Advertisement

அந்தி சாயும் வேளை மேற்கே வானம் அந்தகாரம் பூச தொடங்கியிருந்தது. உதிக்கும் ஆதவன் அழகென்றால் மறையும் சூரியன் அழகினும் அழகு. மாடியில் நின்று மாலை நேர மாருதத்தின் இதத்தை உள்வாங்கியபடி இயற்கையின் அழகை ரசித்து கொண்டிருந்தான் ஜீவானந்தம். அன்றைய நாளின் நிகழ்வுகளை அசைபோட்ட உள்ளம் திடீரென திவாகரின் நினைவை எழுப்ப, எண்களை தடவி காதில் வைத்தான்.

“தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை, 

தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை,

தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள் முருக பெருமானை. தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள் முருக பெருமானை.

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்….”

ஏ ஆர் ரமணி அம்மாளின் குரலில் அதிரும் பின்னணி இசையில் இல்லமே தெய்வீகத்தில் மிதக்க, ரேடியோவில் சத்தம் அதிகமாக வைத்து உற்சாகமாக ஆடி கொண்டிருந்தான் திவாகர்.

மாலை நேரமானால் போதும் இல்லம் வந்ததும் ரேடியோவில் பக்தி பாடலை ஒலிக்க விட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் நடனமாடி கொண்டே வேலை செய்வான். அதில் ஒரு சந்தோஷம் அவனுக்கு, அன்றைய நாளின் மனஅழுத்தத்தை எல்லாம் அவன் ஒலிக்க விடும் பாடல்கள் ஈடு செய்து விடும்.

வெங்காயத்தை வெட்டியபடி “உருகி சொல்லுங்கள் முருகனின் பேரை, நெருங்கி செல்லுங்கள் குமரனின் ஊரை” என்று கண்களில் நீர் வடிய பாடி கொண்டிருத்தவனின் கவனத்தை பிரிட்ஜின் மீது வைத்திருந்த அலைபேசி அதிர்ந்து கலைத்தது.

எடுத்து பார்த்தவன் ஜீவாவின் எண்ணை கண்டு ரேடியோவின் சத்தத்தை குறைத்து விட்டு உயிர்ப்பித்து,

“சொல்லுடா மாப்பிள்ளை ஆக போறவனே எல்லாம் சக்சஸ் தானே பொண்ணுக்கு உன்னை பிடிச்சிருச்சா இல்ல சொதப்பலா”, சிரிப்பொலி அளவில்லாமல் ஒலித்தது .

“வாயில வசம்பை வச்சு தேய்க்க நல்ல வார்த்தையே வராதா உனக்கு. நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை, இன்னும் கொஞ்ச நாள்ல புது மாப்பிள்ளை ஆக போறேன்” என்றான் ஜீவா. சொல்லும் போதே அவன் உடலில் ஒரு வித உணர்வு படர்ந்து மேனியை அதிர வைத்தன.

“வாரே வா வாழ்த்துக்கள் மிஸ்டர் விருமாண்டி எப்போ கல்யாணம். தம்பதி சகிதமா எப்போ சென்னைக்கு வராதா பிளான்” என்று அடுத்தகட்ட முடிவுகளை பற்றி கேட்க,

“கல்யாணத்தை முடிச்சிட்டு கையோட திவ்யாவை கூட்டிட்டு வறேன்” என்றான் ஜீவா.

“என்னடா சொல்ற? பொண்ணு பாக்க போறேன்னு தானே சொல்லிட்டு போன தேதிய எப்போடா பிக்ஸ் பண்ணிங்க” என்று அதிர்ச்சி மேலோங்க கேட்டான் திவாகர்.

“பொண்ணு வீட்டுலயே தேதிய பிக்ஸ் பண்ண சொல்லியாச்சு” என்று நடந்த நிகழ்வை விவரித்தான் ஜீவானந்தம்.

நிகழ்வை கேட்டதும் திவாகரிடம் உற்சாகம் மறைந்து போனது “ஜீவா சீரியஸா தான் சொல்றியா நிஜமாவே ஓகே சொல்லிட்டியாடா உனக்கு பொண்ணை பிடிச்சிருக்கா?”, திகைப்புடன் கேட்க, 

“பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ கொடுத்த வாக்க காப்பாத்துறது தான் முக்கியம்”என்றான் பரந்த ஆகாயத்தை பார்வையால் வருடியபடி.

