Advertisement

நீண்ட நேரமாய் யோசனை செய்தவாறு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் ராகவேந்திரன். யோசனை தான் ஆனால் அதை செயல்படுத்தும் வழி தான் தெரியவில்லை, மனதில் தோன்றுவதை ஜீவாவிடம் சொன்னால் நிச்சயம் கோபம் கொள்வான் ஆனால்.. என்பதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை அவரால் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்க, மனம் தளர்ந்தார்.

அவர் செயலை புரியாமல் பார்த்து கொண்டிருந்த அபிராமிஎன்னாச்சு உங்களுக்கு ஒரு இடத்துல உக்காந்து யோசனை பண்ண வேண்டியது தானே இப்டி நடந்துகிட்டே இருந்தா கால் வலிக்க போகுது. தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு அப்டியென்ன தீவிரமா யோசனை பண்ணிட்டு இருக்கீங்க சொன்னா நானும் யோசிப்பேன்லஎன்று கேட்க,

ஆயசமாய் மனைவியின் அருகில் அமர்ந்தவர்ப்ச் ஜீவாவுக்கு பொண்ணு பாக்க போற விஷயம் அவனோட அம்மாவுக்கு தெரியாது தெரிஞ்சா என்ன பிரச்சனை பண்ணுவாளோன்னு பயமா இருக்குஎன்றார் கவலை இயைந்த குரலில்.

அதுவரை அமைதியாய் கேட்டு கொண்டிருந்தவர் ஜீவாவின் அம்மா என்ற சொல்லில் ஆவேசம் பொங்க,சட்டென எழுந்து கொள்ள, ஏன் இத்தனை வேகம் என புரியாமல் ராகவேந்திரனும் சட்டென எழுந்து கொண்டார்.

என்ன சொன்னிங்க அவனோட அம்மாவா? பிள்ளைய பெத்துட்டா அவ அம்மா ஆகிடுவாளா?” என்று பொங்கியவர், “தங்கச்சி பாசம் இன்னும் உங்க மனசுல ஒட்டிக்கிட்டு இருக்கோ அதான் ரொம்ப கவலைபடுறீங்கஎன்றார் ஏளனமாக.

வேறு ஏதோ யோசனையில் சாதாரணமாய் வெளியிட்ட வார்த்தையை அப்போது தான் உணர்ந்தார் ராகவேந்திரன்.

இது நாள் வரை தன் பிள்ளையாக பாவித்து வளர்ந்தவளுக்கு தாய் என்னும் ஸ்தானத்தை விடுத்து பெற்றபிள்ளை என்றும் பாராமல் வேறு ஒரு துணையுடன் தனக்கொரு வாழ்வை அமைத்து கொண்டவளுக்கு தாய் என்னும் பட்டத்தை அளித்தால் கோபம் வராமல் போகுமா என்ன?.

உங்களுக்கு பல தடவை சொல்லிருக்கேன் அவனுக்கு நான் தான் அம்மா நா மட்டும் தான்னு. அடிக்கடி அதை மறந்து போயிடுறீங்க இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்என்று விழிகள் சிவக்க எச்சரித்தவர் கோபத்தை தணிக்க தண்ணீரை எடுத்து மண்டினார்.

இம்மெனும் முன் கோபம் கொள்பவர் அல்ல அபிராமி. பெற்ற பிள்ளையினிடத்தில் கூட அத்தனை சிரத்தை காட்டாதவர் ஜீவாவின் விஷயத்தில் மட்டும் தனக்கு சரி என்றால் சரி இல்லை என்றால் இல்லை தான். முதன் முதலாகஅம்மாஎன்று செவ்விதழால் அழைத்து சேலை முந்தானையை பிடித்தவனை, அணைகட்டிய விழிகளுடன் அணைத்து கொண்டவர் தனக்கென பிள்ளை வந்த பின்னரும் இன்று வரை அவனிடம் வைத்த அன்பின் தன்மையை மாற்றவில்லை. ஜீவா என்றால் அத்தனை பிரியம் அவருக்கு. அது ராகவேந்திரனுக்குமே தெரியும் இருந்தும் கவனியாமல் வெளியிட்ட வார்த்தையினால் அபிராமியின் மனம் காயம் கொண்டதை நினைத்து வருத்தம் கொண்டார்.

