Advertisement

     அடுத்து வந்த நிமிடங்கள் எல்லாம் அமைதியில் கழிய மதிக்கோ ஏதோ மாதிரி இருந்தது. அவளது வீட்டில் உணவு உண்ணும் போது அவளும் அவளது தந்தையும் பேசிக் கொண்டே சாப்பிடுவார்கள். பள்ளியில் மற்ற டீச்சர்ஸ்களுடன் உண்ணும் போது கூட கலகலப்பாக தான் இருக்கும். அவள் தனியே உண்டால் கூட ஒண்ணு டிவி ஓடும். இல்லையென்றால் மொபைல் கையில் இருக்கும். ஆனால் இங்கே உணவு உண்ணும் சத்தத்தை தவிர வேறு ஒன்றுமே கேட்காதது அவளுக்கு வியப்பாக இருந்தது.

     வேண்டா வெறுப்பாக மூன்று இட்லியை உண்டு முடித்தாள். “இன்னும் ரெண்டு வைக்கிறேன் மா”, என்று தமயந்தி வைக்க வர “வேண்டாம்”, என்று சொல்ல வந்தவள் “வேண்டாம் அத்தை”, என்று சேர்த்து சொன்னாள். பின் அதற்கும் ஒரு கண்டிப்பு வருமே.

     பின் மீண்டும் கீழே இருந்த அறைக்குள் அவளை அழைத்துச் சென்றார்கள் நந்தினியும் அஞ்சனாவும். பத்து மணி வரை அவர்கள் பேச்சு தொடர்ந்தது. இப்போது விக்கி வரவில்லை. பெண்கள் மூவருக்கும் இடையே ஒரு நட்புணர்வு தோன்றியது. மதியும் சகஜமாக அவளிடம் தன்னைப் பற்றி, அவளது மாணவர்கள் செய்யும் சேட்டைகளைப் பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

     சரியாக பத்து மணி ஆனதும் நந்தினியை அழைத்த தமயந்தி மதியை கிளப்பி விடச் சொல்ல உள்ளே வந்த நந்தினி “அண்ணி, இந்த சேலையை கட்டிக்கிறீங்களா? கசகசன்னு இருந்தா குளிச்சிட்டு வாங்க”, என்றாள்.

     அது எதற்கு என்று தெரிந்து நெஞ்சுக்குள் திக்கென்று இருந்தாலும் “ஆத்தி இது அதுக்குல்ல? ஆனா நம்மளை மீறி என்ன நடந்து விடும்? எத்தனை படம் பாத்துருக்கோம்? சொன்னாக் கேட்டுக்குவான்”, என்று எண்ணி குளிக்கச் சென்றாள். ஆதி அவனது தளத்தில் இருந்த நீச்சல் குளத்தில் கால்களை தண்ணீருக்குள் விட்ட படி அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் ரகசிய சிரிப்பும் கண்களில் கனவும் உறைந்திருந்தது. புது மாப்பிள்ளை எப்படி இருப்பானோ அப்படி இருந்தான். நாடி நரம்பெல்லாம் அவனது மனைவியைத் தேடி தான் தவித்தது.

     அவனது அறையில் இளஞ்செழியன், நிரஞ்சன் இருவரும் சேர்ந்து முதலிரவுக்கு என அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். அலங்காரம் முடிந்ததும் ஆதியைக் காண வந்தவர்கள் அவனை அறைக்குள் சென்று குளித்துக் கிளம்பச் சொன்னார்கள்.

     மதியும் குளித்து முடித்து சேலை கட்ட ஆரம்பித்தாள். சிவப்பு நிற மைசூர் சில்க் சேரி அவள் உடலை தழுவி இருக்க அது அவளது மஞ்சள் நிறத்தை சற்று தூக்கித் தான் காட்டியது.

            “வாவ் சூப்பரா இருக்கு இந்த சேலை. நான் தான் அண்ணி உங்களுக்கு பர்ஸ்ட் நைட்க்கு இந்த புடவையை செலக்ட் பண்ணினேன். இந்த சேலையைக் கட்டினதும் எனக்கே உங்களை சைட் அடிக்கணும் போல இருக்கு. அவ்வளவு ஹாட்டா இருக்கீங்க? எங்க அண்ணன் பாவம் தான்”, என்று நந்தினி சிரிப்புடன் சொல்ல உண்மையிலே அந்த பேச்சில் மதிக்கு வெட்கம் தான் வந்தது.

