Advertisement

     அன்று இரவு பத்து மணிக்கு தான் வீட்டுக்கு வந்தான் ஆதி. அவன் வரும் போது அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவளை அள்ளி அனைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவளை எழுப்பக் கூடாது என்று எண்ணி பக்கத்து அறையில் குளித்து உடை மாற்றிவிட்டு சாப்பிட்டு வந்தவன் அதற்கு பின்னர் கட்டிலில் அமர்ந்து அவள் காலை மடியில் வைத்து காயத்தைப் பார்த்தான்.

     தோள் சிவந்து காயத்தை தெளிவாக காட்டியது. அவள் ஏதோ ஒரு ஜெல்லை பூசி இருக்க அதைச் சுற்றி தன்னுடைய விரலால் வருடி விட்டான். சிறிது நேரத்தில் கண் விழித்தவள் அவன் செய்கையை எதிர் பார்க்கவே இல்லை. கோபம் வந்தது தான். ஆனால் அடக்கிக் கொண்டாள். அவள் காலை மடியில் வைத்து அவன் காயத்தை வருடிக் கொண்டிருக்க அமைதியாக பார்த்திருந்தாள்.

     காலையில் கண்டு கொள்ளாமல் சென்றவன் இப்போது தனக்கு சேவகம் செய்கிறானா? ஒரு வேளை பொண்டாட்டி இல்லாம தூங்க முடியலையோ? அதற்காக ஐஸ் வைக்கிறானா என்று குதர்க்கமாக எண்ணி அவனையே பார்க்க அவள் விழித்ததைப் பார்த்தவன் “எழுப்பிட்டேனா டி? சாரி. கால் ரொம்ப வலிக்குதா? எரிச்சல் இருக்கும் அப்படித் தானே?”, என்று கவலையாக கேட்டான்.

     அவன் பேசியதைக் கேட்டு உண்மையான அக்கறையா நடிக்கிறானா என்று குழப்பம் வந்தாலும் “இப்ப வலி இல்லை”, என்று வறண்ட குரலில் சொன்னாள். பகலில் விசாரிக்காமல் இப்போது மட்டும் என்னவாம் என்ற கோபம் வந்தது.

     அதை உணராதவன் மீண்டும் அவள் காலை வருட சிறு கூச்சத்துடன் காலை அவன் மடியில் இருந்து எடுத்துக் கொண்டாள். அவளுக்கு போர்வையை மூடி விட்டவன் அவள் அருகே படுத்தான். “இந்தா படுத்துட்டான்ல? இப்ப கையை போட்டு கட்டிப் பிடிச்சு அவன் வேலையை ஆரம்பிப்பான். அதுக்கு தான் இந்த ஐஸ். இவனுக்கு இவன் தேவை தான் முக்கியம்”, என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவள் வயிற்றில் கையைப் போட்டு அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.

     ஆனால் அவள் எண்ணியது போல அடுத்த கட்டத்துக்கு எல்லாம் செல்லவே இல்லை. அவளை ஆறுதலாக அணைத்திருந்தவன் அவள் தூங்குவதற்காக தட்டிக் கொடுக்க அவனை வியப்பாக பார்த்தாள்.

     அவள் பார்வையில் குழம்பி “என்ன அம்மிணி, ஏதாவது வேணுமா?”, என்று கரிசனையாக கேட்டான்.

     “எனக்கு ஒண்ணும் வேண்டாம். உங்களுக்கு ஒண்ணும் வேண்டாமா?”, என்று அவள் கேட்க வந்த சிரிப்பை அடக்கியவன் “எனக்கு என்ன வேணும்?”, என்று அவளிடமே கேட்டான்.

     “அது.. அது… ப்ச் உங்களுக்கு என்னன்னு தெரியாதோ?”, என்று அவள் சிணுங்க “நீங்க சொன்னா தானே டீச்சரம்மா எனக்கு தெரியும்”, என்றான்.

