“கண்டிப்பா சார்”, என்று அவர் சொன்னதும் மதி புறம் திரும்பியவன் “சார் கூட போய் சுத்திப் பாருங்க. பசங்க எப்படி படிக்கிறாங்க, ஸ்கூல்ல என்ன என்ன மாத்தணும் எல்லாம் பாருங்க”, என்று அவளிடம் சொன்னான்.
“சரி”, என்று சொல்லி விட்டு அவருடன் கிளம்பினாள். அப்போது “மந்திரமூர்த்தி சார், உங்க கரஸ் மேடம் ஒரு மேக்ஸ் டீச்சர். அவங்களுக்கு வாரத்துல மூணு நாள் கிளாஸ் இருக்குற மாதிரி கிளாஸ் போட்டுக்கொடுங்க. அவங்களுக்கு டீச்சிங் ரொம்ப பிடிக்கும்”, என்றும் சொல்லி விட்டுச் சென்றான்.
“மேடம் நீங்க டுவல்த்க்கு எடுக்குறீங்களா?”, என்று மந்திரமூர்த்தி கேட்க “இப்ப பாதில டுவல்த்க்கு வேண்டாம் சார். ஏற்கனவே எடுக்குறவங்க பிளான் பண்ணிருப்பாங்க. அதைக் கெடுக்க வேண்டாம். நான் லவன்த்க்கு எடுக்குறேன். ஏற்கனவே எடுக்குற ஸ்டாப் கிட்ட சொல்லி ஒரு ரெண்டு சேப்டர் மட்டும் இப்ப கொடுக்கச் சொல்லுங்க. நான் எப்படி ஹேண்டில் பண்ணுறேன்னு பாத்துட்டு அப்புறம் பிளான் பண்ணலாம்”, என்றாள்.
“ஓகே மேடம். நான் டைம் டேபிள் ரெடி பண்ணிட்டு சொல்லச் சொல்றேன்”
“ஓகே சார். ஸ்கூல் சுத்திப் பாக்கலாமா? சும்மா ரவுட்ன்ஸ் தான். ஏதாவது மாற்றம் வந்துச்சுன்னா நோட் பண்ணிட்டு நாம அப்புறம் டிஸ்கஸ் பண்ணிட்டு மாத்தலாம்”, என்றாள். அவரும் சந்தோஷமாக கூட்டிச் சென்றார். பள்ளி அவளுக்கு புதிது இல்லை என்பதால் ஆர்வத்துடன் சுற்றிப் பார்த்தாள். மதியத்துக்கு மேல் ஆர்ட்ஸ் காலேஜ்க்கு செல்ல முடிவு எடுத்தாள்.
மதிய இடைவேளையில் அவளுக்கு அழைத்த ஆதி உணவை பற்றி கேட்க அவன் அக்கறையில் நெகிழ்ந்தவள் கல்லூரி கேண்டீனில் சாப்பிட்டுக் கொள்வதாக சொல்லி விட்டாள். ஆர்ட்ஸ் காலேஜ் பக்கத்து கேம்பஸ் என்பதால் நடந்தே சென்று விட்டாள்.
தந்தையிடம் சொல்லி தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்து வரச் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். அன்றைய நாள் அவளுக்கு அவ்வளவு நிறைவாக நகர்ந்தது. ஆனால் புது வேலை என்பதால் கொஞ்சம் திணறவே செய்தாள். அனைவரிடமே தனித் தனியே நின்று பேசினாள். ஏதாவது குறைகள் இருக்கிறதா என்று தனித் தனியாக கேட்டாள். அடுத்து வந்த நாட்களில் வேலை ஒருவாறு புரிந்து விட்டது. பகலில் வேலை, இரவில் கணவனின் தேடல் என வாழ்க்கை அவளுக்கு நன்றாகவே நகர்ந்தது.
