Advertisement

அத்தியாயம் 8

மாய மோஹினி என்றுணர்ந்தேன் 

என்னவளின் மயக்கும் பார்வையால்!!!

     அனைவரும் தன்னைக் குற்றவாளி போல பேச கடுப்புடன் நின்றாள் மதி. “ஒரு வேலைக்கு போக ஆசைப் பட்டது குத்தமாயா?”, என்ற எரிச்சலில் நின்றாள்.

     “என்ன ஆள் ஆளுக்கு அந்த பிள்ளையை மிரட்டுறீங்க? அவளும் இந்த வீட்டுப் பொண்ணு தான். இந்த ராயரோட மூத்த மருமக. நல்லது கெட்டு தெரிஞ்சவ. அவளுக்கு என்ன தோணுதோ அதை பேசுறதுல என்ன தப்பு இருக்கு?”, என்று அவளுக்காக பரிந்து பேசிய ராயரை அவளே கூட எதிர் பார்க்க வில்லை. ஏனென்றால் அவரை எதிர்த்து பேசியதற்கு தான் அனைவரும் அவளைத் திட்டினார்கள்.

     அவள் வியப்பாக அவரைப் பார்க்க “இங்க பாரு மா மதி, எனக்கு ஒரு மாசம் டைம் கொடு. அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு சொல்றேன். அது வரைக்கும் நீ வேற எங்கயும் வேலைக்கு போகக் கூடாது. இல்லை என் பேச்சை மீறி செய்யணும்னு நினைச்சா, செய். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார் .

     அவர் போனதும் தான் பேசியது சரியா தவறா என்ற குழப்பத்தில் அவளே நின்றாள். அவர் இப்படி பேசிய பிறகு வேலைக்கு போவது சரியாக இருக்காதே? சரி ஒரு மாசம் அமைதியா இருப்போம் என்று முடிவு எடுத்தாள்.

     அப்போது “என்ன ஆதி இது? உன் பொண்டாட்டி உன் அப்பாவை இப்படி மரியாதை இல்லாம பேசுறா. நீ பாத்துட்டு பேசாம இருக்க?”, என்று கேட்டாள் பார்வதி.

     “என்ன பாட்டி சொல்றீங்க? மதி எப்ப அப்பாவை மரியாதை இல்லாம பேசினா? அவளுக்கு விருப்ப பட்டதை அவ சொன்னா. அவருக்கு தோணினதை அவர் சொன்னார். கேக்குறதும் கேக்காததும் அவ விருப்பம். அவ ஏதாவது செஞ்சா கோபப் படுறதும் மன்னிக்கிறதும் அப்பா விருப்பம். இதுல மரியாதை இல்லாத பேச்சு எங்க இருந்து வந்தது? எங்க அப்பா அவளுக்கும் அப்பா மாதிரி தான். அப்படி இருக்க அப்பா கிட்ட பேச எந்த பொண்ணுக்கும் உரிமை இருக்கு தானே? அவரும் உரிமையா தான் அவளுக்கு பதில் சொல்லிட்டு போறார். இதுல எனக்கு எதுவும் தப்பா தெரியலை”, என்று சொல்லி விட்டு ஆதி எழுந்து சல்ல அவன் பேச்சைக் கேட்டு மற்றவர்கள் திகைத்தார்கள் என்றால் மதியே திகைத்தாள்.

     மற்றவர்கள் கோபத்தை கண்டவள் ஆதியும் தன்னைத் திட்டப் போகிறான் என்று தான் எண்ணினாள். ஆனால் அவன் அவள் பக்கம் பேசியதும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. கூடவே அவனை தான் இன்னும் சரியாக புரிந்து கொள்ள வில்லையோ என்றும் தோன்றியது.

     ராயரின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து வேலைக்கு போகும் எண்ணத்தை கை விட்டுவிட்டு சாப்பிட அமர தமயந்தி அவளுக்கு பரிமாறாமல் உள்ளே சென்று விட்டாள். அத்தையின் கோபம் புரிய சாப்பிடும் ஆசையைக் கை விட்டுவிட்டு அறைக்குச் சென்றாள்.