     “நேத்து இந்நேரம் என்ன பண்ணிட்டு இருந்தீங்களோ அது.”, என்று சொல்லும் போதே அவள் முகம் சிவந்து விட அதை ரசித்துப் பார்த்தவன் “ஹா ஹா பக்கத்து இலைக்கு பாயசமா?”, என்று கேட்டான்.

     “அப்படின்னா?”

     “அப்படின்னா உனக்கு தேவையா இருக்குறதை எனக்கு தேவையான்னு கேக்குறது”, என்று சொல்ல முதலில் அவன் சொன்னது புரியாமல் விழித்தவள் புரிஞ்சதும் “சீ”, என்றாள்.

     “என்ன டி சீ? அப்படின்னா என்னோட கவனிப்பு சரி இல்லையோ?”

     “ஆமா ஆமா ஐயா என்னைக் கவனிச்சிட்டாலும்?”, என்று அவள் இழுக்க “என்ன டி இப்படிச் சொல்ற? அதுக்குள்ள இவ்வளவு சலிப்பு? சரியில்லையே?”, என்றான்.

     “காலுல அடி பட்டு உக்காந்திருக்கும் போது என்னை நல்லா கவனிச்சீங்களே?”, என்று அவள் குத்தலாக சொல்ல “ஓ அதுவா? இன்னைக்கு நம்ம ஆஃபிஸ்ல ஆடிட்டிங்க் டி. வேலை தலைக்கு மேல இருந்துச்சு. அது மட்டும் இல்லாம அங்க அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, தம்பி, தங்கச்சின்னு அத்தனை பேர் இருந்தாங்க. அவங்க முன்னாடி உன்னை தூக்கி கொஞ்ச முடியுமா?”, என்று கேட்க அவளுக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை.

     அவளது கோபம் அவளுக்கு நியாயமாகவும் பட்டது. அதே நேரம் அவன் சொல்வதும் நியாயமாக பட்டது. “சும்மா விளையாட்டுக்கு தான் நீ சொல்றது புரியலைன்னு சொன்னேன். எனக்கு வேணும்னா நான் உன்னை எடுத்துக்க மாட்டேனா? இப்ப உனக்கே உடம்பு சரி இல்லை. இந்த நேரத்துல உன்னை எப்படி கஷ்டப் படுத்த? தூங்கு டா”, என்று சொல்ல நிம்மதியாக அவன் நெஞ்சில் முகம் புதைத்து தூங்க ஆரம்பித்தாள். அவனை இன்னும் அதிகமாக பிடிக்க ஆரம்பித்தது அவளுக்கு.

     இத்தனை நாளில் அவளை பாதித்த மற்றொரு நிகழ்வு திருமணம் ஆகி ஐந்தாவது நாள் குளித்து முடித்து ஒரு நைட்டியுடன் இருந்தாள். அப்போது தமயந்தி அவளை போனில் அழைத்து சீக்கிரம் கீழே வரச் சொல்ல அவசரமாக மதி கீழே செல்லப் போனாள்.

     “ஏய் என்ன பண்ணுற?”, என்று கேட்டான் ஆதி.

     “அத்தை கால் பண்ணினாங்க. அதான் போறேன்”

     “அதுக்குன்னு இப்படியே போவியா?”

     “ஏன்? இதுக்கு என்ன? நீட்டா தானே இருக்கு?”

     “ஒழுங்கா சேலை இல்லைன்னா சுடிதார் மாத்திட்டு போ. நீ போற வரைக்கும் அம்மா வெயிட் பண்ணுவாங்க”, என்று அவன் சொல்ல எரிச்சலாக வந்தது அவளுக்கு.

     “சே இந்த வீட்ல ஒரு டிரஸ் போட கூட எனக்கு சுதந்திரம் இல்லை”, என்று சொல்லி அவனை முறைத்து விட்டு உடை மாற்றப் போனாள்.

