Advertisement

அப்படிச் சொன்னாலும் ரேகா மனதில் இருக்கும் காதல் வலி புரிந்த மதி அவளை தன்னுடைய தோளில் சாய்த்து “உனக்குன்னு இருக்குறது உனக்கு வந்து சேரும் டா. அது வரை எந்த ஆசையையும் வளர்த்துகிட்டு ஏமாறாத. உனக்கு அக்காவா நான் இருக்கேன்”, என்று சொல்லிச் செல்ல அன்று முழுக்க அழுத ரேகா அதற்கு பின் கவனமாக இருந்து கொண்டாள். 

ரேகா தன்னை விரும்புவதோ, அதை மறைப்பதோ விக்கிக்கு தெரியவே தெரியாது. அவன் எப்போதும் போல தான் அவளை வம்பிழுப்பான். “ஏய் அந்த கம்ப்யூட்டரை விட்டுட்டு வா டி சாப்பிட போகலாம். எனக்கு பசிக்குது”, என்று உரிமையாக அழைத்துச் செல்லும் அளவுக்கு அவள் மேல் உரிமை எடுத்தான். ஆனால் அது காதலா நட்பா என்று அவன் யோசிக்க கூட இல்லை.

சரியாக அடுத்த மாதத்தில் ஒரு நாள் ராயர் வீட்டில் அனைவரும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தார்கள். நந்தினிக்கு இப்போது ஒன்பதாவது மாதம் என்பதால் அவள் மட்டும் வரவில்லை. அந்த வீட்டின் கடைக்குட்டி வாரிசு விக்கிக்கு பெண் பார்க்க தான் இந்த ஏற்பாடு. ராயர் தான் அவனுக்கு பெண் பார்த்தார். 

அதுவும் அவன் முதல்முறை பார்த்து ரசித்த பிரியா தான் மணப்பெண். அவளது புகைப்படத்தை பார்த்ததும் உடனே சரி என்று சொல்லி விட்டான் விக்கி. என்ன இருந்தாலும் அவனது முதல் கிரஷ் ஆயிற்றே. 

ஆனால் எப்போது சரி என்று சொன்னானோ அப்போதில் இருந்து மனம் மட்டும் ஒரு நிலையில் இல்லை. ஏதோ தவறு செய்தால் ஒரு உறுத்தல் வருமே. அப்படி ஒரு மனநிலை தான் அவனுக்கு. அவன் அறிந்து எந்த தவறும் செய்ய வில்லை. ஆனால் ஏதோ ஒரு குற்ற உணர்வு அவனை ஆட்கொண்டது. 

“விக்கி கிளம்பிட்டியா?”, என்ற குரல் கேட்டு வாசலை பார்த்தான். கையில் குட்டி ஆதியை வைத்துக் கொண்டு வான்மதி தான் நின்றிருந்தாள். 

“உள்ள வாங்க அண்ணி”

“என்ன டா இன்னும் கிளம்பாமலே உக்காந்துருக்க? எல்லாரும் கிளம்பியாச்சு. நந்து வீட்ல இருந்தும் எல்லாம் வந்தாச்சு. பவி குட்டியை(செழியன் அஞ்சனாவின் குழந்தை) கிளப்ப லேட் ஆகிருச்சுன்னு தான் வெயிட் பண்ணுறோம். ஆனா நீ என்ன கிளம்பாம இருக்க? இன்னைக்கு நாளோட ஹீரோவே நீ தானே டா?”

“அண்ணி”

“என்ன விக்கி?”

“ஏதோ மனசு பாரமா இருக்கு அண்ணி. ஏதோ தப்பு செஞ்சா ஒரு பீல் வருமே. அப்படி ஒரு பீல்”

“எதுக்கு உனக்கு அப்படி தோணுது? நீ என்ன தப்பு செஞ்ச?”

