Advertisement

கேட்கவா? வேண்டாமா? கேட்டால் சரியென்ற சம்மதம் கிடைக்குமா? எப்படி தொடங்குவது மனம் சிந்தனையில் சிதறிய அடுத்த கணமே,

கேட்காமல் இருக்க முடியாதே யார் தடுத்தாலும் சரி நிச்சயதார்த்திற்கு சென்றே ஆகவேண்டும் முரண்பட்ட மனம் முண்டியது.எழுந்ததில் இருந்து இதே எண்ணம் தான் அவள் சிந்தனையில்.

உறங்கி எழுந்ததுமே கேட்க வேண்டும் என்று இருந்தவளுக்கு சூழ்நிலை வாய்க்காமல் போக வெளியே சென்றவனின் வரவை எண்ணி காத்திருந்தாள் காயத்ரி.

“ஏய் காயத்ரி இங்க வா” அதட்டலாய் வந்த குரலில் திடுக்கிட்டு போனவள் கூடத்திற்கு விரைந்தாள்.

என்னவோ ஏதோ என்று மனம் அடித்து கொண்டது.

“சொல்லுங்க அத்தை” என்று வந்து நின்றவளிடம் முறைப்பை காட்டியபடி, 

“என்னடி காஃபி இது என்னத்தையோ கலந்து கொண்டு வந்து கொடுத்துருக்க ஒரே கசப்பு வாயில வைக்க முடியலை.வரவர உன்னோட கவனம் வேற எங்கயோ இருக்கு! கொஞ்சம் இங்க இருக்குறவங்க மேலயும் கவனம் செலுத்தப்பாரு காஃபியா இது”,ணக்கென்று டம்ளரை முன்னாள் இருந்த டேபிளில் வைக்க வைத்த வேகத்தில் டம்ளர் நிலை பெறாமல் கீழே விழுந்து உருண்டது.

“வேற காஃபி போட்டு கொண்டு வா ஒரு காஃபி போட தெரியலை எல்லாம் என்னோட தலையெழுத்து  இவ தான் வேணும்னு வந்து நின்னவன்கிட்ட அப்பவே இவ சரிவர மாட்டான்னு சொல்லிருக்கணும் பையன் ஆசைப்பட்டுடானேன்னு தலைய ஆட்டுனதுக்கு இப்போ அனுபவிக்கிறேன்”, கௌரியின் பேச்சில் உள்ளே எரிமலையாய் கனன்றது அதே நேரம் பேச்சின் வீரியம் தாங்காமல் விழிகளும் கலங்கிட,

துடைத்து கொண்டவள் “வேற போட்டு கொண்டு வறேன் அத்தை” என்று கீழே விழுந்த டம்ளரை எடுத்து கொண்டு சென்றவள், சென்ற வேகத்தில் வந்து தரையில் சிந்தியதை துடைத்து விட்டு சென்றாள் காயத்ரி.

வேறு டம்ளரில் பாலை ஊற்றி டிக்காஷன் கலந்து கொண்டு வந்து கொடுத்தவள் “அத்தை…” என்று தயங்க,

“என்ன”,வேகமாய் வந்தன வார்த்தைகள். 

“இன்னைக்கு ஜீவா அத்தானுக்கு நிச்சயதார்த்தம்”. 

கௌரியின் பார்வையில் அடுத்த வார்த்தையை நிறுத்தி கொண்டாள்.

“அதுக்கு!”.

எச்சிலை கூட்டி விழுங்கியவள் பதட்டமில்லாமல் மேலே தொடர்ந்தாள்,”இல்லை ஜீவா அத்தான் உங்க பையன் தானே அவரோட கல்யாணத்துக்கு நாம போகாம இருந்தா நல்லாவா இருக்கும் உங்களுக்கு பொண்ணை பிடிக்கிதோ இல்லையோ வாழ போற அவருக்கு பிடிச்சிருக்கும் போது நாமா தடங்கலா இருக்குறது சரியா இருக்காது அத்தை. விருப்பு வெறுப்புகளை தள்ளி வச்சிட்டு கல்யாணத்துக்கு போயிட்டு வரலாமே” என்றாள் காயத்ரி எத்தனை இயல்பாய் பேசுவதை போல நடித்தாலும் முகத்தில் பயத்தின் சாயல் படியவே செய்தது.

