யாருக்கு தான் பிடிக்காது தன்னை ஒருவன் உயிராக விரும்பும் கதையைக் கேட்க. “நீங்க சொல்றது எல்லாம் உண்மையா ஐயா?”, என்று வியப்பாக கேட்டாள்.

     “ஆமாங்க மா. ஆனா நான் தான் ஒரு விஷயம் ஆதி தம்பிக்கு தெரியாம பண்ணிட்டேன்”

     “என்ன ஆச்சு?”

     “இல்லை அது…. உங்க கல்யாணம் முடிஞ்சதும் எனக்கு மனசு கேக்கலை. இவ்வளவு வருஷம் ஒரு பொய் புரட்டு சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கலை. அதனால மனசாட்சி என்னைக் கேள்வி கேட்டுச்சு. அதனால உங்க கல்யாணம் முடிஞ்சதும் கடைசியா எனக்கு பணம் கொடுத்தார் ராயர் ஐயா. அப்ப ஆதி தம்பி சொன்னதைப் பத்தி எல்லாம் சொல்லிட்டேன். ஆனா ஐயா சிரிச்சாங்க. அப்புறம் தான் எனக்கு நிம்மதியா இருந்தது. மன்னிப்பு கேட்டுட்டு போயிட்டேன்”, என்று சொல்ல ஆதி மாட்டிக் கொண்டதை எண்ணி வான்மதிக்கும் சிரிப்பாக வந்தது. கூடவே சந்தோஷம் என்றால் அப்படி ஒரு சந்தோஷம்.

     ஏற்கனவே அவன் மேல் அதிக அன்பு வைத்திருந்தவள் இந்த நிமிடம் அவன் மேல் வைத்திருந்த காதலை உணர்ந்தாள். உடனே அவனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அவனிடம் மனம் விட்டு பேச வேண்டும் போல இருந்தது.

     அப்போது அங்கே வந்த தமயந்தி அவருக்கு காபி கொடுத்து வரவேற்று “ஐயா நீங்க வருவீங்கன்னு சொன்னாங்க. இருங்க என் மகளோட போட்டோவும் ஜாதகமும் கொண்டு வரேன்”, என்று சொல்லிச் சென்றாள். அவள் போனதும் “நந்துவுக்கு மாப்பிள்ளை பாக்கச் சொன்னாங்களா ஐயா?”, என்று கேட்டாள் வான்மதி.

     “ஆமா மா சொன்னாங்க. ராயர் ஐயா பொண்ணோட போட்டோவையும் ஜாதகத்தையும் வீட்ல வந்து வாங்கிட்டு போகச் சொன்னாங்க. நானும் ராயர் ஐயா மகளுக்கு ஒரு வரன் கொண்டு வந்துருக்கேன். காட்டட்டுங்களா மா?”

     “நீங்க அத்தைக் கிட்டயே காட்டுங்க ஐயா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் வரேன்”, என்றவள் தமயந்தியிடமும் சொல்லி விட்டுச் சென்று விட்டாள். அவனைக் காணும் ஆசையில் உணவைக் கூட மறந்து விட்டாள்.

     அவள் மட்டும் அந்த வரனைப் பார்த்திருந்தால் உடனேயே அந்த வரன் வேண்டாம் என்று சொல்லி அங்கேயே பிரச்சனையை முடித்திருப்பாள். அதைப் பார்க்காமல் விட்டு சென்றதால் அவள் பல துயரங்களைப் பட வேண்டும் என்பது தான் விதி போல?

     கணவனைப் பற்றி எண்ணி கனவில் சஞ்சரித்துக் கொண்டே காரில் பயணித்துக் கொண்டிருந்தவள் பள்ளிக்கு சென்றதும் நேராக அவளது அறைக்குச் சென்றாள். உடனே அவளுக்கு ஆதியிடம் பேச வேண்டும் போல இருந்தது. உடனே அழைத்து விட்டாள். ஆனால் பொருள்கள் சரக்கு கப்பலில் ஏறும் போது அதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஆதி அவள் அழைப்பை பார்க்க வில்லை. அப்படி எடுத்திருந்தால் மனைவியின் மனது புரிந்திருக்குமோ என்னவோ? அவளும் அவளது காதலை அவனிடம் சொல்லியிருப்பாள். எடுக்காமல் விட்டது பிழை தானோ?