வான்மதி பள்ளி கல்லூரி பொறுப்பை ஏற்று ஒரு மாதம் முடிவடைந்திருந்தது. இந்த ஒரு மாதத்தில் அவளை அங்கே அனைவருக்கும் பிடித்திருந்தது. பியூனிடம் கூட நின்று ஏதாவது பிரச்சனை இருக்குறதா என்று கேட்டு கேட்டு அனைத்தையும் சரி செய்ய ஆரம்பித்தாள். அவள் செய்வதற்கு முன் ராயரிடமும் ஆதியிடமும் எல்லாவற்றையும் விளக்கி இப்படி செய்யலாமா என்று அனுமதி கேட்டே செய்தாள். அதனால் அவளுக்கு பள்ளி கல்லூரிகளில் நல்ல பெயர் தான் கிடைத்தது. அது மட்டுமில்லாமல் அவள் கிளாசில் மாணவர்களும் அவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள்.
அடுத்த வருடமும் அவளே மேக்ஸ் டீச்சராக வர வேண்டும் என்று அவர்கள் சொல்லும் அளவுக்கு அவள் கிளாஸ் இருந்தது. மொத்தத்தில் அவளது நிர்வாக திறன் அனைவருக்கும் பிடித்திருந்தது என்று சொல்லலாம்.
வீட்டிலும் எப்போதும் போல அனைவரும் பேசினார்கள். தினமும் தந்தைக்கு அழைத்தும் பேசி விடுவாள். அவ்வப்போது சென்று பார்த்து விட்டும் வருவாள். அவளது ஸ்கூட்டியை எடுத்து வர வேண்டும் என்று அவள் ஆதியிடம் சொன்ன போது அடுத்த நாளே அவளுக்கு என்று புத்தம் புது கார் வந்து வாசலில் நின்றது. மதிக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. கணவனின் முதல் கிஃப்ட் ஆச்சே. அப்படியும் “என்னை ஒரு ரவுண்ட் கூட்டிட்டு போ”,. என்று அடம் பிடித்து அவளுடன் சென்றான்.
அவள் எப்படி கார் ஓட்டுகிறாள் என்று பார்ப்பதற்கே அவன் இப்படி செய்கிறான் என்று புரிந்தவளுக்கு இன்னொரு பெண்ணை விரும்பி விட்டு தன் மீது எப்படி இவனுக்கு இவ்வளவு அன்பு வருகிறது? ஒரு வேளை அவன் சொன்ன மாதிரி அவன் லவ்வே பண்ணலையோ? அந்த மெஸ்ஸேஜ் பொய்யோ என்று கூட எண்ணினாள்.
மாமனாரின் நம்பிக்கை, மாமியாரின் அன்பு, சேதுராமனின் தோழமை, செழியனின் மரியாதை, நந்தினி, அஞ்சனா மற்றும் விக்கியின் நட்பு, சொல்லாமல் இருந்தாலும் கணவனின் காதல் என எல்லாம் கிடைத்திருக்க மதி நிறைவாக இருந்தாள்.
அவ்வப்போது வரும் நிரஞ்சனின் அன்பையும் மதி பெற்றிருந்தாள். ரஞ்சன் அண்ணா என்று அவள் பாசமாக அழைக்க உண்மையிலே அவளை தங்கையாக தான் நிரஞ்சன் நினைத்திருந்தான். சுந்தரேஸ்வரரும் அவளிடம் அன்பாக பேச மதிக்கு புகுந்த வீட்டில் எந்த தொந்தரவும் வரவில்லை. அதனால் அவள் நிர்வாகத்தை நல்ல படியாக பார்த்துக் கொண்டாள்.
பார்வதி மட்டும் மதிக்கு வந்த வாழ்வை என்னை பொருமிக் கொண்டே இருந்தாள். அது அஞ்சனா இருக்க வேண்டிய இடம் என்பது பாட்டியின் எண்ணம். மற்ற அனைவரும் அவளை சந்தோசமாகவே பார்த்துக் கொண்டார்கள். அதுவும் ஆதி இரவுகளில் அவளைக் கொண்டாடித் தீர்த்தான் என்று சொன்னால் அது மிகையில்லை. இப்போதும் அவன் அவளை பகலில் கண்டு கொள்வதில்லை தான். யாரும் இருந்தால் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேச மாட்டான். ஆனால் அவளுக்கு அது பழகியும் போய் விட்டது.