“அதானே பாத்தேன் கோழி ஏன் இன்னும் கூவாமா இருக்குன்னு இதான் விஷயமா ஒரு தடவை தப்பு பண்ணது போதாது மறுபடியும் அதே தப்ப பண்ண சொல்றியா!, அவனுக்கு எப்போர்பட்ட இடத்துல பொண்ணு பாத்துருக்கேன்னு தெரியுமா அவனை ஆள வச்சு அழகு பாக்குறதை விட்டுட்டு வேலைக்கு போய் சம்பாதிக்கணும்னு அவனுக்கென்ன தலையெழுத்தா?,

கல்யாணத்தை எப்டி நிறுத்துறதுன்னு தெரியாம நானே தவிச்சுக்கிட்டு இருக்கேன் ஆசீர்வாதம் பண்ணலாம்னு அழைக்க வந்துட்ட எனக்கு தெரியாது எப்போ போகணும் போக கூடாதுன்னு போய் வேலைய பாரு”, இருந்த கடுப்பையெல்லாம் மொத்தமாய் கட்டிவிட்டார் கௌரி.

திருமணத்தை நிறுத்துவதற்கு திட்டம் வகுத்தவரிடம் வலுக்கட்டாயமாக வாங்கி கட்டி கொண்டவள் தலையை தொங்க போட்டுக்கொண்டே சமையல் அறைக்குள் மறைந்து கொண்டாள்.மனதோடு பொறுமி தள்ளினாள்.

இதுநாள் வரை இல்லாத பாசம் இப்போது ஏனோ? ஐந்து வயதில் அம்போ..வென விட்டுட்டு வந்தது இப்போது நினைத்து பார்க்க எண்ணவில்லையோ! இருக்கும்!, நேரத்திற்கு ஒன்றை பேசும் மனுஷியிடம் கடந்த கால நினைவுகள் எல்லாம் எப்படி இருக்கும் நினைத்து பார்த்திருந்தால் இப்படியெல்லாம் பேசுவாறா என்ன ஜென்மமோ…! தலையில் அடித்து கொள்ளாத குறையாக கோபமாக கடகடவென வேலைகளை செய்து முடித்தவள் அறைக்கு செல்ல, 

குளியலை முடித்து கொண்டு வெளிப்பட்டான் தமிழ்ச்செல்வன்.

அரவமில்லாமல் வந்தவனை கண்டு விழித்தவள்”நீங்க எப்போ வந்திங்க உள்ள வந்ததை நா பாக்கவே இல்லையே” வியப்புடன் கேட்டு உள்ளே சென்று சலவைக்கு சென்று வந்த துணியில் ஒன்றை எடுத்து நீட்டினாள்.

“நீ வேலை பாத்துட்டு இருந்த அதான் தொந்தரவு பண்ணலை அம்மா ஹால்ல தான் உக்காந்துட்டு இருந்தாங்க அதான்…” என்றவன் காயத்ரியின் கழுத்தில் கரத்தினை மாலையாய் கோர்த்து கொண்டான்.

விழி சுருக்கி என்னவென புருவம் உயர்த்தியவளிடம் “காலையில கவனிக்க மறந்துட்டேன் அதான் இப்போ கொஞ்சம் கவனிக்கலாமேன்னு…” என்று இழுக்க,

ஆதவன் தழுவிய ஆம்பல் போல பெண்மையின் வெட்கம் இதழ்விரியா சிரிப்பாய் வெளிப்பட்டது.

“வேலைக்கு போகணும் ஞாபகம் இருக்கா”. 

“அதை போஸ்ட் பண்ணிட்டா போச்சு ஒருமணி நேரம் கழிச்சு போனா பரவாயில்லை பேசண்ட் இன்னைக்கு கம்மி தான்” என்று அசால்ட்டாக தோளை குலுக்கினான் தமிழ்செல்வன்.

“ம்ஹும்… போஸ்ட் பண்ணுவிங்க பண்ணுவிங்க மனோதத்துவ டாக்டரே மட்டம் போட நினைக்கிறீங்களோ அதெல்லாம் இங்க நடக்காது கீழ யார் இருக்காங்கன்னு தெரியுமா இல்லை ஞாபகபடுத்தவா” என்று சீண்டியவள் அவன் பார்வையில் தலை தாழ்த்தி கொண்டாள்.

“என்ன பேச்சை காணோம்”, அதக்கி வைத்த சிரிப்பை ஒட்டி சீண்டல் வெளிப்பட்டது.

