Advertisement

வெளிச்சம் பட்டு கரையும் பனியை போல அவள் பேசுவதை ரசனையோடு பார்த்தவன் இதழ் விரியா சிரிப்புடன்கோவில்ல வச்சு சொல்றேன் நிச்சயம் நாம ரெண்டுபேரும் சந்தோஷமா வாழ்வோம் திவ்யா.இப்போ உன்னோட மனசுல என்ன இருந்தாலும் சரி கூடிய சீக்கிரமே அந்த நினைப்பு உன்னை விட்டு போகும்என்று அறுதியிட்டு உரைத்தான் ஆடவன்.

பதில் மட்டுமல்ல அவனின் முகமும் திண்ணத்தை உரைத்தது. அவனிடம் பேசி இனி பயனில்லை எத்தனை விதமாய் சொன்னாலும் அவன் பதில் ஒன்று தான் என்று எண்ணியவள் வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றுவிட

அவளின் அமைதியான பார்வையும், அவனுக்கு மட்டும் புலப்படும் ஆற்றாமை நிறைந்த கோபமும், பிடிக்கவில்லை என்று உரைக்கும் போதெல்லாம் அவனுக்குள் அவள் மீது ஏற்படும் பிடித்தமும் வரையறை இன்றி இதழில் புன்னகையை மேலும் மேலும் துளிர்விக்க, அவள் பின்னோடு சென்றான் ஜீவானந்தம்.

பிரகாரத்தை சுற்றி வருவதற்குள் பேச வேண்டியதை பேசி முடித்திருந்தனர் பெரியவர்கள். இருவரின் சம்மத்திற்காக காத்துக்கொண்டிருக்க, வேகமாக வந்த திவ்யா அம்பிகாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.முகத்தில் துளியும் கோபத்தை காட்டவில்லை.

அருகில் அமர்ந்த மகளை அமைதியான பார்வையில் பார்த்தவர்என்ன திவ்யா பேசிட்டியா மாப்பிள்ளை என்ன சொல்றாரு உனக்கு சம்மதம் தானே பிடிச்சிருக்கா?” என்று கேட்க,

எனக்குன்னு தனிப்பட்ட விருப்பம் ஏதாவது இருக்கா ம்மா உங்க விரும்பம் தான் என்னோட விருப்பம்என்று வேகமாக வந்து விழுந்த வார்த்தையில் சுருக்கென்று இருந்தது அம்பிகாவிற்கு.

அவளின் மனம் என்னவென அறிந்தும் பிடித்தமா இல்லையா? என்று கேட்டதை எண்ணி வெதும்பியவர் மற்றவர்களின் முன் உணர்வுகளை காட்ட முடியாமல் சங்கடம் நிறைந்த புன்னகையுடன் அமைதியானர்.

மாப்பிள்ளை பெண் இருவரிடமும் சம்மதம் கேட்டு வரும் முகூர்த்தத்தில் திருமணம் அதற்கு முதல் நாள் ஊர்கூட்டி உறவுகளின் முன்னிலையில் நிச்சயம் என நாளும் கிழமையும் குறித்து சம்பந்தி வீட்டினர் ஒருவருக்கொருவர் கையில் சந்தனம் பூசி தாம்பூலம் மாற்றி கொள்ள,

கண் முன்னே நடப்பவைகளை பதுமை போல பார்த்து கொண்டிருந்தாள் திவ்யபாரதி ஏற்றுக்கொள்ள மனமில்லை உதறி தள்ள எண்ணமுமில்லை மனதிற்குள்ளே புழுவாய் துடித்தாள் பெண்ணவள்.

அனைத்தும் நலமாய் முடிந்த மகிழ்ச்சியில் மற்றவர்கள் பேசி கொண்டிருக்க, ஓரமாய் நின்று கல்லில் வடித்த சிலையை வெறித்து கொண்டிருந்த கவிபாரதியை அழைத்தான் ஜீவானந்தம்.

