Advertisement

பொழுது புலரும் முன்பு நேசமணியை அழைத்து கொண்டு சிவநேசன் ஜாதகம் பார்க்க சென்றிருக்க அங்கே ஜோதிடர் கூறிய செய்தியை ஜீவாவின் வீட்டில் தெரிவித்ததும் கோவிலில் வைத்து மற்றதை பேசி கொள்ளலாம் என்று ராகவேந்திரன் கூறிட

மாப்பிள்ளை வீட்டில் கூறியதை அம்பிகாவிடம் சொல்லி அனைவரும் கிளம்பி இருக்குமாறு சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் சிவநேசன்.

செய்தி வந்ததும் திவ்யா கவி இருவரையும் கிளம்ப சொல்லி விட்டு அம்பிகா ஜெயசித்ரா இருவரும் சற்று நேரத்தில் தயராகி பூஜைக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தனர்.

மதிணி எல்லாம் எடுத்து வச்சிட்டேன் எதுக்கும் ஒரு முறை சரி பாத்துகோங்கஎன்றார் ஜெயசித்ரா மற்றவைகளை சரிபார்த்து கொண்டே.

சரியா தான் இருக்கும் ஜெயா இந்த திவ்யா கிளம்பிட்டாளான்னு போய் பாரு நமக்காக மாப்பிள்ளை வீட்டு காரங்க காத்திட்டு இருக்க போறாங்க அவங்க வந்ததும் எல்லாத்தையும் எடுத்துட்டு அப்டியே கிளம்பணும்என்று அம்பிகா சொல்ல,

இதோ போறேன் மதிணிஎன்றவர் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க, புடவையின் மடிப்பை சரி செய்தவாறே வெளியே வந்தாள் திவ்யபாரதி.

மதிணிஎன்று அம்பிகாவின் தோளில் தட்டியவரின் முகத்தில் வியப்பின் ரேகைகள் சம்மணமிட்டு அமர்ந்திருந்தன.

திவ்யா கிளம்பி வந்த கோலத்தை பார்த்ததும் அம்பிகாவிற்கும் ஆச்சர்யம் தான். நேற்று வரை சோகத்தின் பிடியில் வாழ்வே மாயம் என்பது போல அமர்ந்திருந்தவளின் தீடீர் மாற்றம் அவருக்குள் வியப்பை திணித்தது.

ஜெயசித்ரா அம்பிகா இருவரும் மாறி மாறி பார்வையை பகிர்ந்து கொள்ள

ம்மா நா ரெடி போலாமாஎன்றாள் அம்பிகாவின் முன்னே நின்று.

எங்கம்மா?”.

நீங்க தானே சொன்னிங்க கோவிலுக்கு போகணும் கிளம்பி இருங்கன்னு“.

ஆமா சொன்னேன் ஆனா…” என்று இழுத்தவர் சொல்ல வந்ததை சொல்ல முடியமால் வார்த்தைகளை விழுங்கினார் அம்பிகா.

என்ன ஆனா? கொஞ்ச நேரம் முன்னாடி தான் அப்பா கால் பண்ணாரு அவரும் மாமாவும் நேரா கோவிலுக்கு வந்துடுவாங்களாம் உங்களை கூட்டிட்டு நேரா கோவிலுக்கு வர சொன்னாரு கார் புக் பண்ணிருக்கேன் கொஞ்ச நேரத்துல வந்துரும்என்றவள் இருவரின் முகபாவனையை கண்டு,

ரெண்டுபேரும் எதுக்கு இப்டி முழிக்கிறீங்கஎன்று கேட்டாள் சந்தேகம் கொண்டு.

ஒன்னுமில்லை திவி கண்ணு திடீர்னு நீ இப்டி சொல்லாம பட்டு புடவை கட்டிட்டு வந்து நிக்கவும் ஒரு நிமிஷம் மெய் மறந்து போயிட்டோம் இந்த புடவையில ரொம்ப அழகா இருக்க ஆனா.. இதை நீ கட்டி நா பத்தில்லையேஎன்றார் ஜெயசித்ரா.

ஒரே ஒரு முறை கட்டுனது அத்தை என்னோட பிறந்த நாளுக்கு பார்த்தி மாமா எடுத்து கொடுத்ததுஎன்றதும் திக்கென்றானது இருவருக்கும்

பார்த்தி எடுத்து கொடுத்ததா“, அதிர்வோடு வார்த்தைகள் வந்து விழுந்தன.

