Advertisement

“சரி போறேன்” என்றவள் கவிபாரதியை உடன் அழைத்து செல்ல, அதற்குள் தங்கள் தேர்வுகளை உறுதி செய்து தனியே எடுத்து வைத்திருந்தனர் பெரியவர்கள்.

புடவையில் அழகாய் மிளிர்ந்தவளை ஆசையோடு பார்த்தவள்”எல்லாமே நல்லா தான் இருக்கு ஆனா உனக்கு பிடிக்கலையே க்கா…” என்று ராகம் இழுக்க,

“ஏற்கனவே சொன்னது தான் கவி அதை பத்தி பேசுறதுக்கு எனக்கு விருப்பமில்லை அம்மா சொன்ன மாதிரி அப்பாவுக்கு பாரமா இருக்க விரும்பலை என்னோட துக்கம் என்னோடவே போகட்டும், முடிஞ்ச அளவு கோபப்படாம பேச பழகு  எல்லாரையும் சங்கடப்பட வைக்காதா,துடுக்கா பேசுறது வேற மத்தவங்க முன்னாடி குடும்பத்து ஆளுங்களை தூக்கி எறிஞ்சு பேசுறது வேற,

அவங்க நம்ம அத்தை அப்பா கூட பொறந்தவங்க எல்லார் முன்னாடியும் அவங்களை அப்டி பேசலாமா அவங்க மனசு எவ்ளோ கஷ்டப்படும் முக்கியமா நேசமணி மாமா எவ்ளோ வருத்தப்படுவாரு”,எடுத்து சொல்லும் போதுதான், தான் பேசியது எத்தனை முட்டாள் தனம் என்று புரிய தொடங்கியது கவிபாரதிக்கு,

“வீட்டுக்கு போனதும் அத்தை கிட்ட மன்னிப்பு கேளு அவங்க முகமே வாடி போச்சு” என்றவள் அழகாய் மடிப்பு எடுத்து வைத்து ஓகே வா என கேட்க,

 “ம்ஹும்” என்று கவிபாரதி தலையாட்ட, உடைமாற்று அறையில் இருந்து வெளியே வந்தவளை அதிசயித்து பார்த்தனர் அனைவரும்.

நீண்ட காலத்திற்கு பிறகு மகளை அக்கோலத்தில் பார்த்ததும் சிவநேசனுக்கும் அம்பிகாவிற்கும் கண்கள் கலங்கியது.

தேவதையை போல அழகாய் தென்பட்டவளை எவரும் அறியாமல் அலைபேசியில் படம் பிடித்து கொண்டவன் இதமான பார்வையால் வருடி அருமை என்று ஆள்காட்டி விரலை கட்டை விரலின் அடியில் மடக்கி மூன்று விரல்களை காட்ட, சட்டென பார்வையை விலக்கி கொண்டாள் திவ்யபாரதி.

“அழகா இருக்க திவ்யா” என்று கன்னம் வருடி திருஷ்டி கழித்த அபிராமி ஜீவாவை மெச்சுத்தலாய் பார்க்க, மீசை கடியில் மிளிர்ந்த ஆளுமை நிறைந்த வெட்கத்தோடு புன்னகைத்தான்.

“ஜெயா நா வெளிய இருக்கேன் நீங்க எடுத்துட்டு வாங்க” என முகத்தை பார்க்காமல் கூறிவிட்டு வேகமாக சென்ற நேசமணியை புரியாமல் பார்த்த ஜெயசித்ரா பின்தொடர்ந்து செல்ல,

எவரும் அறியா வண்ணம் மறைந்து நின்று கண்ணீர் வடித்து கொண்டிருந்தார் நேசமணி.

வேகமாக அருகில் சென்றவர் “என்னங்க என்னாச்சு எதுக்கு இப்போ அழுதுட்டு இருக்கீங்க உடம்பு எதுவும் முடியலையா?” என்று பதட்டமும் பயமும் கலந்து கேட்ட, மனைவியின் கரத்தை பற்றி கொண்டார்.

