Advertisement

“ப்ராப்ளம் சால்வ்” என கையை விரித்து சைகை செய்தவன் “மாமா உங்களுக்கு நான் தான் மருமகன் உங்க எல்லாருக்கும் திருப்தி தானே இனிமே கவி துடுக்கா பேச மாட்டா யோசிச்சு தான் பேசுவா சரி வாங்க உள்ள போலாம்” என்றதும் பெருமூச்சை விட்டபடி அவன் செய்த அளப்பரிய காரியத்தை அசைபோட்டபடியே பெரியவர்கள் முன்னால் செல்ல,

“ரொம்ப தங்க்ஸ்டா இதுக்கு தான் பிரெண்ட் வேணும்னு சொல்றது நீ கொடுத்த ஐடியா செம்மையா ஒர்க்அவுட் ஆகிருச்சு திவா” என்று கவிபாரதிக்கு கேட்கும் விதமாக பேசியவன், கைகுலுக்கி அவனை தழுவி கொண்டான்.

முறைப்பு முனைப்பாய் வெளிப்பட்டது அவளிடத்தில், ஆதி மூலமே நீ தானா என்பதை போல கொலைவெறியோடு பார்த்தவள் மூச்சு வாங்கியபடி வேகமாக உள்ளே சென்று விட,

“வாடா போலாம்” என்று கைபிடித்து இழுதத்தவனை நிறுத்தினான் திவாகர்.

“எதுக்குடா அப்டி சொன்ன நான் தான் பிளான் போட்டு கொடுத்த மாதிரி என்மேல கோபப்பட்டுட்டு போறா ஆரியமாலா”.

“அது கோபம் இல்லை மகனே கொலைவெறி. என்மேல நல்லெண்ணம் வரணும்னு தான் உன்னை கோர்த்துவிட்டேன் என்னோட கல்யாண வாழ்க்கைக்கு பிற்காலத்துல அவளோட உதவி ரொம்ப தேவைப்படுது திவா. நீ தான் நல்லா மேனேஜ் பண்ணுவியே அவளை நீயே சமாதானம் பண்ணிக்கோ எனக்கு முக்கியமான வேலை உள்ள காத்திட்டு இருக்கு” என்று சிரித்து கொண்டே வேகமாய் வீட்டின் உள்ளே சென்றுவிட்டான் ஜீவானந்தம்.

“நல்ல எண்ணம் நட்புனா இப்டி தான் இருக்கணும்” என்று புலம்பி கொண்டே உள்ளே சென்றான் திவாகர்.

கல்யாண போர்வை விரித்து தாம்பூலங்கள் வரிசையாய் இடம் பெற்றிருக்க, அபிராமி ராகவேந்திரன் இருவருக்கும் இடையில் அமர்ந்தான் ஜீவானந்தம்.

கவிபாரதியின் பார்வை தன் மீது படாதவாறு அதே சமயம் ஷியாமளா தன்வந்திரி இருவரும் நகர்ந்து சென்றுவிடாதபடி அவர்களின் அருகிலேயே திவாகர் அமர்ந்து கொள்ள,

“ஏண்டா இப்டி பண்ற ஜீவாக்கு பக்கத்துல போய் உட்கார வேண்டியது தானே எதுவும் பண்ண மாட்டோம்னு சொல்லிட்டோமே பின்ன எதுக்கு இந்த உளவு பாக்குற வேலை. வாத்தியார் வேலைய தவிர மத்த எல்லா வேலையும் நல்லாவே பாக்குற”,நொடித்து கொண்டார் ஷியாமளா.

“இங்க இருந்து கிளம்புற வரைக்கும் உங்களை விட்டு எங்கயும் போக மாட்டேன், சிங்கிள் கேப்புல என்னை மிங்கிள் ஆக்க பிளான் பண்ணிருவீங்க அதுக்கு நா இடம் கொடுக்க மாட்டேன் ம்மா அப்பா மாதிரி நீங்களும் அமைதியா இருங்க” என்று முடித்து கொள்ள,

“போடா..” வெறுப்பாக கூறியவர் நடந்தேறும் நிகழ்வில் கவனத்தை செலுத்தினார்.

பார்வை எங்கெங்கோ அலைப்பாய்ந்தலும் இறுதியில் அவள் அறை கதவின் மீதே நின்றது. புதுஉணர்வு மனதில் தோன்றிய வார்த்தைகளுக்கு வடிவம் கொடுக்க தெரியாமல் உள்ளுக்குள் திணறினான் ஜீவானந்தம்.