அவள் மனதில் இருந்த ஒரே குறை, இன்னும் குழந்தை தங்க வில்லை என்பது தான். அவளது தோழி மஞ்சரியிடம் மட்டும் போன் செய்து புலம்புவாள். “கல்யாணம் ஆகி நாலு மாசம் தானே டி ஆகுது? எல்லாம் நடக்க வேண்டியப்ப நடக்கும்”, என்று ஆறுதல் சொல்வாள். அதை தவிர மற்ற படி மதி சந்தோசமாகவே இருந்தாள்.
எப்போதும் சந்தோஷம் மட்டும் வாழ்க்கையில் இருக்காதே. இன்பம் துன்பம் கலந்தது தானே வாழ்க்கை? அப்படி அவள் வாழ்க்கையில் ஒரு பெரிய பிரச்சனையைக் கொண்டு வந்து சேர்த்தது விதி.
அன்று காலையில் ஆதி அலுவலகம் கிளம்பிச் சென்றதும் தானும் குளித்து கிளம்பி கீழே வந்தாள். தமயந்தி சமைத்துக் கொண்டிருக்க வேலையாட்கள் உதவியாக நின்றனர். மற்ற படி அங்கே யாரும் இல்லை. மதி வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததில் இருந்து தமயந்தி அவளை சமையல் அறைக்கு வர விடுவதில்லை. ஆனாலும் அவ்வப்போது சென்று அவளுக்கு உதவுவாள்.
இப்போது மருமகள் கிளம்பி வந்ததைக் கண்டு “கிளம்பிட்டியா மதி? சாப்பிடுறியா?”, என்று கேட்டாள்.
“ஏதாவது செய்யணுமா அத்தை?”
“காலைல இருந்து எனக்கு ஹெல்ப் பண்ணிட்டு தானே குளிக்கப் போன? இதுக்கு அப்புறம் உன்னோட நேரம். அதை சரியா பயன்படுத்து. இங்க நான் பாத்துக்குறேன். சாப்பிடுறியா?”
“சரி அத்தை”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே வருகை தந்தார் தரகர்.
“தரகர் வந்துருக்கார். நீ உக்கார வச்சு பேசிக்கிட்டு இரு மா. நான் காபி கொண்டு வரேன்”, என்று தமயந்தி சொன்னதும் அங்கே சென்றாள் மதி.
“வாங்க ஐயா”, என்று வரவேற்றாள். “எப்படி இருக்கீங்க மா? நல்லா இருக்கீங்களா?”
“சரி மா”, என்ற படி அமர்ந்தவர் “ஆதி தம்பி நல்லா இருக்காங்களா மா?”, என்று கேட்டார்.
“ரொம்ப நல்லா இருக்காங்க ஐயா”
“எனக்கு சந்தோஷம் மா. நான் முடிச்சு வச்ச கல்யாணம் நல்லா இருந்தா எனக்கு ஒரு ஆனந்தம். ஆனா உங்க கல்யாணம் நானா முடிச்சு வைக்கலை. உங்க ரெண்டு குடும்பமும் கொஞ்சம் கூட சம்பந்தப் படாதது. அதனால எப்படி இருப்பீங்களோன்னு பயந்துட்டே இருந்தேன். ரொம்ப நாளா தப்பு செஞ்சிட்டோமோன்னு உருத்திக்கிட்டே இருக்கும்”
“என்ன ஐயா சொல்றீங்க?”
“ஆதி தம்பி சொல்லலையா மா?”, என்று கேட்டதும் அவள் குழப்பமாக அவரைப் பார்க்க அவரே சொல்ல ஆரம்பித்தார்.
