Advertisement

“ஆமா அபிராமி அந்த பொண்ணு தான்” என்றவர் “அங்க பாரு” என்று மணமக்களுக்கு துணையாக நின்ற இருவரையும் காட்டி,

“ஜோடி பொருத்தம் என்ன அருமையா பொருந்தி போகுது திவாகருக்கு இவளை விட பொருத்தமான பொண்ணை எங்களால தேடி கட்டி வைக்க முடியாது, அந்த பொண்ணோட குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அபிராமி. இந்த சம்மந்தம் சரியா வரும்னு எனக்கு தோணுது ஆனா.., எப்டி ஆரம்பிக்கிறதுன்னு தான் தெரியலை எங்களுக்காக நீ தான் வந்து பேசணும்” என்று கையை பற்றி இறைஞ்சுவதை போல ஷியாமளா கேட்க,

சங்கடம் நிறைந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என தெரியாமல் விழித்தார் அபிராமி. இருவரையும் மாறி மாறி பார்த்தவர் என்ன பதில் சொல்வதென தெரியாமல் ராகவேந்திரனை அழைக்க,

பேச்சை பாதியில் விட்டுவிட்டு வந்த ராகவேந்திரன் “என்ன அபிராமி” என்று மூவரின் முகத்தையும் ஆராய, தயக்கத்தின் ரேகைகள் பாடர்ந்திருந்தன.

“திவ்யா தங்கச்சி கவிபாரதியை… பொண்ணு கேட்கணும்னு சொல்றாங்க, எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. அவங்ககிட்ட எப்டி பேசுறதுன்னு தயக்கமா… இருக்கு”என்று இழுத்தார் அபிராமி.

“யாரு சிவநேசன் ரெண்டாவது பொண்ணையா? திவாகருக்கா?” என்று கேட்கவும் ஆமாம் என அபிராமி தலையசைக்க,

யோசனை செய்தவாறே திவகாரை தேட ஜீவாவின் அருகில் நின்று பேசி கொண்டிருந்தான். மனதில் கணக்கு போட்டவர்,

“நல்ல விஷயம் தானே பொண்ணு காலேஜ் தானே படிச்சிட்டு இருக்கா பேசி பாப்போம்” என்ற ராகவேந்திரன் சிவநேசன் இருக்கும் இடம் தேடி செல்ல,

கணவன் மனைவி இருவரும் சற்று ஒதுங்கி நின்று தீவிரமாய் பேசி கொண்டிருக்க, “என்ன சிவநேசன்” என்றவாறே இருவரின் கவனத்தையும் தன் புறம் திரும்பினார்.

“இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க அட நீயும் இங்க தான் இருக்கியாம்மா” ராகவேந்திரனின் குரல் கேட்டு இருவரும் பேச்சை இடையில் நிறுத்தி கொள்ள,

“உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ஆற போடாம அப்பவே கேட்டு தெளிவுபடுத்திக்கிறது நல்லது இல்லையா அதான் பேச வந்தோம்” என்றவர் “உக்காந்து பேசுவோமா” என்று சொல்ல, கணவன் மனைவி இருவரும் வந்திருந்த நால்வரையும் என்னவோ ஏதோ என்பதை போல பார்த்தனர்.

“நீங்க பேசிட்டு இருங்க” என்று விலகி செல்ல எத்தனித்த அம்பிகாவை, “நில்லும்மா” என்று தடுத்து நிறுத்தினார் ராகவேந்திரன்.

“முக்கியமான விஷயம் நீயும் கூட இருக்கணும்” என்று கட்டளையாய் சொல்லவும் என்னவென கேட்காமல் சிவநேசன் அருகில் அமைதியாய் நின்று கொண்டார் அம்பிகா.

“இது ஷியாமளா இவரு தன்வந்திரி சென்னையில இருக்காங்க பேங்க்ல மேனேஜரா வேலை பாத்தாரு இப்போ ரிடையர்ட் ஆகிட்டாரு ஒரே பையன் பேரு திவாகர் காலேஜ்ல வேலை பாக்குறான்” என்றதும் எதிரில் அமர்ந்திருந்த இருவரையும் சிறு புன்னகை படர்ந்த முகத்துடன் ஏறிட்டார் சிவநேசன்.

“அது என்னனா… உங்க ரெண்டாவது பொண்ணை இவங்க பையனுக்கு கேக்குறாங்க”, தயக்கத்துடன் தொடங்கியவர் இறுதியில் விஷயத்தை வெளிப்படையாக உடைத்திட,

என்ன பதில் சொல்வதென தெரியாமல் திகைப்பை வெளிப்படுத்தினார் பெண்ணை பெற்றவர்கள்.