“எனக்கு தெரிஞ்சு இல்லை. ஆனா ஏதோ ஒரு உறுத்தல்”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை டா. நீ வா”

“இல்லை அண்ணி, பொண்ணு பாக்க போகும் போது ஒரு டென்ஷன் இருக்கும். ஒரு படபடப்பு இருக்கும். ஆனா எனக்கு அப்படி ஒரு பீல் இல்லை. இத்தனைக்கும் அந்த பொண்ணை நான் முதன் முதலா பாத்தப்பவே எனக்கு பிடிச்சிருந்தது. அப்படி இருக்க எனக்கு ஹேப்பியா தானே இருக்கணும்?”, என்று சொல்ல வான்மதிக்கு கஷ்டமாக இருந்தது. 

விக்கி மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் போனாலும் அவனது மனச் சோர்வுக்கு காரணம் யாரென்று அவளுக்கு ஒரு ஐயம் இருக்கிறது. ஆனால் அது உண்மையா என்று தெரியாது. ஆனால் நிச்சயம் விக்கி இன்னொரு பெண்ணை திருமணம் செய்தால் அதிகம் பாதிக்கப் படுவது ரேகா என்று அவளுக்கு தெரியும். 

ஏனென்றால் அவர்கள் இருவரையும் கடந்த சில வருடங்களாக அவள் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். அதுவும் ரேகா மனதில் என்ன இருக்கிறது என்று மதிக்கு நன்கு தெரியும். அவளால் ரேகாவை தவறு என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ஒரு பெண் தனக்கு ஏத்தவனாக ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி விக்கி இருந்தான். அவனைக் கண்டு சலனம் கொள்வது இயல்பு தான். ஆனால் அதை ரேகா உணர்ந்த அளவுக்கு விக்கி உணராதது தான் துரதிஷ்டம். 

முதலில் விக்கி மனதில் ரேகா இருக்கிறாள் என்று தான் மதியும் எண்ணினாள். என்றாவது ஒரு நாள் விக்கி ரேகாவை விரும்புவதை சொல்வான் என்று எதிர் பார்த்தாள். ஆனால் ராயர் ஒரு பெண் பார்த்து அந்த பெண்ணுக்கு விக்கி சரி என்று சொன்னது மதிக்கு அதிர்ச்சி தான். இப்போது விக்கிக்கு பெண் பார்க்க போவது தெரிந்ததும் ரேகா கண்களில் வந்து போன வலியைப் பார்த்து தன்னை அடக்குவதே மதிக்கு கஷ்டமாக இருந்தது. 

விக்கி மட்டும் ரேகாவை விரும்புகிறேன் என்று சொல்லி இருந்தால் வான்மதியே அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்திருப்பாள். ஆனால் அப்படி எதுவும் நடக்க வில்லையே. 

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை விக்கி. உனக்கு கல்யாண டென்ஷன் தான். வேற ஒண்ணும் இல்லை. நல்லா படிச்சு நல்ல நிலைமைல இருக்குற. அடுத்து கல்யாணம் தானே? உனக்கு பிடிச்ச பொண்ணு வேற? அப்புறம் என்ன? தேவையில்லாம எதையும் யோசிக்காம கிளம்பி வா”

“அண்ணி”

“என்ன டா அதிசயமா இருக்கு? எப்பவும் மாமா சொன்னா சரியா தான் இருக்கும்னு சொல்லுவ. இப்ப என்ன டா இவ்வளவு யோசிக்கிற?”

“எப்பவுமே அப்பா சொன்னா சரியா இருக்கும்னு தான் நம்புவேன் அண்ணி. அதுக்கு தான் இப்ப சரின்னு சொன்னேன். அந்த பொண்ணையும் எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா மனசுக்கு கஷ்டமா இருக்கு அண்ணி. ஏதாவது செய்ங்க பிளீஸ்”

“அதை தான் சொல்றேன். வேற ஒண்ணும் யோசிக்காத. மாமா சொன்னா சரியா தான் இருக்கும். அவங்க குடும்பமும் உங்களை மாதிரி ராஜவம்ஸம் தான். நல்ல பொண்ணு வேற. நான் எல்லாம் விசாரிச்சிட்டேன். நீ வா”, என்று சொல்ல அரை மனதாக அவளுடன் கிளம்பினான்.

