Advertisement

அத்தியாயம் 7

செந்தமிழ் உரைக்கும் உந்தன் 

இதழ்கள் என் பெயரை 

கொஞ்சம் உரைக்காதா?!!!

            அடுத்த நாள் காலையில் “எருமை எருமை இன்னும் காலேஜ் கிளம்பாமல் தூக்கத்தை பாரு. எந்திரி டா”, என்று விக்கியின் முதுகில் அடித்தாள் நந்தினி.

            “ப்ச், போக்கா. எனக்கு தூக்கம் வருது? கடுப்பை கிளப்பாம போ. நான் இன்னைக்கு லீவ்”, என்று சொகுசாக தூங்கினான் விக்கி.

     “ஏற்கனவே நாலு நாள் லீவ் போட்டுட்ட? இன்னைக்குமா? ஒழுங்கா எந்திரி டா”

     “அஞ்சு நாள் லீவா மாத்த போறேன். நீ போக்கா”

            “இரு அப்பாவைக் கூப்பிடுறேன். அவரே வந்து அவரோட கடைக்குட்டி மகனை எழுப்பட்டும்”, என்று சொல்ல “ஆத்தாடி காலைலே ராயர் கிட்ட போட்டுக் கொடுத்துருவா போல”, என்று புலம்பியபடி எழுந்து அமர்ந்தவன் அவளை முறைத்த படி குளிக்கப் போனான். அவளும் சிறு சிரிப்புடன் கல்லூரிக்கு கிளம்பச் சென்றாள். விக்கியும் உற்சாகமாக கல்லூரிக்கு கிளம்பினான்.

            அவன் கல்லூரிக்கு வந்ததும் அங்கே சிலர் பரபரப்பாக இருந்தனர். “என்ன டா அர்ஜூன் எல்லாரும் பரபரப்பா இருக்காங்க?”, என்று கேட்டான் விக்கி.

            “இன்னைக்கு நம்ம காலேஜ்ல சிம்போசியம் டா. அதனால எல்லாரும் பேப்பர் பிரசண்டேசன்க்கு பிரிப்பேர் பண்ணிட்டு இருக்காங்க”, என்றான்.

            “ஐயையோ அப்படின்னா இன்னைக்கு நமக்கு கிளாஸ் கிடையாதா?”, என்று அதிர்ந்தான் விக்கி.

            “கிளாஸ் இல்லைன்னா சந்தோஷம் தானே டா படணும்? நீ என்ன பதறுற? என்ன ஆச்சு விக்கி”

            “நம்ம கிளாஸ் நடக்கும் போது தூங்கினா யாரும் நம்மளைக் கண்டுக்க மாட்டாங்க. ஆனா சிம்போசியம் நடக்கும் போது நம்மளை அங்க ஆடியன்சா உக்கார வச்சிருவாங்களே? தலையை கூட அங்க இங்க திருப்ப முடியாதே டா. தூங்கவும் முடியாது”, என்று புலம்பினான்.

            அவன் புலம்பும் போதே “கைஸ், எல்லாரும் ஆடிட்டோரியம் வாங்க”, என்று அழைப்பு வர எரிச்சலுடன் நண்பர்களுடன் சென்றான். அங்கே சென்று அமர்ந்ததும் அனைவருக்கும் நோட் பேனா என்று கொடுக்கப் பட ஏதாவது கிறுக்குனா நேரம் போயிரும் என்று எண்ணினான் விக்கி.

            “ஏன் டா அமைதியா இருக்க? தூங்க முடியலைன்னு கவலையா? தினமும் நம்ம கிளாஸ்ல இருக்குற இருபது பொண்ணுங்களை பாத்து பாத்து போர் அடிக்குது. சுத்தி எத்தனை பீகார் கலர் கலரா இருக்கு? ஒவ்வொன்னையும் ரசிப்பியா? அதை விட்டு தூங்க முடியலைன்னு கவலப் படுற?”, என்று கேட்டான்.

            “அதுவும் சரி தான் டா”, என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சி ஆரம்பமானது.