தன் பேசியதை நினைத்து தன்னையே நொந்து கொண்டவர்மன்னிச்சிறு அபிராமி வேற ஏதோ நினைப்புல கவனிக்காம சொல்லிட்டேன். நீ ஜீவாவை எப்டி பாத்துகிட்ட இப்ப வரைக்கும் எப்டி பாத்துக்கிறேன்னு எனக்கு தெரியாதா?. அவன் நம்ம பையன் தான் நமக்கு மட்டும் தான் சொந்தம். தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சிறுஎன்று சமாதானம் செய்தபடியே மன்னிப்பு கோர,

இதே வார்த்தைய வேற யாராவது சொல்லிருந்தா கூட கண்டுக்காம வந்துருப்பேன் ஆனா நீங்க!” என்றவரின் குரல் முழுதும் கூறி முடிக்கும் முன்னே கமறியது.

குளம் கட்டிய விழிகளை சேலை தலைப்பால் துடைத்து கொண்டே, “அவனுக்கு அம்மாவா நா நடந்துகலைன்னு உங்க நினைப்புல இருக்க போய் தானே இப்டி ஒரு வார்த்தைய சொன்னிங்க. அம்போன்னு விட்டுட்டு போனவளை அவனுக்கு அம்மான்னு சொல்றிங்க அப்ப ஆதரிச்ச எனக்கு என்ன பேர் சொல்லுங்கஎன்று வலுவாய் கேள்வியை தொடுத்தார் அபிராமி.

ப்ச் நான் தான் சொல்றேனே கவனிக்காம சொல்லிட்டேன்னு, மன்னிச்சிறு அபிராமி உன்னை தவிர வேற யாராலையும் ஜீவாவை அக்கறையா பாத்துருக்க முடியாது, அவன் மேல எந்த அளவுக்கு பாசம் வச்சுருக்கேன்னு எனக்கு தெரியாதா.

நா ஒரு கூமுட்டை என்ன பேசுறோம் எப்டி பேசுறோம்னு தெரியாமா எதையாவது உளறி கொட்டிடுறேன், இத்தனை வருஷம் என்கூட தானே இருக்க என்னை பத்தி உனக்கு தெரியாதா?”, சாமர்த்தியமாய் பேச்சை திசை திருப்பினார்.

முப்பது வருஷம் ஆக போகுது உங்கள கைபிடிச்சி, புரிச்சிக்க முயற்சி பண்றேன் பண்றேன் இப்ப வரைக்கும் முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன் முழுசா புரிஞ்சிகிட்ட பாடில்லை, யாரும் யாரையும் அத்தனை சுலபமா புரிஞ்சு வச்சுக்க முடியாதுஎன்று கேலியாய் பேசினாலும், கோபம் அவரிடம் தொக்கி கொண்டு தான் இருந்தது.

மனைவியின் பேச்சில் மெலிதாய் புன்னகைத்தவர்எப்டி அபி கோபத்தை கூட அழகா வெளிப்படுத்துற பாத்துட்டே இருக்கலாம் போலஎன்று கன்னம் பிடித்து கொஞ்ச,

பிடித்து வைத்த கோபம் மொத்தமும் கரையேறி கடந்திருந்தது கணவனின் கொஞ்சலில்

போதும் கொஞ்சினது பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாட்டனாம் அப்டி இருக்கு நீங்க பண்றது இந்த வயசுல என்ன கொஞ்சல் வேண்டி இருக்குஎன்று எழுந்த சிரிப்பை மனதோடு அடக்கி கொண்டவர், சலிப்பாய் கூறிவிட்டு எழுந்து கொள்ள,

கொஞ்சலுக்கு என்ன வயசு வேண்டி இருக்கு அபிஎன்று அட்டகாசமாய் சிரித்தார் ராகவேந்திரன்.