எப்படி வான்மதியை பெண் பார்க்கச் சென்றார்களோ அதே போல தான் நான்கு கார்களில் கிளம்பிச் சென்றார்கள். அவர்கள் வீட்டிலும் நன்றாக தான் வரவேற்று பேசினார்கள். 

அங்கே அமைதியாக மனக் கலக்கத்துடன் இருந்தது விக்கி தான். விக்கியை வான்மதி பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். “ஒரு வேளை விக்கியும் ரேகாவை விரும்புறானா? அதான் இப்படிக் குழப்பிக்கிட்டு இருக்கானா? ஆனா என்ன யோசிக்கிறான்னு தெரியலையே?”, என்று குழம்பினாள். 

அவளைக் கவனித்துக் கொண்டிருந்த ஆதி “என்ன அம்மணி ஏதாவது வேணுமா?”, என்று கேட்டான். அவன் அப்படிச் சொன்னாளே அவள் சிலிர்த்துக் கொள்வாள் என்பதால் அவ்வப்போது இப்படி அழைத்து வம்பிழுப்பான். இப்போதும் அவன் அப்படி அழைத்ததும் விக்கியை மறந்து கணவனை முறைத்தாள்.

“என்ன டி முறைக்கிற?”

“எல்லாரையும் வச்சிக்கிட்டு தான் இப்படிக் கூப்பிடுவீங்களா?”

“என்ன பண்ணுறது இப்படி நீ முகம் சிவக்குற அழகைப் பாக்க தானே எனக்கு பிடிக்குது?”, என்று அவன் சொல்ல அவள் அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

“என்ன டி இப்படி ஒரு பார்வை பாக்குற?”

“இல்லை முன்னாடி இருந்த ஆதிக்கும் இப்ப இருக்குற ஆதிக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாக்குறேன்?”

“என்ன வித்தியாசம்னு கண்டு பிடிச்சிட்டியா? இன்னர் பார்ட்ல ஏதாவது வித்தியாசம் கண்டு பிடிச்சிருக்கியா?”, என்று அவன் கிசுகிசுப்பாக கேட்க அவன் தொடையில் கிள்ளியவள் “நான் அதைச் சொல்லலை. முன்னாடி எல்லாம் வீட்ல ஆள் இருந்தா என்னைக் கண்டுக்க கூட மாட்டீங்க. இப்ப என்னடான்னா யார் இருந்தாலும் இல்லாட்டியும் உங்க பார்வை என்னைத் தான் வட்டம் போடுது. கால்ல சுடு சோறைக் கொட்டினப்ப கூட என்னைக் கண்டுக்காம போன ஆள் தானே நீங்க?”, என்று கேட்டாள்.

“இன்னும் எத்தனை நாள் டி அதையே சொல்லிக் காட்டுவ? அப்ப வீட்ல தம்பி தங்கச்சி எல்லாம் படிச்சிட்டு இருந்தாங்க. ஒரு அண்ணனா நான் அவங்களுக்கு முன் மாதிரியா இருக்க வேண்டாமா? ஆனா இப்ப தான் எல்லாருக்கும் கல்யாணம் ஆகிருச்சே? விக்கிக்கும் முடியப் போகுது? அதான் என் ஆட்டம் அதிகமாகிருச்சு? நீ தான் இன்னும் அடுத்த குழந்தைக்கு சரின்னு சொல்ல மாட்டிக்க?”, என்று சொல்ல அவள் முகம் சிவந்தது. 

காதல் தொடரும்…..

Advertisement