Advertisement

திருமணத்திற்கு இன்னும் இரண்டே நாள் தான் இருந்தது ஆடம்பரம் எதையும் அரகேற்றம் செய்யாமல் சுற்றம் மட்டும் அழைத்து நிச்சயம் திருமணம் இரண்டையும் முடித்து கொள்ளலாம் என்று கராறாய் ஜீவானந்தம் கூறியிருந்த காரணத்தினால் சிவநேசன் குடும்பத்தினரும் வேறு வழியில்லாமல் அதையே ஆமோதித்திருந்தனர்

மாங்கல்யம் எடுக்கும் நாளிலிலேயே திருமணத்திற்கான புடவை நகையை வாங்கி கொள்ளலாம் என்று அபிராமி கூறியிருக்க, அதற்காக பரபரப்புடன் கிளம்பி கொண்டிருந்தனர் திவ்யாவின் குடும்பத்தினர்.

என்னக்கா நீயும் எங்ககூட வர தானே“, கண்ணாடி முன் நின்று தன்னை அலகரித்து கொண்டதை சரிபார்த்து கொண்டே கேட்டாள் கவிபாரதி.

எனக்கு காலேஜ்ல முக்கியமான வேலை இருக்கு சோ என்னால வர முடியாது கவி, நீங்க போயிட்டு வாங்க நா அங்க வந்து என்ன பண்ணப்போறேன் எல்லாமே எனக்கு பிடிச்ச மாதிரி என்னோட விருப்பபடி தான் நடக்குதா?” என்று குரலில் அவசரத்தையும் அதிருப்தியை காட்டி பேசினாள் திவ்யா.

நீ வராம நா மட்டும் அங்க போய் என்ன பண்ண போறேன் நானும் போகலை அவங்களே போய் எடுத்துட்டு வரட்டும்என்று ஓரமாய் சென்று அமர்ந்து கொள்ள,

இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க நேரமாச்சு சீக்கிரம்என்று காலில் வெந்நீரை ஊற்றியபடி அறையின் உள்ளே நுழைந்தார் ஜெயசித்ரா.

ஆரம்பத்துல இருந்து இப்ப நடக்குற சம்பவம் வரைக்கும் இந்த அத்தை தான் காரணம் வாயை வச்சிட்டு சும்மாவே இருக்க மாட்டாங்க போலஎன்று முறைப்பு காட்டியபடி உள்ளே பொறுமியவள்

அக்காவுக்கு ஏதோ காலேஜ்ல முக்கியமான வேலை இருக்காம் அதனால நம்மள மட்டும் போயிட்டு வர சொல்லுறா கல்யாணமே அவளுக்கு தான் அவ வராம நா மட்டும் அங்க எதுக்கு நானும் வரலை அத்தை காலேஜுக்கு கிளம்புறேன்என்றதும்,

என்ன விளையாடுறீங்களா ரெண்டுபேரும். என்ன திவ்யா மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்கஎன்று முகத்தில் கோபத்தை தேக்கி கொண்டு ஜெயசித்ரா கேட்க,

சொல்லுக்கா இப்பாயாவது மனசுல உள்ளதை பேசுஎன்று தூண்டினாள் கவிபாரதி,நேரம் காலம் தெரியாமல்.

வார்த்தைகள் வெளிவர தயாராய் இருந்தாலும் மனம் ஒப்பவில்லை மரண தண்டனை அறிவித்து தீர்ப்பை எழுதி பேனாவின் முனையை உடைத்த பின் வழக்கை மறுபரிசீலனை செய்வதில் நியாயம் இல்லையே, கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் நழுவவிட்டு திருமணத்திற்கு இரண்டே நாட்கள் இருக்கும் நிலையில் மனதில் உள்ளதை சொல்வதில் அர்த்தமில்லை. அதிலும், குடும்பத்திற்காக தன்னுடைய விருப்பு வெறுப்புகளை தியாகம் செய்தவள் என்ற பச்சாதாபத்தை பெறுவதில் துளியும் திவ்யாவிற்கு விருப்பமில்லை.

லீவ் அதிகமாவே போட்டுட்டேன் இன்னைக்கு போயிட்டு என்னோட ஒர்க்கை முடிச்சிட்டு கல்யாணத்துக்கு லீவ் சொல்லிட்டு வந்துடுறேன் அத்தைஎன்று தயக்கம் கொண்டு பேசியவள் அனுமதி வேண்டி பார்வையை ஜெயசித்ராவின் முகத்தில் நிலைநிறுத்தினாள். உள்ளதை சொல்லாமல்  உள்ளுக்குள் ஒளிந்து கொண்டவளை  காண கோபம் கொப்பளித்தது கவிபாரதிக்கு.

