ரிசப்சனிஸ்ட் சொன்னதும் “அவங்களை வரச் சொல்லுங்க”, என்று சொல்லி போனை வைத்த ஆதி “அந்த ஸ்கூல்ல இருந்து மதி வந்திருக்காளான்னு தெரியலையே”, என்று எண்ணி சிசிடிவி பதிவுகளை கம்ப்யூட்டரில் பார்க்க அங்கே அமர்ந்திருந்தவளைக் கண்டு திகைத்துப் போனான்.
“அடடா நம்ம மேடம் தான் நம்மைப் பாக்க வந்துருக்காங்க? சூப்பர். நம்மளை விட ஸ்பீட் தான். அன்னைக்கு ஏன் டல்லா இருந்தான்னு கேக்கணும்”, என்று எண்ணியவன் முதல் முறையாக தான் அழகாக இருக்கிறோமா என்று எண்ணி கண்ணாடியில் பார்த்தான்.
மதியோ அவனைத் தனியாக காணப் போகிறோம் என்று படபடப்பாக அமர்ந்திருந்தாள். ரிசப்சனிஸ்ட் சொன்னதும் மதி அவனைக் காண லிஃப்டில் நுழைந்தாள்.
அவள் அறைக் கதவைத் தட்டியதும் “யெஸ் கம்மின்”, என்று ஆதி குரல் கொடுக்க தடுமாற்றத்துடன் உள்ளே சென்றாள்.
அவளை எப்படி வரவேற்க என்று மனதில் பட்டி மன்றம் நடத்தியவன் “வா மதி உக்காரு”, என்று உரிமையாக பேசி இருந்தான். அது அவளுக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தாலும் அதை பெரிதாக எடுக்காமல் அவன் எதிரே அமர்ந்தாள்.
“ஜூஸ் வேணுமா டீ காபி வேணுமா?”, என்று அவன் உபசரிக்க “இப்ப எனக்கு ஒண்ணும் வேண்டாம். உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்றாள்.
அவள் முகத்தில் இருந்த இறுக்கம் அவன் சந்தோஷத்தை விரட்ட “ஒரு வேளை என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிருவாளோ?”, என்று பயந்தான்.
“என்ன விஷயம் மதி? ஏதாவது பிரச்சனையா?”
“எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. அதைச் சொல்லிட்டு போகத் தான் வந்தேன்”, என்று சொல்லி அவன் தலையில் இடியை இறக்க “வாட்?”, என்று அதிர்வுடன் கேட்டான்.
“ஆமா, இதை நிறுத்திடுங்க”, என்று அவள் அசால்டாக சொல்ல எழுந்த எரிச்சலை மறைத்துக் கொண்டவன் “என்ன காதலா?”, என்று நக்கலாக கேட்டான். மனதில் பெரிய அடி வாங்கிய ஏமாற்றம் அவனுக்கு. அவள் மனதில் வேறு யாரோ இருக்கிறார்கள் என்ற உண்மையை அவனால் ஜீரணிக்க கூட முடிய வில்லை. அவன் கேட்டதற்கு அவள் இல்லை என்று சொல்வாள் என்று அவன் எதிர் பார்க்க அவளோ ஆணித்தனமாக “ஆமா, காதல் தான்”, என்றாள்.
இனி இவள் தன்னவள் இல்லை என்று அவன் மனம் கனத்துப் போனது. கலங்கிய மனதை அடக்கியவன் “நீங்க லவ் பண்ணுறது உங்க தனிப் பட்ட விஷயம். ஆனா இதை அன்னைக்கு எங்க வீட்ல இருந்து பொண்ணு பாக்க வந்தப்பவே சொல்லிருக்கலாம் தானே? இப்ப எல்லாருக்குமே ஏமாற்றமா இருக்கும். சரி உங்க லவ்வர் யார்? என்ன பண்ணுறாங்க?”, என்று வலியுடன் கேட்டான்.
“ஹலோ, லவ் நான் ஒண்ணும் பண்ணலை”, என்று அவள் பட்டென்று சொல்ல அவன் கண்கள் மின்னியது.
“பின்ன ஏன் அப்படிச் சொன்ன? நீ லவ் பண்ணலைனா எதுக்கு நம்ம கல்யாணத்தை நிறுத்தணும்?’
