Advertisement

எல்லாம் சரி தான் இதையே மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க கிட்ட சொல்ல முடியுமா? சொன்னா நம்மள பத்தி என்ன நினைப்பாங்க. எந்த இடத்துல எப்டி இருக்கணும்னு ஒரு வரைமுறை இருக்கு திவ்யா. மிஞ்சி போனா ரெண்டு மணி நேரம் தானே? அவங்க பாத்துட்டு போற வரைக்கும் அத்தை கொடுத்த புடவைய கட்டி நகைய போட்டுக்கோ கண்ணு, அத்தைக்காகஎன்று கண்கள் சுருக்கி இறைஞ்சும் விதமாய் கேட்க,

அவளிடத்தில் நிந்தனை நிறைந்த புன்னகை தோன்றி மறைந்தது. இன்னும் முகம் அறியாத, பேசி கொள்ளாத ஒருவரை பற்றி எண்ணுபவர்கள் தன்னை பற்றி சிறு துளியேனும் எண்ணவில்லையே என்ற ஆதங்கம் நெஞ்சை நிறைக்க,

சரி அத்தைஎன்றவள், பேச போகும் விஷயத்தை நினைத்து தன்னை தானே சமன்படுத்தி கொண்டாள்.

என் ராஜாத்திஎன்று கன்னம் வருடி திருஷ்டி கழித்தவர்நீ கிளம்பி இரு கண்ணு நா கவிக்கிட்ட பூ கொடுத்து அனுப்புறேன்என்று சென்றுவிட,

வரைந்த ஓவியத்தை மீண்டும் மைத்தீட்டி சீர் செய்வதை போல, உடுத்திய ஆடையை கலைத்து, மனம் ஒப்பவில்லை என்றாலும் எடுத்து வைத்திருந்த மயில் கழுத்து நிறத்தில், வெள்ளி ஜரிகைகள் இழையோடிய புடவையை உடுத்தி கொண்டு, நகையை அணிந்து பதுமை போல அமர்ந்து கொண்டாள் திவ்யபாரதி

இரவு அத்தனை ஜாம்பமாய் திவ்யாவிடம் பேசிவிட்டு முதல் ஆளாய் தன்னை அலங்கரித்து கொண்டு வந்து நின்றாள் கவிபாரதி.

ஏய் கவிஎன்று அவசர நடையுடன் அவள் அருகே வந்த ஜெயசித்ரா, “இந்தா அக்காகிட்ட இந்த பூவை கொடுத்து வச்சிக்க சொல்லு, சாமி படத்துக்கு போட்டுட்டேன். பூ மொத்தமும் அவளுக்கு தான்என்று நெருக்கி கட்டிய மல்லிகை சரத்தை கையில் திணிக்க,

மல்லிகையை கண்டதும் குளிர்ந்த மனம் திவ்யாவிற்கு என்றதும் முகம் கூம்பி போனது.

அவளுக்கு மட்டுமா இவ்ளோ பூ அப்போ எனக்குஎன்று சிணுங்க,

அவகிட்ட கொடுத்துட்டு வந்து வச்சுக்கோ இன்னைக்கு அவளுக்கு மட்டும் தான் மல்லி. உனக்கு முல்லை பூ எடுத்து வச்சுருக்கேன்என்று கூறிவிட்டு சென்று விட்டார் ஜெயசித்ரா.

ஆசையாய் முகர்ந்து பார்த்தவள் மல்லியின் வாசத்தை ஏகமாய் உள்ளிழுத்து அனுபவித்தாள். மல்லிகை என்றால் அத்தனை பிரியம் கவிபாரதிக்கு, வீட்டின் பின்னால் இருக்கும் மல்லிகை பந்தலில் பூக்கும் மலர்கள் அத்தனையும் அவள் கூந்தலில் தான் தினமும் இடம் பெரும். முல்லை என்றதும் முகம் சுருங்கி போக இன்று ஒரு நாள் தானே என்று மனதை தேற்றி கொண்டு அறைக்கு சென்றாள் கவிபாரதி.

கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க,

அக்கா உனக்கு பூ, எல்லாமே உனக்கு தானாம் அத்தை சொன்னாங்கஎன்று திவ்யாவின் தலையில் வைக்க போக,

இவ்ளோ எதுக்கு எனக்கு கொஞ்சம் போதும் கவி மீதிய நீ வச்சுக்கோஎன்று திவ்யா தடுத்து நிறுத்த,

ம்ஹும் அத்தை திட்டுவாங்க இன்னைக்கு ஒரு நாள் தானே க்கா, அவங்க வந்துட்டு போறவரைக்கும். அப்றம் நீ சொல்ல வேண்டியதை சொல்லிட்டா உன்னோட இஷ்டம் போல இருக்கலாம்என்றவள் இரண்டாய்  மடித்து அழகாய் வைத்து விட்டாள்

அழகா இருக்க க்கா எனக்கே பொறாமையா இருக்குஎன்று கன்னம் வருடியவள் கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருக்க,

வாசலில் வந்து நின்ற காரின் ஹாரன் சத்தமும் சிவநேசனின்அம்பிகாஎன்ற சத்தமும் இணைந்து, மாப்பிள்ளை வீட்டாரின் வரவை உறுதி செய்தது.

