Advertisement

     “எனக்காகவா இப்படி ஒரு முடிவு? வேண்டாம் மாமா. அவ சின்ன பொண்ணு. ஏதோ தெரியாம பேசிருப்பா”, என்று அவள் சொல்ல “எனக்கும் பிடிக்கலை அண்ணி. இந்த பேச்சு வேண்டாம்”, என்றான் விக்கி.

     “இப்பவே அந்த பொண்ணு குணம் தெரிஞ்சதுன்னு சந்தோஷப் படுங்க. எல்லாரும் போய்ப் படுங்க. தமா, மதிக்கு ஏதாவது சாப்பிடக் கொடு”, என்று சொல்லி விட்டு ராயர் செல்ல அனைவரும் சென்றார்கள்.

     “எனக்கு வேண்டாம் அத்தை”, என்று மதி சொல்ல “பாலாவது எடுத்துட்டு வரேன் இரு”, என்று சொல்லிச் சென்றாள்.

     விக்கி, ஆதி, மதி மூவரும் அந்த அறையில் நிற்க “பாலை வாங்கிட்டு மேல வாடி, பர்ஸ்ட் நைட் கொண்டாடிறலாம் அம்மணி”, என்று அவள் காதில் முணுமுணுத்து விட்டுச் சென்ற கணவனை முறைத்தாள்.

     “என்ன அண்ணி எங்க அண்ணனை இப்படி முறைக்கிறீங்க?”, என்று சிரிப்புடன் கேட்டான் விக்கி.

     “விக்கி பி‌ சீரியஸ். என்ன டா இதெல்லாம்? ஏன் பிரியாவை வேண்டாம்னு சொன்ன? எனக்கு கஷ்டமா இருக்கு”

     “அண்ணி நிஜமாவே நான் சந்தோஷமா இருக்கேன். நான் முன்னாடியே சொன்னேன் தானே மனசே சரி இல்லைன்னு. ஆனா அவளை வேண்டாம்னு சொன்ன அப்புறம் ஹேப்பியா ஆகிருச்சு? ஆனா ஏன் இப்படி? பிளீஸ் சொல்லுங்களேன்?”

     “எனக்கு என்ன டா தெரியும்?”

     “நீங்க தானே எனக்கு வழிகாட்டி”

     “நீயே இதுக்கு பதில் யோசி. உனக்கே தெரியும்”, என்றவள் தமயந்தி கொடுத்த பாலை வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்றாள். பாலைக் குடித்து விட்டு உடை மாற்றி கணவன் அருகே படுக்க அவளை வாகாக அணைத்துக் கொண்டவன் எதுவும் பேசாமல் படுத்திருக்க என்ன ஆச்சு என்னும் விதமாக பார்த்தாள்.

     “இன்னைக்கு மூட் இல்லை டி, நாளைக்கு கொண்டாடிடலாம். சரி அங்க என்ன நடந்துச்சுன்னு சொல்லு”, என்று சொல்ல அதைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

     அடுத்த நாள் காலை ராயர் வீடு இயல்பாக இருந்தது. விக்கியே சாதாரணமாக இருக்க வேறு யாருக்கு கவலை இருக்க போகிறதாம்? அவன் அலுவலகம் கிளம்பிச் செல்ல அவனை எதிர்க் கொண்டாள் ரேகா.

     அவனைக் கண்டதும் மனதுக்கு பாரமாக இருந்தாலும் அதை அடக்கி “என்ன மாப்பிள்ளை சார்? பொண்ணு எல்லாம் ஓகே ஆகிருச்சா?”, என்று கேட்ட படி அவனது அறைக்குள் போக அவளைக் கண்டதும் விக்கி முகம் ஒளிர்ந்தது. ஏனோ இது வரை மறைந்திருந்த சந்தோஷம் அவளைக் கண்டதும் வெளிய தலை காட்டிய பீல்.

     “ரேகாவைப் பாத்ததும் எனக்கு ஏன் இவ்வளவு சந்தோஷம்? பிரியா பாத்து கூட இந்த பீல் வரலையே?”, என்று எண்ணியவனுக்கு அவன் மனதே புரிய தான் அவளை விரும்புகிறோம் என்று அவன் உணர்ந்த தருணம் அது தான்.

     காதலை உணர்ந்ததும் உற்சாகமாகி விட்டான். “ஏய் வாயாடி அந்த சம்பந்தம் அமையலை. அண்ணியை அவ மதிக்கலை. அதனால நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்”, என்று சிரிப்புடன் சொன்னான்.