“உங்க லவ் தான் காரணம்”
“என் லவ்வா?”, என்று கேட்டவனுக்கு இது என்ன புதுக் கதை என்று குழப்பம் வந்தது.
“ஆமா உங்க லவ் தான். நீங்க தான் ஒரு பொண்ணை லவ் பண்ணுறீங்க? உங்க அப்பாவுக்கு பயந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறீங்க? அந்த பொண்ணு பாவம். அதான் உங்களுக்கு உதவலாம்னு வந்தேன். நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன்”, என்று சொல்ல மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.
“ஓஹோ நீங்க எப்படி மேடம் எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்க? கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா?”, என்று கேட்டுக் கொண்டே இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் தீர்க்கமாக அவளைப் பார்த்தான். “உங்க அப்பாவுக்கு பயந்து தானே நீங்க உங்க லவ்வை மறைக்கிறீங்க? அதனால நாம ஒரு பிளான் பண்ணலாம்?”, என்று அவள் கொஞ்சம் முன்னே வந்து அமர்ந்து சீக்ரெட் பேச “ஷோ சுவீட்”, என்று அவளை கொஞ்ச வேண்டும் போல இருந்தது.
அவளைப் போலவே கொஞ்சம் முன்னே தள்ளி வந்து அமர்ந்தவன் “அப்புறம்?”, என்று ரகசியமாக கேட்டான்.
அவன் அப்படி தன்னுடைய முகத்தின் அருகே வந்தது ஒரு மாதிரி இருந்தாலும் அதை விடுத்து “நம்ம கல்யாணம் வரைக்கும் நாம உண்மையை யார் கிட்டயும் சொல்ல வேண்டாம். அது நமக்குள்ளயே இருக்கட்டும். அப்ப தான் மாமாவுக்கு…. சாரி உங்க அப்பாவுக்கு சந்தேகம் வராது. கல்யாண நாளுக்கு முந்தின நாள் நீங்க அந்த பொண்ணு கூட ஓடிப் போயிருங்க. தமிழ் நாட்டுல இருந்தா உங்க அப்பா கண்டு பிடிச்சு படத்துல எல்லாம் வர மாதிரி வெட்டிருவார். அதனால நீங்க வேற நாட்டுக்கு போயிருங்க. எப்படி என் பிளான்?”, என்று அவள் கண்ணை உருட்டிக் கேட்க மொத்தமாக அவள் மேல் பைத்தியமானான் அவன்.
“சூப்பர் பிளான். டீச்சரம்மாவா கொக்கா? எல்லாம் சரி தான். ஆனா கல்யாண மேடை ஏறின பிறகு நான் உன் கழுத்துல தாலி கட்டலைன்னா அப்புறம் உனக்கு எப்படி கல்யாணம் நடக்கும்? உன் வாழ்க்கை பாழாப் போயிறாதா?”
“அது போனாப் போகுது. நான் கடைசி வரை கல்யாணம் பண்ணாம எங்க அப்பாவுக்கு துணையா இருப்பேன். ஆனா உங்க லவ்வை சேத்து வச்ச சந்தோஷம் இருக்கும்ல? ஆனா ஒரு விசயம் மட்டும் நீங்க பண்ணனும்.
“எனக்காக உன் வாழ்க்கையவே பணையம் வைக்கிற? உனக்காக ஒரு விஷயம் பண்ண மாட்டேனா? என்ன பண்ணனும் சொல்லு?”
“உங்க லவ் விஷயம் எனக்கு தெரியாத மாதிரி, நான் பாவம் அப்படிங்குற மாதிரி ஒரு லட்டர் எழுதி வச்சிட்டு போயிருங்க. இல்லைன்னா நான் தான் பிளான் போட்டேன்னு உங்க அப்பா என்னை போட்டுத் தள்ளிருவார்”, என்று சொல்லி அவள் கண்களை உருட்ட அவனுக்கு அவளை அப்படியே கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது.
“ஆமா ஆமா, அப்படி நடக்க வாய்ப்பு இருக்கு. கண்டிப்பா நான் உன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டேன். சரி ஒரே ஒரு விஷயம் கேக்கவா?”
“என்ன?”