அவரின் சிரிப்பலையில் வெட்கம் மிளிரஉங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியுமா!, எனக்கு வேலை இருக்கு சித்து வர்ற நேரம், வந்ததும் சாப்பிட ஏதாவது இருக்கான்னு தான் கேட்பான்என்று சமையலறைக்குள் சென்று மறைந்து கொண்டார் அபிராமி.

காதலுக்கு வயதேது. மூப்பில் மலரும் காதல் கள்ளமில்லாத மழலையின் சிரிப்பை போன்றது.அன்பும் அனுசரணை மட்டுமே அங்கு நிறைந்து வழியும்.

எழுந்து அவர் பின்னோடு சென்ற ராகவேந்திரன்சரி ஜீவா எப்ப வறேன்னு எதுவும் சொன்னானா நாளைக்கு என்னென்ன வாங்கணும், அதை பத்தி இப்ப வரைக்கும் எதுவுமே சொல்லலை“.

பொண்ணு பாக்க தானங்க போறோம் அதனால பூ பழம் மட்டும் வாங்கினா போதும் அதை நாளைக்கு வாங்கிகலாம் இப்போ அவன் எங்க இருக்கான்னு கேளுங்கஎன்றார் செய்யும் வேலையில் கவனத்தை செலுத்தியபடி.

ஜீவாவின் எண்ணிற்கு தொடர்பு கொண்ட ரகாவேந்திரன் அழைப்பு ஏற்கப்பட்டதும்எங்கடா இருக்க ஜீவா பஸ் ஏறிட்டியா இல்லையா இங்க ஒரே புலம்பல் நீ எப்ப வருவ எப்ப வருவன்னு கேட்டு நச்சரிக்கிறா உன்னோட பெரியம்மா சமாளிக்க முடியலைடாஎன்று அலைபேசி வழியே அவனை பேச விடமால் அபிராமியிடம் பார்வை செலுத்தியவாறே நொந்து கொள்ள

ஹா ஹாஎன்று சத்தமாய் சிரித்தவன்அபிராமிகிட்ட சொல்லுங்க பஸ் கிளம்பிடுச்சு காலையில வந்துருவான்னு, நா வர்ற வரைக்கும் சமாளிங்க பெரியப்பா இத்தனை வருஷம் அதை தானே பண்ணிட்டு இருக்கீங்கஎன்றான் ஜீவாந்தனம் உற்சாகம் நிறைந்த குரலில்.

நேத்து கிளம்புறேன்னு சொன்னவன் இப்போ தான் கிளம்புற எங்களை பாக்கணும்னு எண்ணம் இருக்கா இல்லையாஎன்று அலைபேசியை வாங்கி அபிராமி பேச

நீங்களும் பக்கத்துல தான் இருக்கீங்களா, சாரி பெரியம்மா முடிக்க வேண்டிய வேலை இருந்தது அதான் சொன்ன நேரத்துக்கு வர முடியலை நாளைக்கு காலையில வீட்டுல இருப்பேன்என்று உறுதியாய் சொல்ல,

சரி பொண்ணோட போட்டோவை அனுப்பி வச்சோமே பாத்தியா உனக்கு பிடிச்சிருக்காஎன்று ஆவலை தேக்கி கொண்டு அபிராமி கேட்க, மறுமுனையில் சில நொடி அமைதி நிலவியது.

என்னடா ஜீவா லைன்ல இருக்கியா இல்லையா?”என்று சற்று குரலை உயர்த்தி பேச,

இருக்கேன் பெரியம்மாஎன்றவன்நீங்க அனுப்பின போட்டோவை பாக்கலை பாக்க தோணலை, நேர்ல பாத்துக்கலாம்னு கவரை பிரிக்காம அப்டியே வச்சுட்டேன்என்றான் ஜீவாந்தனம் தயக்கம் இழையோட.