“வாக்குக்காக வாழ்க்கைய அடமானம் வைக்க போறயா? பிடிக்காத பொண்ணு கூட எப்டிடா வாழ முடியும் புரிஞ்சு தான் பேசுறியா?”. 

“இது இன்னைக்கு எடுத்த முடிவு இல்லை திவா வாக்கு கொடுத்த அந்த நிமிஷம் எடுத்த முடிவு கடைசியா என்கிட்ட சொன்ன விஷயத்தை காத்துல பறக்க விட முடியாதுடா. திவ்யாவுக்கு இப்ப என்னை பிடிக்காம போகலாம் ஆனா எதிர்காலத்துல பிடிக்க வாய்ப்புகள் இருக்கு திவா” என்றான் குரலில் திண்ணம் பதித்து.

“என்னைக்கு ஒரே மாதிரியான மனநிலையும் காலநிலையும் இருக்காது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மாற்றங்கள் வர்ற மாதிரி நிச்சயம் திவ்யாவுக்குள்ளயும் மாற்றம் வரும் காதல் வரும் என்னை பிடிச்சிருக்குன்னு அவளே சொல்லுவா” என்றான் ஜீவானந்தம்.

“கேக்குறதுக்கு நல்லா தான் இருக்கு ஆனா அந்த பொண்ணோட மனசு!.அதை நினைச்சு பாத்தியா”, அவன் கூறியதை ஏற்று கொள்ள முடியாமல் மீண்டும் அதையே வேறு விதமாய் தொடங்க,

“ஆழமான காயத்துக்கு மருந்து போட்டா தானே சரியாகும் வலிக்கிது வேணாம்னு அழுதா எப்டியோ போகட்டும்னு விட முடியுமா?. வலியை பாத்தா காயம் ஆறாது காயத்தை பாத்தா வலி தீராது திவா அவளோட காயத்துக்கு நா மருந்தா இருக்கணும்னு ஆசைப்படுறேன். திவ்யாவை எனக்கு பிடிச்சிருக்குடா சத்தியத்துக்காக சொல்லலை உண்மையாவே அவள பாத்த மாத்திரத்தில ரொம்ப பிடிச்சு போச்சு. அவளோட அமைதியான குணம் வெளிப்படையான பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, கல்யாணம் பிடிக்கலைன்னு தானே சொன்னா என்னை பிடிக்கலைன்னு சொல்லலையே”என்றான் இதழில் இளநகை தழுவ,

“என்னமோடா எதையும் யோசிச்சு பண்ணு ஜீவா இது சாதாரண விஷயமில்லை பொண்ணோட மனசு சம்பந்தப்பட்டது. கொஞ்சம் பிசிறுனாலும் மொத்தமும் போச்சு” என்றான் திவாகர், எச்சரிக்கை மிகுந்த குரலில்.

“அதை நா பாத்துகிறேன் நீ என்ன பண்ற நாலு நாள் லீவ் கேட்டு ஊருக்கு வர” என்றான் கட்டளையாய்.

“நாலு நாளா அவ்ளோ நாள் எதுக்குடா, கல்யாணத்துக்கு முதல் நாள் நைட்டு வந்தா போதாது” என்றான் ஜீவாவை சீண்டும் விதமாய்.

“கொன்னுருவேன் ராஸ்கல் என்னோட அடி எப்டி இருக்கும்னு தெரியும்ல” என்று அலைபேசியிலேயே போலியாய் மிரட்டியவன் “கல்யாண தேதிய சொல்றேன் வரும் போது அம்மா அப்பாவையும் கூட்டிட்டு வா”.

“சரி என்னைக்கு கல்யாணம் அதை சொல்லாம வா வான்னா இப்பவே கிளம்பி வந்துறவா” என்று வேகமாக பேச,

“நாளைக்கு கோவிலுக்கு வர சொல்லிருக்காங்க கல்யாணத்தை பத்தி பேச, கலந்து பேசிட்டு சொல்றேன். இப்போதைக்கு யார்கிட்டயும் எதுவும் சொல்ல வேணாம் கல்யாணத்தை முடிச்சிட்டு வந்து நானே சொல்லிக்கிறேன்”. 

“ஏண்டா?”.

