சா தான் மனசு ஆற மாட்டேங்கிதுஎன்றான் திவாகர். தவறிழைத்ததின் சாயல் அவன் முகத்தில் வலியோடு பிரதிபலித்தது.

முட்டாள்மாதிரி பேசாத என்ன குற்றவுணர்ச்சி!எதுக்கு இவ்ளோ எமோஸ்னல் ஆகுற காதல்னா என்னனு நினைக்கிற பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணி ஒன்னா வாழுறதுன்னா ம்ஹும்“, இதழ் வளைத்து புன்னகைத்தான் ஜீவானந்தம்.

உனக்கு அவ மேல வந்தது காதல் இல்லை ஜஸ்ட் அட்ராக்சன் எல்லாரும் ஒரே மாதிரியான செயலை செய்யும் போது ஒருத்தர் மட்டும் தனித்துவமான செயலை செஞ்சா பார்வையும் சரி மனசும் சரி அந்த தனித்துவமான ஆள் மேல தான் ஈர்ப்பை ஏற்படுத்தும் உனக்கும் அப்டி தான். எங்கயோ ரோட்டுல பாத்தானாம் சட்டுன்னு காதல் வந்துருச்சாம்

அந்த பொண்ணுகிட்ட சொல்றதுல இல்லை காதல் அவளுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணிருக்கணும் உன்னை பத்தி உன்னோட கேரக்டரை பத்தி நீ தான் அந்த பொண்ணுகிட்ட சொல்லிருக்கணும் உன்மேல நம்பிக்கை வர முயற்சி பண்ணிருக்கணும். எதுவுமே பண்ணாம அவசர புத்தியால தப்பு பண்ணிட்டு இப்போ அய்யோ அம்மான்னு வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்! முடிஞ்சதை நினைச்சிட்டு இருந்தா எல்லாம் சரியாகிருமா?. இந்த இடைப்பட்ட காலத்துல நிச்சயம் அவ மனசு மாறி இருக்கும் குடும்பத்தோட சந்தோஷமா வாழ்ந்துட்டு இருப்பா நீ யாருன்றதையே மறந்திருப்பா, நீ தான் கில்டியா இருக்குன்னு கிறுக்கன் மாதிரி புலம்பிட்டு இருக்க உனக்குன்னு ஒரு லைஃப் பாட்னாரை டிஸைட் பண்ணு திவா நல்லதே நடக்கும்என்று எதார்த்தத்தை புரிய வைக்க முயன்றான்  ஜீவானந்தம்.

ஏனோ அவன் கூற்றை ஏற்று கொள்ள மனம் தயாராய் இல்லை மற்றவரின் பார்வையில் அது ஈர்ப்பு.. என்றாலும் அவன் பார்வையில் அது காதலாகவே புணரப்பட்டது. எத்தனை பக்குவபட்ட மனதாய் இருந்தாலும் நேசம் என்று வரும் போது மனம் சற்று பிரள தானே செய்யும்.

நீ என்ன தான் விளக்கம் சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது ஜீவா ஒருவேளை நீ சொல்ற மாதிரி அவ சந்தோஷமா இருந்தா என்னோட குற்றவுணர்ச்சி கொஞ்சம் குறையும்என்று சமத்துவம் பேசிவிட்டு மாற்று உடையை எடுத்து கொண்டு நகர்ந்துவிட்டான் திவாகர்.

ம்ஹும் இவனை திருத்தவே முடியாதுஎன்று தனியே புலம்பியவன் தலையில் அடித்து கொள்ளாத குறையாக அலைபேசியை எடுத்து கொண்டு அறையில் இருந்து வெளியேறினான் ஜீவானந்தம்.

Advertisement