Advertisement

     மற்ற யாருக்கும் குழப்பம் இல்லாமல் போனாலும் அவனது லேசர் கண் பார்வையில் இருந்து எதுவுமே அவ்வளவு எளிதில் தப்பி விட முடியாது. ஆளுமை என்பது அவனது ரத்தத்தில் கலந்த ஒன்று என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருப்பதால் இன்று அவ்வளவு பெரிய நிறுவனத்தை அவனால் கட்டிக் காக்க முடிந்தது. யாரையும் எவரையும் நொடியில் கண்டு கொள்பவன். இரண்டு முறை அவன் அவளை பார்க்கும் போது கூட அவள் இயல்பாக தான் இருந்தாள். ஆனால் இன்று அவள் இயல்பாக இல்லாமல் ஒரு கவனத்துடன் இருப்பதை உணர்ந்து கொண்டான்.

     அது அவனுக்கு சந்தோஷத்தை தர வில்லை. தன்னை பிடிக்க வில்லை என்று சொல்லி விடுவாளோ என்று சிறு பதட்டம் எழுந்தது. கூடவே அவள் மனதில் என்ன இருக்கும் என்று படபடப்பாக இருந்தது ஆதிக்கு.

            “சம்பந்தி அப்ப சொன்னதை தான் இப்பவும் சொல்றேன். எங்க எல்லாருக்கும் உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்கு சம்மதமா?”, என்று கேட்டார் ராயர்.

            “எங்களுக்கு சம்மதம் சார்”, என்று பரமசிவம் சொல்ல “பொண்ணு கிட்ட முதல்ல சம்மதம் கேளுங்க”, என்றாள் மணிமேகலை.

     “என் பொண்ணுக்கு என் விருப்பம் தான் முக்கியம். அது மட்டுமில்லாம மாப்பிள்ளை கிட்ட மறுக்குற மாதிரி எதுவுமே இல்லை. எல்லாமே நிறை தான். ஆனாலும் உங்க சந்தோசத்துக்காக கேக்குறேன்”, என்ற பரமசிவம் மகள் புறம் திரும்பி “மாப்பிள்ளையை உனக்கு புடிச்சிருக்கா மா?”, என்று கேட்டார்.

     “எனக்கு புடிச்சிருக்கு பா”, என்று இயந்திரத் தனத்துடன் சொல்ல அதை அவன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அவள் குரலில் எந்த சந்தோஷமும் வெட்கமும் இல்லை என்பதை உணர்ந்தான். ஆனாலும் அவள் சம்மதம் சொன்னது சிறு சந்தோஷத்தை தந்தது.

            “நானும் உங்க முன்னாடியே என் மகன் கிட்ட கேட்டுறேன்”, என்று சொன்ன ராயர் “ஆதி நீ என்னப்பா சொல்ற?”, என்று கேட்டார்.

            “எனக்கும் சம்மதம் பா”, என்று சொல்ல மணிமேகலை, பார்வதி, வான்மதி மூவரின் முகத்தை தவிர மற்றவர்களின் முகம் மலர்ந்தது. “இப்பவும் அப்பாவுக்கு பயந்து தான் சம்மதம் சொல்றானா? ஆனா ஏன்? அவங்க அப்பா கிட்ட லவ் பத்தி சொல்லி அந்த பொண்ணையே கட்டிக்க வேண்டியது தானே?”, என்று எண்ணினாள்.

            “பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடிச்சிருச்சு. அதனால இப்ப பூ வச்சு உறுதி பண்ணிக்கலாம். அப்புறம் நாள் குறிக்கும் போது நிச்சய தேதியையும் கல்யாண தேதியையும் முடிவு பண்ணிக்கலாம்”, என்று சொன்ன ராயர் “தமா”, என்று மனைவியை அழைத்தார்.

