Advertisement

வெளியே சென்றிருந்த ராகவேந்திரன் இல்லம் வந்து சேர, பேச்சு சத்தம் பலமாய் கேட்டது. அதிலும் திவாகரின் குரலை கேட்டதும் யார் வந்திருக்கிறார்கள் என்பது யூகித்து கொண்டவர். சத்தமில்லாமல் உள்ளே வந்தார்.

‘ஆஹா ஓஹோ’ என்று புகழ்ந்தபடி உணவை ரசித்து ருசித்துக்கொண்டிருந்தான் திவாகர். காரணத்தை அறிந்து கொண்டதும் கிடைத்த சந்தர்ப்பத்தில் அபிராமியை சமாதானம் செய்திருந்தான்.

“இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊத்தவா திவா” என்று அபிராமி கேட்க,

“போதும் அபிம்மா அமிர்தமா இருந்தாலும் அளவோடு நிறுத்திக்கணும் வயிறு நிறைஞ்சிருச்சு கூடவே மனசும். இத்தனை வருஷம் செத்து சுண்ணாம்பா… போன நாக்குக்கு உயிர் கொடுத்த தெய்வமே! நீங்க வாழ்க பல்லாண்டு, பொள்ளாச்சி வந்ததுக்கு அர்த்தம் கொடுத்துட்டீங்க” என்று ஷியாமளா அருகில் இருப்பதையும் கண்டு கொள்ளாமல் அபிராமியை புகழ்ந்து பேச,

“ம்ஹும் ஏண்டா சொல்ல மாட்ட காலையில எட்டு மணிக்கெல்லாம் பிள்ளை பசி தாங்க மாட்டான்னு உனக்கு என்ன வேணும்னு கேட்டு செஞ்சு கொடுத்தேன்ல அதை சாப்ட்டு நாக்கு செத்து தான் போயிருக்கும்” என்று வினையமில்லாமல் சிறு முறைப்பு காட்டி பேசினார் ஷியமாளா.

“அதானே எத்தனை நாள் உனக்கு சமைச்சு போட்டுருப்பா கொஞ்சம் கூட நன்றி இல்லாம பேசிட்டியே திவா. ஜீவா வீட்டுல கல்யாணம் முடியிர வரைக்கும் தான் சாப்பாடு அப்றம் சென்னை தான்” என்று மனைவியை பார்த்து கொண்டே மகனை மிரட்டினார் தன்வந்திரி.

திருதிருவென விழித்தவன் “நீங்க ஒருத்தர் போதும் என்னை கோர்த்துவிடுறதுக்கு அம்மா சமையல் நல்லா இல்லன்னு நா சொல்லவே இல்லையே ப்பா”, ராகம் இழுத்தான்.

“இப்போ சொன்னியே செத்து போன நாக்குன்னு அதுக்கு என்ன அர்த்தம்?”,தன்வந்திரி வேகமாய் கேட்க,

“ப்பா நா பேசினதை நீங்க சரியா புரிஞ்சுகலை நல்லா இல்லைன்னும் சொல்லலை அதே நேரம் நல்லா இருக்குன்னும் சொல்லலை” என்று பேசியதை திரித்து சமாளிக்க,

“ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தான் திவா பெருசா என்ன வித்தியாசம் இருக்குன்னு விளக்கம் சொல்ற!”.

“நீங்க சும்மா இருங்கப்பா ஏற்கனவே செம்ம கடுப்புல இருக்காங்க இன்னும் கொஞ்சம் ஏத்தி விடாதீங்க”,பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தவன் எழுந்து கொண்டான்.

“டேய் நா சும்மா விளையாட்டுக்கு பேசுனேன் சீரியஸா எடுத்துக்காத” என்றார் தன்வந்திரி சற்று பதற்றத்துடன். தான் பேசியது பொறுக்காமல் எழுந்து கொண்டானோ என்ற எண்ணம்.

“போதும் ப்பா இதுக்கு மேல முடியாது திருப்தியா சாப்டாச்சு” என்றவன் “பேச்செல்லாம் பலமா இருக்கு” என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தான்.

“ரொம்ப தீவிரமான பேச்சோ வந்ததை கூட கவனிக்காம பேசிட்டு இருக்கீங்க அதுலயும் ஓவர் ஐஸ் வேற அபிராமிக்கு என்ன விஷயம்” என கேட்டு அமர்ந்தார் ராகவேந்திரன்.

“சாரி ப்பா நீங்க வெளிய போயிருக்கீங்கன்னு ஜீவா சொன்னான் எப்போ வருவீங்கன்னு சொல்லலை அதான் கவனிக்கலை” என்றவனை அமைதியான பார்வை பார்த்தார்.

“சொல்லிருந்தா கவனிச்சிருப்பியா” என்று சிரித்தவர் “நல்லா பேச கத்துகிட்டடா” என்று தட்டி கொடுப்பது போல சொல்லிவிட்டு கணவன் மனைவி இருவரிடமும் நலவிசாரிப்பை தொடர,சற்று நேரம் பேச்சில் பொழுது கழிந்தது.