“பார்த்திபன் உயிரோட இருந்திருந்தா திவ்யா இப்போ நம்ம வீட்டுக்கு மருமகளா வந்திருப்பா! நமக்கு கொடுத்து வைக்கலையே ஜெயா” என்று மனம் உடைந்து அழுதவரின் பேச்சில் கோபம் எழுந்தாலும் அதில் மறைந்திருந்த ஏக்கம் ஜெயசித்ராவை நிலைகுலைய வைத்தது.

உண்மை தான் அந்த எண்ணம் அவர் மனதிலும் தோன்றாமல் இல்லை ஆனால் இல்லாது போன உறவு அதை பற்றி எண்ணி என்ன பயன் என்று மனதை திடப்படுத்தி தனக்கு தானே சமாதானம் அடைந்திருந்த வேளையில் கணவரின் வார்த்தை பிடித்து வைத்திருந்த திடத்தை அசைத்தது.

நிற்க முடியமால் சுவரில் சாய்ந்து கொண்டவர் “என்ன பேசுறீங்க ஜீவாவும் நம்ம பையன் தான் திவ்யாவுக்கு நல்ல வாழ்க்கை அமைய போகுதுன்னு சந்தோஷப்படமா வருத்தப்படுறீங்க, அவன் விதி முடிஞ்சிருச்சு அதையே நினைச்சிட்டு இருக்கலாமா?,

நீங்க வருத்தபடுறது அண்ணனுக்கும் மதிணிக்கும் தெரிஞ்சதுன்னா ரொம்ப சங்கடப்படுவாங்க, முக்கியமா! திவ்யா நொந்து போயிருவா” என்று கன்னத்தில் வழிந்த உப்பு நீரை துடைத்து கொண்டு,

“கண்ணை துடைங்க போலாம் நாம தான் இந்த கல்யாணத்தை முன்ன இருந்து நடத்தணும் நிறைய வேலை இருக்கு” என்று திடம் சொல்லி அழைத்து சென்றார்.

தங்கையின் முகமாறுப்பாட்டை கண்டு கொண்ட சிவநேசன் “என்ன கண்ணு எங்க போயிருந்திங்க முகம் ஒரு மாதிரி சோர்ந்து போய் இருக்கு என்னாச்சு”என்று நேசமணியையும் ஜெயசித்ராவையும் மாறி மாறி பார்க்க,

“ஒன்னுமில்லைங்க ண்ணா கண்ணுல தூசி விழுந்திருச்சு அதான் முகத்தை கழுவிட்டு வந்தேன் என்னை காணோம்னு தேடிட்டு பின்னாடியே இவரும் வந்துட்டாரு” என்று முடிந்தளவு முகத்தில் மாற்றத்தை காட்டாது ஜெயசித்ரா இயல்பாய் பேச,

“ஆமா மாமா” என்று ஆமோதித்தார் நேசமணி.

அலசி ஆராய்ந்து கிட்டத்தட்ட ஐந்து மணிநேரமாய் திருமணத்திற்கான உடைகள் நகைகள் என அனைத்தையும் வாங்கி கொண்டு கடையில் இருந்து வெளியே வர,

“சாப்ட்டு போலாம் சிவநேசன் நேரமாச்சு வீட்டுக்கு போக இன்னும் நேரமாகிரும்” என்று ராகவேந்திரன் சொல்ல,

சரியென்றதும் அனைவரையும் உணவகத்திற்கு அழைத்து சென்றார்.

“என்ன வேணுமோ கேட்டு கூச்சப்படாம சாப்டுங்க. அம்மா திவ்யா உனக்கு பிடிச்சதை ஆர்டர் பண்ணி சாப்ட்டு அப்ப தான் கவிபாரதி மாதிரி போல்டா பேச முடியும்” என்று அமைதியாக அமர்ந்திருந்தவளை வம்புக்கு இழுக்க, சிரிப்பலை சன்னமாய் மிளிர்ந்தது அனைவரின் வதனத்திலும்.

“நா போய் வாஷ் பண்ணிட்டு வந்துடுறேன்” என்று எழுந்து சென்றவளை தொடர்ந்து திவகாரும் அதையே கூறிவிட்டு அவள் பின்னால் சென்றான்.