திவ்யா நேத்து நைட்டு உன்கிட்ட என்ன சொன்னேன்னு மறந்து போச்சாஎன்று நொடியில் முகத்தில் கடுமையை தேக்கி வைத்து பேசியவர், “இனிமே பார்த்தியோட நினைப்பு மட்டுமில்லை அவனோட பேரை கூட நீ சொல்ல கூடாது உனக்கு வேற ஒருத்தர் கூட கல்யாணம்  நடக்க போகுது அதை மனசுல வச்சுட்டு எதையும் செய். இப்டி தான் இருப்பேன் மாற மாட்டேன்னு அடம்பிடிக்காத அது நல்லா இருக்காதுஎன்றார் ஜெயசித்ரா கண்டன குரலில்.

என்ன சொல்வதென தெரியமால் அம்பிகா முழித்து கொண்டிருக்க,”இப்டி எல்லாத்துக்கும் தடை போடாதீங்க அத்தை பாவம் அவஎன்று திவ்யாவிற்காக பரிந்து பேச அறையில் இருந்து வெளிபட்டாள் கவிபாரதி.

கோபத்தை சுமந்து கொண்டு வேகமாக அவர்களுக்கு அருகில் வந்தவள்அவளுக்கு பிடிக்காத ஒன்னை திணிக்கிறதும் இல்லாம, பார்த்தி மாமாவை மறந்துடு மறந்துடன்னு ஏன் கட்டாயப்படுத்துறீங்க. அவளுக்கு பிடிச்ச மாதிரி இருக்க விடுங்களேன்என்றாள் இளையவள் ஆற்றாமை நிறைந்த குரலில்.

கவி வாய் ரொம்ப நீழுதுஎன்று பல்லை கடித்தபடி அடிக்குரலில் அதட்டிய அம்பிகா, “பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது குறுக்க பேசாதன்னு எத்தனை தடவை சொல்றது எது நல்லது கெட்டதுன்னு எங்களுக்கு தெரியாது பாரு? சொல்ல வந்துட்டா போடி போய் வண்டி வந்துருச்சான்னு பாரு அப்டியே இந்த பூவையும் எடுத்துட்டு போஎன்று கடிந்து கொள்ள,

நல்லவங்களுக்கு காலமே இல்லை எது உனக்கு பொருத்தமா இருக்கும் இருக்காதுன்னு உனக்கு தெரிஞ்சா போதும் மத்தவங்களோட கருத்து கணிப்பு உனக்கு தேவையில்லை, நிஜமாவே இந்த புடவையில நீ ரொம்ப அழகா இருக்க நீ வாக்க நாம போலாம்என்று எதிரே இருந்த இருவரையும் பார்த்து உரைத்து விட்டு திவ்யாவின் கைப்பற்றி அழைத்து சென்றிட,

பாத்தியா ஜெயா எப்டி பேசிட்டு போறான்னு கல்யாணம் முடியட்டும் இவளை கவனிச்சுக்கிறேன்என்று துடுக்காக பேசிவிட்டு செல்பவளை கண்டிக்க முடியமால் கறுவினார் அம்பிகா.

விடுங்க மதிணி புரியாம பேசிட்டு போறாஎன்ற ஜெயசித்ராநீங்க வாங்க போலாம் விட்டுட்டு போனாலும் போயிருவாங்கஎன்று பயமுறுத்த

அதுவும் சரிதான் சின்னவ செஞ்சாலும் செய்வாஎன்று எடுத்து வைத்த பொருட்களை ஆளுக்கொன்றாய் எடுத்து கொண்டு வெளியே வந்தனர்.

வாகனத்தின் வரவை எதிர் நோக்கி தெருவை பார்த்து கொண்டிருந்தாள் திவ்யா.அழகை ஆராதிக்க மாறி மாறி புகைப்படம் எடுத்து அலைபேசியை அலற விட்டு கொண்டிருந்தாள் கவிபாரதி.