என்னடா போட்டோவை பாத்துட்டு உன்னோட விருப்பத்தை சொல்லுவேன்னு தானே அனுப்பி வச்சேன் பாத்துட்டு பிடிக்கலைன்னா வேற இடம் கூட பாக்கலாம்ல எதுக்கு வெட்டியா அலைஞ்சுக்கிட்டுஎன்றார் அபிராமி, அவர் குரலில் ஏமாற்றம் பலமாய் நிறைந்திருந்தது.

வெறும் போட்டோவை பாத்து லைஃப் பட்னரை டிசைட் பண்ண முடியாது பெரியம்மா, நேர்ல பாத்து பேசின பிறகு தான் ஒரு முடிவுக்கு வர முடியும் நாளைக்கு தான் பொண்ணை பாக்க போறேனே அப்றம் போட்டோ எதுக்குஎன்றவன்நீங்க ஏமாந்த மாதிரி நா ஏமாற மாட்டேன் பெரியம்மாஎன்று கிண்டல் பேச,

வார்த்தையின் உள்ளர்த்தம் உணரவே நேரம் பிடித்தது அபிராமிக்குஎன்னடா சொல்ற நா என்ன ஏமாந்தேன் புரியலைஎன்று அவனிடமே விளக்கம் கேட்க,

போனை ஸ்பீக்கர்ல போடுங்க பெரியப்பாவுக்கு புரியும் அவரே சொல்லுவார்என்றதும் அலைபேசியில் இருந்த ஒலிபெருக்கியை அழுத்திசொல்லுடாஎன்றார் அபிராமி.

வேறு ஏதோ சொல்ல போகிறான் என்று எண்ணியவருக்கு அவன் கூறியதன் அர்த்தம் விளங்க

நா உன்னோட பெரியப்பா ஜீவா கொஞ்சம் பாத்து பேசு இதான் சாக்குன்னு சீக்ரெட்டெல்லாம் வெளிய சொல்லிட்டு இருக்காத பரம்பரை ரகசியம்என்று அவனை போலவே கேலி பேசினார் ராகவேந்திரன்.

சீக்ரெட் லீக் ஆகி பலவருஷம் ஆச்சு பெரியப்பாஎன்று மறுமுனையில் சிரித்தவனின் சிரிப்பொலி இருவரின் மனதையும் நிறைத்தது.

ஏமாற்றம் இல்லை ஜீவா அது ஒரு மாதிரியான அனுபவம், வேற மாதிரி இருக்கும் அந்த பீலிங்க். யாருன்னே தெரியாத ஒருத்தரை மாப்பிள்ளைன்னு அறிமுகபடுத்தி இவர் தான் நம்ம வாழ்க்கை துணைன்னு அந்த நிமிஷத்துல நம்ம மனசு சட்டுன்னு ஒரு முடிவுக்கு வரும் பாரு அது வேற மாதிரியான உணர்வுடா. நேர்ல பாத்திருந்தா சரின்னு சொல்லிருப்பேனான்னு தெரியலை ஆனா இப்போ எனக்கு சொல்ல தெரியலை ஜீவாஎன்றார் ராகவேந்திரனை பார்த்து கொண்டே.

இவர் தான் நீ கட்டிக்க போறவருன்னு காட்டுனங்க சரின்னு கழுத்தை நீட்டுனேன். உங்க பெரியப்பா முகத்தை கூட சரியா பாக்கலை அரக்கு கலர்ல சட்டை போட்டுருந்தாரு, பந்தாவா பேண்ட் மட்டுகிட்டு கழுத்துல சங்கிலி, கையில வாட்ச்சின்னு, ஆளே அம்சமா இருந்தாருஎன்று கண்களில் காதல் ஒழுக கணவனை பார்த்தார் அபிராமி.

