Advertisement

     நடந்ததையும் தன்னுடைய குழப்பத்தையும் ஆதியிடம் சொல்லலாமா என்று கூட அவளுக்கு தோன்றியது. “இப்ப என்ன பிரியாவுக்கு என்னை பிடிக்கலை. அதான் இப்படி பேசிட்டா. இது பெரிய விஷயமா? அவளை எல்லாம் நான் ஏன் கணக்குல எடுத்து இவ்வளவு யோசிக்கணும்”, என்று எண்ணும் போதே வீடு வந்திருந்தது.

     அவள் காரைக் கண்டதும் செக்யூரிட்டி ஓடி வர “காரை ஷெட்ல விட்டுருங்க அண்ணா”, என்று சொன்னவள் மகனைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.

     அகில் உடல் காச்சல் வருவது போல இருக்க லேசாக வெந்நீரில் அவன் உடம்பை துடைத்து எடுத்து லேசான உடை அணிந்து மிதமான உணவை ஊட்டி அறைக்குள் வந்து அவனை உறங்க வைக்க அவனோ சிணுங்கிக் கொண்டே இருந்தான்.

     காச்சல் வந்தால் அவனது அப்பாவைப் போலவே அவளை படுத்தி எடுப்பான் அகிலும். அவளை அங்கே இங்கே நகர விடாமல் அவன் பிடித்து வைத்திருக்க மகனை நெஞ்சில் சாய்த்த படியே படுத்திருந்தாள். அவன் உறக்கத்திற்கு செல்ல அவள் யோசனையில் இருந்தாள். ஆனால் விடை தான் கிடைக்க வில்லை.

     இங்கே பிரியா வீட்டில் உணவு நேரம் நல்ல படியாக தான் சென்றது. அனைவரும் தனித் தனியே ஆதியிடம் மதியைக் கேட்க “அகில் சிணுங்கிட்டே இருந்தான். அதான் வீட்டுக்கு போகச் சொல்லிட்டேன்”, என்று மட்டும் சொன்னான்.

     உணவு முடிந்ததும் அனைவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்ப ஆரம்பிக்க “விக்கி பிரியா கிட்ட சொல்லிட்டு வா, கிளம்பலாம்”, என்றாள் தமயந்தி.

     அவனும் அவள் அருகே சென்றான். அவர்களுக்கு தனிமை கொடுத்து மற்றவர்களும் விலகிச் சென்றார்கள். “நான் கிளம்புறேன் பிரியா”, என்றான் விக்கி.

     “சரி, இனி எப்ப பாக்க முடியும்? எனக்கு கால் பண்ணுவீங்களா? என் நம்பர் உங்க கிட்ட இருக்கா? நம்ம கல்யாணம் எப்ப நடக்கும்?”, என்று அவள் பல கேள்விகள் கேட்க “கல்யாண தேதி வீட்ல பாத்துட்டு தான் சொல்லுவாங்க. அதுவும் மதி அண்ணிக்கு தான் எல்லாரோட புரோகிராமும் தெரியும். அவங்க பிக்ஸ் பண்ணிட்டு சொல்லுவாங்க”, என்று ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னான்.

     “என்னது அவங்களா? அவங்க கிட்ட எதுக்கு கேக்கணும்? மாமா அத்தை பாக்க வேண்டியது தானே?”, என்று பிரியா கேட்க “எங்க வீட்ல மதி அண்ணியை நானும் நந்தினியும் இன்னொரு அம்மாவா தான் பாக்குறோம்”, என்று சொல்ல பிரியாவுக்கு திக்கென்று இருந்தது.

     மதியின் மதிப்பு தெரியாமல் அவளை பேசிவிட்டோமோ என்று எண்ணியவளுக்கு மதி அங்கே இல்லாதது கொஞ்சம் திகிலைக் கொடுத்தது. நிச்சயம் வீட்டுக்கு சென்றதும் அவள் தன்னை பற்றி சொல்லி விடுவாள். அதற்கு முன் நடந்ததைப் பற்றிச் சொல்லி மன்னிப்பு கேட்டு நடித்து விட வேண்டும் என்று எண்ணி “சாரி விக்கி, அவங்களுக்கு உங்க வீட்ல இவ்வளவு மரியாதை இருக்கும்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா நான் அப்படி பேசி இருக்க மாட்டேன்”, என்றாள்.

     அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனவன் “என்னது அண்ணியை பேசினியா? என்ன பேசின? என்ன சொன்ன அவங்களை? அதான் அவங்க கிளம்பிட்டாங்களா?”, என்று அவன் கேட்க அவன் சத்தத்தில் அனைவரும் அவர்கள் அருகே வந்தார்கள். விக்கி முகத்தில் இருந்த கோபமும் பிரியா முகத்தில் இருந்த பயமும் மற்றவர்களுக்கு எதுவோ சரி இல்லை என்று உணர்த்தியது.

     அவன் சத்தமாக கேட்டதில் அவமானமாக உணர்ந்த பிரியா “விக்கி பிளீஸ் அமைதியா பேசுங்க. எல்லாரும் பாக்குறாங்க”, என்றாள்.

     “நீ அண்ணியை என்ன சொன்ன?”, என்று அவன் மீண்டும் கேட்க “விக்கி என்ன ஆச்சு டா? ஏன் சத்தம் போட்டு பேசுற?”, என்று கேட்டார் ராயர்.

     “அப்பா, இவ மதி அண்ணியை என்னவோ பேசிருக்கா. அதான் அண்ணி பாதிலே கிளம்பிட்டாங்க போல?”

     “என்ன ஆதி இதெல்லாம்?”, என்று ராயர் கேட்க “ஏதோ பிரச்சனைன்னு நினைச்சேன் பா. வீட்ல போய் கேட்டுக்கலாம்னு விட்டுட்டேன்”, என்றான் ஆதி.

     “என்ன விட்டுட்டியா? மதி என் பொண்ணு மாதிரி டா. இந்த வீட்டோட தேவதை. அவளுக்கு ஒரு அவமரியாதை நடந்து அவ இங்க இருந்து போயிருக்கா. நீ அசால்ட்டா வீட்ல போய் பேசிக்கலாம்னு சொல்ற?”, என்று அவனிடம் சத்தம் போட்ட ராயரை பெண் வீட்டினர் அனைவரும் மிரண்டு போய் பார்த்தார்கள்.

     “சம்பந்தி, பிரியா சின்ன பொண்ணு. ஏதோ தெரியாம பேசிட்டா. அவ பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்”, என்ற பிரியாவின் தந்தை “என்ன பிரியா இதெல்லாம்? என்ன செஞ்சு தொலைச்ச?”, என்று கேட்டார்.

     பிரியா குற்ற உணர்வுடன் நடந்ததைச் சொல்ல அனைவரும் அவளை தீயாக முறைத்தார்கள். “பிரியா தெரியாம பேசிட்டா சம்பந்தி. இதை பெரிய விஷயமா ஆக்காதீங்க”, என்று பிரியாவின் தந்தை சொல்ல “இனி சம்பந்தின்னு சொல்லாதீங்க. இந்த கல்யாணம் நடக்காது. என் மருமகளை கஷ்டப் படுத்தின பொண்ணு என் வீட்டுக்கு மருமகளா எப்படி ஆக முடியும்? வேற நல்ல இடம் பாத்துக்கோங்க”, என்று சொன்ன ராயர் “வாங்க போகலாம்”, என்று சொல்ல அனைவரும் அவர் பின்னே சென்றார்கள்.

அப்போது விக்கி கையைப் பற்றிய பிரியா “அயம் சாரி விக்கி”, என்றாள்.

     “கையை எடு டி”, என்று அவன் கண்டிப்புடன் சொல்ல “விக்கி”, என்று அதிர்வாக அழைத்தாள.

     “அடச்சி கையை எடு. யாரை மரியாதை இல்லாமா பேசின? அவங்க யாருன்னு தெரியுமா?”, என்று அவன் கேட்க அவள் கையை எடுத்து விட்டாள்.

