Advertisement

அதிகாலை உறக்கம் கலைந்து எழுந்தவளின் நினைவில் பெண் பார்க்கும் படலமே ஊஞ்சலாடியது. ஒரு பக்கம் சோர்வு அவளை அவதிபடுத்த, அதை வீழ்த்தும் விதமாய் கவியின் தெம்பூட்டிய பேச்சு சற்று தெளிவையும் நம்பிக்கையையும் அளித்தது. படுக்கையை விட்டு எழுந்தவள் செய்ய வேண்டிய கடமைகளை செய்துவிட்டு முகம் துடைத்தவாறே வெளியே வர,

இந்தா கண்ணு காஃபிஎன்று புன்னகையை சுமந்து கொண்டு அவள் எதிரே வந்து நின்றார் ஜெயசித்ரா.

அளவில்லா புன்னகை என்பதை விட இழப்பை சீர் செய்யும் ஆவல் கலந்த ஆத்மார்த்தமான புன்னகை என்றே திவ்யாவிற்கு தெரிந்தது. பார்த்திபனின் இழப்பிற்கு பிறகு, இத்தனை சந்தோஷமாய் ஜெயசித்ரா இருந்து பார்த்ததில்லை திவ்யா. அவரின் புன்னகையை காண தெவிட்டவில்லை என்றாலும் எண்ணியது ஈடேற போவதில்லையே என்ற சிறு வருத்தமும் கணநொடியில் தோன்றி மறைந்தது அவளிடத்தில். பாவம் பார்த்தால் பலனை அடைய முடியுமா என்ன?.

ஆறிட போகுது சூடு இருக்கும் போதே குடிச்சிறு கண்ணு, குடிச்சிட்டு சீக்கிரம் குளிச்சிறு, பயத்தம் பருப்பு பொடி எடுத்து வச்சுருக்கேன். இன்னைக்கு தலைக்கு தண்ணி ஊத்தி குளி கைவலிச்சதுன்னா சொல்லு அத்தை வந்து தேச்சு விடுறேன்என்று அக்கறையை அளவில்லாமல் காட்டி பேச,

திகைப்பின் சுவடு மாறாமல் பார்த்து கொண்டிருந்தாள் திவ்யாவின் பின்னோடு எழுந்து வந்த கவிப்பாரதி. எதனால் இந்த அதீத கவனிப்பு என்று திவ்யாவிற்கு தெரியும் இருந்தும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை சரியென்று தலையாட்டினாள் மென்மையான புன்னகையுடன்.

விழிகள் விரிய வியப்பை காட்டி விழித்து கொண்டிருந்தவளின் புறம் திரும்பிஏய் நீ என்னடி அப்டி பாத்துட்டு நிக்கிற காஃபி ஊத்தி வச்சுருக்கேன் வந்து எடுத்துக்கோ“, கவிபரதியிடம் அதட்டலாய் கூறியவர்

திவி கண்ணு சீக்கிரம் கிளம்பி இருடா இருக்குறதுலேயே நல்ல புடவையா எடுத்து கொடுக்குறேன் அதை கட்டிக்கோ, நா எங்க அந்த மாதிரி புடவைய கட்ட போறேன் எல்லாம் உனக்கு தான்என்று இதமாய் கூறிவிட்டு சென்று விட,

திவ்யாவின் அருகில் வந்த கவிபாரதி, “என்னக்கா இது, இவங்க இருக்குற வேகத்தை பாத்தா இன்னைக்கே உன்னை பேக்கப் பண்ணி அனுப்பிடுவங்க போலயேஎன்று வாயில் விரல் வைத்து பயத்தை காட்டினாள்.

அவளிடம் இதமான பார்வை செலுத்திஇன்னும் கொஞ்ச நேரத்துக்கு தானே இந்த பரபரப்பான சந்தோஷம் அனுபவிக்கட்டும்என்று மென்னகை மாறாமல் கூறியவள் டம்ளரில் இருந்த திரவத்தை உறிஞ்சி, வெற்று டம்ளரை கவியின் கையில் திணித்து விட்டு அறைக்குள் சென்று மறைந்து கொண்டாள் திவ்யா.

வர வர இந்த வீட்டுல இருக்குறவங்களுக்கு எப்டி மரியாதை கொடுக்கணும்னே தெரியாம போச்சு எல்லாரையும் பாத்துக்கிறேன்“, கையில் திணித்துவிட்டு சென்ற டம்ளரை பார்த்தபடி தனக்கு தானே வீரமாய் பேசிக்கொண்டவள் அடுக்களைக்குள் நுழைந்தாள் கவிபாரதி.

வாணலியில் எதையோ கிளறி கொண்டிருந்த அம்பிகாவிடம்ம்மா அத்தை காஃபி ஊத்தி வச்சுருக்கேன்னு சொன்னாங்கஎன்று சலுகையாய் தோளில் சாய்ந்து கொள்ள,

நீ வர்ற வரைக்கும் சூடு தாங்காதுன்னு நானே குடிச்சுட்டேன் கவிம்மா எனக்கு வேலை இருக்கு நீயே சூடு பண்ணி குடிஎன்றார் செய்யும் வேலையில் கவனத்தை செலுத்தியவாறு.