     “ஐயையோ உங்களுக்கு பிடிச்ச பொண்ணாச்சே? உங்க கிரஷ்ன்னு வேற சொன்னீங்க?”, என்று உண்மையாகவே கவலையாக தான் கேட்டாள்.

     “உனக்கும் தான் சச்சின் டெண்டுல்கரைப் பிடிக்கும். எல்லா கிரஷும் காதலாகாது ரேகா குட்டி”

     “இருந்தாலும்…”, என்று அவள் இழுக்க “என்னை விட உனக்கு தான் என் கல்யாணம் நின்னது சோகம் போல? பேசாம என்னை கட்டிக்கிட்டு எனக்கு வாழ்க்கை கொடுக்குறியா?”, என்று அவன் கேட்க அதிர்ந்து தான் போனாள்.

     “என்ன பேசுறீங்க?”, என்று அவள் திகைக்க “உனக்கு என்னைப் பிடிக்கலையா? வாழ்க்கை கொடுக்க மாட்டியா டி?”, என்று கேட்டான்.

     “நீங்க இப்படி வம்பிழுக்குறதை விடவே மாட்டீங்களா விக்கி சார்?”

     “ஏய் சீரியஸா பேசுறேன் டி. நான் உன்னை லவ் பண்ணுறேன்னு நினைக்கிறேன். இன்னைக்கே அண்ணன் அண்ணி கிட்ட சொல்லி வீட்ல பேசச் சொல்லப் போறேன். நீ லவ் பண்ணலைன்னாலும் கல்யாணம் பண்ணிட்டு லவ் பண்ணு. ஆனா உனக்கு என்னைப் பிடிக்கலைன்னா மட்டும் சொல்லிரு”, என்று சொல்ல அவள் முகமும் அகமும் மலர்ந்தது.

     ஆனால் அவர்கள் ஏற்றத் தாழ்வு நினைவில் வர “உங்களை யாருக்கு தான் பிடிக்காது? உங்களை மாதிரி பையன் கிடைக்க எல்லா பொண்ணும் கொடுத்து தான் வச்சிருக்கணும்”, என்று ஏக்கமாக சொன்னாள்.

     “அப்ப உனக்கு சம்மதமா? ஓகே வா சொல்லு டி?”

     “என் நிலைமை தெரிஞ்சும் இப்படிச் சொல்றீங்க? அதுக்கு வாய்ப்பே இல்லை விக்கி”

     “அது மாறும் டி. உன் தம்பி அன்பு வேலைக்கு போற வரை நீயே உன் குடும்பத்தை பாத்துக்கோ. அப்புறமும் கூட பாத்துக்கோ யார் என்ன சொல்லப் போறா?”, என்று கேட்டான். அவள் குடும்பத்தையே நினைத்து தயங்குகிறாளோ என்று எண்ணி கேட்டான்.

     “நான் சம்மதிக்க மாட்டேன். உங்களுக்கு ஓகே சொன்னா நான் நன்றி கெட்டவளா ஆகிருவேன். நான் மதி அக்காவுக்கு கெட்ட பேர் வாங்கிக் கொடுக்க விரும்பலை. நீங்க என்னை விரும்புறேன்னு சொன்னா நான் உங்களை மயக்கிட்டேன்னு பேசுவாங்க. அப்புறம் மதி அக்காவுக்கு தான் என்னால கெட்ட பேர்”, என்று அவள் கண்ணீருடன் காதல் நிறைவேறியும் அதை அடைய முடியாத விரக்தியில் சொல்லிச் செல்ல அவள் மனது புரிந்தும் புரியாத நிலை தான் விக்கிக்கு.

     அன்றே விக்கி மதியிடம் ரேகா மீதான காதலைச் சொல்ல அடுத்து மதி தாமதிக்க வில்லை. அதை உடனே அவள் ஆதியிடம் சொல்ல ஆதி ராயரிடம் பேசினான்.

     ராயர் மகனின் சந்தோஷம் முக்கியம் என்று முடிவு செய்து உடனே சரி என்று சொல்லி விட்டார். மதி தான் இரண்டு வீட்டிலும் பேசி நிச்சயத்தை நல்ல படியாக நடத்தினாள். ஆனால் திருமணம் மட்டும் நந்தினிக்கு குழந்தை பிறந்த பிறகு என்று பேசி முடித்தார்கள்.

