Advertisement

சித்ரா பௌர்ணமிஅழகாய் வானத்தில் நிலவு இடம் பெற்றிருந்தது. ஊரடங்கிய நிசப்தத்தில் பண்பலையின் இசை, காற்றில் மெல்ல கலந்து இரவின் அமைதியை மெருகூட்ட,

வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லையே என்றென்றும் வானில்..” 

மிதந்து வந்த இசையை முணுமுணுத்தவாறே அருகே இருந்த தாமரை குளத்தில் நிலவின் பிம்பத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் திவ்யபாரதி.

குளத்தில் இருந்த நீர் காற்றின் விசைபட்டு அலைஅலையாய் அசைந்து நிலவின் தோற்றத்தை  கலைக்க, அதை சுவாரஸ்யமாய் பார்த்து கொண்டிருந்தாள் அவள்.

ஜெயசித்ராவின் பொறுமை மெல்ல மெல்ல காற்றில் கரைந்து கொண்டிருந்தது. விஷயத்தை சொல்லி எத்தனை நேரம் ஆகிறது இன்னும் அதற்கான பதிலை கூறாமல் கல்லுளி மங்கியாய் அசையாமல்அவள் போக்கில் அமர்ந்திருக்கிறாளே என்று கோபம் உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்க, மெல்ல பேச்சை தொடங்கினார் திவ்யாவின் சித்தி அம்பிகா.

பாப்பா நீ என்னடா சொல்ற? மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை வர சொல்லவா, அப்பா கேட்டுட்டு வர சொல்லி அரை மணி நேரம் ஆச்சு, பேசாம இருந்தா என்ன அர்த்தம் ஏதாவது சொல்லுடாஎன்று தாய்மையின் தவிப்பு கலந்து பேசினார் அம்பிகா.

அமர்ந்திருந்த தோரனையும் பார்வையும் கலையாமல்என்னோட முடிவை எப்பவோ சொல்லிட்டேன் ம்மா நீங்க தான் மறுபடியும் மறுபடியும் உங்களுக்கு சாதகமான பதிலை எதிர்பார்த்து கேக்குறீங்க. அப்ப இல்லை எப்பவும் என்னோட வார்த்தை இது தான் கொஞ்ச நாள் போகட்டும்என்றாள் திவ்யபாரதி.

அம்பிகாவை விலக்கி கொண்டு முன்னே வந்த ஜெயசித்ராஅவகிட்ட என்ன மதிணி கேட்டுட்டு இருக்கீங்க, அண்ணே முடிவு பண்ணிட்டாரு அவ்ளோ தான். இனி எந்த மாற்றமும் இல்லை இவ வீம்புகெல்லாம் நாம தலையாட்ட முடியாது இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்டியே சொல்லிட்டு இருப்பா?” என்று கோபத்தை காட்ட

சும்மா இரு ஜெயா, நா பேசிக்கிறேன் அவளுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுப்போம் இது அவ வாழ போற வாழ்க்கை நிதானமா தெளிவா யோசிச்சு நல்ல முடிவை எடுப்பா நீ போ, நா பேசிக்கிறேன்என்று அடக்க

அவளே தேவலாம் போலயே முடியாதுன்னு ஒரு வார்த்தையியில பட்டுன்னு சொல்லிட்டா நீங்க என்னடான்னா அவகாசம் கொடுக்கலாம்னு சொல்லிட்டு இருக்கீங்கஎன அம்பிகாவின் மேல் பாய்ந்தவர் கோபத்தை விடுத்து, திவ்யாவின் அருகில் சென்று அமர்ந்தார்.

மெல்ல தலையை வருடி கொடுத்தவருக்கு தொண்டை அடைத்தது. எத்தனை ஆசைகள் கனவுகள் அனைத்தும் கைகூடி வரும் வேளையில் சீட்டு கட்டு மாளிகையை போல இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனதை எண்ண அழுத்தம் அழுகையாய் வெளிப்படவிருந்தது, உமிழ்நீரை விழுங்கி அடக்கி கொண்டவர், தணிவான குரலில் தன்மையாய் பேச தொடங்கினார் ஜெயசித்ரா.