“தப்பா நினைச்சிக்க வேணாம் கல்யாணம் பண்ற வயசுல பொண்ணு வீட்டுல இருந்தா நாலு பேர் கேட்டு வர்றது நடக்குறது தானே, எங்களுக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு இப்பவே பதில் சொல்லணும்னு கட்டாயமில்லை,

உங்க மூத்த பொண்ணு கல்யாணம் முடியட்டும் உங்க குடும்பத்து ஆளுங்க கூட கலந்து பேசி முடிவு பண்ணுங்க ஒன்னும் அவசரமில்லை” என்று நிதனமாக தன் எண்ணத்தை கூறினார் ஷியாமளா.

“இல்லைங்க பொண்ணு இப்போ தான் ரெண்டாவது வருஷம் படிச்சிட்டு இருக்கா படிச்சிட்டு இருக்குற பொண்ணை…”,சிவநேசன் தயங்க,

“புரியுது படிப்பு முடியட்டும் ஒரு வருஷம் என்ன உங்க பொண்ணு எங்க வீட்டுக்கு வர்றதுக்காக எத்தனை வருஷம் ஆனாலும் காத்திட்டு இருப்போம் அந்த அளவுக்கு உங்க பொண்ணை பிடிச்சிருக்கு வீட்டுல கலந்து பேசிட்டு சொல்லுங்க மத்ததை அப்றமா பேசிக்கலாம்” என்று முடித்து கொண்டார் ஷியாமளா.

சரி என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை சிவநேசனுக்கு திவாகரிடம் முன்பே பேசி அவனை பற்றி தெரிந்து கொண்டதால் அவன் மீது மதிப்பும் மரியாதையும் கூடியிருந்தது.

ஆனால், அதே நேரம் திவ்யாவை போல கவிபாரதி அல்ல என்ற எண்ணம் மேலே சிந்திக்க விடமால் இடையிட்டது. நேசமணியிடமும் ஜெயசித்ராவிடமும் பேசிவிட்டு பிறகு என்ன செய்யலாம் என்பதை யோசிக்கலாம் என்று மனதில் உருபோட்டு கொண்டவர்,

“கல்யாணம் முடியட்டும் வீட்டுல பேசிட்டு சொல்றேன்” என்று சிவநேசனும் பேச்சை மேலும் வளர்க்காமல் முடித்து கொள்ள,  அம்பிகாவினிடத்தில் சிறு புன்னகை மட்டுமே இளையோடியது.

நிச்சயத்தை ஒட்டி காலையில் நடைபெறும் திருமணத்தை பற்றியும் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் பேசி கொண்டவர்கள் வந்த உறவுகளை கவனிக்க சென்றுவிட்டனர்.

உணவு தயார் என்றதும் உறவுகள் ஒவ்வொருவராக கலைந்து விட, ஒருவழியாக ஜீவாவும் திவ்யாவும் பேசிக்கொள்ள சற்று தனிமை கிட்டியது. இருவரும் அமர்ந்து கொள்ள பிளாஸ்டிக் நாற்காலியை கொண்டுவந்து போட்ட திவாகர் இருவரும் பேசி கொள்ளட்டும் என வந்தவர்களுக்கு உணவு பரிமாற சென்றுவிட்டான்.

கிடைத்த சந்தர்ப்பத்தில் அவளிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தவன் திவ்யாவின் அருகில் நின்றவளை பார்க்க, அங்கனம் விட்டு அகல்வேனா… என்பதை போல அவன் பார்வை உணர்ந்து உணராது, திவ்யாவிற்கு துணையாக துவார பாலகியை போல நின்று கொண்டிருந்தாள் கவிபாரதி.

வேண்டுமென்றே “கவி மாமாவுக்கு தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி கொண்டு வாயேன்” என்று பணிக்க,

அவனை முறைப்பு கலந்து பார்த்தவாறே திவ்யாவின் தோளில் கைவைத்து அழுத்தம் கொடுத்தவள் தண்ணீர் கொண்டுவர சென்றுவிட,

எனக்கென்ன என்பதை போல அமர்ந்திருந்தவளிடம்

மெல்ல பேச்சை தொடங்கினான் ஜீவானந்தம்.

“இந்த புடவையில ரொம்ப அழகா இருக்க திவ்யா! ஆனா… ஒன்னு மட்டும் தான் மிஸ்ஸிங்?. இந்த முகத்துல கொஞ்சம் பூவோடு வாசம் இருந்தா இன்னும் நல்லா இருக்கும்” என்றான் இளநகை உறவாட,

“ஐமீன் புன்னகையோட வாசத்தை தான் அப்டி  சொன்னேன், இப்பவும் என்கிட்ட பேச ஒன்னுமே இல்லையா?” என்று அழுத்தி கேட்க, அமைதி மட்டுமே பதிலாய் கிடைத்தது.