“உங்களுக்கு எப்பவுமே விளையாட்டு தான் போங்க தமிழ். டைம் ஆச்சு டிஃபன் எடுத்து வைக்கிறேன்” என்று நழுவ முற்பட்டவளை பிடித்து கொண்டவன் எண்ணியதை செயலில் காட்ட, 

விலக்கி வைக்க தோன்றிய மனம் உருகி கரைந்து அவன் நெஞ்சில் தஞ்சமடைந்தது.கண் மூடி சாய்ந்தவளை பிரித்து நிறுத்தியவன் முகமெங்கும் இதழ் பதிக்க சொக்கி தான் போனாள் பெண்ணவள். சற்று முன் பேசிய பேச்சுக்கள் ஓசையின்றி காணாமல் போக, இமை மூடி கிறங்கி நின்றவளை இமைக்காமல் பார்த்தவனின் சிந்தையில் வேறு விதமான எண்ணங்கள் உதித்தெழுந்த நொடி!.தலையை உலுக்கி கொண்டவன் விறுவிறுவென சத்தமில்லாமல் வெளியேறிவிட்டான்.

சட்டென உணர்வு பெற்று மோனநிலை கலைத்து விலகி சென்றவனை தேட கீழே கேட்டது  அவன் சத்தம். ஏமாற்றம் ஏக்க மூச்சாய் வெளிப்பட, துவண்டு தரையில் அமர்ந்தாள் காயத்ரி. கணவன் மனைவி உறவு என்பது அவர்களுக்குள் வெறும் ஆதாரம் மட்டுமே, இது ஒன்றும் முதல் முறை அல்ல நெருங்கி வருவதும் உணர்ச்சிகளை தட்டி எழுப்புவதும் பின்  காரணமில்லாமல் விலகி செல்வதும் தினசரி நடப்பது தான். காரணம் என்னவென அவனும் கூறியதில்லை அவளும் கேட்டதில்லை. காரணம் தெரியாத அறிந்து கொள்ளாத நூலிழை விரிசல் இன்று வரை தொடர்கிறது இருவருக்குள்ளும்.

“காயத்ரி” என்ற அழைப்பு குரல் கேட்டு ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் நெஞ்சோடு புதைத்து கொண்டு கீழே விரைந்தாள்.

“ஏண்டி வேலைக்கு கிளம்புறவனை கவனிக்கிறத்தை விட்டுட்டு ரூமுக்குள்ள என்ன வேலை” என்றதும் தானாக பார்வை அவன் புறம் திரும்பியது.

“கேள்வி கேட்டது நானு அங்க என்ன பாக்குற அவனுக்கு சாப்பாடு எடுத்து வை” என்று அதிகரமாய் பணிக்க,

எந்த வித சலனமோ சபலமோ இல்லாமல் உணர்ச்சிகளை துடைத்தெறிந்த முகத்துடன் அவனுக்கு பரிமாறினாள் காயத்ரி. அவள் மனம் படும்பாட்டை அறியாமல் இல்லை, அவனுக்கும் ஆசைகள் இல்லாமல் இல்லை ஆனால் விலகி இருப்பதற்கான காரணத்தை நினைக்கையில் ஆசைகள் அனைத்தும் அடங்கி போக, வேண்டுமென்றே அவளை விட்டு விலகினான் தமிழ்ச்செல்வன்.

ஏமாற்றம் அடைந்த மனதை இயல்ப்பிற்கு கொண்டுவர எண்ணி “காயு ஈவ்னிங் கிளம்பி இரும்மா வெளிய எங்கயாவது போயிட்டு வரலாம் இன்னைக்கு சீக்கிரமே வீட்டுக்கு வந்துடுறேன்” என்றான் உணவை வாயில் திணித்து கொண்டே,

“இல்லை தமிழ் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு அடுத்த முறை பாத்துக்கலாம் அம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாம்னு இருக்கேன் நீங்க சரின்னு சொன்னா போயிட்டு ரெண்டு நாள் இருந்துட்டு வறேனே”, அனுமதி கேட்டு அவன் முகத்தை பார்த்தாள் காயத்ரி.