“எப்பவும் பொண்ணு மாப்பிள்ளையை நான் தான் சேர்த்து வைப்பேன். ஆனா உங்க விசயத்துல அப்படி இல்லையே. ஒரு நாள் ராயர் ஐயா எனக்கு கால் பண்ணி மூத்த மகனுக்கு வரன் பாக்கச் சொன்னார். பணக்காரங்கன்னு பாக்காம நல்ல குடும்பமா நல்ல பொண்ணா கண்ணுக்கு லட்சணமா அதை விட அவர் மகனுக்கு பொருத்தமா இருக்குற மாதிரி ஒரு பொண்ணைப் பாக்கச் சொன்னார். நானும் சரின்னு சொல்லி போனை வச்சிட்டேன். ஆனா அடுத்த ஒரு மணி நேரத்துல ஆதி தம்பி என்னைப் பாக்க வந்துச்சு”, என்று அவர் நிறுத்த ஜாதகம் கொடுக்க போயிருப்பானா இருக்கும் என்று எண்ணி “அவரோட ஜாதகம் கொடுக்க வந்தாரா ஐயா?”, என்று கேட்டாள்.
“இல்லை மா, உன்னோட போட்டோவைக் கொண்டு வந்தார்”, என்று அவர் சொல்ல “என்னது?”, என்று அதிர்ந்து போனாள்.
“ஆமா மா, உங்க போட்டோவைக் கொண்டு வந்து காட்டியவர் இவளை உங்களுக்கு தெரியுமான்னு கேட்டார். அதுக்கு நாலு நாளைக்கு முன்னாடி தான் உங்க அப்பாவும் உங்களோட ஜாதகம் கொண்டு வந்து கொடுத்திருந்தார். அதனால எனக்கு நல்ல ஞாபகம் இருந்துச்சு. அப்படியும் தேடிப் பாத்து இந்த பொண்ணா தம்பின்னு கேட்டேன். இவளே தான்னு சொன்னார். உடனே உங்களோட ஜாதகத்தை எடுத்துட்டு எங்க வீட்டுக்கு வந்து கொடுக்கச் சொன்னார். ரெண்டு பேருக்கும் ஜாதகம் பாக்காமலே பொருத்தம் இருக்குன்னு சொல்லச் சொன்னார். அதுவும் ஆதி தம்பி பேர் வரவே கூடாதுன்னு சொன்னார். எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலை. ராயர் ஐயாவை ஏமாத்தவும் பயமா இருந்துச்சு. அதே நேரம் ஆதி ஐயாவை பகைச்சிக்கவும் முடியலை. ரொம்ப தர்மசங்கடமா நின்னேன். அதைப் பாத்துட்டு இங்க பாருங்க ஐயா. என்னை நம்பி நான் சொல்றதைச் செய்ங்க. கண்டிப்பா இதுக்கு நீங்க வருத்தப் பட மாட்டீங்க. எனக்கு மதியை ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த ஜென்மத்துல அவளைத் தவிர வேற யாரையும் என்னால மனைவியா ஏத்துக்க முடியாது. நான் முதலும் கடைசியுமா விரும்புற பொண்ணு இவ தான். என்னால அப்பா கிட்ட பேச முடியும். அப்பாவும் சம்மதிப்பாங்க. ஆனா அப்பாவை எதுத்து பேச கொஞ்சம் சங்கடமா இருக்கு. நீங்க மதி போட்டோவைக் காமிச்சா அப்பா கண்டிப்பா சரின்னு சொல்லுவாங்க. பிளீஸ்ன்னு கெஞ்சினார். அவ்வளவு பெரிய மனுஷன் சொன்ன பிறகு எனக்கு பாவமா இருந்துச்சு. அதான் உன் போட்டோவையும் ஜாதகத்தையும் கொடுத்தேன். அதுவும் பொருத்தம் பாத்த பிறகு தான்”, என்று சொல்லி முடிக்க மதியோ சந்தோசத்தில் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.