Advertisement

வேதியியல் துறை என்றதும் “அட நம்ம கவியும் அந்த படிப்பு தானே படிக்கிறா!” என்ற நேசமணி “பாடத்துல ஏதாவது சந்தேகம்னா கேட்டு தெரிஞ்சுக்கலாம் கவி கண்ணு நீ தான் நிறைய கத்துக்கணும்னு நினைக்கிறியே தம்பி பெரிய படிப்பு தான் படிச்சிருக்கு வாத்தியார் உத்தியோகம் பாக்குது” என்று பெருமையாய் சொல்லி சிரிக்க,

அடக்கமாய் சிரித்தவன் அவள் முறைப்பில் அடங்கி அமைதியானான்.

அடுத்த வார்த்தையை தொடர்வதற்குள் நான்காவது தளம் வந்துவிட,கதவு தானாக திறந்து கொண்டது.

எல்இடி விளக்குகளின் வெளிச்சமும் ஏசியின் மிதமான குளிரும் வெயிலின் நினைவை சற்று நேரத்திற்கு பின்னுக்கு தள்ளி இருந்தது. கண்ணை கவரும் நிறங்கள் ஆனால் அவை எதையும் ரசிக்க தோன்றவில்லை திவ்யாவிற்கு.

சில நிமிட பேச்சு வார்த்தையை முடித்து கொண்டு அபிராமி அம்பிகா ஜெயசித்ரா மூவரும் வந்த வேலையை தொடங்க, இடையில் வந்த அழைப்பை ஏற்று கருமமே கண்ணாக அலைபேசியில் வளர்மதியிடம் உரையாடி கொண்டிருந்தாள் திவ்யபாரதி.

“திவிம்மா இங்க வா போன் அப்றம் பேசலாம்” என்று அழைத்த ஜெயசித்ரா கையோடு அவளை அழைத்து வந்து அமர வைத்தார்.

“அத்தை…” என்று நொந்து கொண்டவள் வேறு வழியில்லாமல் பதுமையை போல அமர்ந்திருக்க,

ஒவ்வொரு புடவையையும் அவள் மீது வைத்து பார்த்த அபிராமி “இதை விட கொஞ்சம் நல்லதா விலை அதிகமா இருக்குறதுல காட்டுங்களேன்”, என்றதும் அதற்கேற்ற விதமாய் எடுத்து காட்ட,

யாரும் எதிர்பாராத விதமாய் “நா செலக்ட் பண்றேன் பெரியம்மா திவ்யாவுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு எனக்கு தெரியும்” என அவளை பார்த்து கொண்டே சொல்லியவன் ஒற்றை புருவம் உயர்த்தி பார்வையால் சிரித்தான்.

அவன் கூற்றில் திகைப்பும் கோபமும் மேலோங்க எவரும் அறியாமல் முறைத்து பார்த்தவள் பார்வையால் மிரட்ட, இளநகை குறும்பாய் தவழ்ந்தது அவன் இதழில்.

‘நடத்துடா நாடகத்தை’ என்றவாறே அரகேற்றத்தை வேடிக்கை பார்க்க ஆர்வம் கொண்டான் திவாகர்.

“தாரளமா ஜீவா உன்னோட வருங்கால மனைவிக்கு நீயே செலக்ட் பண்ணு அதான் சரியா இருக்கும்” என்று அபிராமி அனுமதி அளிக்க,

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் அக்காவுக்கு எந்த கலர் பிடிக்கும்னு அவளுக்கு தான் தெரியும் பிடிக்காத ஒன்னை அவகிட்ட கொடுத்துறாதீங்க” என்று இருபொருள் பட வேகமாக பேசியவளை,

“கவி” என்று அதட்டி அடக்கினார் அம்பிகா.

இடம் பொருள் பாராமல் மரியாதை இல்லாமல் பேசுபவளை எதுவும் சொல்ல முடியாமல் சங்கடம் பொதிந்த பார்வையில் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்தபடி தயங்கி நிற்க, அமைதியை தனக்கு சாதகமாக எண்ணி மேலே தொடந்தாள் கவிபாரதி.

