Advertisement

அத்தியாயம் 20

தீஞ்சுவையோ தேன்சுவையோ 

நிச்சயம் உள்ளது என்னவளின் மொழியில்!!!!

     பெண் வீட்டில் அனைவரையும் அமர வைத்து மரியாதையாக தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ராயர் வீட்டில் தான் வெறும் பெண் பார்க்க மட்டும் வர மாட்டார்களே. அதனால் தமயந்தி பிரியாவுக்கு தலையில் பூ வைத்து நகையும் போட்டு உறுதி செய்ய மதில் மேல் பூனையாக அமர்ந்திருந்தான் விக்கி. இப்போது அவன் மனம் முழுக்க குழப்பத்திலே இருந்தது.

     முதல் முறை ஆசையாக ரசித்த பிரியாவைக் கூட அவன் இப்போது பார்க்க வில்லை. கிட்டதட்ட நிச்சயதார்த்தமே முடிந்த நிலையில் இருக்க மாப்பிள்ளை வீட்டினருக்கு சின்ன விருந்தையே ஏற்பாடு செய்திருந்தார் பிரியாவின் தந்தை.

     ராயர் எவ்வளவோ மறுக்க அவர் பிடிவாதமாக சாப்பிட்டு தான் போக வேண்டும் என்று சொல்ல அதற்கு பிறகு மறுக்க வில்லை. பெரியவர்கள் அங்கு அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருக்க பிரியாவும் விக்கியும் தனியே அமர்ந்திருந்தார்கள்.

     விக்கி அமைதியாக இருக்க “ஹாய்”, என்றாள் பிரியா. அவனும் பதிலுக்கு ஹாய் என்று சொல்ல “நான் உங்களை காலேஜ்லே பாத்துருக்கேன்”, என்று அவள் பேச்சை வளர்க்க “நானும் உன்னைப் பாத்துருக்கேன்”, என்றான்.

     “எப்ப? எங்க?”

     “செமினார் அப்ப. அழகா சேலை கட்டி… ரொம்ப அழகா இருந்த”, என்று சொல்ல மிகவும் சந்தோஷப் பட்டாள் பிரியா. ஆனால் விக்கி சாதாரணமாக தான் பேசிக் கொண்டிருந்தான். இன்னும் சொல்லப் போனால் ஒரு குழப்பத்திலே தான் அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த மதி “விக்கி, பிரியா கிட்ட அப்புறம் பேசு. உங்க அண்ணா உன்னைக் கூப்பிடுறாங்க”, என்றாள்.

     “இதோ போறேன் அண்ணி”, என்று சொல்லி விட்டு அவன் செல்ல பிரியா ஏமாற்றமாக உணர்ந்தாள். மதி சிரித்து விட்டு அங்கிருந்து செல்ல அவளை முறைத்த படி நின்றாள்.

     அப்போது பிரியாவின் சித்தி அங்கே வந்து என்னவென்று விசாரிக்க “நான் அவங்க கிட்ட பேசிட்டு இருந்தேன் சித்தி. அந்த அக்கா வந்து அவரைக் கூட்டிட்டு போயிட்டாங்க”, என்றாள்.

     “நீங்க பேசுறதைப் பாத்து அவளுக்கு பொறாமையோ என்னவோ?”

     “எதுக்கு?”

     “அந்த வீட்ல எல்லாருமே ராஜ வம்சம். இவ மட்டும் தான்  அப்படி இல்லை. பெரிய பணக்காரியும் இல்லை. ஏதோ ஒரு பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா வேலை பாத்துருக்கா. பாக்க அழகா இருக்கவும் கட்டி வச்சிட்டாங்க. இவளுக்கு எல்லாம் நீ அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணும்னு இல்லை”

     “ஓ”, என்று ரேகா சொல்ல இதை தற்செயலாக கேட்ட மதிக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள். சாப்பிடும் இடத்தில் வைத்து “ரேகா அக்கா அக்கா”, என்று அழைத்தாள்.