 “பெரியப்பா டைம் ஆச்சு கிளம்பலாமா” என்று வெளியே  செல்வதை நினைவுபடுத்தினான் ஜீவானந்தம்.

திடுக்கிட்டு கடிகாரத்தில் நேரம் பார்த்தவர் “இவ்ளோ நேரம் ஆச்சா பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியலை, சிவனேஷனுக்கு தகவல் சொல்லிட்ட தானே அங்க எல்லாரும் கிளம்பிட்டாங்களா?” பரபரப்புடன் எழுந்து கொள்ள,

“அவங்க வந்துட்டு இருக்காங்க பெரியப்பா இப்போ தான் கால் பண்ணேன் கடைக்கு வந்ததும் போன் பண்றேன்னு சொல்லிருக்காரு நாம கிளம்பலாம்” என்றான் ஜீவானந்தம்.

“அப்டின்னா சரி நாம போகவும் அவங்க வரவும் சரியா இருக்கும் எல்லாரையும் வண்டியில ஏற சொல்லு அப்டியே பெரியம்மாவை நா வர சொன்னேன்னு சொல்லிட்டு போ” என்றதும் சரியென்று திவாகரை அழைத்து விஷயத்தை சொன்னவன் அபிராமியிடம் ராகவேந்திரன் அழைத்ததை சொல்லிவிட்டு சென்றான்.

“என்னங்க கூப்ட்டிங்களாமே ஜீவா சொன்னான் என்ன விஷயம்?”, அறைக்குள் வந்தவரிடம்,

“இது ஜீவா கொடுத்த பணம்” என்று இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் அடங்கிய பண கத்தையை நீட்டினார் ராகவேந்திரன்.

“இது எதுக்கு?” என குழப்பத்துடன் கேட்க,

“திவ்யாவுக்கு தாலி செயின் எடுக்கணும்னு கொடுத்துருக்கான் அதை அவனோட காசுல தான் எடுக்கணுமாம்” என்று கூறவும், எதுவும் பேசாமல் அபிராமி வாங்கி கொள்ள,

ஏன் என்று வாதம் புரியாமல் பணத்தை பெற்று கொண்ட மனைவியை சற்று நெருடலுடன் பார்த்தவர்,”என்ன மா எதுவும் சொல்லாம வாங்கி வச்சுகிட்ட உனக்கு கஷ்டமா இல்லையா?” என்றார் சிறு தயக்கத்துடன்.

“இதுல என்னங்க கஷ்டம் இருக்கு அவனை நினைச்சா பெருமையா இருக்கு தன்னோட சுய சம்பத்தியத்துல வர போறவளுக்காக தாலி எடுத்து போடணும்னு ஆசைப்டுறான் அவனோட ஆசைய நாம ஏன் மறுக்கணும் நமக்கு என்ன உரிமை இருக்கு.

பெத்த பையனாவே இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல இது செய் செய்யாதன்னு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது நல்லது கெட்டது எடுத்து சொல்லலாம் வழிநடத்தலாம் ஆனா கூடவே பயணிக்க முடியாது. உங்களுக்கு நா எப்டியோ அதே மாதிரி தான் அவனுக்கு திவ்யா!, நிச்சயம் அவ மனசை மாத்திருவான் ஜீவா. இந்த மாதிரி கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னதும் கொஞ்சம் நம்பிக்கை இல்லாம இருந்தது ஆனா இப்போ நம்பிக்கை வந்திருச்சு” என்றார் அபிராமி, அவர் முகத்தில் நம்பிக்கை ஒளி பிரகாசித்தது.

சிறு சிரிப்புடன் “பணத்தை கொடுத்தா நீ கோபப்படுவயோன்னு பயந்துட்டே என்கிட்ட கொடுத்தான் பக்குவமா எடுத்து சொல்லி புரிய வைக்க சொன்னான் ஆனா அதுக்கு வாய்பில்லாம போச்சு அபிராமி. உன்னை பத்தி அவனும் அவனை பத்தி நீயும் நல்லாவே புரிஞ்சு வச்சுருக்கீங்க” என்றவர் “சரி வா போலாம் நமக்காக தான் காத்திட்டு இருக்காங்க” என்று அழைத்து சென்றார் ராகவேந்திரன்.

கோவை நகரின் பிரபலமான துணிக்கடை அது எந்த நேரமும் கூட்டம் தான் வாடிக்கையாளரின் வருகைக்கு ஏற்றவாறு உடைகளும் சிறப்பாய் இருக்கும் அதிலும் கடை ஊழியர்களின் கவனிப்பும் அனுசரிப்பும் வருபவர்களை பூரித்து போக வைப்பது மட்டுமல்லமால் ஊழியர்களுக்கு நீண்ட சோதனையையும் கொடுக்கும்.