அருகில் வந்தவளிடம்ஒரு போட்டோ மட்டும் எடுத்து கொடுஎன்று அலைபேசியை கையில் திணித்துவிட்டு அவளறியாமல் நமட்டு சிரிப்பை உதிர்த்தபடி திவ்யாவின் அருகில் சென்று நின்றவன், “நல்லா இருக்கணும் அழகா தெரியணும்என்று நிபந்தனை விதித்தான்.

முணங்கி கொண்டே ஒவ்வொரு விதமாய் அலைபேசியில் படம் பிடித்தாள் கவிபாரதி. பிடித்திருந்தது ஆனால் பிடிக்கவில்லை தற்சமயம் கவியின் மனநிலை அது தான் இரண்டுக்கும் நடுவில் மனதோடு அல்லல் பட்டுக்கொண்டிருந்தாள்.

சற்று தூரத்தில் நின்று நடக்கும் நிகழ்வுகளை பார்த்து கொண்டிருந்தவளின் பார்வையில் மட்டுமல்ல இதழிலும் ஆத்மார்த்தமான புன்னகை, அதட்டி அழைக்கும் குரல் கேட்டு விறுவிறுவென கோவிலில் இருந்து சென்றுவிட்டாள் அவனின் நலம்விரும்பி.

எங்க ரெண்டுபேரை எடுத்தது போதும் நீயும் நானும் ஒரு செல்பி எடுத்துக்கலாம்என்றவன் ஒட்டி நின்றவாறு கிளிக் செய்ய

திவ்யாவுக்கு மட்டுமில்லை எனக்கும் உங்களை பிடிக்கலை இன்னொரு முறை இந்த மாதிரி என்னோட அனுமதி இல்லாம போட்டோ எடுக்குற வேலை வேணாம் அப்றம் மாமான்னு கூட பாக்க மாட்டேன்என்று முறைப்பு காட்டி எச்சரித்து விட்டு செல்ல,

பிடிக்கவில்லை என்றுவிட்டு உறவை உறுதி செய்துவிட்டு செல்பவளை பார்க்கும் போது சிரிப்பு தான் எழுந்தது ஜீவாவிற்கு.

சற்று நேரம் இருவீட்டாரும் திருமணத்தை பற்றி பேசிவிட்டு அவரவர் இல்லம் திரும்பினர். உறுதி செய்வது எளிமையாக நடந்துருந்தாலும் மனதுக்கு எந்த வித குறையும் இல்லாமல் நடந்து முடிந்தது இரு வீட்டாருக்கும் நிம்மதியை தருவித்தது. சிவநேசனுக்கும் அம்பிகாவிற்கு இருப்பு கொள்ளவில்லை தேடி பிடித்தாலும் இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்க மாட்டார் என்று பெருமைபட்டு கொண்டனர்

அன்றைய நிகழ்வின் தாக்கத்தில் பூரிப்பில் பூத்து குலுங்கினான் ஜீவானந்தம். அலைபேசியில் எடுத்த புகைப்படங்கள் நினைவில் வர மொபைலை எடுத்து பார்த்தவன் புருவம் சுருக்கினான். திவகாரிடமிருந்து ஐந்திற்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகள் சற்றும் இடைவெளி இல்லாது தொடர்ந்து அழைத்திருந்தான்.

என்னவாக இருக்கும்?, உள்ளே எழுந்த கேள்வியை தெரிந்து கொள்ள திவாகருக்கு அழைப்பு விடுத்தான் ஜீவாந்தனம்.

அழைப்பு ஏற்கப்பட்ட நொடிஎத்தனை முறை உனக்கு கால் பண்றது முக்கியமான விஷயத்தை சொல்ல போன் பண்ணா எங்கடா போய் தொலைஞ்ச“, அடக்கி வைத்த கோபத்தை எல்லாம் அலைபேசி வழியே காட்டினான் திவாகர். கோபம் மட்டுமல்ல பயமும் சேர்ந்து குரலில் இயைந்து ஒலித்தது.