அறையில் இருந்து வெளிப்பட்டவளின் பார்வை அவனை தவிர்த்து வந்திருந்த அனைவரின் மீதும் படிந்து மீண்டது. சபைக்கு வணக்கம் வைத்துவிட்டு ஜெயசித்ராவின் அருகிலேயே அமர்ந்து கொண்டாள் திவ்யபாரதி.

சம்பந்தம் ஏற்படுத்தி கொள்ள சம்பந்திகள் இருவரும் ஒருவரின் கையில் ஒருவர் சந்தனம் பூசி சில சம்பிரதாயங்களை செய்து, நிச்சய புடவையை திவ்யாவிடம் கொடுத்து கட்டிவர சொல்ல, உதவிக்கு உடன் பிறந்தவளை அழைத்து சென்றாள் திவ்யபாரதி.

அறைக்குள் சென்றதுமே அவனைப்பற்றிய பேச்சு தான்.

“இருந்தாலும் மாமா இவ்ளோ ரகளை பண்ண கூடாது க்கா” சாதாரணமாய் பேச்சை தொடங்கினாள் கவிபாரதி.

“என்ன சொல்ற கவி? நேசமணி மாமா என்ன பண்ணாரு”என்று வெளியே நடந்த சம்பவம் தெரியாமல் சாவாதினமாக கேட்க,

“ப்ச் நம்ம மாமா இல்லை க்கா.. ஜீவா.. மாமா” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

புருவம் நெருக்கி எதிரில் இருந்தவளை பார்த்தவாறே “இதை பிடி பின் குத்திக்கிறேன்” என்று அவனது பேச்சை தவிர்க்கும் விதமாக திவ்யா பேச,

மனநிலை புரியாமல் மனதில் உள்ளதை கொட்ட தொடங்கினாள் கவிபாரதி. “வெளியே நடந்த விஷயம் உனக்கு தெரியாதில்லை என்னோட பொறுமைய ரொம்ப சோதிச்சிட்டாரு க்கா, நீ சொல்ல வேண்டிய பதிலை நா சொல்லிட்டு வந்துருக்கேன். ஒரு மாதிரி ஆகிருச்சு,

எல்லாரும் எப்டி பாத்தாங்க தெரியுமா?. உன்னோட வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்காதவரு என்னோட வார்த்தைக்கு எதுக்கு இவ்ளோ முக்கியத்துவம் கொடுக்குறாரு? கொஞ்சம் டவுட்டா இருக்கு அவர் மேல” என்று கன்னத்தில் கைவைத்து யோசனை செய்தவள்,

“அர்னால்டை பிடிச்சிருக்கு  ஆனா… விருப்பமில்லைன்னு  சொன்ன பிறகு கொஞ்சம் கூட சட்டை பண்ணாம உன்னை கல்யாணம் பண்ண நினைக்கிற அந்த கேரக்டர் தான் பிடிக்கலை. அந்த ஒரு விஷயம் தான்! அவரு மேல கோபம் வர காரணமா இருக்கு, ரொம்ப அழகா இருக்காரு, அடக்கமாவும் இருக்காரு, மரியாதையா பேசுறாரு எல்லாத்தையும் விட, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாரு,

இந்த இந்த காலத்துல எந்த அலைச்சலும் இல்லாம இப்டி ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறது கஷ்டம் தான். ஒருவேளை எல்லாரும் சொல்ற மாதிரி அர்னால்ட்டு உன்னோட மனசை மாத்தி ஜெயிச்சிடுவாரோ” என்று ஐயம் தொனிக்க பேசியவள் திவ்யாவின் முகம் பார்த்தாள்.

அவள் பேசிய எதையும் கேட்காதது போலவே திவ்யா, புடவை கட்டுவதில் தீவிரமாய் இருக்க,

“ம்ஹும் எல்லாத்துக்கும் ஒரே ரியாக்சன் தான் போ.. க்கா. நீ என்ன நினைக்கிறன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியலை! பிடிக்கலைன்னு சொல்ற ஆனா கல்யாணத்துக்கு தயராகுற என்ன மைண்ட் செட்ல இருக்கியோ”,சலிப்பாக வந்தன வார்த்தைகள்.