கோபமோ என எண்ணியவன் அவளை வற்புறுத்தாமல் “அம்மா கிட்ட கேட்டுட்டு போயிட்டு வா” என்று அவள் முகம் பாராமல் சொல்லிவிட்டு கைகழுவி, அவள் முந்தானையில் கைதுடைத்து விட்டு கௌரியிடம் விடைபெற்று சென்றுவிட,

இயலாமை நிறைந்த கோபம் நெஞ்சை நிறைத்தது. நிற்க, நடக்க, பேச, அழுக, அனைத்திற்கும் அம்மாவிடம் தான் கேட்க வேண்டுமா? சரி போய் வா என்று ஒரு வார்த்தை சொன்னால் தான் என்ன ஏன் இத்தனை அவமதிப்பு, ஏன் இத்தனை நிராகரிப்பு, ஏன் இத்தனை பெரிய ஏமாற்றம். தன்னை பிடித்திருக்கிறது ஆனால் அதை வெளிக்காட்டிட கூடாது! இது என்ன மனோபாவம் மனோதத்துவம் அறிந்தவனுக்கு என் மனம் மட்டும் புரியமால் போனதா?நெஞ்சுகுழியில் பாரம் அழுத்த அழுகை ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்பட்டது.

நடந்த அனைத்தையும் பார்த்து கொண்டு கல்லுபிள்ளையாரை போல ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்ப்பது போல பாவனை செய்துகொண்டிருந்த கௌரி அவளோ வந்து பேசட்டும் என்று மெத்தனமாய் அமர்ந்திருக்க,

“அத்தை” என்றாள் கமறிய குரலில்.

என்னவென பார்த்தவரிடம் “ஊ..ஊருக்கு போயிட்டு வறேனே ரெண்டு நாள் அம்மா கூட இருந்துட்டு வறேன் போன வாரமே போக வேண்டியது” என்று நிறுத்தி கொண்டவள் என்ன பதில் வருமோ என்ற ஆவலை தேக்கி கொண்டு நின்றாள்.

“என்ன திடீர்னு அம்மா பாசம்! அவங்களே கூப்பிட்டாலும் போகமட்ட” என்று ஆராயும் தன்மையோடு கேட்டவர் “ஏன் அடுத்தவாரம் போக கூடாதா? இன்னைக்கே போகணும்னு எதுவும் கட்டாயமா காயத்ரி!”.

துருவி கேட்டவரை மடக்கிவிட வேண்டும் என்ற வேகத்தில் “இல்லை அத்தை அடுத்தவாரம் போலாம் ஆனா.. அவரு வெளியூர் போறாரு, அந்த நேரத்துல உங்களை தனியா விட்டுட்டு போனா நல்லா இருக்காது. ஏற்கனவே நீங்க ஹாட் பேசண்ட் நாங்க ரெண்டுபேரும் இல்லாத நேரத்துல அட்டாக் வந்துருச்சுன்னா என்ன அத்தை பண்றது” என்று அக்கறை காட்டி பேசியவள் முகத்தை வருத்தமாக வைத்து கொண்டாள்.

‘பாவி விட்டா இவளே நம்மளை கொன்னுருவா போல என்ன வார்த்தை பேசுறா!’ என்று மனதில் நினைத்து கொண்டு முறைப்பு காட்டினார் கௌரி.

“போயிட்டு வரவா அத்தை” என்று பவ்யமாய் கேட்டவளை அனுப்பி வைக்க மனமில்லை என்றாலும் மறுத்த கோபத்தில் எதையாவது கலந்து கொடுத்து கொன்றுவிடுவாள் என்ற வீண் சந்தேகம் பயத்தை கொடுக்க,

“சரி சரி போயிட்டு வா உங்க அம்மா வீட்டுக்கு தானே போற பொய் சொல்லிட்டு வேற எங்கயும் போகலையே”, முத்தாய்ப்பாய் தொடங்கியது வார்த்தை. 

“அய்யோ என்ன வார்த்தை சொல்லிட்டீங்க பொய்ன்னா என்னனு கூட எனக்கு தெரியாது அத்தை இதுவரைக்கும் அரிச்சந்திரனுக்கு அடுத்தபடியா இந்த பொய்யான உலகத்துல பொய் சொல்லாம உங்க மகன் கூட வாழ்ந்துட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா… என்னையவே சந்தேகப்படுறீங்க” என்று போலியாக கண்களை கசக்கினாள்.

