Advertisement

            ஒரு வழியாக வெள்ளிக்கிழமையும் வந்தது. பள்ளி ஐந்து மணிக்கு முடிய நான்கரை மணிக்கே சாவித்ரியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு கிளம்ப ஆரம்பித்தாள் மதி.

     “ப்ச் மதி, ஏன் உன் முகம் இப்படி இருக்கு? நல்லது தானே டி நடக்கப் போகுது?”, என்று கேட்டாள் மஞ்சரி.

     “இன்னும் கொஞ்ச நேரத்துல நடக்கப் போறதை நினைச்சா எனக்கு பயமா இருக்கு. ஆதியை எனக்கு பிடிச்சிருக்கு தான். ஆனா அப்பா…”

     “என்ன டி சொல்ற?”

     “ஒரு சாதாரண குடும்பத்துல கல்யாணம் பண்ணினா என்னால அப்பாவை அடிக்கடி வந்து பாத்துக்க முடியும். ஆனா இவ்வளவு பெரிய குடும்பத்துக்கு மருமகளா போனா என்ன டி செய்ய? என்னால அப்பாவை விட்டுட்டு எப்படி போக முடியும்? ஆனா அவர் கஷ்டப் படுவார்னு சம்மதம் சொன்னேன் மஞ்சரி. ஆனாலும் எனக்கு ரொம்ப பயமா இருக்கு”

            “பொண்ணுங்க நிலைமையே இது தான் மதி. எப்பவும் பிறந்த வீட்டுக்காக யோசிக்க முடியாது. பெரிய குடும்பம் சின்ன குடும்பம் அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்லை. நீ எந்த வீட்டுக்கு போனாலும் உன்னால உன் அப்பா கூட இருக்க முடியாது. வருத்தப் படாதே. அப்பாவை அடிக்கடி வந்து பாத்துட்டு போ. வேற என்ன பண்ண முடியும்? உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதா தான் முடியும்”

            “சரி மஞ்சு கிளம்புறேன்”

     “என்ன நடந்ததுன்னு நைட் கால் பண்ணு டி”, என்று மஞ்சரி சொல்ல சரி என்று சொல்லி விட்டு தன்னுடைய வண்டியில் வீட்டுக்கு கிளம்பினாள்.

     அன்று மாலையும் வந்தது. மதி அவளது அறையில் தயாராகிக் கொண்டிருந்தாள். ஆதியின் முகம் மனக் கண்ணில் வந்தது. அதுவும் அவனது கைகளுக்குள் நின்ற நொடி நினைவில் வந்து உடலை சிலிர்க்க வைத்தது. அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது தான். ஆனாலும் அவர்கள் குடும்பத்தை எண்ணி கொஞ்சம் பயமாக தான் இருந்தது.

     சிறிது நேரத்தில் ராயரின் மொத்த குடும்பமே பெண் பார்க்க வந்திருந்தது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். கூட்டத்தைக் கண்டு மிரண்டு போனாள். இவர்கள் பக்கம் இவளும் இவள் தந்தையும் மட்டுமே. “என்ன இவ்வளவு பேர் வந்திருக்காங்க?”, என்று எண்ணியவளுக்கு இத்தனை பேர் முன்னிலையில் என்னைப் பார் என் அழகைப் பார் என்று நிற்பது அவளுக்கு என்னவோ போல இருந்தது. அவள் கண்கள் ஆதியைத் தேட அவனது முதுகுப் பக்கம் மட்டும் தெரிந்தது.

     பரமசிவம் அனைவரையும் மரியாதையுடன் வரவேற்றார். தாங்கள் பெரிய கூட்டமாக வந்திருக்க தங்களை வரவேற்ற ஒற்ற மனிதரை யாருமே எதிர் பார்க்க வில்லை.

            “மன்னிச்சிக்கோங்க. என் மனைவியும் நானும் காதல் கல்யாணம் பண்ணினவங்க. அதனால அப்பவே சொந்தங்கள் எங்களுக்கு இல்லை. அதுவும் அவ இறந்த அப்புறம் சொந்தம்னு பேருக்கு கூட இல்லை”, என்று பரமசிவம் சங்கடமாக சொல்ல ராயர் நெகிழ்ந்து தான் போனார்.

            “இதுல என்ன இருக்கு சம்பந்தி? இனிமே எங்க சொந்தங்களும் உங்க சொந்தங்கள் தான். வாங்க உள்ள போகலாம்”, என்று ராயர் சொல்ல அனைவரும் திகைத்து தான் போனார்கள். பரமசிவமே அந்த சம்பந்தி என்ற வார்த்தையில் மிரண்டு தான் போனார்.

            “அம்மா என்னமா இது? பொண்ணு பாக்க தானே வந்தோம்? இந்த அண்ணன் என்ன வீட்டுக்குள்ள நுழையும் போதே சம்பந்தின்னு சொல்றார்?”, என்று அன்னையின் காதைக் கடித்தாள் மணிமேகலை.