இங்க பாரும்மா பிடிச்ச வாழ்க்கை அமையலைன்னா பிடிக்கிற மாதிரி ஒரு வாழ்க்கைய அமைச்சிகணும் அது தான் சாமர்த்தியம், புத்திசாலித்தனம். போனவனை நினைச்சு இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்டியே இருப்ப?, நாங்க என்ன பாவம் பண்ணோமோ தவமிருந்து கிடைச்ச பொக்கிஷத்தை மொத்தமா தொலைச்சிட்டு நிக்கிறோம் உனக்கென்ன தலையெழுத்தா

நீ நல்லா வாழணும்டா அது தான் இந்த அத்தையோட ஆசை. தயவுசெய்து ஒத்துக்கோ பொண்ணு பாக்க தானே வர்றாங்க பொம்மையாட்டம் வந்து நில்லு ஒத்து வந்தா மேற்கொண்டு பேச போறோம் இல்லையா, ஒத்து வராதுன்னு சொல்லி அனுப்பிட போறோம் சரின்னு சொல்லுடாஎன்று யாசகம் நிறைந்த குரலில் பேசியவரின் முகத்தில் இழப்பின் வலி அப்பட்டமாய் பிரதிபலித்தது.

சலனமில்லா பார்வையில்ஏன் அத்தை இழப்பு உங்களுக்கு மட்டும் தானா எனக்கு இல்லையா? உங்களை விட எனக்கு தான் வலி அதிகம். ஒரு நிமிஷத்துல அவரை ஒதுக்கி வச்சுட்டீங்க ஆனா!, என்னால முடியலை அவரோட சிரிப்பு பேச்சு எதையும் என்னால மறக்க முடியலை அத்தை, இல்லைன்னு சொல்ற அவர் இன்னமும் என்னோட நினைப்புல இருக்காரு. ஒருவேளை எதிர்பாரா விதமா என்னோட சித்தம் கலங்கி அவரோட ஞாபகங்கள் வராமா போயிருச்சின்னா நீங்க சொல்ற பையனை தாராளமா கல்யாணம் பண்ணிக்கிறேன் நிச்சயம் மறுத்து பேச மாட்டேன்என்று ஒவ்வொரு வார்த்தையும் நிதனமாக அழுத்தம் திருத்தமாய் பேசிவிட்டு எழுந்து விறுவிறுவென சென்று விட்டாள் திவ்யபாரதி.

இயலமையோடு, செல்பவளை பார்த்த ஜெயசித்ராவின் தோளில் கைவைத்துவிடு ஜெயா எது நடக்கணும்னு இருக்கோ அது தான் நடக்கும் நாம நினைக்கிறது எல்லாம் நடந்திருமா என்ன? மேல இருக்குறவன் கணக்கு நமக்கு தெரியாது எல்லாத்துக்கும் நேரம் வரும் அப்ப பாத்துக்கலாம்என்று மனம் தளர்ந்து பேசினார் அம்பிகா.

இல்லை மதிணி மனசு விடாதீங்க நேரம் வரும் நேரம் வரும்னு சும்மா இருந்தா எதுவும் நடக்காது. அவளோட கஷ்டம் எனக்கு புரியுது ஆனா, அவ போக்குல விட்டா நிச்சயம் இதுக்கு ஒரு தீர்வு வாராது நீங்க ஆக வேண்டிய வேலைய பாருங்க அவள எப்டி வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும்என திண்ணமாய் உரைத்தவர் மனதில் செயலாற்றா போகும் காரியத்திற்கு ஒத்திகை பார்த்து கொண்டார்.

அறைக்குள் சென்றவள் கதவை தாழிட்டு இரும்பு பீரோவில் இருந்த மர பேழையை எடுத்து திறந்து பார்க்க நீங்காத சுவசமாய் வீசியது அவனது வாசம். பேழையில் இருந்த ஒவ்வொன்றையும் தொட்டு வருடியவள் மெல்லிய புன்னகை இழையோட, இறுதியாய் அவன் அணிந்த ஆடையை நெஞ்சில் புதைத்து கண்மூடி அவன் ஸ்பரிசத்தை அனுபவித்தாள் திவ்யபாரதி.

வசந்தமாய் நினைவில் நிழலாடியது அவன் பேசிய தருணங்கள். ‘அந்த செல்லம்மாக்கு முண்டாசு பாரதி போல இந்த பார்த்திக்கு திவ்வியபாரதிரசனையாய் சொல்லி அழகாய் சிரித்தவனின்  சிரிப்பொலி செவிகளை நிறைத்து சிலுசிலுப்பை உண்டாக்க, சட்டென இமை திறந்து பார்த்தவள் பிரம்மை என்று உணரந்து தலையை ஆட்டி மெலிதாய் சிரித்து கொண்டாள்.