ப்ச் என்னம்மா நீங்கஎன்று சோர்வு காட்டி பேசியவள், “வேலையோட வேலையா நீங்களே சூடு பண்ணி கொடுங்களேன். நா சூடு பண்ணா காஃபி நல்லா இருக்காதுஎன்று சிறு சிணுங்கலோடு, வெட்டி வைத்த கேரட் துண்டை வாயில் போட்டு கொண்டாள் கவிபாரதி.

எந்த வேலையும் செஞ்சுறாத இப்டியே போற வீட்டுலயும் அதிகாரம் பண்ணு நல்லா அரவணைச்சுபாங்கஎன்றவாறே அடுப்பில் பால் பாத்திரத்தை வைக்க,

கோவிச்சுக்காதீங்க ம்மா உங்ககிட்ட தானே உரிமையா கேட்க முடியும்என்று கன்னம் பிடித்து கொஞ்ச,

போடிஎன்று கையை தட்டிவிட்டவர்அம்மாவோட பிரோவுல நகை இருக்கும் அதை எடுத்துட்டு போய் அக்காகிட்ட போட்டுக்க சொல்லி கொடு, மாப்பிளை வீட்டுக்காரங்க வரதுக்குள்ள கிளம்பி இருக்கணும்என்றார்.

ஏன் பொண்ணு வேணும்னு கேட்டு வர்றவங்க வெய்ட் பண்ண மாட்டங்களா?”, துடுக்காக பேச,

வாய் ரொம்ப நீழுது கவிஎன்று முறைப்பு காட்டியவர்சொன்னதை மட்டும் செய்என்றார் அதிகாரமாய்.

ப்ச் நடக்காத விஷயத்துக்கு எதுக்கு ம்மா இவ்ளோ பகுமானம்என்று சலித்து கொள்ள,

என்னடி சொல்ற? எது நடக்காது! அபசகுணமா பேசாதா கவி“,அம்பிகாவிடம் சிறு அதிர்வு கலந்த கோபம் தென்பட்டது.

தன் உளறு வாய் தனத்தை எண்ணி நாக்கை கடித்தவள்அது.. அது.. வந்து ஹான், அக்கா என்னைக்கு நகை போட்டுருக்கா அதை தான் சொன்னேன்என்று சமாளிக்க,

மத்த நாள் சரி இன்னைக்கு அப்டியெல்லாம் இருக்க கூடாது போ, எடுத்து அவளுக்கு போட்டுவிடுஎன்றதும் காஃபியை மறந்து, விட்டால் போதுமென சென்றுவிட்டாள் கவிபாரதி.

சற்று நேரத்தில் ஈர கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு வெளியே வந்த திவ்யா, கண்ணாடி டேபிள் மீது இடம்பெற்றிருந்த ஆடை ஆபரணங்களின் மீது இடுங்கிய பார்வை செலுத்தினாள்

திவ்யாவின் பார்வையை உணர்ந்து கொண்டாளோ என்னவோ அவள் கேட்கும் முன்னே,”இதெல்லாம் போட்டுக்க சொல்லி அம்மா கொடுத்து விட்டாங்க க்கா, இந்த புடவைய கட்டிக்க சொல்லி அத்தை கொடுத்தனுப்புனாங்க சீக்கிரம் கிளம்பி இருப்பீங்களாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர நேரமாச்சாம்“, பாடமாய் ஒப்பித்தவள் அவள் மனம் அறிந்து அமைதியாக வெளியேறினாள்.

கோபம் வேகம் எதையும் காட்டாது ஈர கூந்தலை துவட்டி சற்று நிமிடத்தில் ட்ரையர் கொண்டு காயவைத்து கொண்டையிட்டு கொண்டவள் அவளுக்கு பிடித்த விதமாய் தயராக தொடங்கினாள் திவ்யா.

திவ்யாவின் சம்மதம் கிடைத்த அந்த நேரத்தில் இருந்தே ஜெயசித்ராவை கையில் பிடிக்க முடியவில்லை, நேசமணியிடம் சொல்லி சொல்லி அகமகிழ்ந்து போனார். திருமணத்தை எந்தவித தடங்கலும் இல்லாமல் நடத்தி முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கணவன் மனைவி இருவரிடத்திலும் அளவற்று நிறைந்திருந்தது.

மதிணி கிளம்பிட்டிங்களா நேரமாச்சு மாப்பிள்ளை வீட்டுலருந்து அப்பவே கிளம்பிட்டாங்கஎன்று குரலில் அவசரத்தை காட்டியபடி, பூஜை அறைக்குள் நுழைந்தார் ஜெயசித்ரா.