அக்கா அர்னால்ட்டு வந்துட்டாருன்னு நினைக்கிறேன் நீ இரு நா போய் பாத்துட்டு வறேன்என்று அவசரமாக கூறிவிட்டு அறையில் இருந்து வெளியே வந்தாள் கவிபாரதி.

வெள்ளை நிற முழுக்கை சொக்காயும் அதற்கேற்ற அடர் நீல நிறத்திலான கால்சட்டையும் அத்தனை பாந்தமாய் இருந்தது அவனுக்கு. நிமிர்ந்த நடையில்   தேகத்தில் கம்பிரம் கலந்து நடந்து வர, ஒரு நொடி சிலிர்த்து அடங்கிய கவியின் மனம், ‘அக்காவுக்கு ஏத்த மாப்பிள்ளை தான்என மெச்சி கொண்ட அடுத்த நொடி சரிவராது என்பதை தெளிவுபடுத்தி கொண்டது.

உள்ள வாங்கஎன்று அம்பிகாவும் சிவநேசனும் உள்ளன்புடன் அழைத்து வந்து அமர வைத்தனர்.

ஜெயா வந்தவங்களுக்கு தண்ணி கொண்டு வாம்மாஎன்று பணித்தவர்பயணம் எப்டி இருந்தது இங்க வரும் போது எந்த சங்கடமும் இல்லையேஎன்று சிவநேசன் கேட்க,

இல்லைங்க ண்ணா கிளம்பும் போதே நல்ல சகுனம் தான். என்ன சொல்ல எல்லாரும் கிளம்பி தயாரா இருக்கும் போது திடீர்னு பசு மாடு வீட்டுக்குள்ள வந்துருச்சு, லட்சுமி வீட்டுக்குள்ள வந்தா அது நல்ல சகுனம் தானே ண்ணாஎன்று உரிமையுடன் உறவு கொண்டாடிய அபிராமியை அம்பிகாவுக்கும் ஜெயசித்ராவிற்கும் பார்த்த மாத்திரத்தில் பிடித்து போனது.

ரொம்ப சந்தோஷம்என்றவர்இது என்னோட மனைவி, பேரு அம்பிகாஎன்றதும் இரு கைகூப்பி தலை அசைக்க, பதிலுக்கு தலையசைத்து புன்னகையை பரிசளித்தனர் வந்திருந்த மூவரும்.

இது என்னோட தங்கச்சி ஜெயசித்ரா மாப்பிள்ளை வெளிய போயிருக்காரு கொஞ்ச நேரத்துல வந்துடுவாறுஎன்றவர் ஒதுங்கி நின்று வந்தவர்களை ஆராய்ந்து கொண்டிருந்த கவிபாரதியை அழைத்தார்.

இது என்னோட ரெண்டாவது பொண்ணு கவிபாரதி காலேஜ் படிக்கிறாஎன்று அறிமுகம் செய்ய,

சிறு தலையசைப்போடு நிறுத்தி கொண்டவள் ஏதோ மாட மாளிகையை பார்ப்பதை போல அத்தனை சுவாரஸ்யமாய் பார்த்து கொண்டிருந்தவனிடம்அந்த காலத்துல எங்க தாத்தா கட்டின வீடு கொஞ்சம் அப்டி இப்டின்னு இருக்க தான் செய்யும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கஎன்று மிடுக்குடன் கூறிவிட்டு திரும்பி பாராமல் அறைக்குள் சென்று மறைந்து விட,

அங்கிருந்த அத்தனை பேரின் முகமும் கவியின் எதிர்பாராத பேச்சில் திகைப்பை வெளிப்படுத்தியது. அபிராமியும் ராகவேந்திரனும் ஒருவரை ஒருவர் புரியாத புதிராய் பார்த்து கொள்ள, இதழ் கடையில் புன்னகை உறைய அமர்ந்திருந்தான் ஜீவானந்தம். இளைய மகளின் துடுக்கான பேச்சில் சிவநேசன் எதுவும் பேச முடியாது கோபத்தை அடக்கியபடி அமர்ந்திருக்க,

கழுதைக்கு பேச்சை பாத்தியா ஜெயா வர வர சின்னதுக்கு வாய் ரொம்ப கூடிருச்சு இவங்க போனதும் வச்சுக்கிறேன்என்று ரகசிய குரலில் கோபத்தை அடக்கி கொண்டு ஜெயசித்ராவிடம் பேசினார் அம்பிகா.

நீங்க தப்பா எடுத்துக்காதீங்க அவ எப்பவுமே அப்டி தான் யார்கிட்ட என்ன பேசனும்னு தெரியாதுஎன்று சங்கோஜத்துடன் புன்னகை சிந்தினார் சிவநேசன்.

உங்க பொண்ணு சரியா தான் பேசிட்டு போறா மாமா உங்ககிட்ட பேசாம வீட்டை பாத்துட்டு இருந்தா அப்டி தானே பேச முடியும்என்று வாய் மொழி திறந்தவன் அழகாய் புன்னகை சிந்தினான்.