     “சும்மா இரு நந்து”, என்று அவள் சிணுங்க “அக்கா வெக்கமா? ஐயோ எங்க அத்தான் உண்மையிலே பிளாட் தான்”, என்று அஞ்சனாவும் வாரினாள்.

     “ரெண்டு பேரும் சும்மா இருங்க”

     “சரி சரி நாங்க ஒண்ணும் சொல்லலை. இந்த பூவை வச்சிக்கோங்க”, என்று நந்தினி எடுத்துக் கொடுக்க “இவ்வளவு வேண்டாமே?”, என்றாள் மதி.

            “பூ தான் இந்த நாளுக்கானே ஸ்பெஷல் ஐட்டமே. அது இல்லைனா எப்படி? எப்படியும் இது கொஞ்ச நேரம் தான் உங்களுக்கு வெயிட்டா இருக்கும். அப்புறம் அது… வேஸ்ட் தான்”, என்று அஞ்சனா சொல்ல புரியாது விழித்தாள் மதி.

            “என்ன புரியலையா? அதை அத்தானே சொல்லுவாங்க”, என்று சொன்ன அஞ்சனா சிரிக்க தன்னை கிண்டல் செய்கிறாள் என்று மட்டும் மதிக்கு புரிந்தது.

            அப்போது உள்ளே வந்த தமயந்தி “நந்து, அண்ணி ரெடி ஆகிட்டாளா?”, என்று கேட்ட படி மருமகளைப் பார்த்தாள். மாமியாரைக் கண்டதும் சிறு சங்கடத்துடன் மதி நிற்க தமயந்தியோ மருமகளை ஒரு நொடி ரசித்து விட்டு “ஏய் என்ன டி என் மருமகளோட எல்லா நகையையும் கழட்டி வச்சிருக்கீங்க? ஒழுங்கா எடுத்துப் போட்டு விடுங்க”, என்றாள்.

            “அது எதுக்கு மா டிஷ்டபன்சா? கழட்டுறது டைம் வேஸ்ட் தானே?”, என்று நந்தினி பட்டென்று கேட்டு நாக்கைக் கடித்துக் கொள்ள தலையில் அடித்துக் கொண்டாள் தமயந்தி. அஞ்சனா வாய் விட்டே சிரிக்க மதிக்கு தமயந்தியை நிமிர்ந்து பார்க்க முடியாத அளவுக்கு வெட்கமாக இருந்தது.

     “சின்னப் பொண்ணு மாதிரியா பேசுற?”, என்று தமயந்தி மகளின் காதைப் பிடித்து திருக “ஆ வலிக்குது மா. அப்புறம் நான் ஒண்ணும் சின்னப் பொண்ணு இல்லை. டாக்டருக்கு படிக்கிறேனாக்கும்? சீக்கிரமே நான் அத்தையாக அண்ணிக்கு டிப்ஸ் கூட சொல்லுவேன். அண்ணிக்கு பிரசவமே பாப்பேன் தெரியுமா?”, என்று கேட்க அவளை முறைத்த தமயந்தி “உனக்கு வாய் கூடிப் போயிருச்சு. நீ முதல்ல ரூமுக்கு போ”, என்று சொல்ல அன்னையை முறைத்த படி சென்றாள் நந்தினி.

     “அஞ்சு, அக்காவுக்கு எல்லா நகையையும் போட்டு விட்டு அவளை உங்க அத்தான் ஃபுளோர்ல விட்டுட்டு நீயும் போய் படு டா”, என்று சொல்ல “சரிங்க அத்தை”, என்று கேட்டுக் கொண்டவள் மதி மறுக்க மறுக்க எல்லா நகையையும் போட்டு விட்டாள்.

     பின் “வாங்க அக்கா போகலாம்”, என்று சொல்லி அவள் கை பற்றி லிஃப்டின் மூலமாக அவனது தளத்துக்கு அழைத்துச் சென்றாள்.

     “இனி நீங்க போயிருவீங்களா அக்கா?”

     “இதுல எந்த ரூம்னு தெரியலையே?”

