Advertisement

மங்களகரமான மஞ்சளுக்கு பிரசித்தி பெற்ற ஈரோட்டில்  மாதம் ஒருமுறை நடைபெறும் விவசாய கருத்தரங்க நிகழ்வை கேட்டு கொண்டிருந்தனர் சிவநேசனும் நேசமணியும்.

விளைச்சலுக்கு ஏற்ற விலையை அரசாங்கம் தர வேண்டும். உரிய மானியம் தர வழிவகை செய்ய வேண்டும் ஏதேனும் நோய் தாக்கினால் அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்க தலைவர் எழுச்சியுடன் ஆவேசமாக பேசி கொண்டிருக்க, கண்ணும் கருத்துமாய் கேட்டு கொண்டிருந்த சிவநேசனின் கைபேசி அதிர்ந்தது.

அதிர்வின் தாக்கம் உணர்ந்து இடுப்பில் சொருகி இருந்த கைபேசியை எடுத்தவர் புருவம் இடுங்க சற்று யோசனை செய்து உயிர்ப்பித்து காதில் வைத்தார்.

உடனே வீட்டுக்கு வாங்க திவி விஷயத்துல முடிவு தெரியாம சாப்ட மாட்டேன்னு உங்க தங்கச்சி பிடிவாதமா ரூம்குள்ள போய் கதவை சாத்திக்கிட்டா, ஆப்ரேஷன் பண்ண உடம்பு பயமா இருக்குங்க, சாப்ட்டு நாலு மணி நேரம் கழிச்சு மருந்து குடிக்கணும்என்று பயத்துடன் பேச,

செய்தி கேட்டு விருட்டென எழுந்து கொண்டவர்நா உடனே கிளம்பி வறேன் நீ பயப்படாதா அம்பிகாஎன்று அணைப்பை துண்டித்து மீண்டும் கைபேசியை அதன் இருப்பிடமான இடுப்பில் சொருகினார்.

சிவநேசனின் பேச்சில்என்ன மாமா என்னாச்சு?” என்று பதற்றத்துடன் கேட்டவரை கூட்டத்தில் இருந்து தனியாக அழைத்து வந்தார் சிவநேசன்.

ஆளாளுக்கு அலம்பல் பண்ணிட்டு அலையிறாங்க மனுஷன் நிம்மதியா வேலை பாக்க முடியிதா?” என்று கடுப்பில் புலம்பியவர் விஷயத்தை சொல்ல,

நேசமணிக்கு பயம் அப்பி கொண்டது. ஆகாத வேலை எதற்கு?, இது தான் அந்த காரணமா? முன்பே தெரிந்திருந்தால் எடுத்து சொல்லி புரிய வைத்திருக்கலாமே தன்னையே நொந்து கொண்டவர் தாமதிக்காமல் இருசக்கர வாகனத்தை கிளப்பினார்.

அடிவயிற்றில் உண்டான கட்டி கருப்பையை எடுக்கும் அளவிற்கு விளைவை ஏற்படுத்திட வேறு வழியில்லாமல் கட்டியை அகற்றிய அதே நேரத்தில் கருப்பையும் சேர்த்து அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எத்தனையோ சிகிச்சைகள் அளித்தும் வலியின் தீவிரம் குறையவில்லை என்றதும் சித்த வைத்தியத்தை நாடி செல்ல,

வைத்தியத்தில் சில வழிமுறைகளும் அதை கடைபிடிக்க வேண்டிய முறைகளையும் மருந்து உட்கொள்ளும் நேரம் தவறினால் அல்லது இடையில் நிறுத்தினால் விளைவு வேறு விதமாக மாற கூடும் என்று எச்சரித்திருந்தனர் வைத்தியர்கள்

நேரம் நெருங்க நெருங்க மனம் திக்திக்கென்று அடித்து கொண்டது அம்பிகாவிற்குதேர்வு நாட்கள் என்பதால் வழக்கத்திற்கு முன்பாகவே கல்லூரி முடிந்து இல்லம் வந்த கவிபாரதி வாசலில் தவிப்போடு தள்ளாடி கொண்டிருந்தவரை கண்டு புருவம் சுருக்க,