வாலிபத்தை வரமாய் பெற்றதை போல உணர்ந்தவருக்கு நெஞ்சில் சில்லென்ற பரவசம். மனைவியின் முகத்தையே இமைக்காமல் பார்த்தார் ராகவேந்திரன்.

சரியா பாக்கலைன்னு சொல்லிட்டு இவ்ளோ சொல்றிங்க இன்னும் ஒரு மாசத்துக்கு பெரியப்பாவை கையில பிடிக்க முடியாது சும்மா வனத்துல பறப்பாருஎன்று கேலி செய்தவன்

நா போனை வைக்கிறேன் நீங்க உங்க வேலைய பாருங்கஎன்று இருவரின் மனநிலையையும் நேரில் இருந்து பார்த்தவன் போல அழைப்பை துண்டித்துவிட்டான் ஜீவா.

இந்தாங்கஎன்று அலைபேசியை நீட்ட,

நீ சொன்னதெல்லாம் நிஜமாஎன்று கேட்டார் ராகவேந்திரன்.மனைவியின் எண்ணத்தை அறியும் ஆவல் அப்பட்டமாய் தென்பட்டது அவரிடத்தில்.

பொய் சொல்ல எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு அன்னைக்கு இல்லை என்னைக்கும் மனசுல உள்ளதை தான் பேசுவேன். உங்களை பிடிச்சது உண்மை தான்என்றவர், “எனக்கு வேலை இருக்கு முதல இடத்தை காலி பண்ணுங்கஎன்றார் அவர் முகத்தை பார்க்காமலே.

இதை கேட்கவே எவ்ளோ தித்திப்பா இருக்கு தெரியுமா ஒரு கிலோ ஜாமுனை ஒரே நேரத்துல சாப்பிட்ட மாதிரி இருக்குஎன்றார் உல்லாச குரலில் ராகவேந்திரன்.

இருக்கும் இருக்கும் சுகர் லெவல் இப்போ தான் கன்ட்ரோல்ல இருக்கு பேச்சுக்கு கூட ஸ்வீட் ஞாபகம் வர கூடாதுஎன்று கண்டிப்புடன் பேச,

நா என்ன சொல்றேன் நீ என்ன பேசுற?, கொஞ்ச நேரம் காதல் பண்ணலாம்னு பாத்தா இப்டி கட்டைய போடுறியே அபிஎன்று செல்லமாய் நொடித்து கொள்ள,

நீங்க காதல் மன்னன் ஜெமினியும் இல்லை நா சாவித்ரியும் இல்லை, உங்க காதல்ல இப்பவரைக்கும் புல்லரிச்சு போய் தான் இருக்கேன்.நேரமாச்சு போய் தூங்குங்க கல்யாணம் பண்ற வயசுல பிள்ளைய வச்சுக்கிட்டு காதல் கேக்குது கிழவனுக்குஎன்று வேண்டுமென்றே இதழ் சுளித்து அலுத்து கொண்டார் அபிராமி

சிரிப்பு வருது ஆனா முன்னாடி காட்டிக்க மாட்டிங்கிற நா போன பிறகு மனசுவிட்டு சத்தமா சிரிச்சுக்கோ இப்போ எனக்கு ஒரு தீர்வை சொல்லுஎன்றதும் புருவங்கள் நெறிய கணவனை பார்த்தார்.

அவனுக்கு வேற ஒரு இடத்துல பொண்ணு பாக்குறதா கேள்விப்பட்டேன் நாம பொண்ணு பாத்து உறுதி செய்ய போற விஷயம் அந்த வீட்டு ஆளுங்களுக்கு தெரிஞ்சதுன்னா என்ன நடக்குமோன்னு பயமா இருக்கு, யாரோ சொல்லி தெரியிறதுக்கு நாமளே சொல்லிட்டா மரியாதையா இருக்கும்என்றார் கவலைபடர்ந்த முகத்துடன்.

Advertisement