     ஆனால் அவர்கள் அவளது வீட்டுக்கு போன போது அங்கே வைத்து அவள் சுடிதார் அணியப் போக “இங்க இந்த டிரஸ் போடு”, என்று அவளது நைட் டிரஸ்சை எடுத்துக் கொடுத்தான் அவன். அவள் அணிந்ததும் அவளை கொஞ்சியது மட்டும் அல்லாமல் அந்த உடையில் அவள் அவ்வளவு அழகாக இருக்கிறாள்”, என்று சொல்லி அதிக நெருக்கத்தையும் அவளிடம் காட்டினான்.

     நிறைய விஷயங்கள் இப்படி தான். அறைக்குள் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்குபவன் வீட்டு ஆட்கள் முன்னிலையில் அவளைக் கண்டு கொள்ளக் கூட மாட்டான். இப்போதெல்லாம் அதற்கு பழகிக் கொண்டாள். அறைக்குள் மட்டும் தான் இரவு உடை அணியவும் பழகிக் கொண்டாள். கீழே போவதென்றால் சுடிதார் இல்லை என்றால் சேலை தான். சேலை அணிந்து சமையல் அறைக்குள் வேலை செய்வதற்குள் அவ்வளவு திணறுவாள். ஆனால் அது எல்லாம் இப்போது பழகி விட்டது என்று சொல்லலாம்.

     நாட்கள் அப்படியே நகர மஞ்சரி அவளை போனில் அழைத்து நலம் விசாரித்தாள். இன்னும் அவள் போஸ்டிங் வேக்கண்ட் இருப்பதாக சொல்ல யோசித்து சொல்கிறேன் என்று சொன்ன மதிக்கு வீட்டில் சும்மாவே இருப்பதாக பட்டது. அதனால் வேலைக்குச் செல்லலாம் என்று முடிவு எடுத்தாள்.

     அன்று இரவு அவன் வந்ததும் ஏதோ சொல்ல வருவதும் அதை முழுங்குவதுமாக இருந்தாள். அதைக் கண்டவன் “என்ன டி? ஏதோ தவிப்புல இருக்குற? என் கிட்ட ஏதாவது சொல்லனுமா?”, என்று கேட்டான்.

     “சொல்லணும்”

     “சொல்லு, அதுக்கு எதுக்கு ஆராய்ச்சி பண்ணுற அம்மணி? என் கிட்ட சொல்ல என்ன தயக்கம்?”

     “இல்லை, என் புருசனா இருக்கீங்களா? இல்லை ராயரோட பையனா இருக்கீங்களானு தெரியலையே?”, என்று அவள் கேட்க அவள் காதை பிடித்து வலிக்காமல் திருகியவன் “எவ்வளவு தைரியம் இருந்தா மாமனார் பேரைச் சொல்லுவ?”, என்றான்.

     “ஏன் உங்க பேரைக் கூட சொல்லுவேன். எனக்கு என்ன பயமா?”

     “சொல்லு டி பாப்போம், சொல்லு டி பாப்போம்”, என்று அவன் வம்பிழுக்க “ஆதித்ய கரிகாலன்”, என்று ரசித்து சொன்னாள். அவள் தன்னுடைய பேரைச் சொன்ன விதமே ஒரு வித போதைக்குள்ளாக்க அவளை கை வளைவுக்குள் கொண்டு வந்தவன் “பிடிச்சிருக்கா டி?”, என்று கிசுகிசுப்பாக கேட்டான்.

     அவன் தொடுகையில் கரைந்தவள் “எதை?”, என்று கேட்டாள்.

     “என் பேரை?”

     “ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு. உங்களுக்கு ஏத்த மாதிரி இருக்கு அவ்வளவு கம்பீரமா. ஆதித்ய கரிகாலன்”, என்று மீண்டும் ரசித்து சொல்ல அவனுக்கு சிரிப்பு வந்தது.

Advertisement