“திவ்யா ரெடியாகிட்டியா கூப்பிடுறாங்க ம்மா”, சட்டென கதவை திறந்து உள்ளே வந்தார் ஜெயசித்ரா.

பெண்கள் இருவரும் திடுக்கிட்டு பார்க்க, நெஞ்சை பிடித்து கொண்டு நின்ற கவிபாரதி “அத்தை! கதவை தட்டிட்டு வர வேண்டியது தானே இல்ல மெதுவா திறக்க வேண்டியது தானே இப்டியா வருவிங்க யாரோன்னு நினைச்சு பயந்துட்டோம்” என்றாள் பயம் விலகாத குரலில்.

“நம்ம வீட்டுல வேற யாரு வர போறா அதுவும் திவ்யா ரூமுக்கு” என்றவர் அவள் அடுத்து பேச வாய் திறப்பதை கண்டு முந்தி கொண்டு பதில் அளித்தார்.

“அம்மாடி உன்கிட்ட வாதாட எனக்கு நேரமில்லை நாம அப்றமா பேசிக்கலாம் இப்போ பொண்ணை கூட்டிட்டு வர சொல்றாங்க” என்றவருக்கு திவ்யா தயராகி நின்ற கோலம் கண்டு விழிகள் பனித்தது.

அப்படியே அமிழ்த்தி கொண்டவர்”அழகா இருக்க என் கண்ணே பட்டுரும்” என்று கன்னத்தில் சிறு புள்ளியாய் மை வைத்து,”வா போலாம்” என்று அழைத்து செல்ல,

“நல்லா தான் இருக்கும் கவியோட கைவரிசையாச்சே” என்று பெருமையாய் சொல்லி கொண்டே பின்னால் சென்றாள் கவிபாரதி.

என்ன உணர்வு என்று இனம் காண முடியவில்லை இதயம் படபடக்க, உள்ளங்கையில் வியர்வை துளிகள் சுரக்க, கரத்தினை இறுக மூடி கொண்டவள் மண்டியிட்டு வணங்கி எழுந்தாள். அந்த ஷணம் மூச்சு முட்டுவதை போல உணர்ந்தாள் திவ்யபாரதி.

தாம்பூலம் மாற்றி இருவீட்டாரும் தங்கள் உறவை உறுதி செய்து கொள்ள சுபமாய் முடிந்தது நிச்சயதார்த்தம். திவ்யா ஜீவா இருவரின் கையிலும் மாலையை கொடுத்த அபிராமி,

“ஜீவா திவ்யாவுக்கு போட்டுவிடு” என்றதும் மாலை போட்டவன் சலுகையாய் நெற்றியில் குங்குமம் இட்டுவிட, ஏண்டா என்பதை போல பார்த்தான் திவாகர்.

“திவ்யா நீயும் போடும்மா” என்ற வார்த்தைக்கு பணிந்து அவன் கழுத்தில் மாலை சாற்றினாள் பெண்ணவள்.

இது ஒத்து வருமா? என்ற எண்ணம் அந்த கணம் இருவருக்குள்ளும் வெளிப்பட்டது. சந்தனம் குங்குமம் என ஆசிகள் வழங்கியவர்கள் இருவரின் நெற்றியையும் நிறைத்துவிட, அதை சீர் செய்வதே அருகில் துணையாய் நின்ற இருவரின் வேலையாய் போனது.

மணமக்களை விட துணையாய் நின்ற இருவரின் ஜோடி பொருத்தம் வந்திருந்தவர்களை சற்று யோசிக்க வைத்தது ஆனால் வெளிப்படையாக கேட்டுகொள்ளவில்லை. தூரத்தில் நின்று மேடையில் நடக்கும் நிகழ்வை பார்த்து கொண்டிருந்த ஷியாமளா தன்வந்திரியின் தோளை சுரண்டினார்.

என்னவென திரும்பி பார்த்தவரிடம் “அங்க பாருங்களேன் இந்த கண்கொள்ளா காட்சியை பாக்க எத்தனை நாள் காத்திட்டு இருந்தோம் நம்ம பையனும் அந்த பொண்ணும் என்ன ஒரு ஜோடி பொருத்தம்”, சிலாகித்து பேசினார் ஷியாமளா.

“நீ இன்னும் அந்த எண்ணத்தை விடலையா நடக்குற காரியத்தை பேசு ஷியாமா. பொருத்தம் இருந்து என்ன பிரயோஜனம் பொறுமை இல்லையே” என்றார் தட்டி பேசும் விதமாக.