“ப்ச் சும்மா இருங்கம்மா அக்காவுக்கு எது பிடிக்கும்னு  அவளை தவிர உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிறீங்க, கொஞ்சம் அவக்கிட்டயும் ஒபினியன் கேளுங்க சும்மா நல்லது நல்லதுன்னு திணிக்காதீங்க”.

“கவி” என்று அடிக்குரலில் அடக்க முற்பட்ட ஜெயசித்ராவை வெறுப்பாய் பார்த்தாள்.

“எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் அத்தை போதும் உங்க நல்லது” என்றவளை,

“வாயை மூடு அவங்க உன்னோட அத்தை எந்த இடத்துல யார் கிட்ட எப்டி பேசுறோம்னு யோசனை பண்ணி பேசு வாய் இருக்குன்னு இஷ்டத்துக்கு பேசாத வரும் போதே சொல்லி தானே கூட்டிட்டு வந்தேன் எங்களுக்கு இல்லாத அக்கறையா அவமேல உனக்கு இருக்க போகுது வயசுக்கு பிள்ளைன்னு பாக்குறேன் இன்னொரு முறை யாரையும் மரியாதை இல்லாம பேசுன பேசுறதுக்கு வாய் இருக்காது சொல்லிட்டேன் என்றார் அம்பிகா கோபம் அளவில்லாமல் பொங்கி வழிந்தது அவரிடத்தில்,

இதே வீடாக இருந்திருந்தால் கன்னம் பழுத்திருக்கும் ஆனால் பொது இடம் ஆயிற்றே அதட்டி பேசுவது கூட அபத்தமாக தெரிந்தது அவர்களுக்கு. கடுகடுவென உள்ளே கோபம் தகிக்க அடக்கி கொண்டு இளையமகளை முறைத்து பார்த்தார் சிவநேசன்.

ஜீவா சொல்லியபோது அலட்சியமாய் எடுத்து கொண்ட திவாகர் தற்போது அவள் பேசிய பேச்சில் திகைத்து நின்றான்.

அங்கிருந்த அனைவரும் ஒரு மாதிரியாக பார்ப்பதை உணர்ந்து,”விடுங்க மதிணி அக்காவோட விருப்பத்தை பெருசா மதிக்கிறா அடுத்தவங்க அபிப்பிராயம் முக்கியம் தான் ஆனா அதை விட முக்கியம் நமக்கு பிடிச்சதா இருக்கணும்” என்றதும் திவ்யாவை பார்த்தாள் கவிபாரதி. அவளின் பார்வையின் அர்த்தம் உணர்ந்து வேறு புறம் முகத்தை திரும்பி கொள்ள,

“சின்ன பொண்ணு தானே விடுங்க” என்றதும் முகத்தை திருப்பி கொண்டு நின்றவளை பார்த்து சிறு சிரிப்பை உதிர்த்தவர்,

“ஆரம்பத்துல எல்லாமே கஷ்டமா தான் இருக்கும் அதுவே பழக பழக ஏத்துக்கிற பக்குவம் வந்திடும் திவ்யா ஏத்துக்க பழகிக்கிட்டா நீயும் பழகிக்கோ ஒத்து வருமான்னு நினைக்கிற வாழ்க்கை தான் நமக்கு எதிர்பாராத சந்தோஷங்களை கொடுக்கும். இன்னைக்கு புரியாது நிச்சயம் ஒரு நாள் புரியும் என்று தன்மையாய் கவிபாரதியிடம் சொன்னவர்,

“ஜீவா திவ்யாவுக்கு என்ன கலர் பொருத்தமா இருக்கும் அது அவளுக்கு பிடிக்குமான்னு பாத்து கேட்டு எடுடா” என்று சூழ்நிலையை இயல்பாக்கினார்.