“எல்லாம் ஒரு காரணமா தான். நீ வேலைய பாரு நா போனை வைக்கிறேன்” என்று காரணத்தை கூறாமல் அழைப்பை துண்டித்துவிட,

சொல்ல வேண்டாம் என்றதற்கான காரணம் தெரியமால் குழம்பி போனான் திவகார். அழைப்பை ஏற்கும் முன்பு இருந்த மனநிலை முற்றிலும் மாறிட, 

“அமைதியான மனநிலையே போச்சு, இவன்கிட்ட பேசுனாலே இப்டி தான் புரியாத மாதிரி பேசி பைத்தியம் ஆக்கிருவான் மறுபடியும் மைண்ட ரிலாக்ஸ் பண்ணும். முதலை பாட்டை கேட்போம் அப்றம் விஷயம் என்னனு கேட்போம்” என்று குழப்பத்தில் ஆழ்ந்த மூளையை சலவை செய்ய, சற்று நேரம் உமையாக்கிய ரேடியோவை மீண்டும் ஒலியெழுப்ப செய்து வேலையை தொடர்ந்தான் திவகார்.

பெண் பார்த்துவிட்டு சென்றதில் இருந்து பித்து பிடித்தவள் போல அறையில் முடங்கி கிடந்தாள் திவ்யபாரதி.உடலை குறுக்கி கால்களை மடக்கி இலக்கற்று வெறித்து கொண்டிருந்தவளின் உள்ளத்தில் அவனும் அவளும் பேசி கொண்டது மட்டுமே உறவாடி கொண்டிருந்தது.

“பார்த்திபன் கனவுன்னா என்னனு தெரியுமா பாரதி”,மந்தகசமாய் புன்னகைத்தபடி அவன் கேட்க,

“ம் தெரியுமே கல்கி எழுதின நாவல் தானே நாலு தடவை படிச்சிருக்கேன்” என விழி விரித்து அவள் சொல்ல,

“மக்கு நா கேட்டது பார்த்திபனோட கனவு” என்று தலையில் சன்னமாய் கொட்டு வைத்தான்.

“நீங்க கேக்கிறது எனக்கு சரியா விளங்களை மாமா பார்த்திபன் கனவுன்னா அதானே…”என்று யோசனையில் முகம் சுருக்கினாள் திவ்யபாரதி.

“அறிவு சுடரே இந்த பார்த்திபனோட கனவை கேட்டேன்” என்று தன்னை சுட்டி காட்டியவன் “நீ தான் பாரதி” என்று விழிகளை ஊடுருவிய அவன் பார்வையில் சொக்கி தான் போனாள் திவ்யபாரதி.

“பொய் சொல்லாதீங்க மாமா”, வெட்கம் அளவில்லாமல் படர்ந்தது அவளிடத்தில்.

“காதல்ல பொய்க்கு அர்த்தம் உண்மைன்னு தெரியாத பாரதி” என்று அவளை மேலும் சிவக்க வைக்க,

“போதும் பேசினது என்ன விஷயமா என்னை பாக்கணும்னு சொன்னிங்க அதை சொல்லுங்க” என்று பேச்சை திசை திருப்ப,

“நாளைக்கு ஊருக்கு கிளம்புறேன் பாரதி” என்றதும் அனிச்சம் பூவாய் முகம் வாடி நொடியில் விழியில் நீர் கோர்த்திட்டது திவ்யாவிற்கு.

“எனக்கும் கஷ்டமா தான் இருக்கு அதுக்காக வேலைக்கு போகாம இங்கயே இருக்க முடியுமா? அதுவும் என்னோட முயற்சியில கிடைச்ச வேலை அது எந்த அளவுக்கு எனக்கு பிடிக்கும்னு உனக்கு தெரியும் தானே பாரதி” என்று வேலையின் மீது அவனுக்கு இருக்கும் ஈர்ப்பை பற்றி கூறினான் பார்த்திபன்.

“தெரியும் மாமா இருந்தாலும் மனசு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு இதுக்கு தான் பாக்கணும் பேசனும்னு சொன்னியா, சொல்லாம கிளம்பி போக வேண்டியது தானே” என்று விசும்ப தொடங்கியவளின் கையைபற்றி கொண்டான்.

“ப்ச் லூசு உன்கிட்ட சொல்லாம போனா என்னால நிம்மதியா வேலை பாக்க முடியாது அப்டியே போனாலும் துப்பாக்கி பிடிச்சிட்டு உன்னை தான் நினைசிட்டு இருப்பேனே தவிர சரியா டியூட்டிய பாக்க மாட்டேன். நீ சந்தோஷமா அனுப்பி வச்சா தானே நா அங்க நிம்மதியா வேலை பாக்க முடியும்” என்று அவள் தலையை செல்லமாய் அழுத்தினான்.