என்னை பேச விட்டு அப்றமா நீ பேசு எடுத்த உடனே பொங்குனா எப்டி? கோவிலுக்குள்ள இருந்தேன் அதனால போனை சைலண்டல போட்டுருந்தேன் கால் அட்டன் பண்ணலைன்னா வாட்ஸ்அப்ல வாய்ஸ் மெசேஜ் அனுப்பிருக்க வேண்டியது தானே இப்டி பொங்க வேண்டிய அவசியமில்லையே“, நிதானமாக பேசினான் ஜீவானந்தம்.

விஷயத்தோட சீரியஸ்னஸ் தெரியாம பேசிட்டு இருக்க ஜீவா!”.

சொன்னா தாண்டா தெரியும் சீரியஸா இல்லையான்னு“, சற்று வேகமாக கேட்க,

ஹெச்ஓடி குணசீலன் காலேஜுக்கு வந்திருந்தாரு பிரின்சிய பாத்து பேசிட்டு போயிருக்காறுடா இன்னும் ஒரு வாரத்துல ரீஜாயின் பண்ண போறாருன்னு டிப்பார்ட்மெண்ட்ல பேசிக்கிறாங்க.

 தேவையில்லாத பிரச்சனை வேணாம்னு சொன்னா கேக்குறியா அந்த ஆள் வந்து என்ன பண்ண போறாறோ தெரியலைஎன்று பயத்தில் குரல் நடுங்க பேசினான் திவகார்.

இதை சொல்றதுக்கு தான் கால் பண்ணியா“, சாவாதினமாக ஜீவா உரைக்க,

எவ்ளோ பெரிய விஷயத்தை சொல்லிருக்கேன் கொஞ்சம் கூட பயமில்லாம பேசுற“. 

தப்பு பண்ணவனே தைரியமா இருக்கும் போது தட்டி கேட்ட நா எதுக்குடா பயப்படணும் அந்த ஆள் எல்லாம் ஒரு விஷயமே இல்லை நல்ல மூட்ல இருக்கேன் அந்த ஆளை பத்தி பேசி கெடுத்துறாத“. 

உனக்கென்ன பிரச்சனை எனக்கு தானே பிரச்சனை ஏன்னா நான் தானே இங்க இருக்கேன் அந்த ஆளை நான் தானே சமாளிச்சு ஆகணும். நீ அடிச்ச அடிக்கு என்னை தான் தண்ணி குடிக்க வைப்பாருஎன்று ஏகத்திற்கும் புலம்பினான் திவாகர்

எதுக்கு சமாளிக்கிற நாலு நாள் லீவ் கேட்டு பேசாம கிளம்பி ஊருக்கு வா துணைமாப்பிள்ளை போஸ்டிங் காலியா இருக்கு உனக்கு தான் கொடுக்கணும்னு உறுதியா இருக்கேன்என்று பூடகமாய் உறுதியானதை தெரிவிக்க,

நா என்ன பேசிட்டு இருக்கேன்என்று வேகமாக பேசியவனின் கோபம் மொத்தமும் நொடியில் அமிழ்த்திட, “டேய்ஜீவா! வாழ்த்துக்கள் டா, என்னைக்கு கல்யாணம் சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸா கொடுக்குற நேத்து பொண்ணு பாத்து இன்னைக்கு உறுதி பண்ணி வர்ற முகூர்த்ததுல கல்யாணம் ம்ம்ம் என்ஜாய்என்று குதூகலமாய் பேச,

போட்டோ அனுப்பிருக்கேன் பாரு எப்டி இருக்கு ஜோடி பொருத்தம்என்று கேட்டான் ஜீவானந்தம்.

குறுஞ்செய்தியில் மிளிர்ந்த புகைப்படத்தை கிளிக் செய்து ஒவ்வொன்றாய் பார்த்து அதற்கு கருத்து தெரிவித்த திவகார் கடைசி புகைப்படத்தில் அடக்கமாட்டமல் சிரித்தான்.