            “இதோங்க”, என்று சொன்ன தமயந்தி எழுந்து மதியின் அருகே வந்து தன்னுடைய கையில் இருந்த கவரில் இருந்த பூவை எடுத்து வருங்கால மருமகளுக்கு வைத்து விட்டாள். அது மட்டுமில்லாமல் நந்தினி கையில் இருந்த ஒரு டப்பாவை வாங்கி அதில் இருந்த வைர ஆரம் ஒன்றை எடுத்து மதிக்கு போட்டு விட்டு அவளை தங்கள் மகனுக்கு என்று உறுதி செய்தாள். இதை யாருமே எதிர் பார்க்க வில்லை. ஆதித்யாவும் தான். ஆனால் அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. மதிக்கோ குழப்பமாக இருந்தது.

     பார்வதியும் மணிமேகலையும் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தார்கள். வான்மதியும் பரமசிவமும் கூட இதை எதிர் பார்க்க வில்லை. பரமசிவத்துக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

     அவரின் நண்பர்களின் பெண்களை பார்க்க வரும் மாப்பிள்ளை முன்னர் அலங்கரித்து நிற்க வைத்து கடைசியில் பிடிக்க வில்லை என்று சொல்லிச் செல்வார்கள். ஆனால் தன்னுடைய மகளுக்கு முதல் மாப்பிள்ளையே அமைந்தது மனதுக்கு நிம்மதியாக இருந்தது.

     “இனிமே வான்மதி எங்க வீட்டுப் பொண்ணு. கூடிய சீக்கிரம் நிச்சயத் தேதியையும் கல்யாணத் தேதியையும் குறிச்சிட்டு சொல்றேன் சம்பந்தி. இப்ப நாங்க கிளம்புறோம். வரேன் மா”, என்று சொல்லி விட்டு ராயர் கிளம்ப அனைவரும் எழுந்து கொண்டார்கள்.

     தமயந்தியும் அவளது கன்னம் தொட்டு “சீக்கிரம் எங்க வீட்டுக்கு வரணும் மா”, என்று சொல்லிச் சென்றாள்.

     மணிமேகலை பார்வதி சுந்தரேஸ்வரர் சேதுராமன் நால்வரும் எதுவும் பேசாமலே வெளியே சென்று விட்டார்கள். நிரஞ்சனும் இளஞ்செழியனும் பரமசிவத்திடம் மட்டும் சொல்லி விட்டு வெளியே சென்றார்கள்.

     எஞ்சி இருந்தது அஞ்சனா, நந்தினி, விக்னேஷ் தான். அவர்கள் மூவரும் கிளம்பாமல் மீண்டும் சோபாவில் அமர அப்பாவும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

     என்ன சொல்ல என்று தெரியாமல் “நீங்க மூணு பேரும் கிளம்பலையா?”, என்று கேட்டார் பரமசிவம்.

     “என்ன மாமா, எங்களை விரட்டி விடப் பாக்குறீங்களா?”, என்று கேட்டான் விக்னேஷ்.

     அவன் சொன்னதைக் கேட்டு பதறி “ஐயோ அப்படி எல்லாம் இல்லைங்க தம்பி”, என்று அவர் பதற அவன் வம்பிழுப்பது புரிந்து சிரித்தாள் வான்மதி.

     “ஆமா ஆமா நீங்க போகச் சொன்னாலும் நாங்க போக மாட்டோம். எங்க அக்காவையும் நாங்க கூட்டிட்டு தான் போகப் போறோம். அப்படி தானே நந்து?”, என்று கேட்டாள் அஞ்சனா.

     “ஆமா ஆமா அண்ணி வந்தா தான் நாங்க போவோம்”,. என்றாள் நந்தினி.

     பரமசிவம் அவர்களுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் திணற வான்மதிக்கோ அவர்கள் மூவரையும் பிடித்து விட்டது. “வாங்க அண்ணி, நாம கிளம்பலம்”, என்று விக்னேஷ் சொல்ல “தம்பி இன்னும் கல்யாணம் முடியலையே”, என்று தவிப்புடன் சொன்னார் பரமசிவம்.