“சும்மாவே என்னை ரொம்ப டிஸ்டப் பண்ணுவ இப்போ கல்யாணம் வேற பேசி முடிச்சாச்சு ரொம்ப கஷ்டம் உன்னை நினைக்காம இருக்குறது. சோ நா ஒரு யோசனை பண்ணிருக்கேன்” என்று மறைத்து வைத்திருந்த ரோஜா செடியை அவள் முன் நீட்டி,

“நா வர்ற வரைக்கும் இதை பத்திரமா பாத்துக்கோ என்னோட நினைவா உனக்கு நா கொடுக்குற பரிசு” என்று தும்பை நிற பற்களை காட்டினான் பார்த்திபன்.

“எனக்கு பிடிச்ச பன்னீர் ரோஜா” என்று அளவில்லா புன்னகை அவள் முகத்தை நிறைக்க, வாங்கி கொண்டவள் “நிச்சயம் நீங்க வர்ற வரைக்கும் இதை பத்திரமா பாத்துப்பேன்”.

“அதுமட்டுமில்லை இன்னொரு கண்டிஷனும் இருக்கு இதுல பூக்குற ஒவ்வொரு பூவுமே எனக்கு ஸ்பெஷல் பாரதி, ஒவ்வொரு நாளும் இதுல பூக்குற பூக்களை போட்டோ எடுத்து எனக்கு அனுப்பனும்”. 

“ஏன்?”.

“ஏன்னா நீ எந்த அளவுக்கு சந்தோஷமா இருக்கின்றதை நா பாக்க வேணாமா?” என்று அவள் தலையில் செல்லமாய் முட்டினான்.

“நிச்சயம் செய்யிறேன் மாமா” என்றவளின் புன்னகையை பார்த்து மகிழ்ந்தவன்,

“சரி நா கிளம்புறேன் பாரதி நேரமாச்சு நைட்டு பிளைட்டு இப்பவே பேக் பண்ணா தான் சீக்கிரம் கிளம்பி போக முடியும் டெல்லி போயிட்டு உனக்கு கால் பண்றேன் எப்பவும் இயல்பா இரு” என்று விடைபெற்று கிளம்பியவனின் கையை சட்டென பற்றி கொள்ள,

என்னவென திரும்பி பார்த்தவன் “இன்னும் என்னடா?”.

“மறுபடியும் எப்போ வருவிங்க”,விழிகள் பனித்திட கேட்டவள் அழுகையை அடக்க இதழை பற்களின் இடையே அழுத்தியபடி அவன் நெஞ்சில் தலை சாய்த்து கொண்டாள்.

விசும்பல் ஒலி சன்னமாய் கேட்டது அவளிடத்தில் “அங்க போன பிறகு தான் தெரியும் பாரதி கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்டு சொல்றேன்னு சொல்லிருக்காங்க அதை வச்சு தான் லீவ் அப்ளே பண்ண முடியும். சோ எப்ப வருவேன்னு சொல்ல முடியாதுடா அதே நேரம் இங்க யார்கிட்டயும் சொல்லாம கிளம்பி வந்தாலும் வந்துருவேன்” என்றவன் நெஞ்சில் சாய்ந்தவளை நிமிர்த்தி கண்ணீரை துடைத்து விட்டு,

“சீக்கிரம் தேதிய பிக்ஸ் பண்ண சொல்லு சீக்கிரம் வந்துடுறேன்” என்று கண்சிமிட்டினான் பார்த்திபன்.

“போ மாமா உனக்கு எப்பவுமே விளையாட்டு தான்” என்றவள் “போயிட்டு போன் பண்ணு மறந்துடாத” என்றாள் மனமில்லாமல்.

“உள்ள போயிட்டா கால் பண்ண முடியாது அங்க போய் ரீச் ஆனதும் சொல்றேன் சரியா” என்று நெஞ்சோடு அணைத்து நெற்றியில் அழுத்தமாய் இதழ்பதித்து பிரிய மனமில்லாமல் திரும்பி பார்த்தபடியே சென்றான்.

சந்தோஷத்தை ஏந்தியடி சென்றவன் மணமாலை சூட வருவான் மாங்கல்யம் பூட்டுவான் என்று எண்ணியிருந்தவளுக்கு இறுதியில் அவன் சடலமே இல்லம் வந்து சேர்ந்தது.

இறுதியாய் அவன் இதழ் பதித்து  விடைபெற்ற தருணத்தை நினைத்தவளின் நெஞ்சு விம்மியது.நினைவின் பாரம் தாளாமல் அழுகை வெடிக்க சத்தமிட்டு அழ முடியாமல் மௌனமாய் கண்ணீர் வடித்தபடி படுத்து கிடந்தாள் திவ்யா.