என்னை பத்தின விவரமெல்லாம் உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும் இருந்தாலும் நா சொல்ல வேண்டியதை சொல்லணும் இல்லையாஎன்று அருகில் அமர்ந்திருந்த ராகவேந்திரனையும் அபிராமியையும் பார்த்தான்.

அனுமதி கேட்கும் அவன் பார்வையில் இருவருக்கும் அளவில்லா உவகை பொங்கநீயே சொல்லு ஜீவாஎன்ற அனுமதி கிட்டியதும் தன்னை பற்றிய விவரங்களை சொல்ல தொடங்கினான் ஜீவானந்தம்.

கசப்பான நிகழ்வுகளையும் அதிலிருந்து மீண்டு வந்ததையும், மீண்டு வர உதவியவர்களையும் அபிராமி ராகவேந்திரனை தாய் தந்தையாக ஏற்று கொண்டதையும் இன்று வரை தான் இருக்கும் நிலையை பற்றியும் தன் சுய விவரங்களையும் பற்றியும் இயல்பான புன்சிரிப்புடன் இயம்பி

இறுதியில்என்னை பத்தி யார்கிட்டயோ கேட்டு யாரோ சொல்லி தெரிஞ்சுகிட்டதை விட நானே சொல்லிடுறது பெட்டர் இல்லையா மாமா. கல்யாணம்னு வரும் போது அறிமுகமில்லாம இணையிற உறவுகளுக்குள்ள ஏற்படுற பிணைப்பு உண்மையா இருக்கணும்.

நம்பி பொண்ணை கொடுக்குறவங்களுக்கும் என்னை நம்பி வர்ற பொண்ணுக்கும் என்மேல நம்பிக்கை வரணும், என்னை பத்தின விஷயமெல்லாம் உங்களுக்கு என்மூலமா தெரியபடுத்துனா நல்லா இருக்கும்னு நினைச்சேன் அதனால தான் சொன்னேன்என்றான் ஜீவானந்தம்.

ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளைஎன்று உச்சி குளிர்ந்து போனார் சிவநேசன்.

ஜன்னல் கதவை லேசாக திறந்து செவி இரண்டையும் தீட்டி வைத்தவாறு ஜீவாவின் பேச்சை கேட்டு கொண்டிருந்த  கவிபாரதி

ஸ்டார்டிங் சரியா தான் இருக்கு ஆனா ஃபினிசிங் தான் சொதப்பலா போக போகுது, அது தெரியாம அர்னால்ட்டு பெருமைய அள்ளி விட்டுட்டு இருக்காருஎன்று கேலி பேசி சிரிக்க,

சும்மா இரு கவி முன்னாடி விட்டு பின்னாடி பேச கூடாது அது தப்பு, அவரு இந்த அளவுக்கு தன்னை பத்தின விஷயம் எல்லாத்தையும் சொல்றாருன்னா எந்த அளவுக்கு எதிர்பார்போட இங்க வந்துருப்பாரு ஒருத்தரோடு உணர்ச்சிகளை கேலி பேசி சிரிக்க கூடாதுஎன்று கரிசனம் காட்டினாள் திவ்யா.பாவம் எதிர்கால வாழ்வை பற்றி அறியாமல் அவனுக்கு பரிந்து பேசினாள்.

ஓஹோ.. ஆரம்பிச்சிட்டியா! போதும் க்கா எப்பவுமே இந்த மாதிரி யோசிக்கிறதை விடுஎன்று அலுத்து கொண்டாள் கவிபாரதி.

என்ன தான் மனதில் உள்ளதை சொல்லி விட வேண்டும் என்று துணிவோடு அமர்ந்திருந்தாலும் அவன் மனம் காயம் கொள்ளுமே என்ற எண்ணம் இருமடங்கு திவ்யாவை தயக்கத்தில் ஆழ்த்தியது.

அரவிந்த்சாமி மாதிரி அம்சமா தான் இருக்காரு ஆனா.. உனக்கு தான் ஒத்து வராது க்கா, பாவம் அர்னால்ட்டு ஏமற்றத்தோட போக போறாருஎன்று அவனை பற்றி கவலை கொண்டவள், வெளியே நடக்கும் உரையாடலை உன்னிப்பாக கவனித்தாள்.  

எல்லாம் தெரிஞ்சுகிட்டு தானே பொண்ணு பாக்கவே வர சொன்னேன். ஜெயா உங்களை பத்தி நிறைய சொல்லிருக்கா மாப்பிள்ளைஎன்று சிவநேசன் பெருமையாய் சொல்லி கொண்டிருக்க,வேலையை முடித்து கொண்டு நேசமணியும் விரைவாகவே வீடு வந்து சேர்ந்தார்.

உள்ளே நுழைந்தவர் அமர்ந்திருந்த மூவரையும் பார்த்தபடிவந்துட்டாங்களா மாமாஎன்றவாறே சிவநேசனின் அருகில் அமர்ந்து,

சின்ன வேலையா சொசைட்டி வரைக்கும் போயிருந்தேன்என்று தாமதத்திற்கான காரணத்தை விளக்கினார்.

Advertisement