“என்ன பொறுமையில்லாததை கண்டுடிங்க, மனசுல உள்ளதை பேசுனது தப்பா? எதையும் ரெண்டு பக்கமா யோசிங்க, திவா கூட தான் சில நேரங்கள்ல புரிஞ்சுக்காம கோபமா பேசிறுக்கான் அதுக்காக பொறுமையில்லாதவன் குணமில்லாதவன்னு பட்டம் கட்டிட முடியுமா?”.

“ம்ஹும் நீ மனசளவுல அந்த பொண்ணை மருமகளா ஏத்துக்க தயராகிட்ட இப்போ நா என்ன சொன்னாலும் அது தப்பா தான் இருக்கும். உன்னோட விருப்பத்தை கெடுப்பானேன் அந்த பொண்ணோட அப்பா அம்மாகிட்டயே பேசிறுவோம் எதுக்கு நமக்குள்ள விவாதம் பண்ணிகிட்டு” என்றார் தன்வந்திரி.பெண்வீட்டார் மறுத்துவிட்டால் அதை பற்றி பேச மாட்டார் என்ற எண்ணத்தில்.

“அவனுக்கு தெரியாம பேசணும் முதல அந்த பொண்ணோட அப்பா அம்மா எங்க இருக்காங்கன்னு பாருங்க நா போய் அபிராமியை கூட்டிட்டு வறேன்” என்று கையோடு காரியத்தை முடித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் விரைந்தார் ஷியாமளா.

தெரிந்தவரிடம் பேசி கொண்டிருந்த அபிராமியை காரணம் சொல்லாமல் கையோடு அழைத்து வந்தவர் “உன்னால ஒரு காரியம் நடக்கணும் அபிராமி, யார் என்னனு தெரியாம நாங்களா போய் பேச முடியாதுல அதனால தான் உன்னை கையோட அழைச்சிட்டு வந்தேன்” என்று விஷயத்தை கூறாமல் அவர் போக்கில் பேச,

“என்ன காரியம் யார்கிட்ட பேச போறீங்க?, விஷயத்தை சொல்லாம பேச சொன்னா என்னனு போய் பேசுறது விஷயத்தை சொல்லிட்டு விளக்கம் சொல்லு ஷியமாளா”.

“அது… ஒன்னுமில்லை நல்ல விஷயம் தான். எங்க மனசுல தோணுச்சு அதை அப்பவே பேசிடுறது தானே நல்லது” என்று தயக்கம் கொண்டு பேசியவர், “திவாகருக்கு பொண்ணு பாத்துருக்கோம் அந்த பொண்ணோட அப்பா அம்மாகிட்ட நீ தான் பேசணும்” என்று கணவனை பார்த்து கொண்டே கூறினார் ஷியாமளா.

“ஆமா ம்மா அந்த பொண்ணை மருமகளாவே நினைக்க ஆரம்பிச்சிட்டா அந்த பொண்ணை நினைச்சு இவ பைத்தியமாகிடுவா போல, திவாகருக்கு அவங்க பொண்ணை கட்டி கொடுக்க சம்மதிக்கிறாங்க இல்லை… சம்மதிக்காம போறாங்க, இப்போ விஷயம் அது இல்லை. முடிவை தெரிஞ்சுகிட்டா நிம்மதியா இருப்பா நீ தான் அவங்ககிட்ட பேசணும்” என்று தன் பங்கிற்கு தன்வந்திரியும் கூற,

“ப்ச் ரெண்டு பேரும் யார் பொண்ணுன்னே சொல்லாம பேசிட்டு இருக்கீங்க பொண்ணை எங்க பாத்திங்க? எந்த ஊரு?. இதெல்லாம் தெரியாம எப்டி போய் பேசுறது” என்றதும் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“என்ன ண்ணா பொண்ணு யாரு?”.

“அது… வந்து ம்மா… நம்ம ஜீவா…” என்று இழுக்க,

“திவ்யா தங்கச்சி தான் அபிராமி பொண்ணு” என்று பட்டென கூறி விட்டார் ஷியாமளா.

தான் கேட்டது சரிதானா என்பதை போல மலங்க மலங்க விழித்தவர் “என்ன? யாரு நம்ம கவிபாரதியா?”, வியப்பு மேலோங்க கேட்டவரிடத்தில் ஒரு நொடி அசைவில்லை.

Advertisement