அந்த அழுத்தத்தின் பின்னால் இருக்கும் காரணத்தை கேட்க முயலவில்லை ஓரபார்வை மட்டுமே. அதுவும் அவன் கால் கட்டை விரலோடு நிறுத்திக் கொண்டாள் திவ்யா.

“சரி பேச வேணாம் அட்லீஸ்ட் ஒரு பார்வை பார்த்தா போதும் என்னோட ஏக்கம் தீர்ந்து போகும், எல்லாரையும் பாக்குற ப்ச் என்னை மட்டும் தவிர்க்கிற காரணம் தெரிஞ்சிருந்தும் மனசு கேட்க மாட்டேங்கிதே..”, வார்த்தையில் ஜாலம் காட்டினான்.

“நீங்க ஆரம்பிச்சது தானே அதுக்கான பின் விளைவுகளை சந்திக்க வேணாமா தயாரா இருங்க”,என்று வேகமாக பதில் பேசினாள் திவ்யபாரதி.

“தயாரா தான் இருக்கேன் உன்னோட மனசுல இடம் பிடிக்க”.

“இந்த ஜென்மத்துல அது நடக்காது” என்றாள் சவாலாக.

மந்தகசமாய் சிரித்தவன் “நிச்சயம் நடக்கும் திவ்யா உன்மேல எனக்கு நம்பிக்கை இல்லை உன்னோட மனசு மாறும். யோசிக்க ஆயிரம் உறவு இருந்தாலும் நேசிக்க ஒரு அன்பான இதயம் வேணும், அந்த அன்பான இதயமா நா இருக்கணும்னு நினைக்கிறேன்.மாற்றத்தை தவிர மத்த எல்லாமே மாற கூடியது, இப்போ மாலை மட்டுமே மாத்துன நீ, போக போக மனசையும் மாத்திப்ப உன்னோட மனசு மாறும்” என்று எதார்த்தம் பேசினான் ஜீவானந்தம்.

அவன் குரலில் இருந்த திண்ணம் அவளுக்குள் மேலும் கோபத்தை ஏற்படுத்தியது, அவன் பேசுவதை கேட்க விருப்பமில்லாதவள் போல எழுந்து செல்ல முயன்றவள் கவிபாரதி வருவதை கண்டு அமர்ந்து கொண்டாள்.

கோபத்தை தணித்து,”சில விஷயங்களை சொல்லி புரியவைக்க முடியாது. நீங்க சொல்ற மாதிரி என்னோட மனசு மாறலாம் ஆனா எனக்குள்ள இருக்குற எண்ணங்கள் மாறாது. என்னோட சுயநினைவு பிறழ்ந்து போகாத வரைக்கும் அது எனக்கு மட்டுமே சொந்தமானது எனக்கானது” என்று கூறிவிட்டு அமைதியாக இருந்து கொண்டாள் திவ்யபாரதி.

உண்மை தான் என்று ஆமோதித்த அவன் மனம், அதை வெளிப்படுத்தவில்லை. கவிபாரதி அருகில் வந்திட அமைதியாக இருந்து கொண்டான் ஜீவானந்தம். தண்ணீர் கொடுத்தவள் ஜெயசித்ரா அழைப்பதாய் கூறி திவ்யாவை அழைத்து கொண்டு சென்றுவிட, சிந்தனை செய்தபடி அமர்ந்திருந்தான் ஜீவானந்தம்.

தனியாக அமர்ந்திருந்தவனை கண்டு அருகில் வந்த திவகார் “என்ன ஜீவா நீ மட்டும் இருக்க திவ்யா எங்க?” என்று கேட்க,

“ஜெயா ம்மா கூப்டாங்கன்னு கவி கூட்டிட்டு போனா சரி பெரியம்மா பெரியப்பா எங்க அவங்க சாப்டாங்களா?” என்று எழுந்து கொண்டவன் மாலையை கழட்டி அமர்ந்திருந்த சேரில் வைக்க,

“இல்லைடா பேசிட்டு இருக்காங்க மத்த எல்லாரும் சாப்டாச்சு. ஒரு விஷயத்தை மட்டும் கிளியர் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன் அது எப்டி சாத்தியம்னு மட்டும் சொல்லிடு ஜீவா இல்லைன்னா யோசிச்சு யோசிச்சு தலையே வெடிச்சுறும் போல” என்று தலையை அழுத்தி பிடித்து கொண்டான் திவாகர்.