அதெல்லாம் நாளைக்கு சொல்லிக்கலாம் இன்னைக்கு என்ன வேலை இருக்குன்னு தெரியும் தானே உன்னோட ஃபிரெண்டு வளர்மதிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல சொல்லிரு, மாப்பிள்ளை வீட்டுல முகூர்த்த புடவை எடுக்க வர சொல்லிருக்காங்க முக்கியமா உன்னை கூட்டிட்டு வர சொல்லிருக்காங்கஎன்று மறுப்பு சொல்லவும், போக வேண்டும் என அடித்து பேச மனம் வரவில்லை திவ்யாவிற்கு அவள் அமைதியை கண்டு எரிச்சல் மேலோங்க அவளுக்கு பதிலாக கவிபாரதி தொடங்கினாள்.

கல்யாண பேச்சு ஆரம்பிச்சத்திலிருந்து அவளுக்குன்னு எந்த விருப்பமும் இல்லாம போச்சு கீ கொடுத்து ஆட்டி வச்சுட்டு இருக்கீங்க, அவளும் தலையாட்டி பொம்மை மாதிரி தலைய ஆட்டிட்டு இருக்கா அவளுக்குன்னு ஒரு மனசு இருக்கிறதை எப்ப தான் புரிஞ்சிக்க போறீங்களோ தெரியலை“, சலிப்பாய் வார்த்தைகள் வந்தாலும் அதில் திவ்யாவின் மீதான கோபத்தின் சுவடுகள் பதிந்திருந்தன.

கவி வாயை மூடு யார்கிட்ட பேசுறன்னு தெரிஞ்சு பேசுஎன்று அடிக்குரலில் திவ்யா அடக்க,

எப்ப பாரு என்னை கட்டுப்படுத்துறதுலயே குறியா இரு உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கிறதை எப்ப தான் புரிஞ்சுப்பாங்களோ தெரியலைஎன்றாள் கொதிப்பாக.

இளையவளின் பேச்சு பதட்டத்தை அளித்தது மட்டுமல்லாமல் சங்கடத்தையும் அள்ளி தெளித்தது திவ்யபாரதிக்கு. கவிபாரதியின் பேச்சில் முகத்தில் வருத்தம் தொக்கி நிற்க. என்ன சொல்லி புரிய வைப்பது என தெரியாமல் விழித்த ஜெயசித்ரா,

அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும்னு தான் இதெல்லாம் பண்றோம் உனக்கு இப்போ புரியாது கவி காலமும் நேரமும் வரும் போது காரணம் என்னனு உனக்கு தெரியும். நா பண்றது சரியா இல்லையான்னு அப்போ புரிஞ்சுப்பஎன்றவருக்கு அதற்கு மேல் விளக்கம் சொல்லி அவ்விடத்தில் நிற்க துணிவு இல்லாமல் போனது,

வாய் இருக்கு நியாயம் கேட்கலாம்னு வேகமா பேசிறலாம் ஆனா காரணம் தெரியும் போது ரொம்ப வருத்தப்பட வேண்டியதா இருக்கும் கவிம்மா பேச்சை குறைச்சிட்டு எல்லாமே உங்க நல்லதுக்குன்னு நினைஎன்றவர்சீக்கிரம் கிளம்பி வாங்க நேரமாச்சுஎன்று சுரத்தே இல்லாமல் சொல்லிவிட்டு சென்று விட்டார் ஜெயசித்ரா.

அவர் சென்ற தோரணை மனவருத்தத்துடன் செல்வதை உறுதிபடுத்த,”ஏன் கவி அடுத்தவங்க மனசை காயப்படுத்துற மாதிரியே பேசுற சம்பந்தப்பட்ட நானே அமைதியா போகும் போது உனக்கு எதுக்கு இவ்ளோ கோபம் வருதுஎன்று திவ்யா சிடுசிடுப்பை காட்டினாள்

வாயில்லா பூச்சி உனக்கு பேச தெரிய மாட்டிங்கிதே அதான் நா பேசுறேன். நடக்கிறதையெல்லாம் பாத்துட்டு உன்னை மாதிரி என்னால அமைதியா இருக்க முடியலை. விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சும் வற்புறுத்தி கல்யாணம் பண்றது என்னை பொறுத்த வரை கொலை பண்றதுக்கு சமம். அதை தான் இந்த வீட்டுல உள்ளவங்க பண்ணிட்டு இருக்காங்க,

