Advertisement

மாலை நடக்கவிருந்த நிச்சயதார்த்ததிற்கு பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தனர் பெண் வீட்டினர்.

“கவி ஏய்! கவிபாரதி… எங்கடி இருக்க” என்ற சத்தம் கேட்டு அறையில் இருந்து வேகமாக வெளிப்பட்டாள் பெயருக்கு சொந்தகாரி.

“என்ன அத்தை சொல்லுங்க, எதுக்கு என்னோட பேரை ஏலம் விட்டுட்டு இருக்கீங்க”.

“வாசல் தெளிச்சு கோலம் போட சொல்லி எப்போ சொன்னேன் இன்னும் செய்யலை. மணி என்னாகுது ஆறு மணிக்கு மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்திருவாங்க, கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை கவி எப்ப பாரு ரூம்குள்ள போய் கதவை அடைச்சுக்கிட்டு போனை நோண்டிக்கிட்டே இருக்க வேண்டியது” என்று வசைபாடலை தொடங்க,

“ப்ச் எனக்கு கோலம் போட தெரியாது அக்கா போடுறேன்னு சொன்னா… அதான் விட்டுட்டேன். ஏன் நா போடலைன்னா என்ன நீங்க இல்லைன்னா அம்மா போட வேண்டியது தானே? இதுக்கு ஒரு பஞ்சாயத்தா அத்தை” என்று சலிப்பாய் வார்த்தைகள் வர,

“எப்ப பாரு நோண்டிக்கிட்டே இருக்கியே அதுல பாத்து கோலம் போட வேண்டியது தானே, பாட்டு கேக்குற அரட்டை அடிக்கிற!. அதுக்கு மட்டும் தான் போனா போ அதுல கோலம் போடுவது எப்டின்னு இருக்கும் பாத்து பொறுமையா போடு எங்களுக்கெல்லாம் கோலம் போடுறதுக்கு சொல்லியா கொடுத்தாங்க கத்துக்கணும்னு ஆர்வம் இருந்தா கோடு கூட கோலமா மாறும்” என்றார் ஜெயசித்ரா.

“அத்தை..” என்று சிணுங்கியவள் நேசமணி வருவதை பார்த்து, “நா மாமாகிட்ட பேசிக்கிறேன்” என்று சொல்ல,

“என்ன கவி கண்ணு என்ன சொல்றா உன்னோட அத்தை!”.

“எப்ப பாரு என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க மாமா கோலம் போட சொல்றாங்க”.

“என்ன ஜெயா எந்த வேலைய யார்கிட்ட சொல்லணும்னு தெரியாதா. கவி கண்ணு வட்டம் போடவே திணறும் அதுகிட்ட போய் இவ்ளோ பெரிய வேலைய சொல்லாம” என்று சிரிக்காமல் சொன்னவரை முறைத்து பார்த்தாள் கவிபாரதி.

சாதகமாய் பேசுவார் என்று இருந்தவளுக்கு நேசமணியின் கிண்டல் பேச்சு வேகத்தை திணிக்க, “போங்க மாமா என்னோட இமேஜை ரொம்ப டேமேஜ் பண்றிங்க, அத்தைய விட ரொம்ப மோசமா இன்சல்ட் பண்ணிட்டீங்க மாமா இதுக்கு பதில் கொடுத்தே ஆகணும் எங்க கோல பொடி நா போடுற கோலத்தை பாத்து மாப்பிள்ளை மிரண்டு ஓடணும்” என்று வீராப்பாய் பேசியவளின் வாயில் லேசாய் தட்டினார் ஜெயசித்ரா.

“அது என்னடி மாப்பிள்ளை. மரியாதையா மாமான்னு கூப்பிட முடியாது எப்ப பாரு ஏடாகூடமா ஏதாவது பேசிட்டு போ கோலம் போட்டுட்டு வந்து கிளம்பு நா திவ்யா என்ன பண்றான்னு பாத்துட்டு வறேன்” என்று சென்றுவிட,

கண்டித்ததில் முகத்தை உம்மென வைத்து கொண்டு நின்றவளின் தலையை வருடினார் நேசமணி. முகூர்த்த புடவை எடுக்கும் அன்று கடையில் அவள் நடந்து கொண்ட விதத்தை எண்ணத்தில் வைத்து பேச தொடங்கினார்.

