Advertisement

நால்வரும் காரில் ஏறி கொள்ள அலைபேசியில் வந்த ஆறு இலக்க எண்ணை கூறியதும் வாகனம் கிளம்பியது.

கரூரில் இருந்து மூன்று மணி நேர பயணத்தில் கோவிலை வந்தடைய, கோவில் வாசலிலேயே அவர்களின் வரவுக்காக காத்திருந்தார் சிவநேசன். காரில் இருந்து இறங்கிய ஜெயசித்ராவை கண்டு வேகமாக அருகில் வந்தவர்,

சீக்கிரம் வாங்க நமக்காக தான் காத்திட்டு இருக்காங்கஎன்று அவசரமாக கூறி உள்ளே அழைத்து செல்ல,

கரூர்ல கோவிலே இல்லாத மாதிரி இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு திவிக்கா அப்பா வேற அவசரமா இவங்க ரெண்டுபேரையும் உள்ள கூட்டிட்டு போறாருஎன்று கன்னத்தில் ஒற்றை விரல் வைத்து யோசனையாய் சொல்ல,

எனக்கு எந்த சந்தேகமும் இல்லை கவி உள்ள வா யார் வந்துருக்காங்க எதுக்கு வந்துருக்கோம்னு தெரியும்என்றுவிட்டு சென்று விட்டாள் திவ்யா.

பொடி வச்சு பேசுறதே எல்லாருக்கும் வேலையா போச்சு இத்தனுண்டு மூளைக்கு தேவையில்லாம வேலை கொடுக்குறாங்க யாருன்னு சொல்லிட்டு போக கூடாதா உள்ள போய் தான் பாக்கணுமா“, அலுத்து கொண்டவள்மயில்வாகனா இந்த கூட்டத்துல இருந்து காப்பாத்துடாஎன்று கடவுளிடம் கோரிக்கை வைத்துவிட்டு உள்ளே சென்றாள் கவிபாரதி.

சுற்றிலும் பார்வையை அலைபாய விட்டவளின் கண்களில் தென்பட்டது அவனே. நெற்றியில் சந்தனமும் முகத்தில் அளவில்லா புன்னகையுமாய் நேசமணியிடம் பேசிக்கொண்டே முருகன் சன்னதியில் இருந்து வெளியே வந்தான் ஜீவானந்தம்.

நேசமணியிடம் அவன் இயல்பாய் பேசுவது சற்று உறுத்தினாலும் சிரத்தை கொண்டு ஆராய மனமில்லாமல் ஓரமாய் கருடாழ்வாரின் சிலை அருகே அமர்ந்து பேசி கொண்டிருந்த குடும்பத்து உறுப்பினர்களை பார்த்தாள் கவிபாரதி.

அபிராமியிடம் சிரித்து பேசி கொண்டிருந்த அம்பிகாவையும் ஜெயசித்ராவையும் பார்க்க பார்க்க கோபம் எழுந்தது. யாரிடமும் துடுக்காய் பேசகூடாது என்று கண்டிப்பு காட்டியது நினைவில் வர,

இதுக்கு தான் அந்த கண்டிப்பாஎன்று எண்ணியவள் அதிர்ச்சி நிறைந்த பார்வையில் திவ்யாவை பார்த்தாள்.

இயல்பான சிறு புன்னகையோடு அபிராமியிடம் உரையாடி கொண்டிருந்தவளை பார்க்க அதிர்ச்சி மட்டுமல்ல ஆச்சர்யமும் தான். நேற்று இரவு தன்னிடம் பேசியது என்ன இன்று உறவாடுவது என்ன?, அவளுக்குள் பெரும் குழப்பத்தை உண்டு பண்ண

வீண் குழப்பம் எதற்கு நேரடியாக கேட்டுவிடலாம் என்று திவ்யாவை நாடி சென்றாள் கவிபாரதி. ஆனால் குழப்பத்தை தீர்த்து கொள்ள வாய்ப்பு தான் அமையவில்லை.

பேச வேண்டியதை பேசிறலாம் தானுங்க ண்ணா எதுக்கு வர சொன்னோம்னு சொல்ல வேண்டிய அவசியமில்லை கோவில்ல வச்சு உறுதி பண்ணிக்கலாம்னு தான் வர சொன்னோம்என்று மெதுவாக அபிராமி தொடங்க,

நல்ல காரியத்தை தள்ளி போட வேணாம்னு தோணுது பேசி முடிச்ச கையோட தட்டை மாத்திக்கிட்டா நல்லா இருக்கும்என்றார் ராகேவந்திரன்.