     “என்ன ரேகா? ஏதாவது வேணுமா?”, என்ற படி மதி வர “உங்களை யார் கூப்பிட்டா? நான் கூப்பிட்டது அஞ்சனா அக்காவை”, என்று சொல்ல முகம் சுருங்கிப் போனாள் வான்மதி. ஆனால் அமைதியாக போனால் அவள் மதி இல்லையே? தன்னால் பிரச்சனை வேண்டாம் என்றும் அந்த அளவுக்கு அவர்கள் தவறாக பேச வில்லை என்பதாலும் தான் முதல் முறை அவள் அமைதியாக போனது. ஆனால் இப்போது பிரியா முகத்தில் இருந்த திமிரும் அவள் தன்னை இகழ்வாக பார்த்ததும் பெரிதும் மதியைப் பாதித்தது.

     ஒரே வீட்டில் இருந்து கொண்டு பிரியா இப்படி நடந்து கொண்டால் அது மதிக்கு நல்லது இல்லையே? விக்கி பிரியா திருமணத்திற்கு பிறகு பிரியா மதியை ஏதாவது சொல்லி விட்டால் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். முக்கியமாக ஆதி. அவளை தவறாக பேசியது சொந்த பாட்டியே ஆனாலும் எதிராக நின்றானே? பிரியா ஏதாவது சொன்னால் தம்பி பொண்டாட்டி என்று கூட பார்க்க மாட்டான்.

     அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் ஆதி மனைவிக்காக நின்று ஒன்று அந்த வீட்டில் இருந்து வெளியே வருவான், இல்லை விக்கியை வீட்டை விட்டு அனுப்புவான். எது நடந்தாலும் குடும்பத்தில் விரிசல் வரும். அதனால் பிரியாவுடன் மதிக்கு சுமுகமாக உறவு இருக்க வேண்டும். அதனால் அவளை தீர்க்கமாக பார்த்தாள் மதி.

     அவளின் நிமிர்வான பார்வை பிரியாவை ஏதோ செய்தது. பிரியா கல்லூரியில் படிக்கும் போது மதியின் நிமிர்வையும் தைரியத்தையும் பார்த்திருக்கிறாள் தான். ஆனால் இப்போது ராஜவம்சம் என்ற திமிரில் அப்படி நடந்து கொண்டாள். ஆனால் மதியின் பார்வை ஏதோ செய்ய அந்த இடத்தை விட்டு அகலப் போனாள்.

     “ஒரு நிமிஷம்”, என்று அழைத்த மதி அவளை நிறுத்தினாள்.

     “என்ன?”, என்ற பார்வை பார்த்த படி பிரியா நிற்க “உனக்கு என்ன பிரச்சனை? நீ அஞ்சுவைக் கூப்பிட்ட? நான் தெரியாம உன் கிட்ட வந்து பேசிட்டேன். அதுக்கு எதுக்கு முகத்தை சுழிக்கிற? அந்த அளவுக்கு நான் உன்னை என்ன பண்ணினேன்?”, என்று நேருக்கு நேராகவே கேட்டாள்.

     அவளின் நேருக்கு நேர் கேள்வியில் திணறினாலும் “எனக்கு உங்க கிட்ட பேச ஒண்ணும் இல்லை. எனக்கு தோணினதை நான் சொன்னேன். இதுக்கு வந்து கேள்வி கேப்பீங்களா? என்னைக் கேள்வி கேக்க நீங்க யாரு? என்னைக் கேள்வி கேக்குறது இதுவே கடைசியா இருக்கட்டும்”, என்றாள் பிரியா.