     விக்கி சுற்றி பார்வையை ஓட்டிக் கொண்டே நிகழ்ச்சியைக் கவனிக்க ஆரம்பித்தான். செமினார் ஆரம்பிக்க ஒவ்வொருவரும் தனி தனியாக மேடைக்கு வந்து பேப்பர் பிரசண்டேசன் செய்தார்கள்;.

            “டேய் கம்ப்யூட்டர் சயின்ஸ் டாபிக்கா வருது டா. டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்க் படிச்சிட்டு இதை தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ண போறோம்?”, என்று கடுப்புடன் நண்பனிடம் கேட்டான்.

            அவனோ தூங்கி விழுந்து கொண்டிருந்தான். “நம்மளைச் சொல்லிட்டு இவன் தூங்குறதைப் பாரு”, என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது தான் ஒரு பெண் மேடை ஏறினாள். அவள் பிரியா.

            சிவப்பு நிற பார்டர் கொண்ட மயில் வண்ண சேலையை அணிந்து, மிதமான ஒப்பனையில் காலேஜ் ஐ.டி கார்டுடன் ஸ்டேஜ் ஏறியவள் தன்னுடைய பென்ட்ரைவைக் கொடுத்து அவளது பிரஸெண்டேசனை ஸ்கிரீனில் போடச் சொன்னாள்.

            ரோபோட்டிக்ஸ் என்ற டாபிக் ஸ்கிரீனில் வர “ஹேலோ பிரண்ட்ஸ், ஐயம் பிரியா ஃப்ரம் சிஎஸ்சி டிப்பார்ட்மெண்ட்”, என்று ஆரம்பித்து தன்னுடைய செமினாரை ஆரம்பித்தாள். விக்கியின் தலை அங்கே இங்கே திரும்பவே இல்லை. அடுத்த பதினைந்து நிமிடத்தை அனைவரையும் தன்னுடைய காந்த குரலால் கட்டிப் போட்டிருந்தாள்.

            அவளது தெளிவான ஆங்கில பேச்சும் அதற்கு ஏற்ற படி ஸ்கிரீனில் தெரிந்த படங்களும் அனைவரையும் கவர்ந்தது. கவர்ந்தது என்பதை விட அனைவருக்கும் புரியும் விதத்தில் இருந்தது என்று சொன்னால் சரியாக இருக்கும்.

     அவள் பேச்சுக்கு ஏற்ப கையை ஆட்டியதையும், கால்கள் அங்கே இங்கே நடந்ததையும் அவளது இடுப்பைத் தொட்ட பின்னல் அசைந்ததையும் அவளது கருவிழிகள் நர்த்தனமாடியதையும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

            “எப்பாடி என்ன அழகு இந்த பொண்ணு? இத்தனை நாள் கண்ணுலயே மாட்டலையே?”, என்று எண்ணினான்.

     அவள் தன்னுடைய செமினாரை முடித்து வணக்கம் என்று சொல்லி விடை பெற கரகோஷம் அரங்கை நிறைத்தது. அதற்கு அடுத்த ஆள் வந்து செமினார் ஆரம்பிக்க விக்கியின் கண்கள் அவளையே தொடர்ந்து.

     அவனுக்கு இரண்டு ரோ முன்பு சென்று ஒரு சீட்டில் அமர்ந்தாள். அவள் அருகில் அமர்ந்திருந்த அவளது தோழிகள் அவளுக்கு கை கொடுத்து வாழ்த்து சொன்னதை கேட்டு புன்னகைத்துக் கொண்டிருந்தாள். அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான் விக்கி.