மனசுக்கும் உயிர் இருக்கு அதை கொஞ்சமாவது மதிக்கணும் திவிக்கா மனசே இல்லாம உன்னோட நல்லதுக்குன்னு பேசிட்டு போறாங்க. ஒரு நாள்ல கடந்து போற விஷயமில்லை கல்யாணம். நிதமும் பாக்கணும் பேசணும் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்தக்கணும் இதெல்லாம் உன்னால மனசார செய்ய முடியுமா சொல்லு?, நா இருக்குற அளவுக்கு கூட உன்னோட வாழ்க்கைய முடிவு பண்றதுல உன்னால உறுதியா இருக்க முடியலையே க்கா,

மனசுல உள்ளதை பேசுன்னு சொல்றேன் குடும்பம் நல்லா இருக்கணும் நிம்மதியா இருக்கணும்னு சமரசம் பேசிட்டு இருக்க இந்த கல்யாணம் நடந்தா நீ நிம்மதியா இருப்பியா வாயை திறந்து பதில் சொல்லு? இல்லை உனக்கு நீயே கேட்டுக்கோ நிம்மதி சந்தோஷம் இந்த வாழ்க்கை கொடுக்குமான்னுஎன்று ஆவேசமும் ஆதங்கமும் இயைந்து பேசிவிட்டு வேகமாக அறையில் இருந்து வெளியேறிவிட்டாள் கவிபாரதி.

இளையவளின் கேள்விகளுக்கு திவ்யாவிடம் பதில் இல்லை குடும்பத்தின் நலன் மட்டுமே அவள் கருத்தில் பதிந்திருந்தது. அதை தாண்டி வேறு எதையும் சிந்தித்து செயலாற்ற துளியும் விருப்பமில்லை எடுத்த முடிவில் இருந்து எவரும் பின்வாங்க போவதில்லை இனி தான் பேசி புரியவைக்க முயற்சி செய்வது வீண் பயன் என்று எண்ணி எண்ணத்தை ஒதுக்கினாலும் நிம்மதி என்ற வார்த்தை உயிர் அறுத்தது. அழ விருப்பமில்லை அதில் ஆர்வமும் இல்லை அவளுக்கு ஓய்ந்து போன விழிகளுக்குள் இனி கண்ணீருக்கு தடயம் இருக்க போவதில்லை அமைதியாய் இருந்தே வாழ்வை கழிப்போம் என்ற முடிவிற்கு வந்திருந்தாள் திவ்யபாரதி.

ஆழ்ந்து மூச்சை வெளியிட்டு மனதை சமன்படுத்தி கொண்டவள் அறையில் இருந்து வெளியே வர அனைவரும் தயராய் இருந்தனர்.

திவிம்மா உனக்காக தான் காத்திட்டு இருக்கோம் வாடா சாப்ட்டு கிளம்பலாம்என்று சிவநேசன் கூற, மறுத்து பேச முடியமால் சரியென்று தலையாட்டினாள்.

இத்தனை நேரம் பேசிய எதையும் காதில் வாங்காமல் எப்போதும் போல இயல்பாய் சாப்பிட அமர்ந்தவளை பார்க்க கோபம் மூண்டது கவிபாரதிக்கு

வேகமாக தட்டை எடுத்து வைத்துசாப்பாடு போடும்மா எனக்கு பசிக்கிதுஎன்றாள் வேகமாக.

உனக்கு என்னடி ஆச்சு போட்டுட்டு தானே இருக்கேன் வர வர உன்னோட நடவடிக்கையே சரியில்லை கவி ரொம்ப பண்றஎன்று வஞ்சித்து கொண்டே பரிமாறினார் அம்பிகா

“நீங்க பண்றதை விடவா நா பண்ணிட போறேன்என்று துடுக்காக கேட்டு உணவை பிசைந்து உள்ளே தள்ள,

அவளின் கோபத்திற்கான காரணம் விளங்காமல் பேவென பார்த்தார் அம்பிகா. அமைதியான நேரத்தை அலங்கோலம் செய்ய மனம் வராமல் தனியாய் அழைத்து பேசி கொள்ளலாம் என்று பரிமாறுவதில் கவனம் செலுத்தினார்.

Advertisement