ஜீவா கூறியதை அவளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் ஜீவாவை பிடிக்கவில்லை என்பதற்கு என்ன காரணமென தெரிந்தால் அதை அவளிடம் தெளிவுபடுத்தி கொள்ளலாமே என்ற எண்ணத்தில் அவள் பின்னோடு செல்ல,

கலைந்த தலைமுடியை கண்ணாடியை பார்த்து சீர் செய்து கொண்டிருந்தாள் கவிபாரதி. பின்னால் வந்து நின்றவனை திரும்பி பார்க்காது புருவம் நெறித்தவள், வேகமாக கைகழுவி விட்டு நகர்ந்து செல்ல,

“ஒரு நிமிஷம் கொஞ்சம் பேசணும்” என்ற திண்ணம் பதித்த குரல் கேட்டு மகுடிக்கு பணிந்த நாகத்தை போல சட்டென நின்றவளுக்கு உள்ளே உதற தொடங்கியது. அறிமுகமில்லாதவனின் பேச்சுத்தொடர்பு எதனலோ என்ற கேள்வி நொடியில் மூளையில் தொக்கி நிற்க,

“என்ன?” என்றாள் தணிந்த குரலில் சுற்றும் பார்த்தபடி.

“கேக்குறேன்னு தப்பா நினைக்காதிங்க கேட்க நினைக்கிறதை அப்பவே சம்பந்தப்பட்டவங்க கேட்டு தெளிவு படுத்திக்கிறது என்னோட பழக்கம் எதுக்கு இவ்ளோ கோபம் இந்த கல்யாணம் நடக்குறதுல  விருப்பமில்லையா எங்க ஜீவாவை உங்களுக்கு பிடிக்கலையா பிடிக்காம போனதுக்கு காரணம் என்னனு தெரிஞ்சுக்கலாமா? “என்று அவள் பதிலை கேட்க ஆர்வம் கொண்டு கேட்டான் திவாகர்.

முணுக்கென்று கோபம் பொங்கிட,”இதை ஏன் நீங்க கேக்குறீங்க உங்க வேலை என்னமோ அதை மட்டும் பாருங்க தேவையில்லாத விஷயத்தை தெரிஞ்சுக்க  ஆர்வம் காட்டாதிங்க, உங்க பிரெண்ட சொல்லிருப்பாரே கல்யாணத்துல யாருக்கு விருப்பமில்லைன்னு” என்று முகத்தில் அடித்தாற் போல பேசிவிட்டு சிலுப்பி கொண்டு சென்றவளை பின் தொடர்ந்தவனின் பார்வை இதமாய் சிரித்தது.

என்ன தான் வேகமாக பேசிவிட்டு வந்தாலும் உள்ளே படப்படப்பின் தாக்கம் குறையவில்லை ஜீவாவிடம் சொல்லிவிடுவாரோ என்ற எண்ணம் பயத்தை கொடுக்க, வந்து கொண்டிருந்தவனை ஓரபார்வையால் பார்த்தவள் அமைதியாக உணவை விழுங்கினாள்.

கைகழுவி வந்தவன் ஜீவாவின் காதில் எதையோ சொல்ல, அவளை ஏறிட்ட ஜீவாவின் இயல்பான பார்வை கூட கோபமாய் தென்பட்டது அவளுக்கு, இதய துடிப்பு வேகம் பெற்று, ஏசி அறையிலும் வியர்வை துளிகள் நெற்றியை அலங்கரிக்க, துப்பட்டாவை கொண்டு துடைத்தவள் திவாகரை பார்த்தாள்.

‘ஆரியமாலா என்ன ஒரு பயம்’ என்று உள்ளுக்குள் எண்ணியவன் இதழ் ஓரம் துளிர்த்த குறுநகையை மறைத்து கொண்டு உணவில் கவனம் செலுத்தினான் திவாகர்.

வெறும் ரசம் சாதத்தோடு உணவை முடித்து விட்டு எழுந்து கொண்டான் ஜீவானந்தம் அவனை தொடர்ந்து திவாகரும் எழுந்து கொள்ள,

“என்னடா”,ஜீவாவின் முகத்தில் திகைப்பின் ரேகைகள்.