என்னமா எதுக்கு இப்டி குட்டி போட்ட பூனை மாட்டுக்க நடந்துட்டு இருக்கீங்க ஒரு இடத்துல உக்காந்து யோசிக்க வேண்டியது தானே?”,விஷயம் தெரியமால் எப்போதும் போல கேலியாய் பேச,

போடி நேரம் காலம் தெரியாம கிண்டல் பேசிட்டு. போ போய் டிரெஸ் மாத்திட்டு சாப்பாடு போட்டு சாப்டுஎன்று எரிச்சல் காட்டி பேசியவர்,

எப்போ போன் பண்ணேன் இன்னும் ஆளை காணோம் நேரம் வேற போயிட்டு இருக்குஎன்று வர வேண்டியவர்களை எதிர்பார்த்து, வாசலை பார்த்தபடி புலம்பினார் அம்பிகா.

என்னாச்சு இந்த அம்மாவுக்குஎன்று விளங்காத பார்வை பார்த்தபடி கவிபாரதி உள்ளே சென்றுவிட,

மோட்டார் வாகனத்தின் சத்தம் கேட்டு கால்களில் வேகம் பிறக்க வாசல் வரை விறைந்தார் அம்பிகா.

ஜெயா எங்க இருக்கா இன்னுமா வெளிய வரலை“, கலவரம் நிறைந்து சிவநேசன் கேட்க,

இல்லைங்கஎன்றவர்சொல்லி பாத்துட்டேன் கேட்க மாட்டிங்கிறா?” என்று அம்பிகா அழும் குரலில் சொல்ல,

எங்க அவ, இந்த வயசுல என்ன பிடிவாதம் கேட்குது வேளைக்கு சாப்ட்டோமா இருக்குற வேலைய பாத்துட்டு தூங்குவோமான்னு இல்லாம தேவையில்லாத காரியமெல்லாம் பண்ணிட்டு இருக்காளா? ஒருத்தி பண்றது போதாதாஎன்று சத்தம் போட்டு கொண்டே உள்ளே சென்ற நேசமணி கதவை பலமாய் தட்டினார்.

சில நொடிகள் கழித்தே கதவை திறந்தார் ஜெயசித்ரா. எதிரில் நின்ற கணவனை கண்டதும் வேகம் தணிந்திட,

என்னங்க இப்போ எதுக்கு கதவை உடைக்கிற மாதிரி தட்டிட்டு இருக்கீங்க“, வலியை அடக்கி கொண்டு பேசுவது அப்ட்டமாய் தெரிந்தது அவரிடத்தில்.

மனைவியின் முகத்தை கண்டதும் கனிவு பிறக்க,”ப்ச் என்ன ஜெயா உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை,உடம்பு இருக்குற நிலையில சாப்பிடமா பட்னி கிடந்தா என்ன ஆகும்?. சின்ன பிள்ளை மாதிரி நடந்துகிறயேஎன்று வருத்தம் தேய்ந்த குரலில் பேசினார் நேசமணி.

நினைச்ச வரம் வேணும்னா பல வருஷம் ஆனாலும் தவம் இருக்குறது இல்லை! அது மாதிரி தான் இதுவும். என்னை கட்டாயப்படுத்தாதீங்க ஒன்னு நாம சந்தோஷமா இருக்கணும் இல்லை மத்தவங்களை சந்தோஷப்படுத்தி பாக்கணும் ரெண்டுமே நமக்கு கொடுத்து வைக்களை இனி இந்த உசுரு இருந்தா என்ன போய் சேர்ந்தா என்ன?”, விரக்தியின் உச்சத்தில் ஜெயசித்ரா பேச,

ஜெயா!” என்று துடித்து போனார் நேசமணி.

அனுமதியின்றி கண்ணீர் எட்டி பார்க்க,”பாருங்க மாமா உங்க தங்கச்சி எப்டியெல்லாம் பேசுறான்னு இவ ஒருத்தி தான் எனக்கு துணையா ஆறுதலா இருக்கா இப்போ இவளும் இந்த மாதிரி பேசுனா எப்டி?” என்று அழுதவரை தோளில் சாய்த்து ஆறுதல்படுத்தினார் சிவநேசன்.