டேய் யாருடா இந்த ஆரியமாலா செஞ்சுரி டிகிரி செல்சியஸ்ல முறைச்சு பாக்குதுஎன்று கேட்க,

அப்போது தான் கவனித்தான் கவியோடு இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை சேர்த்து அனுப்பியதை.

இதையும் சேத்து அனுப்பிட்டேனா பொண்ணுக்கு சிஸ்டர் திவா அக்காவுக்கு தான் என்னை பிடிக்கலைன்னு நினைச்சிட்டு இருந்தா இந்த வாண்டுக்கும் என்னை பிடிக்கலை அதை என்கிட்டயே சொல்றா,

 ரொம்ப நல்ல பொண்ணுடா முன்கோபமும் துடுக்கு தனமும்  தான் இவளோட ப்ளஸ் பாயிண்டே அவ அக்கா மாதிரியே காரணமே இல்லாம என்னை வெறுக்குறா“.

ரொம்ப நல்லதா போச்சு உலகத்துல யாருன்னே தெரியாத ஒருத்தரை வெறுக்குறதுக்கும் நல்ல மனசு வேணும் உனக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு அக்காவை சமாளிக்கிறயோ இல்லையோ முதல இந்த ஆரியமாலாவை சமாதனப்படுத்தி உனக்கு சாதகமா பேச வை அதான் உன்னோட பியூச்சர் லைப்புக்கு நல்லதுஎன்ற திவகார் கவிபாரதியின் புகைப்படத்தை பார்த்து பார்த்து சிரித்தான்.

சமாளிப்பெல்லாம் அப்றம் இருக்கட்டும் நாளைக்கு காலையில நீ இங்க என்கூட இருக்கணும் இப்போ கிளம்பினாலும் சரி நைட்டு கிளம்பினாலும் சரி வரும் போது அம்மா அப்பாவை கூட்டிட்டு வர சரியாஎன்று வேண்டுகோள் விடுக்க

நைட்டு வரைக்கு என்னோட உயிருக்கு இங்க உத்திரவாதம் இல்லை சோ அய்யா இப்பவே லீவ் கேட்டு ஜீட் ஆகுறேன்என்று சற்று நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான் திவகார்.

எச்சரிக்கை நிறைந்த பார்வையோடு குரலை தணித்து அலைபேசியில் உரையாடி கொண்டிருந்தாள் அவள்.

சொல்லும் போதே அத்தனை ஆனந்தம் அவள் முகத்தில்ஜீவா அத்தானை இன்னைக்கு கோவில்ல பாத்தேன் மா ரொம்ப சந்தோஷமா இருந்தாரு அவருக்கு பொண்ணு பாத்துருக்காங்க பொண்ணு ரொம்ப அழகா இருந்தா ஜோடி பொருத்தம் அம்சமா இருந்துச்சு ம்மா,

 அத்தானை அந்த மாதிரி பாத்ததும் எனக்கு சந்தோஷம் தாங்கலை பேசலான்னு தான் இருந்தேன் ஆனாஎன்னைக்கும் இல்லாத திருநாளா உங்க மாப்பிள்ளையும் என்கூட கோவிலுக்கு வந்திருந்தாரு அதான் பேசாம வந்துட்டேன்என்று அந்த வீட்டின் சுவருக்கும் காது கேட்கும் என்பதை போல கோவிலில் பார்த்த நிகழ்வை சந்தோஷமாய் சொல்லி கொண்டிருக்க,

காயத்ரிஎன்று திடீரென கேட்ட ஆவேச குரலில் ஆடி தான் போனாள் பேசி கொண்டிருந்தவள்

அலைபேசி அழைப்பை பாதியில் துண்டித்தவளின் பார்வை பயத்தை பிரதிபலிக்க, சர்வமும் அடக்கி விடும் படி அவளை முறைத்து பார்த்து கொண்டிருந்தார் கௌரி.

மணம் வீசும்

Advertisement