“சரி சரி அழுக்காத போயிட்டு வா எனக்கும் முக்கியமான வேலை இருக்கு ரெண்டு நாள் என்ன, கூட ஒரு நாள் இருந்துட்டே வா ஒன்னும் அவசரமில்லை இங்க நீ வந்து கிழிக்கிறதுக்கு எதுவும் இல்லை” என்று அனுமதி அளித்த வேகத்தில் குட்டு வைத்து பேச,

“ரொம்ப தங்க்ஸ் அத்தை” என்று நன்றி நவிழ்ந்தவள் குதூகலித்த உள்ளத்தை மறைத்து கொண்டு திரும்பி செல்ல,

“ஏய் நில்லு” என்ற கௌரியின் திடீர் குரலில் திரும்பி பார்த்தாள். 

“என்ன அத்தை எதுவும் வேணுமா?”.

“எனக்கு எதுவும் வேணாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கொடுத்தியே அதுவே போதும்” என்றவர், “கல்யாணத்துக்கு போகணும்னு அவ்ளோ தூரம் பேசினவ என்ன தீடீர்ன்னு அம்மா வீட்டுக்கு போயிட்டு வறேன்னு சொல்ற?, என்னை ஏமாத்திட்டு ஜீவா கல்யாணத்துக்கு போயிட்டு வரலாம்னு இருக்கியா, அப்டி ஒரு எண்ணம் தான் உன்னோட மனசுல ஓடிட்டு இருக்கா காயத்ரி!”, சட்டென கோபமாய் கேட்க,

“சொன்னேன் தான் ஆனா நீங்க தான் வேலைய பாருன்னு சொல்லிட்டீங்களே பின்ன நா எப்டி போறது”, முகம் கோணலாய் சென்றது.

“நீங்க சரின்னு சொன்னா தான் போவேன் அதுவும் நீங்க கூட வந்தா!” என்று நிறுத்தி, கௌரியின் யோசனை படர்ந்த முகத்தை உற்று பார்த்தபடி மேலே தொடர்ந்தாள்,

“நீங்க வர மாட்டீங்கன்னு தெரியும் கல்யாணத்தை நிறுத்தியே ஆகணும்ன்ற குறிக்கோளோட இருக்கீங்க. கல்யாணத்தை நிறுத்த கொஞ்சம் திங் பண்ணனும் அத்தை அதுக்கு தனிமை ரொம்ப… அவசியம். நா கிளம்பி போயிட்டா உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காதுல”, நைச்சியமாய் பேசினாள்.

காரியம் முக்கியம் என்பதை விட செல்லும் நோக்கம் என்னவென்பதை காட்டிகொள்ள கூடாது என்பதில் கவனமாக இருந்தாள் காயத்ரி. மனதில் உள்ள திட்டம் துளி அளவு கசிந்தாலும் பின் விளைவு வேறு விதமாக இருக்க கூடும் என்று சாமர்த்தியமாக பேசினாள்.

எளிதில் எதையும் நம்பிவிட கூடியவர் அல்ல கௌரி பேசுவதை வைத்தே அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை அறிந்து கொள்வார். காயத்ரியின் பேச்சை முழுதாக ஏற்று கொள்ள முடியவில்லை என்றாலும் ஓரளவு ஏற்று கொள்ள கூடியதாகவே இருந்தது. காரணம் திருமணத்தை நிறுத்தியே ஆக வேண்டுமென்ற எண்ணம்.

“என்னமோ சொல்ற சரி போயிட்டு வா ஆனா ஒன்னு, ஜீவா வீட்டுக்கு போனேன்னு தெரிஞ்சது பின் விளைவுகள் வேற மாதிரி இருக்கும் சொல்லிட்டேன்” என்று எச்சரிக்க,

“போ மாட்டேன் அத்தை” என்றவள் விறுவிறுவென மாடிக்கு விரைந்தாள்.

இரண்டு நாட்களுக்கு தேவையான துணிகளை முன்பே எடுத்து வைத்திருந்தாள் காயத்ரி. ஜீவாவின் திருமணத்திற்கு செல்வது தெரியவா போகின்றது என்ற எண்ணத்தில் உடை மாற்றி கொண்டு கீழே வந்து, கௌரியிடம் விடைபெற்று கொண்டு உற்சாகம் நிரம்பிய மனதுடன் கிளம்பி சென்றாள். பாவம் அப்போது தெரியவில்லை செல்லும் காரியம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று.

மணம் வீசும்…

Advertisement