     “என்னை என்ன டி பண்ணச் சொல்ற? இவனை எதிர்த்து என்ன பேச முடியுது? நடக்குறதை வேடிக்கை பாக்காம ஏதாவது செஞ்சு இந்த சம்பந்தத்தைக் கெடுக்க முடியுமான்னு பாரு”, என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் பார்வதி.

            “எல்லாரும் உக்காருங்க”, என்று சொன்ன பரமசிவம் சமையல் அறைக்குச் சென்று அவர் போட்டு வைத்திருந்த காபியை எடுத்து வந்து கொடுக்க அனைவரும் வாங்கிக் குடித்தார்கள்.

            “இது என்ன வழக்கமோ பொண்ணோட அப்பா காப்பி கொடுக்குறது?”, என்று மணிமேகலை முணுமுணுத்தாள். ஆனால் ராயருக்கு கேட்க வில்லை. கேட்கும் படி அவள் பேசி விடவும் முடியாதே.

            காபி குடிக்கும் வரை அனைவரும் அமைதியாக இருக்க “எனக்கு உங்க பொண்ணை போட்டோல பாத்தே புடிச்சிருச்சு. எங்க வீட்டுக்கு ஏத்த மருமகளா அவ இருப்பா. அப்புறம் இவன் தான் என் மகன் ஆதி. ஆதித்ய கரிகாலன். இவனை உங்களுக்கு நல்லாவே தெரியும். இவனை உங்களுக்கு பிடிச்சிருந்தா பொண்ணை அழைச்சிட்டு வாங்க”, என்று ராயர் சொல்ல பரமசிவம் அவனைப் பார்த்தார். அவரைக் கண்டு அழகாக புன்னகைத்தான்.

     மகள் அளவுக்கு நிறம் இல்லை என்றாலும் அவனுடைய ஆளுமையான தோற்றமும், கம்பீரமும், தன்னைக் கண்டு அவன் புன்னகைத்த விதமும் அவருக்கு திருப்தியைக் கொடுக்க “உங்க வீட்ல சம்மந்தம் பண்ண நாங்க கொடுத்து வச்சிருக்கணும். எனக்கு உங்க பையனை ரொம்ப பிடிச்சிருக்கு. இருங்க நான் என் மகளை அழைச்சிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார் பரமசிவம்.

            “ராயர் நீ செய்றது எதுவும் சரியில்லை”, என்றாள் பார்வதி.

            “என்ன மா?”

            “பொண்ணு பாக்க தானே வரோம்னு சொன்ன? இப்ப முடிவு பண்ணுற மாதிரி பேசுற? சம்பந்தின்னு வேற சொல்ற?”

            “இது என் மகன் கல்யாணம் என் விருப்ப படி தான் நடக்கும்”

            “என்ன டா இப்படிச் சொல்ற? அப்படின்னா இந்த வீட்ல கருத்துச் சொல்ல எங்களுக்கு மதிப்பு இல்லையா?”

            “எனக்கு தமயந்தியை நீங்க பொண்ணு பாத்தப்ப உங்களை நான் எதுவும் சொன்னேனா மா? நீங்க சொன்ன உடனே கல்யாணம் பண்ணலையா? அது தான் நான் உங்களுக்கு கொடுத்த மரியாதை. இப்ப நடக்கப் போறது என் மகன் கல்யாணம். அவனுக்கு எது பெஸ்ட்டோ அதை தான் கொடுப்பேன். இதுல யாரும் தலையிடக் கூடாது. அது மட்டுமில்லாம என் மகன் என் மேல உள்ள நம்பிக்கையில் தான் அமைதியா இருக்கான். அவன் மட்டும் பொன்னைப் பாத்தானா? இல்லை தானே? ஆனால் நான் இப்ப சொன்னாலும் அந்த பொண்ணு கழுத்துல தாலி காட்டுவான். இது என் மகன் கல்யாணம், இது என் விருப்ப படி தான் நடக்கும்”, என்று சொல்ல அதற்கு பின் யாரும் எதுவும் சொல்ல வில்லை. ஆனால் மகன் செய்த திருட்டுதனம் தெரிந்தால் என்ன சொல்வாரோ?

     அவர்கள் பெண் பார்க்க வந்திருப்பது தெரிந்து கொஞ்சம் படபடப்பாக உணர்ந்தாள் வான்மதி. அவனைப் பார்த்த முதல் தோற்றத்திலே அவனது வசீகரமும் கம்பீரமும் அவள் மனதில் பதிந்தது தான். ஆனால் அப்போது அவன் அவளுக்கு யாரோ என்பதால் அன்னியப் பார்வை தான் பார்த்தாள். ஆனால் இப்போது அவன் தான் வருங்கால கணவன் என்னும் போது கொஞ்சம் குறுகுறுப்பாக தான் இருந்தது.