     “பிசியா இருக்காங்க போல? சரி நைட் நேர்லயே பேசிக்கலாம். அவரோட காதல் என் மேலதான்னு எனக்கு தெரியும்னு சொன்னதுக்கு அப்புறம் அவர் ரீயாக்ஷன் எப்படி இருக்குனு பாக்கணும். அவர் மனசுல நான் தான் இருக்கேன்னு தெரியாம லூசு மாதிரி அவர் கிட்டயே போய் அவர் காதலியைப் பத்தி பேசிருக்கேன் பாரேன். ஆனாலும் சரியான அழுத்தம் தான். நீ தான் அந்த காதலின்னு சொன்னா என்னவாம்?”, என்று அவள் எண்ண “அவன் உன்னைத் தான் காதலிக்கிறேன்னு சொல்லிருந்தா மட்டும் நீ நம்பிருக்கவா போற? அவன் சொல்லவும் செஞ்சானே? நீ தானே நடிப்புன்னு சொன்ன?”, என்று கேள்வி கேட்டது அவள் மனசாட்சி.

     மனதில் இருந்த சந்தோஷம் முகத்தையும் மலர வைக்க சந்தோஷமாக வேலையை ஆரம்பித்தாள். ஒரு மூன்று மணி நேரங்களுக்கு பிறகு அவளது கணவன் அவளை அழைத்தான் தான். ஆனால் அவள் அவனது அழைப்பை எடுக்க வில்லை. இப்போது எடுத்தால் தன்னுடைய சந்தோசத்தைக் கண்டு பிடித்து விடுவான் என்பதால் எடுக்காமல் விட்டாள். நேரில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டாள்.

     கணவன் மனைவி இருவரும் கண்ணாம்பூச்சி ஆடிக் கொண்டிருக்க அங்கே இவர்களை பிரிக்க வேண்டும் என்று எண்ணியவன் புகைப்படம் மூலம் அவர்களின் வீட்டுக்குள் நுழைந்து விட்டான்.

     “தரகர் கொடுத்துட்டு போன போட்டோ அத்தை. இந்தாங்க நீங்க பாருங்க”, என்று பார்வதியிடம் நீட்டினாள் தமயந்தி.

     “அதை என் கிட்ட ஏன் காட்டுற? என் பேத்தி அஞ்சனாவை ஆதிக்கு கல்யாணம் பண்ணணும்னு நினைச்சேன். அது நடக்கலை. நிரஞ்சனுக்கு நந்தினியைக் கட்டலாம்னு நினைச்சேன். அதுக்கும் வழி இல்லைன்னு நீ காட்டுற போட்டோவிலே தெரிஞ்சிருச்சு. உங்க இஷ்டத்துக்கு தான் செய்யப் போறீங்கன்னு தெரிஞ்சிருச்சு. நான் பாக்க ஒண்ணும் இல்லை. நீங்களே என்னமும் பண்ணிக்கோங்க”, என்று வெறுப்பாகச் சொன்னாள் பார்வதி.

     “அவ கிடக்குறா மா. என் பேத்திக்கு எப்படிப் பட்ட மாப்பிள்ளை வந்துருக்கான்னு நான் பாக்க வேண்டாமா? கொடுமா”, என்று சொல்லி போட்டோவை வாங்கிப் பார்த்த சேதுராமன் “பையன் அழகா இருக்கான் தமயந்தி. நந்துவுக்கு பொருத்தமா இருப்பான். பையன் பேர் என்ன?”, என்று கேட்டார்.

     “பேர் ரிஷின்னு போட்டுருக்கு மாமா. கோவைல ரிஷி என்டர்பிரைஸ் இருக்குல்ல? அந்த வீட்டு வாரிசு தான். ஒரே பையனாம். பிக்கல் பிடுங்கல் இல்லாத இடம். எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா இன்னும் உங்க பிள்ளை வந்து இந்த போட்டோவைப் பாக்கலை. அவருக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”, என்று சொல்லும் போதே ராயர் அங்கே வந்தார்.

     அவரிடம் தமயந்தி போட்டோ காட்ட அதை வாங்கிப் பார்த்தவருக்கு திருப்தியாக இருந்தது. “நந்து கிட்ட பேசி என்னைக்கு பொண்ணு பாக்க வரச் சொல்லணும்னு சொல்லு தமா”, என்றார்.

     “உங்க பொண்ணு இப்பவே கல்யாணமா? படிச்சு முடிச்சிக்கிறேனு சொல்லுவா”

     “நான் சொன்னேன்னு சொல்லு. அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டா. நம்ம அஞ்சனாவுக்கும் பாக்க தான் நினைச்சேன். சுந்தர்  மாப்பிள்ளை தான் அவ படிப்பு முடியட்டும்னு சொல்லிட்டார். நந்து கிட்ட சொல்லு தமா, கல்யாணம் முடிஞ்சாலும் அவ கண்டிப்பா படிப்பா. நான் எல்லாம் பேசிருவேன். நீ அவ கிட்ட கேட்டு சொல்லு. நான் தரகர் கிட்ட கேட்டு பையன் வீட்ல பேசிறேன். அதுக்கு  முன்னாடி ஆதி கிட்ட சொல்லி விசாரிக்கணும்”, என்றார்.