என்ன ஜெயா, விவரமா நடந்துபண்ணு நினைச்சா இப்டி சின்ன பிள்ளை மாதிரி நடந்துகிறயே அவளுக்காக உன்னை நீயே எதுக்கு கஷ்டப்படுத்திக்கிற நடக்குறது தான் நடக்கும் நீ வந்து சாப்டுஎன்றார் சிவநேசன்

இல்லைங்க ண்ணா அவ வரட்டும் முடிவு தெரியாம ஒரு வாய் தண்ணி கூட குடிக்க மாட்டேன் இன்னும் எத்தனை நாளைக்கு தான் அவ போக்குலயே விடுறது முடிவு தெரியட்டும் சாப்டுறேன் அவ வர நேரம் தானேஎன்று பிடிவாதமாக மறுத்துவிட,

மருந்து சாப்டணும் அடம் பிடிக்காத. அம்பிகா நீ போய் தட்டுல சாப்பாடு போட்டு கொண்டு வாஎன்று மனைவியிடம் பணிக்க,

விரைந்து சமையலறை சென்றவர் அவசரமாக பாத்திரங்களை துழாவி, சகிக்க முடியாத இறைச்சலை ஏற்படுத்தினார் அம்பிகா.

சத்தம் கேட்டு அறையில் இருந்து வெளிப்பட்ட கவிபாரதி நடப்பவற்றை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, காலடி சத்தம் கேட்டு வாசலை பார்த்தவள்அப்பா அக்கா வந்துட்டாஎன்றாள் கம்மிய குரலில்.

மூவரின் கவனமும் வாசல் புறம் திரும்ப, கண்டு கொள்ளாமல் அறைக்கு செல்ல முயன்றவளை சிவநேசன் கோப குரல் தடுத்து நிறுத்தியது.

இங்க என்ன நடந்துட்டு இருக்கு கண்டுக்காம போறஎன்றவர் ஜெயசித்ராவின் புறம் திரும்பி, “இவளுக்காக நீ சாப்ட மாட்டேன்னு அடம்பிடிக்கிறகொஞ்சமாவது பெரியவங்களை மதிக்கிறாளா? பாருஎன்று கோபத்தை அடக்கி கொண்டு பேசினார்.

அப்போது தான் கவனித்தாள் அனைவரின் முகத்திலும் தெரிந்த கவலையை. அதிலும் ஜெயசித்ராவின் முகம் சோர்ந்து தண்ணீர் பசையற்று இருப்பதை பார்த்து,

அத்தைக்கு என்னாச்சு மாமா ஏன் சாப்பிடலைஎன்று அருகில் வந்தவள்என்ன அத்தை உடம்புக்கு எதுவும் முடியலையா? என்னாச்சு நேத்து பாக்கும் போது நல்லா தானே இருந்திங்கஎன்று நெற்றியை தொட்டு பரிசோதித்தபடி கேட்க,

நேத்து நைட்டுல இருந்து எதுவும் சாப்பிடலை திவி. கேட்டா நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ற வரை இப்டியே பட்னி கிடப்பேன்னு சொல்றா“, சிறு பிள்ளை போல சொல்லி அழுதவரை பார்க்க பாவமாய் இருந்தது திவ்யாவிற்கு.

என்ன அத்தை ஏன் இப்டி பண்றிங்க நான் தான் முடிவை சொல்லிட்டேனே அப்றம் எதுக்கு இந்த மாதிரி பண்ணி என்னோட மனசை மாத்த பாக்குறிங்க? இப்டியெல்லாம் பண்ணா சம்மதம் சொல்லிருவேன்னு நினைக்கிறது தப்பு, என்னால முடியாத காரியத்தை செய்ய சொல்லாதீங்கஎன்று தீர்க்கமாய் சொல்ல,

வேகமாக உணவு தட்டுடன் வந்த அம்பிகாதம்பி இந்தாங்க அவளை சாப்ட வைங்கஎன்று நேசமணியிடம் நீட்டினார்

எனக்கு எதுவும் வேணாம் அவ மனசு மாறுற வரைக்கும் என்னோட முடிவும் மாறாதுஎன்று அழுத்தமாய் சொல்லி ஜெயசித்ராவும் முகத்தை திருப்பி கொள்ள,

ஏன் யாருமே என்னை புரிஞ்சிக்க மாட்டிக்கிறீங்க“, குரலில் வலி நிறைத்து கேட்டாள்.