அவரின் பெருந்தன்மையான வார்த்தையை கேட்டு திவ்யாவிற்கு சங்கடம் உண்டானது “சாரி ஆன்ட்டி அவ ஏதோ வேகத்துல பேசிட்டா” என்றாள் மன்னிப்பு வேண்டும் குரலில் அவருக்கு மட்டும் கேட்கும் விதமாய்.

“விடும்மா” என்று தோளை தட்டி கொடுத்தவர் “எது நல்லா இருக்குன்னு பாரு” என்று புன்னகை மாறாது சொல்ல, அவன், தேர்ந்தெடுப்பது பிடிக்கவில்லை என்றாலும் அபிராமியின் விருப்பத்திற்காக சரி என்று அவன் தேர்வை ஏற்று கொள்ள தயாரானாள்.

கவிபாரதியின் பேச்சில் தன்வந்திரி என்ன பெண் இவள் என்ற தோரணையில் கடுகடுவென பார்த்து கொண்டிருக்க,

“ஏங்க இந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா எப்டி இருக்கும்” என்று ஆசை அலைமோத ஷியாமளா சொல்லவும்,

“என்ன?” என்று பதறி நெஞ்சை பிடித்தார் தன்வந்திரி.

“உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா மட்டு மரியாதை இல்லாம பேசுற இந்த பொண்ணா நமக்கு மருமக. வேணாம் ஷியாமா இந்த விபரீத ஆசை, அவனுக்கு வயசு ஏறிட்டு போனாலும் பரவாயில்லை இப்டிப்பட்ட பொண்ணு வேணாம்” என்றார் குரலில் உறுதி பதித்து.

“ப்ச் மனசுல உள்ளதை பேசினா மரியாதை இல்லாம பேசுறான்னு அர்த்தமா நா முடிவு பண்ணிட்டேன்”.

“என்னனு?”.

“இவ தான் அவனுக்கு ஏத்த சரியான ஜோடின்னு. அதனால நேரம் கடத்தாம கல்யாணம் முடியிறதுக்குள்ள அவளை நம்ம பையனுக்கு பேசி முடிச்சிடணும்’ என்ற மனைவியின் கூற்றில் அதிர்ந்து தான் போனார் தன்வந்திரி.

“உனக்கு எதுவும் ஆகிருச்சா ஷியாமா” என்று கேட்டார் தீவிரமான குரலில்.

“ப்ச் எனக்கு ஒன்னும் ஆகலை ஒருத்தரோடு குணத்தை பார்த்ததும் முடிவு பண்ண கூடாது பழகி பார்த்த பிறகு தான் முடிவு பண்ணனும். அதனால… என்ன சொல்றேனா! முதல அந்த பொண்ணுகிட்டயும் அவளோட குடும்பத்து ஆளுங்க கிட்டயும் பழகலாம், அப்றம்… பேசலாம்” என்று இருவரும் ரகசியமாக பேசி கொண்டிருக்க,

“இங்க என்ன விவாதம் போயிட்டு இருக்கு” என்று இடை புகுந்த மைந்தனை கண்டு திருதிருவென விழித்தனர் இருவரும்.

“வாத்தியார்ன்றது சரியாதான் இருக்கு” என்று வாய்குள்ளேயே முணுமுணுத்தவர் மாட்டிக்கொண்ட திருடனை போல விழிக்க,

“நீங்க முழிக்கிற முழியே சரியில்லையே என்ன திட்டம்” என்று புருவம் உயர்த்தி கேட்டான் திவாகர்.

“அது ஒன்னுமில்லைடா”, வாய் திறக்க முயன்ற தன்வந்திரியின் கையை அவன் அறியாமல் பற்றியவர் “நாங்க என்ன திட்டம் போட போறோம் நீ தான் கன்டிஷன் போட்டுடியே, அதோ அந்த பொண்ணை பத்தி தான் பேசிட்டு இருந்தோம்” என்றார் கவிபாரதியை பார்த்து.