     அன்றே தமயந்தி நந்தினியிடம் அது குறித்து பேச முதலில் படிப்பு என்று தயங்கினாள். பின் தந்தை பேச்சுக்கு மதிப்பு கொடுத்து சரி என்றாள். ஆனால் மனதின் ஓரத்தில் மட்டும் நிரஞ்சனை எண்ணி வலி எழுந்தது. இப்படி நடக்கும் என்று தெரியும் தானே? பின்னே ஏன் கவலைப்படுகிறாய் என்று மனதை சரி செய்து கொண்டு அன்னை அனுப்பிய ரிஷியின் புகைப்படத்தைப் பார்த்தாள். கண்ணைக் கவரும் வகையில் இருக்க அவளுக்கு மறுக்க எந்த காரணமும் தோன்ற வில்லை. ஒரு டாக்டராக ஆகப் போகும் அவளுக்கு ஒரு டாக்டரைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை. அதனால் அவள் மனது திருமணத்தை எதிர் நோக்க ஆரம்பித்தது.

     மகள் சம்மதம் சொன்னதும் ரிஷியின் குடும்பத்தைப் பற்றி அவனைப் பற்றி எல்லாம் விசாரிக்கப் பட்டது. ஆதியும் விசாரித்தான். நல்ல பையன் நல்ல குடும்பம் என்றே அனைவரும் சொன்னார்கள். அதனால் ரிஷியின் தந்தையிடம் பேசி பெண் பார்க்கவும் வரச் சொல்லி விட்டார் ராயர். ஒரே நாளில் எல்லாம் முடிந்தது. ஆனால் அவன் குணம் தெரிந்தால் இதற்கு சம்மதித்திருப்பாரோ?

     அன்று மாலை வீட்டுக்கு வந்ததும் “மதி, நாளைக்கு நம்ம நந்தினியை பொண்ணு பாக்க வராங்க”, என்றாள் தமயந்தி.

     “அப்படியா அத்தை, ரொம்ப சந்தோஷம். தரகர் காலைலே சொன்னார். உடனே ஓகே ஆகிருச்சா?”

     “பொண்ணு பாக்க வந்தா தான் ஓகே ஆகும்”

     “நம்ம வீட்டுக்கு பொண்ணு பாக்க வந்துட்டு ஓகே சொல்லாம போவாங்களா? கல்யாணம் கன்பார்ம் தான். சரி சரி நான் கல்யாணப் பொண்ணைப் பாத்துட்டு வரேன்”, என்று சந்தோஷமாக ஓடினாள் மதி.

     நந்தினி அவளது அறையில் புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க “ஏய் நீ கனவுலகத்துல இருப்பேன்னு நினைச்சேன். நீ என்ன சின்ஸியரா படிச்சிட்டு இருக்குற?”, என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் மதி.

     “வாங்க அண்ணி நாளைக்கு ஒரு செமினார் இருக்கு. அதான் பிரிப்பேர் பண்ணுறேன்”

     “அப்ப கல்யாண கனவு இல்லையா?”

     “நீங்க இப்படி தான் அண்ணன் கூட என்கேஜ் ஆனதும் கனவு கண்டீங்களா? ஆனா எனக்கு அப்படி ஒண்ணும் தோணலையே?”

     “என்ன பண்ண? சேவாரம் சரி இல்லை. என்னோட ஃபிரண்ட் வேற எப்படி இருப்ப? சரி உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா?”

     “பிடிச்சிருக்கு அண்ணி”, என்று புன்னகைத்தாள்.

     “மாப்பிள்ளை பேர் என்ன?’

     “ரிஷின்னு அம்மா சொன்னாங்க. போட்டோ பாக்குறீங்களா?”, என்று ஆவலுடன் கேட்டாள்.

     “அதை தானே முதல்ல பாக்கணும். காட்டு காட்டு. ஆனா எனக்கு அந்த பேர் தான் பிடிக்கலை. ஆனா பரவால்ல”, என்று சொல்லியே விட்டாள்.

     “ஏன் நல்லா தானே இருக்கு? இதோ இவர் தான் மாப்பிள்ளை”, என்ற படியே நந்தினி போட்டோவைக் காண்பிக்க அதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் மதி. சத்தியமாக இவனை எதிர் பார்க்கவே இல்லை.

காதல் தொடரும்….