     “இந்த புளோர் முழுக்க ஆதி அத்தானோடது தான். அதோ அந்த வெள்ளைக் கதவு தான் உங்க பெட் ரூம். ஆல் தீ பெஸ்ட் அக்கா”, என்று சொல்லிச் சென்றாள்.

     எப்போதும் அஞ்சனா வந்தால் நந்தினியுடன் தான் தங்குவாள் என்பதால் மதியை விட்டுவிட்டு நந்தினியின் அறைக்கு தான் சென்றாள். நந்தினி கடுப்புடன் அமர்ந்திருக்க “என்ன ஆச்சு செல்லம்?”, என்று கேட்டாள் அஞ்சனா.

     “உங்க அத்தை என்னை விரட்டினதைப் பாத்தியா? நான் கொஞ்ச நாள்ல டாக்டர் தெரியும் தானே?”, என்று கேட்டாள்.

     “நீ டாக்டர் தான். பெரிய பொண்ணு தான். யாரு இல்லைன்னு சொன்னது?”

     “அப்புறம் ஏன் உங்க அத்தை அப்படி விரட்டினாங்க? ஜூவல்ஸ் போட்டா அந்த நேரத்துல கழட்டிட்டு கிடக்கணும்னு தானே சொன்னேன்?”

     “ஏய் லூசு, நீ ஏன் அப்படி நினைக்கிற? அதை நம்ம இங்க கழட்டி வைக்கிறதுக்கும் உங்க அண்ணனே கழட்டி விடுறதுக்கும் வித்தியாசம் இருக்கு தானே?”, என்று கேட்டு கண்ணடிக்க நந்தினி முகமும் மலர்ந்தது.

     “ஆமால்ல, சூப்பர் ரொமான்ஸ் நடக்கும் தானே? அதை தான் அம்மா சொல்லிருக்காங்க? ஆனாலும் என்னை எப்படி அவங்க சின்னப் பொண்ணுன்னு சொல்லலாம்?”, என்று கேள்வி கேட்க அவளை மாற்றுவதற்குள் அஞ்சனா திணறித் தான் போனாள்.

     அஞ்சனா விட்டுச் சென்ற இடத்திலே நின்றிருந்தாள் மதி. மதிக்கு இந்த நிகழ்வைத் தடுக்க முடியாது என்றும் தெரியும் தவிர்க்க முடியாது என்றும் தெரியும். ஆனாலும் எதிர் நோக்க பயமாக தான் இருந்தது. இனி என்ன ஆனாலும் ஆதி தான் அவளது வாழ்க்கை. அவனுடன் தான் அவளது நீண்ட பயணம். அதில் பின் வாங்கவோ அவனை விட்டு வேறு வாழ்வை யோசிக்கவோ அவள் விரும்ப வில்லை. வாழ்வில் திருமணம் என்றால் அது ஒரு முறை தான் என்ற எண்ணம் கொண்டவள். இது தான் அவளது வாழ்க்கை. ஆனால் இந்த வாழ்வு காதலோடு ஆரம்பிக்க வேண்டும் என்று மட்டும் தோன்றியது.

     அதனால் தயக்கத்துடன் அவனது அறையை நோக்கிச் சென்றாள். கதவு லேசாக சாற்றி இருக்க அதை தள்ளி திறந்து வைத்து விட்டு ஒரு அடி உள்ளே வைத்தவள் அந்த அறையை கண்களால் அளவிட்டாள். அறை முழுவதும் விளக்கு எரிந்து கொண்டிருக்க அந்த அறையே பளிச்சென்று இருந்தது.

     முதலில் அவள் கண்ணில் பட்டது அந்த அறையில் இருந்த அலங்காரம் தான். சாந்தி முகூர்த்தத்துக்காக அந்த அறை சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜாக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அதுவும் அந்த வெண்ணிறப் படுக்கையில் ரோஜாப் பூக்களால் ஆன இதயமும் பூத் தூவலும் மிகவும் அழகாக இருந்தது.

     அந்த அலங்காரத்தில் அவள் மனமே ஒரு நொடி மயங்கித் தான் போனது. அதற்கு பின் தான் தன்னை யாரோ நோக்கும் உணர்வு வந்தது. அவசரமாக தலையைத் திருப்பி பார்த்தாள்.

காதல் தொடரும்….

Advertisement