     இடையில் ஒரு நாள் கோவிலில் வைத்து பிரியா மதி இருவரும் சந்தித்தார்கள். மதி கண்டு கொள்ளாமல் செல்ல பிரியாவே சென்று அவளிடம் பேச போனாள். ஆனால் அவளிடம் பேசி எந்த தர்மசங்கடத்தையும் வளர்க்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அங்கிருந்து சென்று விட்டாள் மதி.

     ஏனென்றால் விக்கியை அவளுக்கு பூ வைத்து உறுதி செய்த பிறகு அந்த சம்பந்தம் நின்றால் நிச்சயம் அது அவளுக்கு வலி தானே? அதைக் கிளறி விட மதி தயாராக இல்லை. தான் பேசியதற்கு தான் மதி கோபமாக செல்கிறாள் என்று எண்ணிய பிரியாவும் விக்கியை நல்ல குடும்பத்துக்கு மருமகளாக போகும் வாய்ப்பை இழந்ததற்கு வருத்தப் பட்டுக் கொண்டே சென்றாள். காலம் அவளுக்கானவனை நிச்சயம் காட்டும்.

     முடிவு எடுத்தது போல அடுத்த மாதத்தில் நந்தினிக்கு பெண் குழந்தை பிறக்க அடுத்த முகூர்த்தத்திலே விக்கி ரேகா திருமணம் நல்ல படியாக நடந்தது. பலர் ஏழை வீட்டுப் பெண் என்று பேசினார்கள் தான். ஆனால் காதல் திருமணமென்று சொன்னதும் பேச்சு அடி பட்டுப் போனது. மதி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்ய பேரனை மடியில் வைத்துக் கொண்டு மகளை பூரித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார் பரமசிவம்.

     அன்றைய இரவில் ரேகாவை அலங்கரிந்து விக்கி அறைக்கு அனுப்பியது மதி தான். அன்றே கணவனாக விக்கி ரேகாவை நெருங்க அவனை விட ஆவலாக அவள் அவனை அணைத்துக் கொள்ள வியந்து போனவன் “ஏய் என்ன டி இது?”, என்று கேட்டான்.,

     “என்னோட பல வருஷ காதல் நிறைவேறிருச்சு”

     “என்ன டி சொல்ற? என்னை லவ் பண்ணுனியா?”

     “ஆம்”, என்று தலையசைத்தவள் “எனக்கு உங்களை முன்னாடியே ரொம்ப பிடிக்கும். என் காதல் அக்காவுக்கு கூட தெரியும் தெரியுமா? ஓர் நாள் என் கிட்ட பேசினாங்க. அவனா வந்து உன் கிட்ட காதலைச் சொல்ற வரைக்கும் உன் காதல் அவனுக்கு தெரியக் கூடாது. அப்படி நீயா சொன்னா உன்னைத் தான் தப்பா பேசுவாங்கன்னு சொன்னாங்க. அதான் நான் காட்டிக்கலை”, என்று சொல்ல அடுத்த நொடி ஆனந்தமாக அவளை ஆக்ரமித்தான் விக்கி. அவர்கள் வாழ்க்கை அழகாக துவங்கியது.

     அன்றைய இரவில் அகில் குட்டியை தமயந்தி வைத்துக் கொள்ள தனியாக தங்களின் அறைக்கு வந்தாள் மதி. அவளுக்காகவே காத்திருந்த ஆதி அவள் வந்ததும் அவளை இழுத்து அணைக்க “என்ன அவசரமாம்?”, என்று கேட்டாள்.

     “அகில்க்கு அஞ்சு வயசு ஆரம்பிக்க போகுது டி. இன்னுமா அவனுக்கு ஒரு துணையை வர வைக்காம இருக்கணும்? எனக்கு பொண்ணு பெத்துக் கொடு டி. விக்கிக்கு குழந்தை பிறக்கும் போது எனக்கு என் பொண்ணு வேணும்”, என்று கேட்க “நானா வேண்டாம்னு சொன்னேன்?”, என்று கேட்டவள் சிரிக்க அவன் உதடுகள் அவள் உதடுகளை சிறை செய்தது. எந்த கர்வமும் இல்லாமல் காதலை மட்டும் கொட்டும் கணவனின் நெஞ்சில் முகம் புதைத்தாள் ஆதித்யகரிகாலனின் வான்மதி.

……முற்றும்…..

Advertisement