“நான் லவ் பண்ணுறேன்னு உனக்கு யார் சொன்னா?”, என்று கேட்டவனின் கண்களில் கூடுதல் கவனம் வந்திருந்தது. யார் அந்த புரளியை பற்ற வைத்தது என்று அவன் அறிய வேண்டுமே.
“அதுவா? உங்க லவர் உங்களைப் பிரிய முடியாம எனக்கு அனுப்பிய மெஸ்ஸேஜ் பாத்து தெரிஞ்சிக்கிட்டேன். அப்புறம் உங்க லவ்வரோட ஃபிரண்ட் யாரோவும் அனுப்பி இருந்தாங்க”, என்று சொல்ல அதை அனுப்பியவனைக் கொல்லும் ஆத்திரம் வந்தாலும் அதை அடக்கி கொண்டான்.
“அதைக் காட்டு”, என்று கேட்க அவளும் காட்டினாள். இரண்டு எண்களில் இருந்து மெஸ்ஸேஜ் வந்திருந்தது. அதை வாங்கிப் பார்த்தவனுக்கு முகம் இறுகிப் போனது. “இது எவன் பாத்த வேலைன்னு தெரியலையே?”, என்று எண்ணிய படியே போனை அவளிடம் கொடுத்தான்.
“சரி சார், நான் கிளம்புறேன். கண்டிப்பா உங்க காதல் நிறைவேறணும். நான் நிறைவேத்தி வைப்பேன்”, என்ற படி எழ “கொஞ்சம் உக்காரு மதி. பேசணும்”, என்றான்.
“என்ன ஆச்சு?”
“இங்க பாரு. கோயம்பத்தூர்ல மட்டும் இல்லை. எங்க வீட்லயும் அப்பான்னா ஒரு மரியாதை இருக்கு”, என்று அவன் சொல்ல “இதை எதுக்கு இப்பச் சொல்றான்?”, என்று எண்ணி அவனை குழப்பமாக பார்த்தாள். அவன் மேலும் தொடர்ந்தான்.
“காதல்னு பேரைச் சொல்லி கல்யாணத்தை நிறுத்திட்டு எங்க அப்பாவை அவமானப் படுத்தச் சொல்றியா? ராயரோட பையன் ஓடிப் போய்ட்டான்னு பேசினா எங்க குடும்பத்துக்கு எவ்வளவு கெட்ட பேர் வரும்னு யோசிச்சியா? அதை விட என் பிஸ்னஸ்? அதை விட்டுட்டு என்னை போய் சாப்பாட்டுக்கே சிங்கி அடிக்கச் சொல்றியா? அப்படி நான் போனா என்னை நம்பி வந்த பொண்ணு கூட ஓடிப் போயிருவா. காதல் எல்லாம் ஒண்ணுமே இல்லாம போயிரும்”, என்று அவன் எதார்த்ததைச் சொல்ல “ஆமால்ல? நான் இதை யோசிக்கவே இல்லை. இப்ப என்ன செய்ய?”, என்று அவனிடமே கேட்டாள்.
“இவ்வளவு வெகுளியா இருக்க? நீயெல்லாம் ஒரு டீச்சரா டி?”, என்று கேட்டு அவள் மூக்கை கிள்ள வேண்டும் போல இருந்தது அவனுக்கு. அதை அடக்கியவன் “நீ ஒண்ணும் செய்ய வேண்டாம். இந்த கல்யாணம் நடக்கும்”, என்றான்.
“என்னது?”, என்று அவள் அதிர “ஆமா நம்ம கல்யாணம் நடக்கும். எங்க அப்பாவும் உங்க அப்பாவும் ஆசைப் பட்ட மாதிரி நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும். நீ இப்ப போகலாம்”, என்றான்.
“அப்படின்னா உங்க காதல். அந்த பொண்ணு?”
“இங்க பாரு, அப்படி எல்லாம் யாரும் இல்லை. நான் யாரையும் லவ் பண்ணலை. தேவையில்லாம யோசிக்காத. இது ஏதோ பொய்யான தகவல்”, என்று அவன் சொல்ல அவனை முறைத்துப் பார்த்தவள் “நான் நீங்க சொல்றதை நம்ப மாட்டேன். என்ன மனுஷன் நீங்க? உங்க குடும்ப கௌரவத்துக்காக ஒரு பொண்ணோட மனசைக் கொல்லுவீங்களா?”, என்று கடுப்பாக கேட்டாள்.