     “அவனுக்கு என்னைப் பிடிக்குமா? அன்னைக்கு அவன் பார்வைல ஏதாவது வித்தியாசம் இருந்துச்சா? நான் தான் பொண்ணுன்னு அவனுக்கு தெரியுமா? இந்த சேலை எனக்கு நல்லா இருக்கா? இல்லை அவன் கண்ணுக்கு அசிங்கமா தெரியுவேனா? அன்னைக்கு அவன் கைக்குள்ள நின்னப்ப என்னை ஒரு மாதிரி பாத்தானே? அப்படின்னா அப்பவே அவனுக்கு என்னைப் பிடிக்குமா? ஆனா அது ஆர்வமான பார்வையான்னு தெரியலையே?”, என்றெல்லாம் எண்ணிக் குழம்பினாள்.

     அப்போது அவளது மொபைலுக்கு ஒரு மெஸ்ஸேஜ் வந்தது. எடுத்துப் பார்த்தாள். அதில் அவன் ஒரு பெண்ணை விரும்புவதாகவும் அப்பாவுக்கு பயந்து அதை அவன் மறைப்பதாகவும் இருந்தது. அதைப் படித்து விட்டு குழம்பிப் போனாள். முதலில் நம்பலாமா வேண்டாமா என்று குழம்பியவள் பணக்காரர்கள் வீட்டில் இப்படி நடப்பது இயல்பு தான் என்று எண்ணி அதை நம்ப ஆரம்பித்தாள்.

     இப்போது அவளிடம் பரபரப்போ படபடப்போ எதுவுமே இருக்க வில்லை. ஒரு உணர்ச்சியற்ற பார்வை மட்டுமே. ஆனால் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள். தந்தையின் சந்தோஸத்தை கடந்த இரண்டு நாட்களாக பார்க்கிறாளே? இதை வேறு மாதிரி தான் சரி செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

     அப்போது தான் பரமசிவம் உள்ளே வந்து வான்மதியை வெளியே அழைத்து சென்றார். அழகிய ஆகாய வண்ண சில்க் சேரியைக் கட்டிக் கொண்டு மிதமான ஒப்பனையுடனும் அளவான நகைகளை அணிந்து இரண்டு பக்கமும் மல்லிகைப் பூவை வைத்த படி வந்தவளை அனைவரும் வியந்து தான் பார்த்தார்கள்.

     அவள் அழகு அனைவரையும் கொள்ளை கொண்டது என்று சொன்னால் அது மிகையில்லை. அங்கு வந்து நின்றவள் அனைவரையும் கை கூப்பி வணங்கினாள். பின் தந்தை அருகில் சென்று நின்று கொண்டாள். இருந்த மனக் குழப்பத்தால் அவள் யாரையும் நிமிர்ந்து பார்க்க வில்லை. ஆதி அவளையே ரசனையாக பார்க்க அதை கண்ட ராயரின் முகத்தில் திருப்தி வந்தது.

     தந்தை தன்னைக் கவனிக்கிறார் என்றெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. அவன் கண்களிலும் மனதிலும் இந்த நிமிடம் நிறைந்திருந்தது அவள் மட்டுமே. அவளது அழகான கண்களும் செரிப் பழ உதடுகளும் அவளது உடலின் வனப்பும் அவனின் ரசனைக்கு விருந்தாகியது.

     நீள் வட்ட முகமும் மான் விழியும் பிறை நிலா போன்ற புருவங்களும் சின்ன மூக்கும் சிவந்த உதடுகளும் சங்கு கழுத்தும்  ஒள்ளியும் இல்லாத குண்டும் இல்லாத தேகமும் தட்டையான வயிறும் சிவந்த பாதங்களும் என அவ்வளவு அழகாக இருந்தவளை இமைக்க மறந்து பார்த்தான். அவள் அழகைக் கண்டு மயங்கித் தான் போனான். எனக்கு இவள் தான் என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்து அவனை கிளர்ச்சி கொள்ள செய்தது.

            “எங்க எல்லாருக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு மா. நீயும் என் பையனைப் பாரு”, என்று ராயர் சொல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் பார்வை அவள் பார்வையைக் கவ்விக் கொண்டது. சாம்பல் வண்ண முழுக்கைச் சட்டையும் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து வசீகரமான தோற்றத்தில் இருந்தான் ஆதி.

     ஒரு நொடி அவனைப் பார்த்தவள் பட்டென்று தலை குனிந்து கொண்டாள். அதைக் கண்டவனின் புருவம் இரண்டும் முடிச்சிட்டது. ஒரு பெண் இந்த நேரத்தில் வெளியிடும் எந்த முக பாவனையும் அவள் முகத்தில் இல்லை. ஒரு இறுக்கம் மட்டுமே இருந்தது. அவளையே பார்வையிட்டான் அவன். மற்ற பெண்கள் போல அவள் முகத்தில் நாணமோ வெட்கமோ கூச்சமோ எதுவும் தெரிய வில்லை. ஏதோ ஒரு வெறுமையும் கடமையும் மட்டுமே தெரிந்தது.

Advertisement