Advertisement

சென்னையில் சிறந்த கல்வியை வழங்கும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில், இடம் பெற்றிருக்கும் பிரபலமான கல்லூரிகளில் அதுவும் ஒன்று

அன்றைய காலை வேலையே கலவரத்துடன் தான் தொடங்கியது. வேதியியல் துறையிலில் எழுந்த கூச்சல் சத்தம் கல்லூரி முதல்வர் அறை வரை கேட்டு, என்னவோ ஏதோ என்று கிளம்பி வர, துறை தலைவரின் சட்டையை கொத்தாக பற்றி கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டிருந்தான் ஜீவானந்தம்

அவன் முகத்தில் அத்தனை ரௌத்திரம்

பொறுக்கி ராஸ்கல் வெட்கமா இல்லை இப்டி நடந்துக்க, பொண்ணுங்ககிட்ட தப்பா பிகேவ் பண்ணுவியா பண்ணுவியாஎன்று கேட்டு கொண்டே கண்மண் தெரியமால் அடிகளை வாரி வழங்கி கொண்டிருந்தான் அவன்.

மற்றவர்களோ அவனிடமிருந்து துறை தலைவரை காப்பாற்ற போராடி கொண்டிருக்க

என்ன நடக்குது இங்க உங்க சண்டைய நிறுத்துங்கஎன்று தொண்டை கிழிய கத்தி தன் வரவை அறிவித்தார் கல்லூரி முதல்வர் சதாசிவம்.

கல்லூரி முதல்வரை கண்டதும் மாணவ மாணவிகள் கலைந்து அவரவர் வகுப்பிற்கு சென்றுவிட,

சதாசிவத்தை கண்டதும் ஜீவாவை தவிர மற்றவர்கள் அமைதியாக விலகி நின்று கொண்டனர். அவன் மட்டும் அடிக்கும் அடியை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தான்.

மிஸ்டர் ஜீவானந்தம் என்ன இது. அடிக்கிறதை நிறுத்துங்க முதல அவர் சட்டையில இருந்து கைய எடுங்க டிப்பார்ட்மெண்ட் ஹெச்ஓடி கிட்ட இப்டி தான் ரூடா பிகேவ் பண்ணுவிங்களா?. திவாகர் வாட் இஸ் திஸ் நிறுத்த சொல்லு அவனைஎன்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவனின் மீது காய்ந்தார் சதாசிவம்.

சாரி சார்என்றவன்டேய் ஜீவா அவரை விடுடா செத்துட போறாரு அடிச்சே கொன்னுறாதை விடுடாஎன்று இழுத்து பிடித்து விலக்கி நிறுத்த,

விடு திவா இந்த ஆளை கொல்லாம விட மாட்டேன் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை இவன் பண்ண காரியத்துக்குஎன்று எகிறி கொண்டு திவாகரின் பிடியில் இருந்து திமிறினான் ஜீவானந்தம்.

விஷயம் என்னவென்பதை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட சதாசிவம்ஜீவானந்தம் எதுனாலும் பேசி முடிவெடுக்கலாம் எதுக்கு கோபப்படுறீங்க அவர் பண்ண தப்புக்கு நா உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன் முதல ரிலாக்ஸ் ஆகுங்கஎன்று அமைதிபடுத்த,

எப்டி சார் அமைதியா இருக்க சொல்றிங்க இந்த ஆளு என்ன காரியம் பண்ணாருன்னு தெரியுமா? கிளாஸ் பொண்ணுங்களை யாரும் இல்லாத நேரத்துல டிப்பார்ட்மெண்ட் வர சொல்லி ச்சே, சொல்லவே வாய் கூசுது. பாவம் சார் அந்த பொண்ணுங்க வெளிய சொல்ல முடியாம இத்தனை நாள் இந்த ஆள் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு அவஸ்தை பட்டுட்டு இருந்துருக்காங்கஎன்றான் கொதிப்பின் உச்சகட்டத்தில்.

பார்வையிலேயே எரித்து விடுவதை போல துறை தலைவர் குணசீலனை பார்த்தவன் சுவரில் கையை குத்தி கோபத்தின் அளவை தெரிவிக்க,

ஜீவா நா பேசிக்கிறேன் நீங்க அமைதியா இருங்கஎன்றார் சதாசிவம்.

இதுல பேசுறதுக்கு எதுவும் இல்லை சார் இது ஒன்னும் முதல் தடவை இல்லை. இனிமேலும் இந்த ஆளை இங்க விட்டு வச்சா காலேஜுக்கு தான் அசிங்கம் இப்பவே போலீசுக்கு போன் பண்ணுங்க இல்லை சேர்மனை வர சொல்லி வேலைய விட்டு தூக்குங்க இனி எந்த இடத்துலயும் வேலை பாக்க கூடாது அந்த அளவுக்கு இருக்கணும் உங்க பனிஸ்மெண்ட்என்றான் ஜீவானந்தம்.