“அவ கிடக்குறா விட்டு தள்ளு கண்ணு, நீ என்ன நினைக்கிறன்னு என்னால புரிஞ்சுக்க முடியிது. கடையில அன்னைக்கு அவ்ளோ கோபமா பேசினயே அந்த கோபத்துக்கு பின்னால இருக்குற பாசத்தை என்னால உணர முடியிது, ஆனா… திவ்யாவுக்கு இந்த வாழ்க்கை தான் பொருத்தமா இருக்கும். ஏன்னா ஜீவானந்தம் ரொம்ப நல்ல பையன், திவ்யாவை நல்லா பாத்துப்பாரு அவ வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் நாங்க எல்லாரும் அவளுக்கு பிடிக்காத ஒன்னை திணிக்கிறோம்,

சில விஷயங்களை சொல்லி புரிய வைக்க முடியாது சொன்னாலும் புரியாது. காலங்கள் மாற மாற கேள்விக்கான பதில்கள் அப்போ புரியும், நிச்சயம் ஒரு நாள் திவ்யாவும் நீயும் எங்களை புரிஞ்சுப்பிங்க இனிமே ஜீவாவை மாமான்னு சொல்லி பழகு அதான் நல்லா இருக்கும்” என்று தன்மையாய் கூறிவிட்டு சென்றுவிட்டார் நேசமணி.

குடும்பதினரின் உறுதியான பேச்சு சற்று சிந்திக்க வைத்தது. அவனை தூக்கி வைத்து பேசுவதற்கு என்ன காரணம் என தெரியவில்லை ஆனால் குழப்பம் அவள் மனதை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்க தொடங்கியது. நடப்பிற்கு வந்தவள் அதை பிறகு ஆராய்ந்து ஆலோசித்து பாக்கலாம் என்று அலட்சியமாய் தோளை குலுக்கி கொண்டு வாசலை அலங்கரிக்க விரைந்தாள் கவிபாரதி.

சரியாக நேரம் ஆறை தொட வாசலில் வந்து நின்றது நான்கு சக்கர வாகனம். சத்தம் கேட்டு சிவநேசனும் அம்பிகாவும் வாசலுக்கு விரைய ஆளுமை நிறைந்த புன்னகை முகமாய் மாப்பிள்ளை தோரணையில் இறங்கினான் ஜீவானந்தம். வாகனத்தை ஓரமாய் நிறுத்தி விட்டு திவாகரும் உடன் வந்து நின்று கொள்ள,

சாமியானாவில் தொடங்கி  சாப்பாடு வரை அமர்களப்படுத்தியிருந்தனர் பெண்வீட்டினர்.

“டேய் ஜீவா ஒரு மாதிரி ஷவர் ஆகுதுடா துணை மாப்பிள்ளை போஸ்டிங்கை வேற யாருக்காவது கொடுத்துறேன் நா ஒரு ஓரமா நின்னுக்கிறேன்”, காதோரமாய் கிசுகிசுத்தான் திவாகர்.

“எதுகெடுத்தாலும் பயந்து சாகாத நல்ல மூட்ல இருக்கேன் அப்ஸ்ட் பண்ணி அறை வாங்கிடாத கல்யாணம் முடியிற வரைக்கும் கைநீட்ட கூடாதுன்னு விரதம் இருக்கேன்”என்று பணிவாய் மிரட்ட அமைதியாய் நின்று கொண்டான் திவாகர்.

“கவிம்மா.. அந்த ஆரத்தி தட்டை எடுத்துட்டு வா”, அம்பிகா குரல் கொடுக்க,

சுண்ணாம்பும் மஞ்சளும் சேர்ந்து சிவப்பேறிய நீரை எடுத்து வந்தவள் “இந்தாங்க அத்தை” என்று ஜெயசித்ராவிடம் நீட்டினாள்.

“என்கிட்ட எதுக்கு கொடுக்குற நீ தான் மாப்பிள்ளை வீட்டு ஆளுங்களுக்கு ஆரத்தி எடுக்கணும் எடு” என்றார் அம்பிகா.