சாமி படங்களுக்கு அம்பிகா பூ வைத்து கொண்டிருக்க, “இதை நா பாத்துகிறேன் நீங்க போய் திவிய பாருங்க, கிளம்பிட்டாளா என்னனு தெரியலைஎன்று மரிக்கொழுந்தின் இடையே சேர்த்து கட்டியிருந்த செவ்வரளி சரத்தை வாங்கி கொள்ள,

நீ தான் அவளுக்கு சரிபட்டு வருவ ஜெயா நகைய போட்டுக்க சொல்லி கொடுத்தேன் என்ன பண்ணிருக்கா எப்டி கிளம்பிருக்கான்னு தெரியலை, கல்யாணம் முடியிர வரைக்கும் அவளுக்கு நீ தான் எல்லாமேஇதை நா பாத்துகிறேன் அவங்க வரதுக்குள்ள அவளை ரெடி பண்ணு,

உங்க அண்ணே வந்தா காலுல வெந்நீ ஊத்துன மாட்டுக்க குதிப்பாகஎன்று பேசிக்கொண்டே ஒவ்வொரு படத்திலும் பூவை வைத்தவர், விளக்கில் எண்ணெய் ஊற்றி திரியை தூண்டிவிட்டு தீபம் ஏற்ற,

அம்பிகாஎன்று குரல் கொடுத்தவாறே உள்ளே நுழைந்தார் சிவநேசன்.

சொல்லலைஎன்பதை போல பார்த்தவர்போய் என்னனு பாரு பூஜையை முடிச்சிட்டு வறேன்என்று கூற,

பூஜை அறையில் இருந்து வெளியே வந்த ஜெயசித்ராஎன்ன ண்ணாஎன்று கேட்க,

இந்தா கண்ணு சொன்னதெல்லாம் வாங்கியாச்சு சரியா இருக்கான்னு பாத்துக்கோங்க. முதல தண்ணி கொண்டு வா”  என்று உடலை சாய்வு நாற்காலியில் சாய்த்து கொண்டார் சிவநேசன்.

வெளியே சென்று வந்ததின் களைப்பை அவர் முகத்தில் தெரிய,”இந்தாங்க ண்ணாஎன்று தண்ணீர் சொம்பை நீட்டினார் ஜெயசித்ரா

வாங்கி குடித்துவிட்டு செம்பை ஓரமாய் வைத்தவர்திவ்யா கிளம்பிட்டாளாம்மா மாப்பிள்ளை வீட்டுகாரங்க பக்கத்துல வந்துட்டாங்க எல்லாம் தயாரா இருக்கு தானே?”.

எல்லாம் ரெடி பண்ணியாச்சுங்க ண்ணா திவ்யா கிளம்பிருப்பா அவளை பாக்க தான் போனேன் நீங்க கூப்டுட்டிங்க. சரி அவரு எங்க ண்ணா உங்க கூட தானே வந்தாருஎன்று வாசலை பார்த்தபடி கேட்க,

சொசைட்டி ஆபீசரை பாத்துட்டு வறேன்னு போயிருக்கான் கண்ணு கொஞ்ச நேரத்துல வந்துருவான் நீ போய் திவி கிளம்பிட்டாளான்னு பாருஎன்று பணிக்க,

சரியென்றவர், திவ்யாவின் அறைக்கதவை தட்டினார் ஜெயசித்ரா.

கதவை திறந்தவள்என்ன அத்தைஎன்று கேட்க,

அவள் கோலம் கண்டு திடுக்கிட்டு போனார் ஜெயசித்ரா. “உங்கம்மா சரியா தான் கணிச்சு வச்சுருக்கா, என்னடி இது இப்டி தான் கிளம்பி இருப்பாங்களா?” என்று கோபமாக கேட்டவர், “தள்ளுஎன்று திவ்யாவை விலக்கிவிட்டு உள்ளே செல்ல,

அலுங்காமல் அப்டியே இருந்தது கவியிடம் கொடுதனுப்பிய பொருட்கள்.

இதை எதுக்கு கொடுத்துவிட்டேன்னு நினைக்கிற சும்மா வச்சு வேடிக்கை பாக்கவா?, மாப்பிளை விட்டு ஆளுங்க முன்னாடி நல்ல புடவையா கட்டி பாக்க லட்சணமா தெரிய வேணாம்“, கண்டனமாய் வெளிப்பட்டது ஜெயசித்ராவின் குரல்.

இது போதும் அத்தை இதுக்கு என்ன குறைச்சல் சிம்பிளா இருக்கு அவ்ளோ தான், என்னை தானே பாக்க வர்றாங்க நா என்ன நகை போட்டுருக்கேன் எவ்ளோ விலையில் எப்டி புடவை கட்டிருக்கேன்னு பாக்க வரலையே, எப்பவும் போலவே இருந்துக்கிறேன் அத்தை. தெரியாதவங்களுக்காக என்னோட இயல்பை மாத்திக்க எனக்கு விருப்பமில்லை இது தான் எனக்கு சௌகரியமா இருக்குஎன்றாள் திவ்யபாரதி.

Advertisement