     இது வரை பல பெண்களிடம் பேசி இருக்கிறான். “இன்னைக்கு என்ன டி சூப்பரா வந்துருக்க?”, என்று கமெண்ட் கூட அடித்திருக்கிறான். ஆனால் இப்படி மயங்கி கிறங்கியது இல்லை. பார்வையை திருப்ப முடியாமல் தவித்ததில்லை. இந்த உணர்வு அவனுக்கு புதியது. அன்று இரவு வரை அதன் தாக்கம் அவனிடத்தில் குறையவே இல்லை. இது தான் அவனது முதல் கிரஷ். கிரஷ் காதலாக மாறுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

     வான்மதி ஆதி திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. மதி முதலில் அந்த வீட்டில் பழக கஷ்டப்பட்டாலும் போகப் போக பழகிக் கொண்டாள். ஆனால் என்ன தான் முயன்றாலும் அவளுடைய கணவனைத் தான் அவளால் புரிந்து கொள்ள முடிய வில்லை.

     இப்போதெல்லாம் சமையலில் தமயந்திக்கு உதவி செய்கிறாள். அப்படி தான் முதல் நாள் சோறு வடிக்கிறேன் என்று தமயந்தியிடம் சொல்லி விட்டு செய்ய ஆரம்பித்தாள். ஆனால் பெரிய பானை என்பதால் கை வழுக்கி லேசாக காலில் கொட்டிக் கொண்டாள். சூடான தண்ணீரும் சோறும் காலில் பட்டதும் எரிச்சலில் துடித்துப் போனாள். அவள் போட்ட சத்தத்தில் அனைவரும் அவளைச் சுற்றி கூடி நின்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க வலியில் கண்கள் கலங்கியது மதிக்கு.

     “என்ன இங்க கூட்டம்?”, என்ற படி வந்தான் ஆதி. அவனைக் கண்டதும் மதியின் கண்கள் இன்னும் கலங்கியது.

     “காலுல சாதம் பட்டுருச்சு டா”, என்று தமயந்தி சொல்ல கணவன் தன்னை கைத்தாங்கலாக அறைக்கு அழைத்துச் செல்வான் என்று மதி எதிர் பார்க்க “பாத்து செய்ய மாட்டியா? போய் ஆயின்மெண்ட் போடு. அம்மா மருந்து எடுத்துக் கொடுங்க. எனக்கு நேரம் ஆச்சு. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான் ஆதி. வலியை விட அவன் பேச்சிலும் செய்கையிலும் தான் அதிகமாக கஷ்டமாக இருந்தது மதிக்கு.

     தமயந்தி போட வந்த மருந்தை கையில் வாங்கிக் கொண்டு அறைக்கு வந்தவளுக்கு கண்ணீர் அதிகமாக வந்தது. வலியை விட கணவனின் உதாசீனம் தான் அதிகம் அவளை பாதித்தது.

     தனக்கு ஒன்று என்றால் அவனிடம் ஒரு பதட்டம் இல்லை.  அக்கறை இல்லை என்று உணர்ந்தவளுக்கு அவன் இன்னும் பழைய லவ்வரை நினைக்கிறதுனால தான் என்னைக் கவனிக்க மாட்டிக்கிறானா என்ற எண்ணம் வந்தது.  என்ன வாழ்க்கை என்று அவள் அன்று முழுவதும் வேதனையில் இருந்தாள். தமயந்தி அவளை அறையை விட்டு வெளியே வர விட வில்லை. உணவைக் கூட அறைக்கே கொடுத்து விட்டாள். அந்த மட்டும் அவளுக்கு ஆறுதலாக இருந்தது. அப்போதிருந்த மனநிலையில் அவளால் யாரையும் எதிர்க் கொள்ள முடிய வில்லை.

     காலையில் அப்படிப் போனவன் ஒரு போன் செய்தாவது விசாரிப்பான் என்று எண்ண அவன் அன்று முழுவதும் ஒரு அழைப்பு கூட அழைத்து விசாரிக்க வில்லை.

     ஆனால் அவளுக்கு யார் சொல்வது அவனது நிலைமையை? அன்று கம்பெனி ஆடிட்டிங்க் என்பதால் வேலை அந்த அளவுக்கு இருந்தது. செழியனும் அவனும் மதிய உணவைக் கூட மறந்து வேலை செய்து கொண்டிருந்தனர்.

Advertisement