     அவள் உள்ளே போன போது ஆதி கட்டிலில் அமர்ந்து லேப்டாப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அருகே சென்று அமர்ந்தவளுக்கு இப்போது காலையில் இருந்த கோபம் இல்லை. ஒரு வித ஆராய்ச்சியே அவள் கண்களில் இருந்தது. அவனோ அவள் புறம் திரும்பவே இல்லை.

     “என் மேல கோபமா?”, என்று கேட்க அதற்கு அவன் எந்த பதிலும் சொல்ல வில்லை.

     “சாரி நான் எதுவும் தப்பா பேசிட்டேனா? நான் வேலைக்கு போக ஆசைப் படக் கூடாதா?”, என்று அமைதியாக கேட்டாள். ஆதியும் சரி ராயரும் சரி அவளிடம் மென்மையாக பேசி இருக்க இருவரிடமும் அவள் தான் கடுமையாக பேசி விட்டாள். அந்த குற்ற உணர்வு அவளை அலைக்கழித்தது.

     “இங்க பாரு மதி. நீ என் கிட்ட ஒரு விஷயம் கேட்ட. நான் வேண்டாம்னு சொன்ன பிறகு அதை அப்பா கிட்ட போய் பேசின? இப்ப மறுபடி இதைப் பத்தி என் கிட்ட பேச என்ன இருக்கு? எனக்கான மரியாதை நீ அப்பா கிட்ட பேசும் போதே போயிருச்சு. திருப்பி அதைப் பத்தி பேசி என் மரியாதையை நான் இழக்க கூடாது. அதனால இந்த பேச்சை விட்டுரு. கொஞ்சம் பொறுமையா இருன்னு சொன்னதைக் கூட நீ கேக்கலை தானே? இப்ப நான் கேக்க எனக்கு ஒண்ணும் இல்லை”, என்று சொல்லி விட்டு அவன் எழுந்து செல்ல தலையைப் பிடித்துக் கொண்டாள்.

     “இவ்வளவு படிச்சிட்டு சும்மா இருக்க கூடாதுன்னு ஒரு வேலைக்கு போகணும்னு நினைச்சது ஒரு குத்தமா டா? வீட்ல எல்லாரும் கொலை செஞ்ச மாதிரி பாக்குறாங்க. என் புருஷன் பெரிய லெக்ச்சரே கொடுத்துட்டு போறான். ஏதோ நான் தான் கெட்டவ மாதிரி எனக்கே தோண வைக்குதுங்களே? இவ்வளவு கெட்ட பேர் வாங்கியும் வேலைக்கு போக அனுமதியும் கிடைக்கலை. ஒரு மாசம் கழிச்சு கிடைக்குமானு தெரியலை. என்ன கொடுமை சரவணா?”, என்று எண்ணிக் கொண்டாள்.

     அடுத்து வந்த நாட்களில் அந்த வீட்டிலே அன்னியமாக உணர்ந்தாள் மதி. யாரும் அவளிடம் சரியாக பேசுவதில்லை. தமயந்தி கடமைக்கு பேசினாள். நந்தினியும் விக்கியும் அவளை விளையாட்டில் கூட சேர்த்துக் கொள்ள வில்லை. அவளாக சென்று பேசினால் கூட அவர்கள் விலகிச் சென்றார்கள். எதுவும் பேச வில்லை என்றாலும் செழியன் பார்க்கும் போது புன்னகைப்பான். இப்போது அவளை முறைத்த படி செல்கிறான்.

     “நான் என்ன தப்பு பண்ணினேன்னு என்னை இப்படி ஒதுக்குறாங்க”, என்று கவலைப் பட்டாலும் அதை விட கவலை ஆதி அவளை தள்ளி வைத்தது தான். இப்போதெல்லாம் அவனது அணைப்புக்கு அடிமை ஆகி இருந்தாள் மதி. அவனைக் காதலிக்கிறாளா என்றெல்லாம் தெரியாது. ஆனால் அவன் அருகாமை இல்லாமல் அவளுக்கு உறக்கம் வர வில்லை.