சிவநேசனும் அம்பிகாவும் ஒருவரை ஒருவர் சங்கடத்துடன் பார்த்து கொண்டனர்

என்ன ண்ணா எதுவும் சொல்லாம இருக்கீங்க ஏதாவது பேசுங்கஎன்றார் ஜெயசித்ரா

எல்லாம் சரி தான் ஆனா திவ்யாகிட்ட ஒரு வார்த்தை கேட்கணும் சொல்லாம கூட்டிட்டு வந்துட்டு உறுதி செய்ய போறோம்னு சொன்னா…”என்று தயங்கினார் சிவநேசன்

நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவளுக்கு சிரிப்பு தான் எழுந்தது. திவ்யாவின் பின்னால் வந்து அமர்ந்த கவிபாரதிஅக்காஎன்று கையை சுரண்ட,

திரும்பி பார்த்தவளிடம்உன்கிட்ட பேசணும்என்றாள் மெல்லிய குரலில்.

கவி அமைதியா இருக்க முடியாது இங்க பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது அவகிட்ட என்ன கிசுகிசுப்பு அமைதியா இருஎன்று அடக்கினார் அம்பிகா.

பேச வந்ததை பேசாமல் இருப்பது எரிச்சலை கூட்டஎன்னமா நீங்க இப்டி பண்றிங்கஎன்று அம்பிகாவிடம் மெல்லியகுரலில் சிணுங்கியவள் முகத்தை தூக்கி வைத்து கொண்டு நடப்பதை வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.

திவ்யா நம்ம பொண்ணு அவகிட்ட தனியா கேட்குறதுக்கு என்ன இருக்கு நம்மளா பாத்து முடிவு பண்ணா சரின்னு தான் சொல்லுவா. என்ன திவ்யா நா சொல்றது சரி தானேஎன்று விடைக்கான பதிலை அவரே கூறிவிட்டு அவளிடம் விருப்பத்தை கேட்டார் ஜெயசித்ரா.

அமைதியான பார்வை ஆனால் அதில் ஆயிரம் கேள்விகள் பொதிந்திருந்தது. அவள் பார்வையை எதிர்கொள்ள முடியமால் பார்வையை திரும்பி கொள்ள,

நீங்க எது பண்ணாலும் எனக்கு சம்மதம் தான் அத்தை என்னோட தனிப்பட்ட விருப்பம் முக்கியமில்லைஎன்று தன் மனதை சொல்லாமல் சொல்லிய விதம் ஜெயசித்ராவை வருத்தம் கொள்ள செய்தது.

அப்றம் என்னங்க ண்ணா திவ்யாவே சொல்லிட்டா சம்மதம்னுஎன்று முகத்தில் எல்லையில்லா புன்னகையை சுமந்து கொண்டு பேசிய அபிராமிதரிசனம் பண்ணிட்டு வந்து பேச்சை தொடங்கலாம்என்றிட,அனைவரும் கோவிலின் உள்ளே சென்றனர்

ஜீவா திவ்யா இருவரின் பெயரிலும் அர்ச்சனை செய்து மனதில் எழுந்த பயத்தை விண்ணப்பமாய் கடவுளின் பாதத்தில் கண் மூடி சமர்ப்பித்த அபிராமி ஜீவாவின் அலைபேசி ஒலிப்பதை கேட்டு

போனை ஆஃப் பண்ணு ஜீவா கோவிலுக்குள்ள போன் பேச கூடாதுஎன்றதும் அலைபேசியில் ஒலியை குறைத்து வைத்துவிட்டு தரிசனத்தை தொடர்ந்தான் ஜீவானந்தம்.

மனம் அமைதியிழந்து தவித்தாலும் எதையும் வேண்டி கொள்ள தோன்றவில்லை திவ்யாவிற்கு. சிலையை வெறித்து கொண்டிருந்தவளின் நெற்றியில் குங்குமத்தை வைக்கவும் திடுக்கிட்டு உணர்வு பெற்றவள் என்னவென அம்பிகாவை பார்த்தாள்.

குங்குமம் கொடுத்தாரு நீ வாங்கலை அதான் நானே வச்சுவிட்டேன்என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார் அம்பிகா.

திவ்யா நீயும் மாப்பிள்ளையும் பிரகாரத்தை சுத்திட்டு வாங்கஎன்ற ஜெயசித்ராவை முறைத்து பார்த்தாள் திவ்யபாரதி.