     தந்தையின் தவிப்பைக் கண்டவள் “அப்பா அவன் உங்க கிட்ட விளையாடுறான் பா”, என்று சொல்ல அதற்கு பிறகு தான் அவரும் சிரித்தார்.

     “இப்ப நான் என் பொண்ணை உங்க கூட அனுப்ப மாட்டேன் தம்பி”, என்று பரமசிவம் சொல்ல “நீங்க எப்படி அப்படி சொல்லலாம்? அவங்க எங்க அண்ணி? அவங்களை எங்க வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லுவீங்களோ?”, என்று விக்கி எகிற “அதானே, எங்க வீட்டுப் பொண்ணை எங்க கிட்டயே எங்க வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லுவீங்களா? எடுங்க டா அந்த சொம்பை. கூட்டுங்கடா பஞ்சாயத்தை”, என்றாள் அஞ்சனா.

     “நீங்க எந்த பஞ்சாயத்தைக் கூட்டினாலும் கல்யாணம் முடியுற என் பொண்ணை உங்க வீட்டுக்கு அனுப்ப மாட்டேன். ஆனா நீங்க மூணு பேரும் கல்யாணம் வரைக்கும் இங்கயே இருந்து என் பொண்ணைக் கையோட அழைச்சிட்டே போங்க. இப்ப உங்களை வெளிய விட மாட்டேன். மதி மா கெஸ்ட் ரூமை கிளீன் பண்ணு. இப்ப இருந்து மூணு பேரும் நம்ம வீட்ல தான் இருக்க போறாங்க. நீ ஸ்கூல்க்கு போன அப்புறம் எனக்கு இனி போர் அடிக்காதே”, என்று சந்தோஷமாக சொன்னார் பரமசிவம். அதைக் கேட்டு விக்கி நே என்று விழிக்க மதி அடக்க மாட்டாமல் சிரித்தாள்.

     “மாமா நீங்க செம போங்க. நாங்க உங்களை கிண்டல் அடிச்சா நீங்க எங்களையே மடக்கிட்டீங்களே?”, என்று கேட்டாள் நந்தினி.

     “கெட் மாஸ்டர் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? எங்களையே மடக்கிட்டீங்களே மாமா. அப்புறம் கொஞ்சம் பயமா தான் இருக்கு, அண்ணி வேற டீச்சர். நல்லா டிரெனிங்க் கொடுத்துருப்பீங்க? எங்களை டிரில் வாங்கப் போறாங்க”, என்று விக்கி சொல்ல “அப்பா நீங்க சொன்னது தான் சரி. அந்த கதவை பூட்டுங்க. இவங்க மூணு பேரையும் கல்யாணம் வரைக்கும் ஹவுஸ் அரெஸ்ட் பண்ணப் போறோம். தினமும் உங்களுக்கு நேரம் போகலை தானே? இனி இவங்களுக்கு சமைச்சு போட்டு எஞ்சாய் பண்ணுங்க”, என்று என்றாள் மதி.

     ஐயையோ என்று மூவரும் அலற அப்போது வெளியே இருந்து “ஏய் வாலுங்களா, வெளிய வாங்க டா மூணு பேரும்”, என்று ராயர் குரல் கேட்க “ஐயோ அப்பா, வரோம் அண்ணி, வரோம் மாமா”, என்று சொல்லி முதல் ஆளாக வெளியே சென்றான் விக்கி. மற்ற இரண்டு பெண்களும் அவர்களிடம் சொல்லி விட்டு கிளம்பினார்கள்.

     அப்பா பெண் இருவரும் சிரித்த படியே வாசலுக்கு சென்றார்கள். காருக்குள் எறியதும் மூன்று பேரும் அவளைக் கண்டு சத்தமே இல்லாமல் சிரிக்க அவளும் அவர்களின் அரட்டையை எண்ணி மலர்ந்து புன்னகைத்தாள். கார் கண்ணாடி வழியே அவள் புன்னகையை கண்ட ஆதிக்கு அவ்வளவு நிறைவாக இருந்தது.