     இப்போது அவள் அருகில் தான் தூங்குகிறான். ஆனால் அவன் கண்களில் அந்த மயக்கம் இல்லை. ஏதோ யோசனையிலே இருந்தான். எப்போதும் படுத்ததும் அவளை அள்ளி அணைத்துக் கொள்பவன் இப்போது அவளைக் கண்டு கொள்ளாமல் படுத்துக் கொண்டான். படுத்ததும் தூங்கியும் போனான். அவளிடம் எதுவும் பேசவும் இல்லை. ஆனால் அவள் ஏதாவது கேட்டால் பதில் கொடுத்தான் தான். அவளுக்கு தான் அவனை நெருங்கிச் செல்ல ஒரு மாதிரி இருந்தது.

     இப்போதெல்லாம் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை விட அவன் கைக்குள் அடங்க மாட்டோமா என்ற ஆவல் தான் அதிகரித்தது. ஏன் தான் இதைப் பற்றி பேசினோமோ என்று நொந்து போனாள். அவனுக்காக அந்த அளவுக்கு உருகினாள். ஆனால் அவளுடைய காதலை அவளே உணர வில்லை.

     அவளாகவே அவனை இழுத்து அணைக்க தயக்கம் தடுத்தது. அவள் மனதில் இருந்த காதலை உணர்ந்திருந்தால் அவளே அவனை நெருங்கி இருப்பாளோ என்னவோ? மொத்தத்தில் அவள் வேலைக்குக் செல்ல வேண்டும் என்று பேசியது இருவரிடத்திலும் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி இருந்தது மட்டும் உண்மை.

     ஆனால் அவன் அவளை விலக்கி எல்லாம் வைக்க வில்லை. உண்மையிலே அவன் யோசனையில் தான் இருந்தான். அவள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று ராயரிடம் பேசிய அடுத்த நாளே அவன் தந்தையை தனியே சந்தித்து பேசினான்.

     “அப்பா”

     “சொல்லு ஆதி”

     “மதி பேசினது தப்பா ரைட்டான்னு நான் பேசலை. ஆனா அவ பேசினதுல உங்க மனசு கஷ்டப் பட்டிருந்தா சாரிப்பா”

     “என்ன டா சாரி எல்லாம். அவ எனக்கு மருமகன்னாலும் எனக்கு மக மாதிரி தான். அது மட்டுமில்லாம அவ என் கிட்ட உரிமையா பேசினது நல்லா தான் இருந்துச்சு. என் பிள்ளைங்க எல்லாரும் நான் என்ன சொன்னாலும் மண்டையை தான் ஆட்டுவீங்க. என்னைக்காவது எதிர்த்து பேசிருக்கீங்களா? என்னை கேள்வி கேட்டுருக்கீங்களா? எனக்கு என்னமோ அவ தான் என்னோட அரசியல் வாரிசா ஆவாளோன்னு தோணுது டா”, என்று சொல்ல அவன் சிரித்தான்.

     “என்ன பண்ணலாம் ஆதி?”

     “எதுப்பா?”

     “அதான் மருமகளுக்கு… அவ ஆசைப் பட்டு ஒண்ணு கேட்டு நாம செய்யாம இருக்க கூடாது டா. ஏதாவது செய்யணும்”

     “புது ஸ்கூல் துடங்குவோமா பா? அவளுக்கே அவளுக்குன்னு. அவளே எல்லாம் பாத்துப்பா”

     “இப்போதைக்கு அதெல்லாம் கஷ்டம் டா. ஆனா வேற ஸ்கூலை விலைக்கு வாங்கலாம்”, என்று சொல்ல அவன் கண்கள் ஒளிர்ந்தது.

     “நல்ல யோசனை பா”

     “கோவைல ஏதாவது ஸ்கூல் விலைக்கு வருதான்னு விசாரி. டீச்சரம்மாவை ஓனரம்மாவா ஆக்கிறலாம். அப்புறம் அவ பாடம் எடுக்குறா. இல்லை என்னமும் பண்ணுறா. ஆனா கண்டிப்பா பொறுப்பா இருப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. மதி ரொம்ப தைரியசாலி டா”

     “சரிப்பா விசாரிக்கிறேன்”, என்று சொல்லிச் சென்றவனுக்கு மனைவி தந்தையிடம் வாங்கி இருக்கும் பேரைக் கண்டு புண்சிரிப்பு தான் வந்தது.

Advertisement