“நிச்சயம் நல்லபடியா முடிஞ்சது விடிஞ்சா கல்யாணம் நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு ஆனா..” என்று வார்த்தையை தேய்த்துகொண்டே செல்ல,

“என்ன ஆனா ஆவன்னா! ஆரம்பத்துல கேட்ட அதே கேள்வி தானே ரெண்டு பேருக்கும் ஒத்து வருமா?” என்று கேட்டதும்,

திவகாரின் முகத்தில் தயக்கத்தையும், தாண்டிய அவன் மீதான அக்கறை அதிகமாய் பிரதிபலித்தது.

அவன் எண்ணத்தை அறிந்து கொண்டவன் போல “ஒத்து வருமா… வராதான்னு கேட்டா இப்போ என்னால உறுதியான பதிலை சொல்ல முடியாது திவா. ஆனா அவ மனசு மாறும்! மாறனும்!, அதுக்காக தான் இந்த கல்யாணமே, இப்போதைக்கு அவ மனசு மாறும்னு மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும், அது எந்த மாதிரியான மாற்றம்னு கேட்காத நா கடவுள் இல்லை நடக்க போறதை முன்கூட்டியே சொல்றதுக்கு” என்று சூழ்நிலையை இயல்பாக்க வேடிக்கையாய் பேசினான் ஜீவானந்தம்.

திவாகரின் முகம் இன்னமும் தெளிவடையாததை கண்டு “சியரப் மேன் எதையும் ஈஸியா எடுத்துக்க பழகு”.

“ப்ச் உன்னை மாதிரி என்னால இருக்க முடியாது ஜீவா கசப்பான விஷயத்தையும் கடந்து போயிறலாம்னு நீ நினைக்கிற அது எப்டி சாத்தியம்னு நா நினைக்கிறேன் என்னமோ போடா” என்று சலிப்பாய் பேச்சை முடித்து கொண்டான் திவாகர்.

“ரொம்ப சலிச்சுக்காத வா சாப்டா போகலாம் பசிக்கிது” என்று தோளில் கைபோட்டு அழைத்து சென்றான் ஜீவானந்தம்.

அனைத்தும் திருப்தியாய் அமைந்திட நல்ல நேரம் முடிவதற்குள் திவ்யாவை அழைத்து கொண்டு மாப்பிள்ளை வீட்டினர் மண்டபதிற்கு கிளம்ப, உடன் செல்லுமாறு கவிபாரதியையும் ஜெயசித்ராவையும் அனுப்பினார் அம்பிகா.

மனம் கலங்கியது அம்பிகாவிற்கு, திவ்யாவின் கையை பற்றிகொண்டவர் காரில் ஏறும் வரை பற்றிய கையை விடவில்லை முதல் பிரிவை ஏற்று கொள்ள என்னதான் மனதை தயார் படுத்தி கொண்டாலும் கண்ணீர் துளிகள் காட்டி கொடுத்திட்டது அவர் மனதை.

“ம்மா..” என்றவளுக்கும் அழுகை மேலோங்க,

“ப்ச் ஒன்னுமில்லைடா திவி அம்மாவுக்கு சந்தோஷமா இருக்கு அதான்” என்று தேற்றியவர் கண்களை துடைத்து கொண்டு,”ஜெயா பாத்துக்கோ நாங்க காலையில சீக்கிரம் வந்துடுறோம்”என்று பிடித்திருந்த கையை விலக்கி கொண்டவர் கார் கதவை மூடினார்.

அம்பிகா இரண்டாம் தாரமாய் வரும் போது திவ்யா ஒன்பது மாத குழந்தை, கைபிடித்து வளர்ந்தவளை வேறு ஒருவனிடம் கைபிடித்து கொடுக்க போகும் சந்தோஷம் அளவில்லாமல் இருந்தாலும் அது நிலையாய் நிலைக்க வேண்டும் என்ற எண்ணம் பலமாய் இறைவனிடம் மன்றாடி கொண்டது.

ஜீவா திவாகர் இருவர் மட்டுமே வந்த வாகனத்தில் இப்போது அபிராமி ராகவேந்திரன் தன்வந்திரி மூவரும் ஏறி கொள்ள, மற்றோரு வாகனத்தில் திவ்யா ஜெயசித்ரா கவிபாரதி மூவருடன் ஷியாமளாவும் ஏறி கொண்டார் அதுவும் கவிபாரதியின் அருகிலேயே அமர்ந்து கொண்டார். கார்கிளம்பி, கண் மறையும் வரை அசையவில்லை அம்பிகா, மகளின் பின்னோடு சென்றது அவரின் மனம்.

மணம் வீசும்…

Advertisement