டேய் என்ன பேசுற உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்ன பண்ணணுமோ அதை காலேஜ் நிர்வாகம் பாத்துக்கும் நீ வாஎன்று கைபிடித்து இழுத்தான் திவாகர்.

அவனிடம் முறைப்பு காட்டியவன்எதுடா வேண்டாத வேலை, ஒவ்வொருத்தரும் இந்த மாதிரி எனக்கென்னனு கண்டுக்காம போறதால தான் இந்த மாதிரி ஆளுங்களுக்கு துளிர்விட்டு போச்சு. நீ எதுவும் பேசாத மத்தவங்க மாதிரி நீயும் வேடிக்கை பாரு. இங்க வேலையில்லன்னா வேற ஏதாவது ஒரு காலேஜ்ல எனக்கு வேலை கிடைக்கும் அப்டியில்லையா விவசாயம் பண்ணி பிழைச்சுக்குவேன் உடம்புல தெம்பு இருக்கு மனசுல தைரியமும் நேர்மையும் இருக்கு எனக்கென்ன கவலைஎன்றான் நிமிர்வுடன்.

அவனின் நிமிர்வு மட்டுமல்ல கோபம் கூட சில நேரங்களில் சதாசிவத்தை புல்லரிக்க செய்யும். அவனின் பின்புலம் என்னவென்று அக்கல்லூரியில் அறிந்தவர் அவர் மட்டுமே. நியாயமான கோபம் தான் ஆனால் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு முடிவெடுக்க வேண்டும் என்ற யோசனை அவரை சற்று தயங்க வைத்தது.

ஜீவா நா சொல்றதை கொஞ்சம் கோபப்படாம கேளுங்க நிச்சயம் இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும். போலீஸ் கேஸ் வேணாம் காலேஜ் பேர் கெட்டு போயிடும்  நமக்குள்ளேயே பேசி தீர்த்துக்கலாம்என்று சமாதானம் பேசினார் சதாசிவம்.

என்ன சார் டீலிங்கா?” என்று எள்ளலாய் கேட்டவன்போலீஸ் இல்லை சேர்மன் இந்த ரெண்டுல எதுன்னு நீங்களே முடிவு பண்ணுங்க உங்களுக்கு பத்து நிமிஷம் டைம் தரேன்என்று கெடு விதித்து சேரில் அமர்ந்து கொண்டான்.

என்ன முடிவெடுப்பது எப்படி இவனை சமாளித்து தணிய வைப்பது கொத்தாக கொத்தமல்லி தழையை போல மாட்டியதுமில்லாமல் விழிப்பதை பார்என்று மனதில் நொந்து கொண்டவர் முடிவை எடுக்கும் வழி தெரியாது விழிக்க,

என்ன சார் டைம் போய்கிட்டே இருக்கு சட்டுன்னு முடிவெடுங்கஎன்று அவசரப்படுத்தினான்.

என்ன காரியம் பண்ணிருகீங்க குணசீலன் உங்க வயசுக்கு இதெல்லாம் தேவையா வந்தோமா வேலைய பாத்தோமான்னு இல்லாம எதுக்கு இந்த அசிங்கம் உங்களால காலேஜுக்கு கெட்ட பேர் உண்டாகிரும் போலஎன்று துறை தலைவரிடம் கடுகடுத்தார் சதாசிவம்.

சார் நா எந்த தப்பும் பண்ணலை என்னை பேச விடாம நீங்களே பேசி முடிவெடுத்துட்டா எப்டி? நா தப்பா நடந்துக்கிட்டேன்னு மிஸ்டர் ஜீவானந்தம் சொல்றாருல யார்கிட்ட அப்டி நடந்துகிட்டேன் அந்த பொண்ணை வர சொல்லுங்கஎன்று திமிராய் பேச,

சுர்ரென்று எழுந்த கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் பளார் என குணசீலன் கன்னத்தில் அறைந்தான் ஜீவானந்தம்.

டேய்என்று திவாகர் பிடித்து நிறுத்த,

விடுடா தப்பு பண்ணதுமில்லாம எப்டி திமிரா பேசுறான்னு பாரு இவனை இங்கயே கொன்னா தான் என்னோட ஆத்திரம் அடங்கும் விடு திவாஎன்று திமிறி அடிக்க பயந்தான்.

போதும் நிறுத்துங்க ஜீவா. இதுக்கு மேல இதை பத்தி இங்க எதுவும் பேச வேணாம் ரெண்டுபேரும் என்னோட ரூமுக்கு வாங்க திவாகர் நீயும் கூட வாஎன்று உத்தரவாய் கூறிவிட்டு விறுவிறுவென இறங்கி சென்றுவிட்டார் சதாசிவம்.

மற்றவர்கள் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட

முறைச்சு பாத்தது போதும் வாடாஎன்று அழைத்து சென்றான் திவாகர்.