போம்மா கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு வேண்டிக்கிட்டே சுத்திட்டு வாங்க“, அவள் முறைப்பை பொருட்படுத்தமால் அவன் எண்ணத்தை அவர் வாயிலாக வெளிப்படுத்த,

எதுவும் பேசாது அவனோடு செல்ல முயன்றவளைநானும் கூட வறேன்என்று நிறுத்தினாள் கவிபாரதி.

நீ எதுக்கு அங்க அவங்க போகட்டும். நீங்க திவ்யாவை அழைச்சிட்டு போங்க மாப்பிள்ளைஎன்றவர்நீ என்கூட வாஎன்று கைபிடித்து வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார் ஜெயசித்ரா.

கோபுரத்தை பார்த்து கன்னத்தில் போட்டு கொண்டவன்என்ன திவ்யா எதுவும் பேச மாட்டிங்கிறஎன்று பேச்சை தொடங்க

உங்ககிட்ட பேசுறதுக்கு எதுவும் இல்லை அதான் அமைதியா வறேன்என்றாள் பட்டென.

நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்க போகுது வாழ்க்கை முழுமைக்கும் உனக்கு நான் எனக்கு நீன்னு ஒன்னா வாழ போறோம் சோ பேசுறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கும் ஏதாவது என்கிட்ட பகிர்ந்துக்கலாமே உன்னோட விருப்பு வெறுப்புகளை என்கிட்ட சொல்லலாமேஎன்று கேட்டான் ஜீவானந்தம்.

நடையை நிறுத்தி நிதனமான பார்வையில் அவனை ஏறிட்டவள்சொல்ல வேண்டியதை நேத்தே தெளிவா சொல்லிட்டேன் இருந்தும் ஒன்னா வாழணும்னு ஆசைப்படுறீங்க. அர்த்தமில்லாத வாழ்க்கைக்கு அஸ்திவரம் போட நினைக்கிறீங்க. அது மிக பெரிய ஏமாற்றமா இருக்க போகுது,

 எந்த நம்பிக்கையில இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னிங்க எனக்கு புரியலை பிடிக்காத வாழ்க்கை கடைசி வரைக்கும் நிலைக்குமா இல்லை இனிக்க தான் செய்யுமா?”,வலுவான கேள்வியென அவள் நினைத்திருக்க, அசாதரணாமாய் எண்ணி சிரித்தான் ஜீவானந்தம்.

எந்த நம்பிக்கைய இதுவரைக்கும் பிடிமானமா மனசுல சுமந்துட்டு வாழ்ந்திட்டு இருக்கியோ அந்த நம்பிக்கை தான் எனக்கும். காதலுக்கு கட்டமைப்பு தேவையில்லைன்னு நா நினைக்கிறேன் வேணும்னு நீ நினைக்கிற?, 

அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு தெரியாது இருந்தும் என்னால செய்ய முடியும் இன்னும் கொஞ்ச நாள் வாழ முடியும்னு நம்புறோமே அந்த மாதிரி உறுதியான நம்பிக்கை. எதார்த்தத்தை ஏத்துக்க பழகு திவ்யபாரதிஎன்று அசராமல் பதிலுரைத்தான் ஜீவானந்தம்.

அவன் பேச பேச கோபம் தாறுமாறாய் கனன்று உள்ளத்தில் கணைப்பை மூட்டியது.

அர்த்தமில்லாததுன்னு எதுவும் இல்லை திவ்யா இந்த உலகத்துல ஒவ்வொரு செயலுக்கும் செய்வினைக்கும் அர்த்தம் இருக்கு உன்னோட மனசு நிச்சயம் மாறும் திறந்து பாக்காத புத்தகத்துக்கு விமர்சனம் எழுத முடியாது!” என்றான் ஜீவானந்தம் சிறு புன்னகை தவழ.

நீங்க பேசுறதை கேட்டா எனக்கு கோபம் தான் வருது எனக்கும் மனசு இருக்கு அதை ஏன் யாரும் புரிஞ்சிக்க மாட்டிக்கிறீங்க பிடிக்காத ஒன்னை எல்லாரும் சேந்து திணிக்க பாக்குறீங்க இந்த கல்யாணம் மட்டுமில்லை, உங்களையும் எனக்கு பிடிக்கலை உங்க கூட சந்தோஷமா வாழ்வேன்னு மட்டும் நினைக்காதீங்க அது இந்த ஜென்மத்துல நடக்காதுஎன்று கோபத்தை கூட மற்றவர்கள் அறிந்திடாத விதமாய் அமைதியாக வெளிப்படுத்தினாள் திவ்யபாரதி.

Advertisement