     “ஓஹோ, ஓகே. உன் இஷ்டம். மரியாதை கொடுக்க தெரியாதவங்க கிட்ட பேசுறது இந்த மதிக்கு பழக்கம் இல்லை. இனி நீயே நினைச்சாலும் என் கிட்ட பேச முடியாது. இனி என்ன நடந்தாலும் நான் உன்னைக் கேள்வி கேக்க மாட்டேன். சாரி பார் தி டிஷ்டபர்ன்ஸ்”, என்று நிமிர்வாகவே சொல்லி விட்டு சென்று விட்டாள் மதி. போகும் அவளையும் அவள் பேச்சையும் பார்த்துக் கொண்டிருந்த பிரியாவுக்கு உள்ளுக்குள் பயப்பந்து உருண்டது.

     மகனைத் தூக்கிக் கொண்டு வந்த ஆதி “சாப்பிட வா மதி, உன்னைத் தேடி தான் வரேன்”, என்று அழைத்தான்.

     “எனக்கு பசி இல்லைங்க”, என்ற படி மகனை வாங்கிக் கொண்டாள்.

     “குட்டி சிணுங்கிட்டே இருக்கான் மதி”, என்று ஆதி கவலையாகச் சொல்ல “இது அவன் தூங்குற நேரங்க. அதான் கொஞ்சம் டயர்டா பீல் பண்ணுறான்”, என்று சொன்னவளுக்கு இங்கிருந்து செல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால் அதனால் பிரச்சனை கிளம்புவதை அவள் விரும்ப வில்லை.

     அவள் முகத்தில் எதை உணர்ந்தானோ “நீ வீட்டுக்கு போறியா மதி?”, என்று கேட்க “இங்க எதுவும் நினைக்க மாட்டாங்களா?”, என்ற அவளின் கேள்வியே அவள் மனதைச் சொல்ல “இந்த ஆதி பொண்டாட்டியை யார் என்ன சொல்வாங்களாம்? எனக்கு நீயும் குட்டியும் தான் முக்கியம். ஆனா விக்கிக்கு அண்ணனா நான் இங்க இருக்கணும். உனக்கு புரியுதா?”, என்று கேட்டான்.

     “புரியுதுங்க. நானும் அகியும் போறோம்”

     “நீ டிரைவ் பண்ணிருவியா? செழியனை வரச் சொல்லவா?”

     “செழியன் தம்பியும் இங்க இருக்கணுங்க. நான் பத்திரமா போயிருவேன்”, என்று சொல்ல சரி என்று சொன்ன ஆதி அவர்களை காரில் அனுப்பி வைத்தான். ஏனோ மனைவியின் முகம் சரியில்லாதது போன்று அவனுக்கு ஒரு எண்ணம். அவள் இங்கேயே இருந்தால் யாராவது ஏதாவது கேக்கலாம் என்று எண்ணி தான் அனுப்பி விட்டான்.

      ஆதி மகனை சீட்டில் அமர வைத்து சீட் பெல்ட் போட்டு விட்டிருந்ததால் மதி கார் ஓட்டுவதில் கவனம் வைத்திருந்தாள். ஆனாலும் அவளுக்கு மனது ஒரு நிலையில் இல்லை. ஏதோ இப்போது விக்கியின் மனதில் இருந்த பாரம் இவளுக்குள் இறங்கி இருந்தது.

     என்ன தான் நல்ல பெண்ணாக இருந்தாலும் பிரியா தங்களின் குடும்பத்துக்கு சரி வர மாட்டாள் என்று புரிந்தது. நிச்சயம் அவளால் குடும்பத்துக்குள் விரிசல் வரும். ஆனால் அதை எப்படி தடுக்க என்று தெரிய வில்லை. இன்னொரு புறம் நான் தான் அவளை தவறாக நினைக்கிறோனோ? நான் பொறுத்துப் போனால் எல்லாம் சரியாகி விடுமோ? அப்படி பொறுத்துப் போக தன்னால் முடியுமா? இன்று போல தானே அப்போதும் பதிலுக்கு கொடுப்பாள் என்று கவலையும் வந்தது.

Advertisement