“ம்மா..” என்று முணங்கியவள் இருக்கும் இடம் உணர்ந்து ஆரத்தி எடுக்க, அவள் பார்வை உடன் நின்றவனையே முறைப்பாக தழுவியது.

மூன்று முறை இடவலம் சுற்றி குங்கும நீரை தொட்டு ராகவேந்திரன் அபிராமி இருவரின் நெற்றியில் வைத்தவள், ஜீவாவிற்கு வைத்து விட்டு அருகில் இருந்தவனை பார்த்தாள்.

குழப்பமான பார்வையோடு அவளை ஏறிட்டவன் “மாப்பிள்ளைக்கு மட்டும் தான் இந்த சம்பிரதாயமா இல்லை… துணைமாப்பிள்ளைக்கும் சேத்து ஆலம் சுத்துவீங்களா?” என்று அப்பாவியாய் கேட்க,

“இங்க என்ன திருமணம் செய்து வைக்கபடும்னு போர்டு போட்டுருக்கா மாப்பிள்ளைன்னு வரவங்களுக்கெல்லாம் ஆலம் சுத்துறதுக்கு”, துடுக்காக பேச துடித்த நாவை கடினப்பட்டு அடக்கி கொண்டவள் திரும்பி ஜெயசித்ராவை பார்த்தாள்.

அவளின் பார்வை உணர்ந்து அருகே வந்தவர் “என்ன கவி பாத்துட்டு நிக்கிற வச்சுவிடு அவரும் மாப்பிள்ளை மாதிரி தான்” என்றதும் இதழ் சுளித்து அவனுக்கும் செந்நீரை வைத்தவள் வந்தவர்கள் உள்ளே செல்ல வேண்டி விலகி நிற்க,

ராகவேந்திரன் அபிராமி இருவரும் முன்னால் செல்ல, எனக்கென்ன என்பதை போல வாசலிலேயே நின்று கொண்டான் ஜீவானந்தம்.

“உள்ள வாங்க மாப்பிள்ளை” என்று அழைத்த சிவநேசன் அவன் அசையாமல் இருப்பதை கண்டு, “என்னாச்சு மாப்பிள்ளை” என்று கேட்டார் சிறுபதட்டமும் பரிதவிப்பும் நிறைந்து.

நொடியில் இதயம் தாறுமாறாய் துடிக்க தொடங்கியது. அபிராமியும் ராகவேந்திரனும் என்னவென திரும்பி பார்க்க, உள்ளே சென்ற உறவுகள் அத்தனையும் சூழ்ந்து கொண்டது வாசலை.

திக்..திக்…கென்ற நிமிடங்களுடன் ஒரு நொடியை கடக்க வைத்தவன் “நா உள்ள வரதும் வராம அப்டியே மண்டபத்துக்கு போறதும் உங்க பொண்ணு கையில தான் மாமா இருக்கு” என்று பலமாய் பீடிகை இட்டு நிறுத்த,

சட்டென கையில் இருந்த தட்டை பார்த்த கவிபாரதி, ‘இதுல வெறும் குங்கும தண்ணி தான் இருக்கு இதை வச்சுக்கிட்டு என்ன பண்ண போறாரு’, தீவிரமாக அதே நேரம் திருதிருவென விழிக்க, அவள் எண்ணத்தை அறிந்து கொண்டவன் போல சிரிப்பை அடக்கினான் திவாகர்.

“என்ன மாப்பிள்ளை சொல்றிங்க வாசல் வரை வந்துட்டு இப்டி சொன்னா எப்டி? என்ன சொல்லணும் சொல்லுங்க கேட்டுட்டு வந்து சொல்றேன் அவகிட்ட பேசிட்டு தானே கல்யாணத்துக்கு ஒத்துகிட்டிங்க”.

“நீங்க பதட்டபடாம பேசுங்க உங்களுக்கு ஏதாவது ஆகிட போகுது” என்று கணவரை அமைதிப்படுத்த முயன்றார் அம்பிகா.