     பிரியாவின் தந்தை மீண்டும் கெஞ்ச “மனுசங்களை மனுசங்களா மதிக்க தெரிஞ்சிருக்கணும் சார். அப்படி ஒரு நல்ல குணம் இல்லாத இந்த பொண்ணை என் மருமகளாக்கி என்ன செய்ய போறோம்? மதி எங்க வீட்டுப் பொண்ணு. அவளை ஏதாவது சொல்ல என் வீட்ல உள்ளவங்களுக்கே உரிமை இல்லை. இவ சொல்லுவாளா? சாரி மிஸ்டர் ஜெகநாதன். இனியாவது உங்க பொண்ணுக்கு நல்லது சொல்லிக் கொடுங்க”, என்று சொல்லி விட்டு ராயர் கிளம்ப மொத்த குடும்பமும் அவர் பின்னே கிளம்பியது.

     இந்த பிரச்சனைகளால் வரும் போது கார்களுக்குள் அமைதியே நிலவியது. விக்கியின் மனதில் இப்போது இருந்த குற்ற உணர்வு மறைந்திருந்தது. மனம் லேசாகி போன உணர்வு.

     வீட்டுக்கு வந்ததும் மதிக்கு அழைத்த ராயர் அவளை கீழே வரச் சொல்ல “இதோ வரேன் மாமா”, என்ற படி போனை வைத்தவள் எழுந்து கொள்ள அகில் சிணுங்கினான்.

     தான் இல்லை என்றால் அழுவான் என்பதால் அவனைத் தூக்கிய படியே கீழே வந்தாள். “என்ன அவனைத் தூக்கிட்டு வர?”, என்று தமயந்தி கேட்க “லேசா காச்சல் அடிக்குது அத்தை. விட மாட்டிக்கான்”, என்றாள்.

     “ஆத்தாடி உன் பையன் சரியாகுற வரை படுத்தி எடுப்பானே? ஆதி நீ தூக்கு. உன் கையிலே இருந்துப்பான். அவளுக்கு கை வலிக்கும்”, என்று தமயந்தி சொல்ல மனைவியிடம் இருந்து மகனை வாங்கிக் கொண்டான்.

     கை மாறியதால் அகில் சிணுங்க ஆதி “அப்பா டா கண்ணா”, என்று தட்டிக் கொடுக்க தந்தையின் நெஞ்சில் மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தான்.

     “எதுக்கு மதி சீக்கிரம் வந்துட்ட? நீ பொறுப்பை தட்டிக் கழிக்கிற ஆள் இல்லையே? ஏன் பாதியில வந்த?”, என்று காரணம் கேட்டார் ராயர்.

     “அது… குட்டி அழுதுட்டே இருந்தான் மாமா அதான்”

     “சரி சாப்பிட்டியா? குழந்தை சாப்பிட்டானா?”

     “அவனுக்கு கொடுத்துட்டேன் மாமா. எனக்கு பசி இல்லை. சாரி மாமா நான் பாதியிலே வந்துருக்க கூடாது. அங்க ஒண்ணும் பிரச்சனை இல்லை தானே?”, என்று தடுமாற்றத்துடன் கேட்டாள்.

     “ஒரு பிரச்சனையும் இல்லை மா”

     “நல்லது மாமா, சரி எப்ப கல்யாண தேதி பாக்கட்டும். எல்லாரோட பிரி டைமையும் பாத்து சொல்லணும்”

     “அதுக்கு அவசியம் இல்லை மா. இந்த கல்யாணம் நடக்காது. வேண்டாம்னு சொல்லிட்டோம்”

     “என்ன மாமா சொல்றீங்க?”, என்று அதிர்ந்து கேட்டாள். “என் மருமகளை மதிக்காதவ எப்படி மா இந்த வீட்ல வந்து வாழ முடியும்?”, என்று கேட்க மதியின் கண்கள் கலங்கி விட்டது.

Advertisement