“எவ்ளோ திமிரா பேசுறா  இவளை கட்டிக்க போறவன் ரொம்ப பாவம் எப்டி சமாளிக்க போறானோ” என்று அனுதாபம் கொள்ள,

தனித்து நின்று வெறுப்பை தேக்கி கொண்டு புடவை எடுக்கும் கூத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவளை சில நொடி பார்வையை விலகாமல் பார்த்தவன்,

 “அது அவங்க பிரச்சனை நீங்க எதுக்கு வீணா கவலைப்படுறீங்க வந்த வேலைய பாருங்க அடுத்தவங்க கேரக்டரை அனலைஸ் பண்ற வேலை வேணாம் அவளுக்கு நல்ல வாழ்க்கை தான் அமையும்” என்று ஆருடம் சொன்னவனிடம் எண்ணத்தை வெளிப்படுத்தாது, அடுத்து அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாட்டிக்கொள்ளாமல் கணவன் மனைவி இருவரும் நகர்ந்து சென்றனர்.

முகத்தில் தோன்றிய கடுப்பை அடக்க முடியாமல் அவஸ்தையில் தள்ளாடியபடி தனியே பேசி கொண்டிருந்தவளை இமை விலக்காமல் பார்த்து கொண்டிருந்தவன் அவள் பார்ப்பதை உணர்ந்து சட்டென பார்வையை திரும்பி கொண்டு இயல்பான நடையில் ஜீவாவின் அருகில் சென்று நின்று கொண்டான் திவாகர்.

“திவ்யாவுக்கு இந்த கலர் தான் பிடிக்கும் பெரியம்மா ரொம்ப பொருத்தமா இருக்கும்” என்று பச்சை நிறத்தில் காப்பர் நிற ஜரிகை சேர்ந்த பட்டு புடவையை எடுத்து காட்ட, அனைவரின் முகத்திலும் புன்னகை அளவில்லாமல் விரிந்தது.

“நல்லா இருக்கு ஜீவா. திவ்யா உனக்கு பிடிச்சிருக்கா ஓகே தானே” என்று அபிராமி கேட்க,

தனக்கு பிடித்த நிறத்தை தேர்வு செய்த திகைப்பில் அமர்ந்திருந்தவள் அவனை பார்த்து கொண்டே “பிடிச்சிருக்கு” என்று தலையாட்ட,

“அப்றம் என்ன இதையே எடுத்துறலாம் இன்னும் ரெண்டு புடவை சேர்ந்து எடுத்துக்கலாம் என்ன ஜீவா சொல்ற?”.

“சரிங்க பெரியம்மா” என்று சிரித்து கொண்டே தலையாட்டியவன் “இதை கட்டி பாத்தா நல்லா இருக்குமா இல்லையான்னு சொல்லிறலாம், நல்லா இல்லைன்னா இதே கலர்ல இதைவிட பெட்டரா வேற டிசைன்ல பாக்கலாம்” என்றான் திவ்யாவை பார்த்து கொண்டே,

“இல்லை அதெல்லாம் வேணாம்” என்று விசுக்கென எழுந்து கொண்டவள் “எனக்கு இந்த புடவையே பிடிச்சிருக்கு இதுவே இருக்கட்டும் கட்டி பாக்க வேணாம்” என்று வேகமாக சொல்ல,

“என்ன திவிம்மா புடவை கட்டிட்டு தானே வர சொல்றாரு உனக்கு பொருத்தமா இருக்கா இல்லையான்னு பாத்துட்டா திருப்தியா இருக்கும்னு மாப்பிள்ளை நினைக்கிறாரு போய் கட்டிட்டு வாடா இந்த புடவையில நீ எப்டி இருப்பன்னு பாக்க எங்களுக்கும் ஆசையா இருக்கு”என்று கண்களை சுருக்கி கன்னம் வருடி பேசிய ஜெயசித்ராவை, பார்வை இடுங்க முறைத்தாள் திவ்யபாரதி.

Advertisement