கல்யாணம் பண்ணிக்கிறது சாதாரண விஷயம் இல்லை, ஆயிரம் காலத்து பயிர்ன்னு சொல்லுவீங்களே அத்தை?. பிடிக்காத விஷயத்தை எப்டி மனசார ஏத்துக்க முடியும்?, காலம் முழுக்க வாழ போறவ நான் என்னை பத்தி கொஞ்சம் யோசிங்களேன்என்று கண்ணீர் வடிய இறைஞ்சினாள் திவ்யா.

முடிவா என்ன சொல்ற கல்யாணம் வேண்டாம். அதானே?” என்று ஜெயசித்ரா கேட்க, அமைதியாக நின்றாள் திவ்யபாரதி.

அவளின் கண்ணீரை கண்டு சற்றும் மனமிறங்காதவர்சரி உன்னோட முடிவுல இருந்து நீ மாற வேணாம் நானும் மாற போறதில்லை, எதுக்குமே கொடுத்து வைக்காத இந்த உசுரு இருந்து என்ன சாதிக்க போகுது போறேன் அவன் போன இடத்துக்கே நானும் போறேன். அவனோட இழப்பை உன் மூலமா சரிகட்டலாம்னு நினைச்சேன் அது நடக்காத போது எதுக்கு சோறு தண்ணிஎன்று குரல் தழுதழுக்க ஜெயசித்ரா பேச,

மகளின் பிடிவாதத்தை மாற்றும் வழி தெரியாது அழுது புலம்ப திடமற்று சோர்ந்த நடையில் சென்று சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டார் சிவநேசன்.

பாப்பா சரின்னு சொல்லுடா எல்லாம் உன்னோட நல்லத்துக்கு தான். பிடிக்காத விஷயம்னு எதுவுமே இல்லை பிடிக்கிற மாதிரி நம்ம தான் மனசை தயார்படுத்திகணும். எல்லாருக்கும் எல்லாமே பிடிச்ச மாதிரி அமைஞ்சிடாது

கல்யாணம் பண்றது இப்போ உனக்கு பிடிக்காம இருக்கலாம் ஆனா நாளைக்கு என்ன நடக்கும்னு சொல்ல முடியாது இல்லையா? சரின்னு சொல்லுமா, காவடியோட பாரம் சுமக்கிறவனுக்கு தெரியும் உங்கப்பாவோட பெரிய பாரத்தை இறக்கி வை அவரு நிம்மதியா தூங்கியே பல மாசம் ஆச்சுஎன்று கண்ணீர் வடித்தவர் சேலை தலைப்பால் வாயை மூடி கொண்டு அழுதார் அம்பிகா.

வற்புறுத்துபவர்களுக்கு அவளின் வலி மறந்து போனது. அவனோடு சிரித்து பேசியது, சிறு செயலில் சிருங்கார கொண்டது, நீண்ட நெடிய செம்மண் சாலையில் விரல்கள் கோர்த்து தோளில் சாய்ந்து தொலை தூரம் நடந்து சென்றது, ஒற்றை குடைக்குள் நனைந்து விடாமல் ஒருவரை ஒருவர் உரசியபடி தாங்கி பிடித்து கொண்டது, இறுதியாய் உறுதி செய்து இவன் தான் என  எண்ணத்தில் ஏற்றி கனவில் உலா வந்தது என கடந்த காலத்தை நினைக்க நினைக்க மனம் கணத்தது திவ்யபாரதிக்கு.

நினைத்த வாழ்வு என்ன? நிச்சயிக்க போகும் வாழ்வு என்ன? என்ன சொல்லி எப்படி புரிய வைப்பேன்?, மனதோடு விம்மினாள் திவ்யபாரதி. நால்வரையும் ஜீவனற்று வெறித்தவள் பூஜை அறையில் அழகாய் புன்னகை மாறாமல், தொங்கிய அவனின் உருவ படத்தை பார்த்து கொண்டே,

உங்க விருப்பம் நீங்க எது பண்ணாலும் எனக்கு சம்மதம்என்றாள் திவ்யபாரதி.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார் இவள் எம்மாத்திரம் திடமாய் இருந்து சம்மதம் வாங்கி விட்டதாக மற்றவர்கள் மகிழ்ச்சியில் திளைக்க, உயிர் மொத்தமும் வடிந்து போனதை போல அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டாள்.

வாசம் வீசும்

Advertisement