விஷயம் என்னவென்பதே தெரியாமல் உறவுகளிடையே சலசலப்புகள். அவரவர் யூகம் போல கேள்வி பதில்களை கலந்தாய்வு செய்ய, குடும்பத்தில் இருந்த அத்தனை பேருக்கும் ஜீவாவின் பேச்சு பயத்தையும் பதட்டத்தையும் அளித்தது.

“ஜீவா என்னாச்சு எதுக்கு இப்டி பேசுற விளையாடாத ஜீவா எதுவா இருந்தாலும் நிச்சயம் முடியவும் பேசிக்கலாம் இப்போ உள்ள வா” என்றார் அபிராமி.

“இல்லை பெரியம்மா அவங்க பொண்ணுகிட்ட என்னை பிடிச்சிருக்கா இல்லையான்னு சொல்ல சொல்லுங்க இந்த நிமிஷத்தை விட்டா அப்றம்.. இதே மாதிரி சந்தர்ப்பம் கிடைக்காது” என்றான் திண்ணம் நிறைந்து.

நேசமணியும் ஜெயசித்ராவும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்து கொள்ள,

“ஜெயா போய் திவ்யாவை கூட்டிட்டு வாம்மா” என்று அதட்டலாய் சொன்னார் சிவநேசன்.

“ஒரு நிமிஷம்” என்று தடுத்தவனை என்னவென்று அனைவரும் பார்க்க,

“உங்க பொண்ணுன்னு சொன்னது திவ்யாவை இல்லை. அவளை பத்தி எனக்கு தெரியும் என்னை பிடிக்கலைன்னு ஒரு நாளும் சொல்ல மாட்டா”, மனம் அறிந்தே அப்பட்டமாய் பொய்யுரைத்தான்.

“உங்க ரெண்டாவது பொண்ணோட சம்மதம் தான் வேணும் மாமா அன்னைக்கே கேட்டுருப்பேன் ஆனா.. டைம் செட் ஆகலை. திவ்யாவை நா கல்யாணம் பண்ணிக்க விருப்பமா இல்லையான்னு இப்போ சொல்ல சொல்லுங்க, பிடிக்கலைன்னா.. வந்த வழியே போயிடுறேன் மாமா,

என்னை எல்லாருக்கும் பிடிக்கணும்னு அவசியமில்லை ஆனா இந்த கல்யாணம் எல்லாருக்கும் பிடிச்சதா இருக்கணும் என்ன கவி நா சொல்றது சரிதானே” என்று புருவம் உயர்த்தி கேட்கவும் தூக்கிவாரி போட்டது கவிபாரதிக்கு.

அங்கிருந்தவர்களின் பார்வை மொத்தமும் அவளை சூழ்ந்து கொள்ள,

“டேய் ஜீவா இது ரொம்ப ஓவர் சொல்லிட்டேன் சின்ன பொண்ணுடா நீ விளையாடுறது தெரியாம அழுதுற போறா”, அவளுக்காக பரிந்து பேசினான் திவாகர்.

“யாரு அவளா அழுவா உங்களை பிடிச்சிருக்கு மாமான்னு சொல்றாளா பாரு அழுத்தமா நின்னுட்டு இருக்கா, மத்தவங்களை தான் அழவைப்பாளே தவிர இவ ஒரு நாளும் அழமாட்டா” என்று இருவரும் ரகசியமாய் பேசி கொள்ள,

“அன்னைக்கு அவ அப்டி பேசுனதுக்கு நா உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன் மாப்பிள்ளை” என்று இடையிட்ட சிவநேசன், “சின்ன பொண்ணு தெரியாம பேசிட்டா அவ பேசின எதையும் மனசுல வச்சுகதீங்க திவ்யா அவளை விட்டுட்டு வேற வீட்டுக்கு போயிருவான்ற பயத்துலயும் பாசத்துலயும் தான் அப்டி பேசிட்டா” என்று விளக்கம் கொடுத்தவரின் மனம், காரணம் அறிந்த பின் தான் அமைதி அடைந்தது.

“பெரிய வார்த்தை பேசாதீங்க ண்ணா. ஜீவா என்ன விளையாட்டு இது உள்ள வா” என்று வேகமாய் அழைத்தார் அபிராமி.