     அவர்கள் அனைவரும் கிளம்பியதும் “நல்ல பிள்ளைங்க”, என்று சொல்லி உள்ளே சென்ற பரமசிவம் “உனக்கு உண்மையிலே மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா டா?”, என்று கேட்டார்.

     “புடிச்சிருக்கு பா”, என்று சொல்லி புன்னகைத்தவளுக்கு அறைக்குள் சென்றதும் கலக்கமாக இருந்தது. அந்த மெஸ்ஸேஜ் உண்மையா பொய்யா என்று குழப்பமாக வந்தது. தந்தையிடம் சொல்லலாமா வேண்டாமா என்று எண்ணியவள் அவர் வருத்தப் படுவாறே என்று எண்ணினாள்.

     “ஒரு வேளை இது பொய்யா இருக்குமோ? ஆமா அப்படி தான் இருக்கும்”, என்று அவள் எண்ணும் போதே இன்னொரு மெஸ்ஸேஜ் வந்தது. தடுமாற்றத்துடன் எடுத்துப் பார்த்தாள். “அவனைக் கட்டிக்காத. நீ தான் வருத்தப் படுவ. அவன் மனசுல வேற பொண்ணு இருக்கும் போது அவன் எப்படி உன் கூட சந்தோஷமா வாழ்வான்? உன் வாழ்க்கையை மட்டும் இல்லாம அவனைக் கல்யாணம் பண்ணி அவங்க காதலையும் அழிச்சிறாத. அந்த பொண்ணு பாவம். ஆதி இல்லைன்னா அவ கண்டிப்பா செத்துருவா”, என்று இருந்தது.

     அதைப் படித்ததும் ஆதி இன்னொரு பெண்ணை விரும்புவது உண்மை தான் என்று நம்பினாள். மனதுக்கு பாரமாக இருந்தது. “இது உண்மை தான். நான் யாரோட வாழ்க்கையையும் கெடுக்க கூடாது. இன்னொரு பொண்ணை விரும்புறவனைக் கல்யாணம் பண்ணினா அவங்க காதல் செத்துரும். என்னாலயும் சந்தோஷமா இருக்க முடியாது. அவங்க காதல் ஒண்ணு சேரணும். எனக்கு என்ன வேற வாழ்க்கை அமையாதா என்ன? ஆனாலும் ஆதி மாதிரி கிடைக்காது தான். பரவால்ல. அவங்க நல்லா இருக்கட்டும். இந்த கல்யாணத்தை நிறுத்துறதைப் பத்தி சம்பந்தபட்டவன் கிட்டயே கேட்டு பிளான் பண்ணனும். அவனுக்கு ஹெல்ப் பண்ணனும். அவங்க அப்பா கிட்ட இருந்து ஆதியோட காதலை காப்பாத்தணும்”, என்று எண்ணிக் கொண்டவள் அவனைப் பார்க்க முடிவு எடுத்தாள்.

     அவனுக்கு நிச்சயம் செய்த பெண்ணாக அவனைக் காணப் போகாமல் வி. என் ஸ்கூல் டீச்சராக அவனைக் காணச் சென்றாள். அந்த அப்பாயிண்ட்மெண்ட்டை வாங்கிக் கொடுத்தது சாவித்ரி தான். அவனும் அந்த பள்ளி என்றதும் அனுமதி கொடுத்தான். ஆனால் மதி வருவாளா என்ற எதிர் பார்ப்பு இருந்தது.

     அடுத்த நாள் காலையிலே அவனைக் காண கிளம்பி விட்டாள். அவளைக் கண்டதும் அவனுக்கு அழைத்த ரிசப்சனிஸ்ட் “சார் உங்களைப் பார்க்க வி. எம் ஸ்கூல்ல இருந்து வந்துருக்காங்க”, என்றாள்.

காதல் தொடரும்….

Advertisement