Advertisement

     “புருஷன் பேரைச் சொல்ல தைரியம் இருக்கு. ஆனா நீ சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல இல்லையாக்கும்? இந்த ரூமுக்குள்ள நான் எப்பவும் உன் புருஷன் தான். சொல்லு நான் என்ன செய்யணும்?”

     “எனக்கு வேலைக்கு போகணும்”

            “இவ்வளவு தானா? நாளைக்கே என் கூட வந்து ஆஃபிசைப் பாரு”, என்று அவன் சொல்ல “உங்க பிஸ்னஸ் பத்தி எனக்கு என்ன தெரியும்? எனக்கு டீச்சர் வேலைக்கு போகணும்? நான் முன்னாடி வேலை பாத்த ஸ்கூல்க்கே வேலைக்கு போகப் போறேன்”, என்றாள்.

     அவளிடம் இருந்து விலகியவன் முகத்தில் சிறு இறுக்கம் வந்தது. அதைக் குழப்பத்துடன் அவள் பார்க்க “அதெல்லாம் அனுப்ப முடியாது”, என்றான்.

     சுள்ளென்று கோபம் வர “ஏன் ஏன்? நான் ஏன் வேலைக்கு போகக் கூடாது? நான் படிச்சது வேலைக்கு போக தான். டீச்சர் வேலை என்னோட கனவு”, என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நியாயம் கேட்டாள். அவள் கேட்ட விதத்தில் அவன் கண்கள் ஒரு நொடி ரசனையாக அளவிட்டது அவளை. பின் அவள் சீரியசாக பேசுவதை உணர்ந்து நடப்புக்கு வந்தவன் “அதை அப்பா அலவ் பண்ண மாட்டாங்க மதி. எனக்கும் பிடிக்காது. நான் உன்னை வேலைக்கு விட மாட்டேன்”, என்றான்.

            “அதைச் சொல்ல நீங்க யாரு?”, என்று அவள் கடுப்புடன் கேட்க அவனுக்கும் கோபம் வந்தது. “ஏன் நான் யாருன்னு தெரியாதா? இல்லை, இத்தனை நாள்ல நான் யாருன்னு உனக்கு காட்டலையா?”, என்று கேட்டான்.

            “நைட் மட்டும் புருசன்னு காட்டினா போதாது”, என்று அவள் எரிச்சலுடன் சொல்ல அவன் முகம் கோபத்தில் இறுகியது.

            “இப்ப என்ன சொல்ல வர?”

            “நான் வேலைக்கு போவேன்”

     “சரி, நீ வேலைக்கு போக அதுவும் உனக்கு பிடிச்ச டீச்சர் வேலைக்கு போக நான் ஏற்பாடு பண்ணுறேன். ஆனா கொஞ்சம் பொறுமையா இரு. ஆனா என்னால நீ பழைய ஸ்கூல்ல வேலைக்கு போறதுக்கு அனுமதிக்க முடியாது மதி. இனி இதைப் பத்தி என் கிட்ட பேசாத”

            அவன் சொல்லியது புரியாமல் “உங்க அனுமதி நான் கேக்கலை. நான் மாமா கிட்ட கேட்டுட்டு போகத் தான் போறேன்”, என்றாள் வீம்பாக.

            “அப்பா கிட்ட கேட்டாலும் உன்னை வேலைக்கு விட மாட்டாங்க. அப்புறம் உன் விருப்பம். ஆனா என்னை மீறி நீ அவர் கிட்ட பெர்மிசன் கேட்டா அப்புறம் எனக்கு என்ன மரியாதை இருக்கு?”

            “உங்க மரியாதையைப் பாத்தா நான் லூசாகிருவேன். தினமும் சும்மாவே இருக்க கடுப்பா இருக்கு. அது மட்டுமில்லாம நான் உங்க கிட்ட தான் முதல்ல கேட்டேன். நீங்க சம்மதிக்கலை. அதனால மாமா கிட்ட கேக்க போறேன். எனக்கும் நேரம் போக வேண்டாமா?”

     “நேரத்தைப் போக்க நான் உனக்கு வேற ஒரு ஐடியா சொல்றேன். கேக்குறியா?”, என்று அவன் சிரிப்புடன் சொல்ல “என்ன ஐடியா?”, என்றாள் அவள்.

            “என் பொண்ணுக்காவது என் பையனுக்காவது அம்மாவா இரு டி. நேரம் நல்லா ஓடிரும்”, என்று சொல்ல அவனைத் தீயாக முறைத்தாள்.

     “நினைச்சேன், நீங்க என்னை இப்படி தான் வீட்டோட முடக்குவீங்கன்னு. உங்க கிட்ட போய்க் கேட்டேன் பாருங்க. என்னைச் சொல்லணும். யார் தடுத்தாலும் நான் வேலைக்கு போகத் தான் போறேன்”

     “மதி அதான் கொஞ்சம் பொறுமையா இருன்னு சொல்றேன்ல? நான் அப்பா கிட்ட பேசிட்டு இதுக்கு ஒரு ஏற்பாடு பண்ணுறேன்”

     “அதான் தெளிவா சொல்லிட்டீங்களே? உங்க பிள்ளைகளுக்கு அம்மாவா இருக்கணும்னு. நீங்களாவது என்னை வேலைக்கு விடுறதாவது?”

     “என் பிள்ளைகளுக்கு நீ தானே டி அம்மா?”

     “தெரியும்? இதுக்கு தான் நீங்க தீயா வேலை செய்றீங்கன்னு. போங்க அங்குட்டு”, என்று கடுப்புடன் வெளியே சென்று விட்டாள்.