வீட்டுல எல்லாரும் நீங்க இல்லைன்னு சொல்றாங்க பார்த்தி ஆனா எனக்கு தானே தெரியும் இந்த ரூம் முழுக்க நீங்க தான் நிறைஞ்சு இருக்கீங்கன்னு. உங்களை மறந்துட்டு வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க நீங்களே சொல்லுங்க பார்த்தி இது நடக்குற காரியமா?”என்று மானாசீகமாக உயிரற்ற உடையிடம் நியாயம் கேட்க,

பாப்பாஎன்று கதவு தட்டும் சத்தம் கேட்டது.

கையில் இருந்த உடைமையை இருந்த இடத்தில் வைத்து விட்டு எழுந்து சென்று கதவை திறந்தவள், “சொல்லுங்கம்மா“.

சாப்டா வாம்மா நேரமாச்சு எல்லாரும் உனக்காக தான் காத்துட்டு இருக்காங்கஎன்று கூறிவிட்டு அம்பிகா சென்று விட,

பின்னோடு சென்றவள் எதுவும் நடவாதது போல அமைதியாக அமர்ந்து கொண்டாள். பிடிவாதத்தின் சுவடு சற்றும் குறையவில்லை ஆனால் அதை அப்பட்டமாக காட்டவில்லை

புதிதாய் பார்ப்பது போல மகளை பார்த்தார் சிவநேசன்

அம்பிகா பாப்பாவுக்கு முதல பரிமாறுஎன்று உத்தரவிட,

சரிங்கஎன்றவர் விதவிதமாய் சமைத்த உணவுகளை தட்டில் பரப்ப தொடங்கினார்.

உணவுகளை பார்த்து விழிகளில் வியப்பை காட்டிஅக்கா என்னைக்குமில்லாம இன்னைக்கு என்ன இத்தனை விதமா சமைச்சிருக்காங்க எதுவும் விசேஷமா?” என்று திவ்யாவிடம் ரகசிய குரலில் கேட்டாள் இளையவளான கவிபாரதி.

சிறு புன்னகை அரும்பவிசேஷம் இல்லை கவி விஷயம். உனக்கு புரியாது நீ சாப்டுஎன்றவள்போதும்மாஎன்று கை மறித்து சொல்ல,

மற்றவர்களுக்கு பரிமாற தொடங்கினார் அம்பிகா.

ஜெயா எங்க காணோம்“, சிவநேசன் கேட்க,

உங்க தங்கச்சிக்கு சாப்பாடு வேணாமாம், கூப்பிட்டேன் பசியில்லைன்னு சொல்லிட்டா மாமாஎன்றார் ஜெயசித்ராவின் கணவர் நேசமணி.

ஏன் என்னாச்சு உடம்பு எதும் முடியலையாமா?. அம்பிகா என்னனு போய் பாருஎன்று பதட்டத்துடன் பேசியவர் எழ முற்பட,

உடம்புக்கு ஒரு நோவும் இல்லை மாமா மனசு தான் சரியில்லை அவளுக்குஎன்றவர் உணவு தட்டில் இருந்து பார்வையை நிமிர்த்தி திவ்யாவை பார்த்தார்.

என்ன மணி சொல்ற மனசு சரியில்லையா?”

ஆமா மாமா யார் யாருக்கோ நல்லது நடக்கும் போது நம்ம வீட்டுல ஒரு நல்லது நடத்தி பாக்க அவளுக்கு ஆசை இருக்காதா?”,குறைபட்டு கொண்டவரின் மனம் அங்கிருந்தவர்களுக்கு புரியமால் இல்லை.

சிவநேசனின் பார்வை தாழ்ந்திட என்ன பதில் சொல்வது என தெரியமால் மகளை பார்த்தார்.

அனைவரின் மனவருத்திற்கும் மூலகாரணமானவளோ பேசும் வார்த்தைகளுக்கும் தனக்கும் துளியும் சம்பந்தமில்லாது போல உணவை விழுங்குவதில் மும்முரமாக இருந்தாள்.

திவ்யா என்னமா சொல்ற?”. 

எதை பத்திப்பா“, தலை நிமிர்தமலேயே கேள்வி தொடுத்தாள் திவ்யபாரதி.

மகளின் பேச்சில் மனைவியை பார்த்த சிவநேசன் அம்பிகாவின் இறைஞ்சும் பார்வையில் கோபத்தை அடக்கி கொண்டு பேச தொடங்கினார்.

Advertisement