“பெரியம்மா நீங்க தானே சொல்லிருக்கீங்க யாரோட மனசையும் காயப்படுத்த கூடாதுன்னு, திவ்யாவும் நானும் சந்தோஷமா வாழணும்னா உங்க எல்லாரையும் விட கவியோட சம்மதம் எனக்கு வேணும்” என்று உறுதியாக நின்றவனை கணவன் மனைவி இருவரும் மலைப்பாக பார்த்தனர்.

‘அய்யோ…’ என்று சுற்றி இருந்த உறவுகளை பார்த்தவள் உள்ளுக்குள் நொந்து கொண்டாள்.

“டேய் ஜீவா….”.

“ப்ச் என்னடா, கொஞ்ச நேரம் சும்மா இரு கடையில என்ன பேச்சு பேசுனா இப்போ பேசுறாளா பாரு அடக்கம் அமரருள் ஊய்க்கும்ன்ற மாதிரி நின்னுட்டு இருக்கா கொஞ்சம் அலற வைக்க வேணாமா” என்று கிசுகிசுப்பாய் கூறி திவாகரின் வாயை அடக்கினான் ஜீவானந்தம்.

“கவி கண்ணு என்னடா அமைதியா நிக்கிற மாமாகிட்ட பிடிச்சிருக்குன்னு சொல்லு கண்ணு, இந்த கல்யாணத்துல சம்மதம்னு சொல்லு கண்ணு” என்று நேசமணி தூண்ட,

“சொல்லு கவிம்மா மாப்பிள்ளை தான் கேக்குறாருல பிடிச்சிருக்குன்னு சொல்லேன்”, சிவநேசன் அம்பிகா இருவரும் சேர்ந்து கொண்டனர்.

‘இது என்னடா தொல்லையா போச்சு’ என்று உள்ளூர அலுத்து கொண்டவள் “எனக்கு பிடிச்சிருக்கு” என்றாள் தலையை ஆட்டி மெல்லிய குரலில்.

“ஹான் சரியா கேட்கலை எனக்கு காது கொஞ்சம் மந்தம் சத்தமா சொல்லு”, வேண்டுமென்றே சொல்ல,

“எனக்கு உங்களை பிடிச்சிருக்கு திவ்யா அக்காவை நீங்க கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு எந்தவித ஆட்சோபணையும் இல்லை”.

“ப்ச் நா எக்ஸ்பட் பண்ண மாதிரி வரலை” என்று அவளின் பொறுமையை மேலும் சோதித்தவன் “சிரிச்ச முகமா மாமான்னு சேத்து சொல்லு கவிபாரதி” என்றான் ஜீவானந்தம்.

“டேய் ஜீவா எதுக்குடா இப்டி அலம்பல் பண்ணிட்டு இருக்க நல்ல நேரம் முடியிறதுக்குள்ள நிச்சயத்தை முடிக்கணும் இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு வந்த வேலைய பாக்காம என்னடா விளையாட்டு”, சிரிப்பும் சலிப்பும் சேர்ந்து ஒலித்தது அபிராமியினிடத்தில்.

“பெரியம்மா அதான் அஞ்சு நிமிஷம் இருக்கே கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையா வரனுமா வேண்டாம்ணு இப்போ தெரிஞ்சிடும்” என்று கவிபாரதியை பார்த்தே பேசினான்.

பொறுத்தார் பூமியாள்வார் போல வாசலில் நின்று அவன் செய்யும் ரோதனைகளை பொறுமையாய் பார்த்து கொண்டிருந்தனர் அனைவரும்.

தாய் தந்தையின் முகத்தை பார்த்தவள் அதில் மறைமுகமாய் தேங்கி இருந்த கலக்கம் கண்டு அவன் கூறியபடி சொல்லலானாள் கவிபாரதி.

“உங்களை.. எனக்கு பிடிச்சிருக்கு! அக்காவை நீங்க கல்யாணம் பண்ணிக்கிறதுல, எனக்கு எந்த ஆட்சோபணையும் இல்லை மாமா” என்றாள் மனதோடு ஒத்திகை பார்த்து கொண்டதை.

Advertisement