     யோசனையில் ஆழ்ந்தான் ஆதி. அவனுக்கு ஏற்கனவே மனைவியின் விருப்பம் தெரியும் தான். ராயரிடம் ஏற்கனவே இது பற்றி பேசினான். அவரும் நல்ல முடிவா எடுப்போம் என்று தான் சொல்லி இருந்தார். ஆனால் அதற்குள் இவள் அவசரப் படுகிறாளே என்று எண்ணினான்.

     அவளிடம் மீண்டும் ஒரு முறை “அப்பா கிட்ட உன் வேலையைப் பத்தி பேசினேன் மதி. அவர் யோசிக்கிறேன்னு சொல்லிருக்கார். கொஞ்சம் பொறுமையா மட்டும் இரு. ஆனா உன்னை அடுத்தவங்க கிட்ட வேலை பாக்க அப்பா விட மாட்டாங்க. கேட்டு அவமானப் படாத. என்னையும் அசிங்கப் படுத்தாத”, என்று சொல்லிப் பார்த்தான்.

     “உங்களையும் உங்க பேச்சையும் நான் நம்பவே மாட்டேன்”, என்று சொல்லிச் சென்றாள் அவள்.

     அன்று இரவு அனைவரும் சாப்பிடும் போது அவள் அமைதியாக பரிமாற ஆதியும் அவள் எப்போது பேச்சை ஆரம்பிப்பாளோ என்று பார்த்திருந்தான்.

     ஆனால் அனைவரும் உண்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தாள் மதி. அதற்கு பின் “மாமா”, என்று அழைத்தாள். அனைவரின் கவனமும் அவள் பக்கம் திரும்ப “என்ன மா?”, என்று கேட்டார் காலிங்கராயர்.

     “இல்லை…. வீட்ல சும்மாவே இருக்க எரிச்சலா இருக்கு. நான் வேலைக்கு போகட்டுமா? பழைய ஸ்கூல்ல வேகண்ட் இருக்கு”, என்று கண்கள் மலர சொன்னாள்.

     “ராயரோட மருமக இன்னொருத்தங்க கிட்ட வேலை பாக்குறதை என்னால அனுமதிக்க முடியாது மா. ஏற்கனவே ஆதி என் கிட்ட பேசினான். உனக்கு வேற ஏற்பாடு பண்ணுறேன்”, என்று சொன்னவர் கை கழுவ எழுந்து கொள்ள “இதுல என்ன மாமா இருக்கு? எனக்கு டீச்சர் வேலை பிடிக்கும். நாலு பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்குறதுல தான் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும். இதுல நீங்க தடுக்குறதுக்கு என்ன இருக்கு? நான் ஒண்ணும் கௌரவ குறைச்சலான வேலையைப் பாக்கலையே?”, என்று கேட்டாள்.

     அவள் பேச்சை அவள் பேச்சில் இருந்த தெளிவை ராயர் ரசித்து பார்த்தார் என்றால் மற்றவர்கள் கோபத்துடன் பார்த்தார்கள். ஏனென்றால் இது வரை யாரும் ராயரை எதிர்த்து பேசியதில்லை. அவர் என்ன சொன்னாலும் சரி என்று மட்டும் தான் சொல்லுவார்கள்.

     “ஏமா, அவர் உன் மாமனார். அவர் கிட்ட பாத்து பேசு”, என்றாள் தமயந்தி.

     “இதுல பாத்து பேச என்ன இருக்கு அத்தை? நான் நியாயமான ஆசையை தானே கேக்குறேன். இதுக்கு கூட இப்படி தடை போட்டீங்கன்னா என்ன அர்த்தம்?”, என்று அவள் சலிப்புடன் கேட்க “ஏய், என் மகனையே எதிர்த்து பேசுவியா? அவனை யாருன்னு நினைச்ச? அதானே பெரிய இடத்துல பிறந்து வளர்ந்திருந்தா என் பேரனுக்கு பொருத்தமான பொண்டாட்டியா பெரியவங்களை மதிக்கிற மருமகளா இருந்திருப்ப. ஆனா வந்தது நீயாச்சே?”, என்று கேட்டாள் பார்வதி.

     பாட்டியின் பேச்சு எப்போதும் போல் இப்போதும் எரிச்சலைக் கொடுக்க “ஏன் எனக்கு என்ன குறைச்சல்?”, என்று எதிர்த்துக் கேட்டாள்.

     “அண்ணி போதும், எங்க முன்னாடியே எங்க அப்பாவை மரியாதை இல்லாம பேசுறதை எங்களால ஏத்துக்க முடியாது”, என்றாள் நந்தினி.

     “ஆமா அண்ணி, அப்பா வேண்டாம்னு சொன்னா அதுல ஒரு காரணம் இருக்கும். புரிஞ்சிக்கோங்க. அப்பா கிட்ட சாரின்னு சொல்லிட்டு சாப்பிடுங்க”, என்றான் விக்னேஷ். செழியனோ அவளை முறைத்துப் பார்த்தான். ஆனால் எதுவும் சொல்ல வில்லை.

     இங்கே இவ்வளவு பெரிய கலவரம் நடக்க அவளது கணவனோ தட்டில் இருந்த உணவை உண்பதிலே கவனமாக இருந்தான். அவளை நிமிர்ந்தும் பார்க்க வில்லை. அவளை பேசாதே என்று சொல்லவும் இல்லை.

     தான் ஒரு நியாயமான கேள்வி கேட்க அதை அனைவரும் தவறென்று சொன்னது மட்டுமல்லாமல் அனைவரும் தன்னையே குற்றம் சாற்ற மதியோ கடுப்புடன் நின்றாள்.

     “இப்ப நான் என்ன மரியாதை இல்லாம பேசிட்டேன். என் ஆசையை தானே சொன்னேன்?”, என்று மதி கேட்க அனைவரும் அவளை முறைத்தார்கள்.

காதல் தொடரும்…..

Advertisement