“போதும் ஜீவா பசியில்லை” என்று மறுத்துவிட, அதற்கு மேல் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கவில்லை. உண்ணுவது அவரவர் விருப்பம் அதில் எப்போதும் தலையீட கூடாது என்பது ஜீவாவின் எண்ணம்.

அனைவரும் உணவை முடித்து கொண்டு கிளம்ப ஜீவாவின் பார்வையில் எதார்த்ததை மீறிய எதிர்பார்ப்பு. அவளாய் தன்னிடம் வந்து பேச மாட்டாள் என்று மனம் அறிந்திருந்திருந்தாலும் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தூண்டில் போட்டு மனதை இழுத்தது.

அவன் பார்வை திவ்யாவின் மீது படிந்திருப்பதை கண்டு கொண்ட ஜெயசித்ரா “திவிம்மா மாப்பிள்ளை கிட்ட போயிட்டு வறேன்னு சொல்லிட்டு வாடா” என்றதும்,

“ப்ச் சும்மா இருங்க அத்தை அவருக்கிட்ட நா எதுக்கு சொல்லணும். அதெல்லாம் ஒன்னும் வேணாம் நாம கிளம்பலாம் வீட்டுக்கு எப்போ போவேன்னு இருக்கு” என்று எரிச்சலை அடக்கி கொண்டு பேசினாள்.

“சொன்னா கேளுடா கட்டிக்க போற பொண்ணு நாலு வார்த்தை பேசனும்னு அவருக்கும் ஆசை இருக்காதா போய் சொல்லிட்டு வா கூட நாலு வார்த்தை ஆசையா பேசிட்டு வா”.

“என்ன பேச சொல்றிங்க?”, கோபமாய் கேட்டாள்.

“ப்ச் ஏதாவது பேசிட்டு வா சொல்லி கொடுத்து பேசறதுக்கு நீ என்ன சின்ன பிள்ளையா போ திவ்யா” என்று அவளை தள்ளிவிடாத குறையாக வற்புறுத்தினார் ஜெயசித்ரா.

சரியென்றவள் தயக்கத்துடன் அவன் அருகில் சென்று “நாங்க கிளம்புறோம்” என்று மேம்போக்காக சொல்லிவிட்டு திரும்ப,

“அவ்ளோ தானா” என்றான் அடுத்த வார்த்தையை எதிர்பார்த்து.

திரும்பி பார்த்தவளின் விளங்காத முக பாவனையில் “அவ்ளோ தானான்னு கேட்டேன் பேசுறதுக்கு இந்த ஒரு வார்த்தைய தவிர அடுத்து பேச எதுவுமில்லையா திவ்யபாரதி”.

“எதுவுமில்லை” என்று அழுத்தமான பார்வையில் இதமான கோபத்தை காட்டி விட்டு சென்றுவிட,

“ஃபீல் பண்ணாத ஜீவா நீ தேர்ந்தெடுத்த பொண்ணு தானே” என்று தோளில் கை போட்டு தேற்ற,

“லைட்டா ஃபீல் ஆகுது திவா” என்று கண்ணீரை துடைப்பது போல பாவனை செய்தவன் “அவ என்னோட சாய்ஸ் தான் பட் நோ பீலிங் அவ பாக்கலைன்னா என்ன நான் பாக்குறேனே காதலோட அது போதாதா? “என்று தோளை குலுக்க,

“குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலங்குற ம்ஹும்… சரி தான்!”, ஆமோதிப்பாக தலையாட்டினான் திவாகர்.

போய் வருகிறோம் என்று வந்தவர்கள் கூறிவிட்டு காரில் ஏறிக்கொள்ள உரிமையாக போகிறவளோ எதுவும் சொல்லாமல் முதல் ஆளாய் வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள். விடைபெற்று செல்லும் வேளையிலும் அவளை பார்த்தவன் அவளாய் பார்ப்பாள் என்று ஆவலோடு பார்க்க, ஏமாற்றமே பதிலாய் கிடைத்தது.

ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே

ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே… 

ஆகாயம் ஆகாத மேகம் உண்டோ கண்ணே….”

மணம் வீசும்

Advertisement