இன்னுமா கார் வருது இங்கயே லேட் பண்ணா கோவிலுக்கு நேரத்துக்கு எப்டி போய் சேர முடியும்என்று ஜெயசித்ரா அலுத்து கொள்ள,

மொபைலில் இருந்த கவனத்தை ஜெயசித்ராவின் மீது பதிய வைத்தவள்ஏன் அத்தை சாமிக்கிட்ட அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிருக்க வேண்டியது தானே லேட் ஆனாலும் பரவாயில்லைன்னு தரிசனம் பண்ண அனுமதி கொடுத்திருக்கும்என்று முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு கவிபாரதி பேச,

இளையவளின் பேச்சில் திவ்யாவிற்கு சிரிப்பு பீறிட்டது. வாய் மூடி அடக்கி கொண்டவள்சும்மா இரு கவிஎன்று அடக்கினாள்.

பின்ன என்ன க்கா இவங்க வர  லேட் ஆகிருச்சின்னா சாமி கோவிச்சுக்கிட்டு போயிடும்ன்ற மாதிரி பேசுறாங்க. பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறது தான் கடவுளோட வேலை, நிதானமாவே கோவிலுக்கு போலாம் ஒரு மணிக்கு தானே நடை சாத்துவாங்க இன்னும் நேரம் இருக்குஎன்று வார்த்தைகளை இழுத்து இழுத்து முகத்தை கோணலாக வைத்து கொண்டு பேசினாள் கவிபாரதி.

பிடித்தமில்லை என்றதோடு நிற்காமல் அதை செய்யாதே இதை போடாதே என்று தடைகளை விதித்தில் கோபம் அளவில்லாமல் எட்டி பார்த்தது கவிபாரதிக்கு. மூத்தவள் அடங்கி அமைதியாய் போக அவளுக்கு பதிலாக கவிபாரதி பதில் கொடுத்தாள். இளைய மகளின் பேச்சில் அம்பிகாவிற்கு உள்ளே அளவில்லாமல் கோபம் மூண்டு தகித்து கொண்டிருந்தது, நல்ல காரியத்திற்கு செல்லும் போது வீண் விவாதம் வேண்டாம் என்று கடுப்பை அடக்கி கொண்டு அமைதியாக நிற்க

முறைப்பை முனைப்போடு காட்டி கொண்டிருந்தார் ஜெயசித்ரா. இளம்வயது சொல்லி புரிய வைக்க முடியாது தானே தெரிந்து கொள்ளட்டும் காலமும் நேரமும் ஒன்றாய் வரும் போது பெரியவர்கள் செய்தது சரியென்று தோன்றும் என்று எண்ணி மனதை சமாதானம் செய்து கொண்டார்.

திவ்யா போன் போட்டு கார் எங்க வந்துட்டு இருக்குன்னு கேளு மூணு மணி நேரம் ஆகும் கோவிலுக்கு போய் சேர இங்கயே லேட் பண்ணா எப்டிம்மாஎன்றார் அம்பிகா.முகத்திலும் குரலிலும் அவசரம் நிறைந்திருந்தது அவருக்கு

இதோ பண்றேன்மாஎன்று கைபேசியில் எண்களை தடவ, தெரு வளைவில் கேட்ட ஹாரன் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவள்கார் வந்திடுச்சும்மாஎன்றாள்.

எங்கு செல்கிறோம் எதற்காக செல்கிறோம் யாரை பார்க்க செல்கிறோம் என்பது அறிந்தும் எதுவும் தெரியாதது போலவே இருந்தாள் திவ்யபாரதி.

கவி கல்யாணம் முடியிற வரைக்கும் வாய் கொழுப்பை கட்டு படுத்திக்கோ வீட்டுல பேசுற மாதிரி கோவில்ல யார்கிட்டயும் துடுக்கா திமிரா பேசிறாதா ஓரளவுக்கு தான் பொறுமையா இருப்பேன்என்று எச்சரித்தவர் ஜெயசித்ராவை அழைத்து கொண்டு முன்னால் சென்றுவிட,

என்னை பாத்தா இவங்களுக்கு எப்டி தெரியிது கோவில்ல வர்றவங்க போறவங்ககிட்ட பேசுறதுக்கு நா என்ன பைத்தியமா?” என்று திவ்யாவிடம் புலம்ப,

ஒரு முன்னெச்சரிக்கை தான் விடு கவிஎன்று சமாதானம் செய்து அழைத்து சென்றாள் திவ்யபாரதி.

Advertisement