முகூர்த்த கலெக்ஷ்ன் என்ற தனி பிரிவில் ஜீவாவின் குடும்பம் மொத்தமும் கூடியிருக்க,

“என்ன ஜீவா சிவனேஷனுக்கு போன் பண்ணியா டைம் ஆச்சு ப்பா” என்றார் ராகவேந்திரன் அவசரத்தை தேக்கிய குரலில்.

“வந்துட்டாங்க பெரியப்பா வெளிய தான் இருக்காங்க நீங்க  இருங்க நா போய் கூட்டிட்டு வறேன்” என்றவன் திவாகரையும் உடன் அழைத்து கொண்டு வெளியே வர,காரிலிருந்து ஒவ்வொருவராய் இறங்கி கொண்டிருந்தனர்.

அதுவரை வேடிக்கைபார்த்து கொண்டிருந்தவன் “ஐ ஆரியமாலா” என்று திடீரென கேட்ட துள்ளல் குரலில் அருகில் இருந்தவனை ஒரு மாதிரியாக பார்த்தான் ஜீவானந்தம்.

“ஆரியமாலா வர்றதை பத்தி சொல்லவே இல்லை ஜீவா” என்ற திவாகர் அழைத்து வந்தவனின் பார்வை கண்டு அடங்கினான்.

“இவளை பாத்ததும் நீ அனுப்புன போட்டோவை ஞாபகம் வந்துருச்சுடா அதான்… ஓவரா.. பொங்கிட்டேன்” என்று தணிவான குரலில் விளக்கம் அளித்தான்.

திவாகரை ஆழ்ந்து ஆராய்ந்தபடி உள்ளுக்குள் கணக்கு போட்டு கொண்டவன் “அவ பேரு ஆரியமாலா இல்லை கவிபாரதி அவ காதுல நீ கூப்ட்டது விழுந்தது ஆடிருவா பாத்துக்கோ,

 பேரு தான் கவிநயமே தவிர பேச்செல்லாம் காரசாரமா இருக்கும், எதுக்கும் அவளை பாக்கும் போதெல்லாம் கொஞ்சம் உன்னை கட்டுப்படுத்திக்கோ அவளை பார்த்து சிரிச்சிடாத இடம் பொருள் பாக்க மாட்டா” என்று உடன் இருந்து பழகி பார்த்தவன் போல அவளின் குணநலன்களை ஒப்பித்தான் ஜீவானந்தம்.

“எனக்கென்னமோ அப்டி தோணலை சாதுவா இருக்குற மாதிரி தான் தெரியிது” என்று அலட்சியமாய் தோளை குலுக்கினான் திவாகர்.

இருவரும் கிசுகிசுவென அவர்களை பார்த்து பேசி கொண்டிருக்க,

“என்ன மாப்பிள்ளை ரொம்ப நேரம் காத்திருக்க வச்சுட்டோமா” என்று சங்கடத்துடன் சிவநேசன் கேட்க,

“இல்லை மாமா இப்போ தான் நாங்களும் வந்தோம் வாங்க உள்ள போலாம்” என்றவன் “நாலாவது மாடியில இருக்காங்க நீங்க லீஃப்ட்டுல வாங்க, டேய் திவா கூட்டிட்டு போ” என்ற போது தான் அருகில் இருந்தவனை பார்த்தாள் கவிபாரதி.

மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் முக அமைப்பும் பணிவு கலந்த சிறு சிரிப்பும் பரிச்சயமானவன் போன்ற எண்ணத்தை தோற்றுவித்தது சிவநேசன் குடும்பத்தினருக்கு.

“தம்பி யாருன்னு சொல்லையே மாப்பிள்ளை”, தயங்கி கேட்டார் சிவநேசன்.

“லிஃப்டுல போகும் போது நானே சொல்றேன் எல்லாரும் நமக்காக தான் காத்திட்டு இருக்காங்க” என்று புன்னகை முகமாய் சொல்ல, சரியென்ற தலையசைப்பை ஏற்று முன்னே சென்றான் திவாகர்.

“என்னோட பிரெண்ட மாமா ஒன்னா தான் வேலை பாக்குறோம்” என்று புன்னகை முகமாய் சொன்னவன் அவனை தவிர கடையின் மற்ற அனைத்து இடங்களிலும் பார்வையை செலுத்தி கொண்டிருந்தவளை பார்த்தான்.

தன்னை நிராகரிக்கும் விதம் உள்ளுக்குள் சிரிப்பை ஏற்படுத்த மேலே செய்ய போகும் அலம்பலை பொறுத்து கொள்ள சற்று அவகாசம் கொடுக்கலாம் என்று எண்ணி சிவநேசனிடம் கூறிவிட்டு படிவழியே நான்காவது தளத்திற்கு விரைந்தான் ஜீவானந்தம்.

இரண்டு நிமிட மின்துக்கி பயணத்தில் தன்னை பற்றிய விவரங்களை மேம்போக்காக கூறியிருந்தான் திவாகர்.

Advertisement