ஒருமணி நேர பேச்சுவார்த்தையில் உள்ளே என்ன நடந்ததோ வேகமாக கதவை திறந்து கொண்டு ஜீவானந்தம் வெளியே வர

பின்னோடு ஓட்டமும் நடையுமாக வந்தவன்டேய் பேசிட்டு இருக்கும் போதே எதுக்கு எந்திரிச்சு வந்த இது தான் உன்னோட மரியாதையா? என்று கேட்க

பொடலங்க மரியாதை போடா ஏதாவது சொல்லிட போறேன் இந்த மாதிரி விஷயத்துல ஆதாரத்தை கமிச்சா தான் ஆக்சன் எடுப்பாங்களா?, கண்ணால பாத்த சாட்சி நா சொல்றேன் நம்ப மாட்டிக்கிறாங்க அந்த ஆள் சொல்றதை நம்புறாங்க உண்மைக்கு எப்பவுமே மதிப்பில்லை அப்டி தானே?” என்றான் ஆத்திரத்துடன்.

ஜீவா உனக்கு தெரியாதது எதுவுமில்லை இங்க நின்னு எதுவும் பேச வேணாம் எல்லாரும் நம்மளை தான் பாக்குறாங்க வாஎன்று கைபிடித்து இழுத்து சென்றவன் அவனுக்கு பிடித்தமான மரத்தடி நிழலில் நிறுத்தினான்.

பச்சை இலைகளை முண்டியடித்து கொண்டு செம்மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக பூத்து குலுங்கிய மலர்களை பார்க்கவே அழகாய் இருந்தது. அதிலும் கீழே உதிர்ந்து கிடந்த மலர்கள் ராஜகம்பளம் விரித்து வரவேற்பதை போன்ற பிரம்மையை தோற்றுவித்தது

அவ்விடத்தின் சூழ்நிலையை ஸ்பரிசித்ததும், எப்போதும் தணிந்து விடும் கோபம் ஏனோ இன்னும் மாறாமல் அதே நிலையில் தான் இருந்தது ஜீவாவிற்கு. கண்ணால் கண்ட காட்சி மீண்டும் மீண்டும் அவன் மனக்கண் முன் தோன்றி கோபத்தை அதிகப்படுத்த,

உடன் இருந்தவனின் மனநிலை உணராமல்சேச்சி ரெண்டு சாயா ஒன்னுல சர்க்கரை கம்மிஎன்று கூறிவிட்டு கல்லூரி கேண்டின் முன்பு இருந்த கல் பெஞ்சில் அமர்ந்தான் திவாகர்.

கோபத்தை சுமந்து கொண்டு நின்றவனின் கைபிடித்துஉக்காருடா எப்ப பாரு விருமாண்டி மாதிரி வீராப்பை சுமந்துகிட்டுஎன்று எரிச்சல் காட்டி பேச,

ம்ப்ச் இங்க எதுக்கு கூட்டிட்டு வந்தபதிலுக்கு சிடுசிடுப்பை காட்டினான் ஜீவா.

எங்க இருந்து தான் உனக்கு மட்டும் இவ்ளோ கோபம் வருதோ ஊன்னா கைய நீட்டிட்டுற, என்னடா பழக்கம் இது. எல்லாரும் எல்லா நேரத்துலயும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க ஜீவா பொறுமையா நடந்துக்க பாரு அந்த ஆள் பண்ணது தப்பு தான் இல்லைன்னு சொல்லலை அதுக்காக அப்டியா போட்டு அடிப்ப மாட்டை அடிக்கிற மாதிரிஎன்று உடல் சிலிர்த்து புல்லரித்தான் திவாகர்.

ஆர்டர் செய்த தேநீருடன் இரண்டு தட்டுகளில் பட்டர் பிஸ்கெட்டையும் வைத்து விட்டு சென்றார் சேச்சி என்று அழைக்கப்படும் சொர்ணம்

தங்க்ஸ் சேச்சிஎன்று நன்றி நவிழ்ந்தவன்ம் சாப்டு காலையில எதுவும் சாப்டுருக்க மாட்டேன்னு தெரியும்என்று அவனுக்கு வைக்கப்பட்ட பிஸ்கெட்டுகளை தேநீரில் அமிழ்த்தி ஒவ்வொன்றாய் உள்ளே தள்ள,

எப்டி இந்த விஷயத்தை உன்னால மட்டும் இவ்ளோ ஈஸியா எடுத்துக்க முடியிது திவா. ஒருவேளை அந்த இடத்துல உன்னோட தங்கச்சி இருந்திருந்தா நீ இப்டி தான் பொறுமையா பேசுவியா?” என்றவனின் வார்த்தையில் தேநீர் டம்ளர் கீழே விழுந்து உருண்டோடியது

வார்தையை பொறுக்க முடியாமல் கொதித்தெழுந்தவன் கொத்தாய் சட்டையை பற்றி,

என்னடா சொன்ன?” என்று உறுத்து விழிக்க,

இதழ் சுளித்து புன்னகை சிந்தியவன்உனக்கு வந்தா ரத்தம் அதே மத்தவங்களுக்குன்னா வேற ஏதோ. அப்டி தானே?” என்று நிதனமாக சற்றும் அலட்டி கொள்ளாமல் கேட்டான் ஜீவானந்தம்.

Advertisement