அறைக்குள் நுழைந்த கவிபாரதி அருகே சென்று “அக்கா” என்று விளித்தாள்.

அசைவற்று கிடந்தவளின் கோலம் கண்ணீரை பெருக செய்ய, “முதல எந்திரிச்சு உக்காரு இப்டி இருக்காதா க்கா எப்பவும் போல தைரியமா இரு எதுக்கும் சோர்ந்து போகாத எனக்கு கஷ்டமா இருக்கு” என்று எழுப்பி அமர வைத்தாள்.

“எல்லாம் முடிஞ்சது கவி இனி யோசிக்க எதுவுமே இல்லை அவ்ளோ தான் இனி எதுவும் செய்ய முடியாதுல கல்யாணம் பேசி முடிக்க போறாங்க”என்று கண்ணீர் வடித்தபடி தன் போக்கில் பிதற்றினாள் திவ்யா.

“இல்லை க்கா எதுவும் முடியலை இன்னும் நேரம் இருக்கு நல்ல முடிவா எடு யாரை பத்தியும் யோசனை பண்ணாத இது உன்னோட வாழ்க்கை உனக்கு பிடிச்ச மாதிரி இரு க்கா” என்றாள் கவிபாரதி, சொல்லும் போதே குரல் கரகரத்தது.

“இனி யோசிக்க எதுவும் இல்லை கவி விதி வழி போறது தான் என்னோட தலையெழுத்து மத்தவங்க சந்தோஷமா இருக்கணும்னா என்னை நானே தியாகம் பண்ணி தான் ஆகணும் வீட்டுல எல்லாரும் எவ்ளோ சந்தோஷமா இருக்காங்கன்னு பாதில்லை” என்று கண்களை துடைத்து கொண்டாள். தான் அழுதாள் உடன் கவியும் அழுவாளே என்று அழுகையை அடக்கி கொள்ள,

“நீ சந்தோஷமா இல்லையே க்கா உன்னோட சந்தோஷம் தானே முக்கியம் வாழ போறவ நீ. பிடிக்காத ஒருத்தர் கூட எப்டி க்கா வாழ முடியும்? அது ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தை அனுபவிக்கிற மாதிரி இருக்காது”. 

“என்னோட சந்தோஷம் எப்பவோ என்னை விட்டு போயிருச்சு இனி போறதுக்கு எதுவும் இல்லை கவிம்மா துக்கம் எனக்கு புதுசில்லை இதையும் ஏத்துக்க பழகிக்றேன். ஏதோ ஒரு வாழ்க்கை குடும்பத்துக்காக வாழ போறேன். பொண்ணா பிறந்துட்டேனே சுயநலமா யோசிச்சி குடும்பத்தை உதறி தள்ளிட்டு போக முடியலை கவிம்மா” என்று விரக்தியான புன்னகை சிந்தினாள் திவ்யா.

“படிக்கிறதா இருந்தா படி நா கொஞ்ச நேரம் வெளிய நடந்துட்டு வறேன்” என்றதும்,

“மழை வர மாதிரி இருக்கு க்கா” என்றாள் கவிபாரதி.

“மழைபட்டு கரைஞ்சிட மாட்டா உன்னோட அக்கா இப்ப நா  இருக்கிற மனநிலைக்கு மழை தான் மருந்து” என்று எதுகை மோனை பேசியவள் அலைபேசியை எடுத்து கொண்டு எழுந்து வெளியே சென்றுவிட, அவள் உருவம் மறையும் வரை பார்த்து கொண்டிருந்தவளின் விழிகள் திரையிட்டு சென்றவளின் உருவத்தை மறைத்தன.

செலவில்லாமல் வரும் வரவை போல மாருத்ததோடு இயைந்து மண்வசனையும் வர, சிலிர்த்த உடலை கை அணைத்து கட்டுப்படுத்தியவள் தாமரை குளத்தின் அருகே சென்று அமர்ந்து கொண்டாள் திவ்யபாரதி. 

அவள் வெளியே செல்வதை பார்த்து பின்னோடு வந்த ஜெயசித்ரா “என்ன கண்ணு இங்க வந்து உக்காந்துட்ட அதுவும் தனியா. மழை வர மாதிரி இருக்கு எந்திரிச்சு உள்ள வா” என்று அழைக்க,

“கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்னு தோணுது நீங்க போங்க மழை வந்தா எந்திரிச்சு உள்ள வறேன் கரைஞ்சு காணாம போயிற மாட்டேன்” என்று ஒரு வித விலகல் தன்மையோடு பேசிவிட்டு தாமரை குளத்தில் கவனத்தை பதித்தாள் திவ்யபாரதி.

முன்பு போல ஒட்டுதல் இல்லாத அவளின் பேச்சு சற்று வருத்தத்தை அளித்தாலும் எல்லாம் அவள் நன்மைக்கே என்று எண்ணி மனதை தேற்றி கொண்டவர் “என்மேல கோபமா” என்று கேட்டு அவள் அருகே அமர்ந்தார் ஜெயசித்ரா.

“இல்லை அத்தை” என்று முகம் பாராமல் பதில் உரைக்க,

“வெளிய காட்ட முடியாத கோபம் அப்டி தானே பொண்ணு பாக்க வர சொல்லிட்டு கல்யாணத்தை பேசி முடிச்சிட்டாங்களேன்ற கோபம். நீ என்ன நினைக்கிறன்றதை எங்களால புரிஞ்சிக்க முடியிது திவிம்மா ஆனா எதார்த்தம்னு ஒன்னு இருக்குல்ல” என்று அவளுக்கு புரிய வைக்க முயன்றார் ஜெயசித்ரா.

“எதார்த்தம் எனக்கு வேணாம் அத்தை பார்த்திபனோட நினைவுகள் எனக்கு போதும்னு தான் சொல்றேன் அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டிக்கிறீங்க இது எனக்கான வாழ்க்கை இல்லை. உங்களுக்காக நா வாழ போற வாழ்க்கை, நல்லதுன்னு நினைச்சு நீங்க செய்யிற காரியம் நிச்சயம் எனக்கு சந்தோஷத்தை கொடுக்காது” என்றாள் திவ்யா.

அவளின் விளக்கம் கேட்டு நொடியில் இளக்கம் மறைந்திட, “இனி உன்னோட நினைப்புல பார்த்திபன் இருக்க கூடாது திவ்யா இனி ஜீவா தான் உனக்கு எல்லாமே. நம்ம கலாசாரம் என்னனு உனக்கு நா சொல்லி தெரிய வைக்க வேண்டியதில்லை படிச்ச பொண்ணு புரிஞ்சு நடந்த்துக்கோ” கண்டிப்பு கலந்து பேசியவர்,

“பார்த்திபன் இப்போ இந்த உலகத்துல இல்லை ஆனா அவனோட ஆத்மா சந்தோஷப்படும் உனக்கு கல்யாண நடக்க போகுது உனக்குன்னு ஒரு குடும்பம் அமைய போகுதுன்றதை பாத்து அவனோட ஆத்ம நிச்சயம் சந்தோஷப்படும் அதை என்னால உறுதியா சொல்ல முடியும் திவிம்மா” என்றார் உறுதியான குரலில்.

சலனமின்றி ஜெயசித்ராவை வெறித்தவளின் இதழ்கள் இகழ்ச்சியாய் வளைந்தது.

விரும்பியவனை மறந்து வேறொருவனை நினைவில் ஏற்றி கொள்வதா மனம் என்ன மந்திர கோலா? மறந்துவிடு என்றதும் சட்டென அழிந்து போக, காற்றில் கரையும் கற்பூரமல்ல என்காதல் என்பதை  இவர்களுக்கு எப்படி சொல்லி புரியவைப்பேன் மனதோடு மருகினாள். 

விருப்பங்கள் எல்லாம் அடிபட்டு போவதை எண்ணி பார்க்கையில் தொண்டைக்கும் உணவு குழாய்க்கும் இடையே அடைப்பது போல உணர்ந்தாள் திவ்யா. 

“புரிஞ்சு நடந்துக்கோ திவிம்மா ரொம்ப யோசனை பண்ணாத” என்றவர் “மழை வர மாதிரி இருக்கு எந்திரிச்சு உள்ள வா வாடை காத்து உடம்புக்கு ஆகாது” என்று கூறிவிட்டு சென்றுவிட,

அனுமதியின்றி கன்னத்தில் உறவாடிய நீர் துளியை துடைக்க மனமில்லாமல் இடுக்கில் சிக்கிய எலியை போல அடுத்தடுத்து நடக்க போகும் நிகழ்வுகளில் இருந்து தப்பும் வழி தெரியாது தவிப்பில் ஆழ்ந்தாள் திவ்யபாரதி.

வாசம் வீசும்…

Advertisement