Advertisement

அத்தியாயம் 19

மேக வண்ண நூழிலையில் 

கோர்த்து வைத்தேன் எந்தன் 

காதல் மாலையை!!!

லிப்ட் அவன் தளத்தில் நிற்க அவளை அழைத்துச் செல்லும் போதே “ரொம்ப கோபம் வருமா உனக்கு? நீ வேர்த்து விரு விருத்து நின்னியா? அதான் சொன்னேன். தப்பா எடுத்துக்காத”, என்றான் சமாதானமாக. 

“சரி”, என்று கண்ணை உருட்டினாள். அதையும் ரசனையாக பார்த்தவன் “சரி எப்படி வீட்ல இருந்து வந்த? ஆட்டோலயா?”, என்று கேட்டான்.

“ஆட்டோவா? அதுக்கு நூறு ரூபா கேப்பான். நான் பஸ்ல வந்தேன்?”, என்று சொல்ல அவள் கஷ்டம் புரிந்தது. 

“ஏய் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து இங்க வீட்டுக்கு ரொம்ப தூரம் நடக்கணுமே? நடந்தா வந்த?”

“ஆமா”, என்று சொல்ல அவனுக்கு மனதை என்னவோ செய்தது. அடுத்து எதுவும் கேட்காமல் அவனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

அவள் அந்த பிரம்மாண்டத்தை எண்ணி பயத்துடன் அவனது அறைக்குள் நுழைய அவள் பயத்தைப் பார்த்தவன் “என்ன பயமா இருக்கா? உன்னை ஏதாவது செஞ்சிருவேனோன்னு?”, என்று கேட்டான். 

அவனை மீண்டும் முறைத்தாலும் “எனக்கு மதி அக்கா மேல நம்பிக்கை இருக்கு. அவங்க கூட இருக்குற நீங்க கெட்டவங்களா எப்படி இருக்க முடியும்?”, என்று கேட்டாள். 

“அப்படின்னா நான் நல்லவன்னு சொல்றியா?”

“நல்லவன் தான். ஆனா கொஞ்சம் திமிர் அதிகம் போல?”

“அடப்பாவி, என்னையே திமிர் பிடிச்சவன்னு சொல்றியா?”, என்று கேட்க அவள் அசடு வழிய சிரித்தாள். ஏனோ அவனுக்கு அவளிடம் பேச அவளை வம்புக்கு இழுக்க பிடித்திருந்தது. இருவருக்கும் இடையே தோழமை உணர்வு உருவாகி இருந்தது. 

“உங்க ரூம் சூப்பரா இருக்கு”, என்று அவள் சொல்ல “இது என் ரூம் இல்லை. இது ஸ்டடி ரூம்”, என்றான்.

“என்னது? படிக்கிறதுக்கு எல்லாம் ரூமா? நான் எல்லாம் பாயை விரிச்சு படுத்துட்டே தான் படிப்பேன். அதுலே தான் தூங்குவேன். அப்ப உங்களுக்கு இன்னொரு ரூமும் இருக்கா? எங்க வீடே இந்த அளவு தான் இருக்கும்”, என்று சொல்ல அவள் பேச்சில் பொறாமை இல்லை என்பதைக் கண்டவன் “நீயும் ஒரு நாள் வேலைக்கு போய் வீடு கட்டு”, என்று அவளை ஊக்குவித்தான்.

“கண்டிப்பா கட்டுவேன்”, என்று உறுதியுடன் சொன்னவளைப் பார்த்து சிரித்தவன் அந்த வருடத்துக்கான புத்தகங்கள் நோட்ஸ் என அனைத்தையும் கொடுத்தான். 

“இந்த வருசத்துக்குள்ளது மட்டும் இருக்கு. அடுத்த வருசத்துக்கானதை அப்புறம் வாங்கிக்கோ”, என்று சொல்ல சரி என்று மண்டையை ஆட்டினாள். 

மீண்டும் அவளை அழைத்துக் கொண்டு மதியிடம் வந்தான். ரேகா மீண்டும் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்க நேரம் உருண்டு கொண்டிருந்தது. குழந்தையை விட்டு பிரிய மனதே இல்லாமல் அவள் கொஞ்சிக் கொண்டிருக்க “ஏய் ரேகா கிளம்பலையா? மணி ஆறு ஆகிருச்சு. வேணும்னா இங்கயே இருந்துக்குறியா?”, என்று கேட்டாள் மதி.

“ஐயோ வேண்டாம் அக்கா. நான் கிளம்புறேன்”, என்றாள்.

“நைட் சாப்பாடு தயார் ஆகிருச்சு டா. சாப்பிட்டுக் கிளம்பு”, என்று சொன்ன தமயந்தி அவளை சாப்பிட அழைக்க அவள் தயங்க மதி அவளை அழைத்துச் சென்றாள். வீட்டினர் மட்டும் தான் அங்கே இருந்தார்கள். அப்போதும் விதவிதமாக தான் உணவு வகைகள் இருந்தது. அனைத்தும் ஹோட்டலில் இருந்து வந்தது என்று புரிந்தது.

தான் இப்படி சாப்பிட தன்னுடைய தம்பி சாதாரண ரேஷன் அரிசி சோறை தான் சாப்பிடுவான் என்று நினைவு வந்தது ரேகாவுக்கு. அவள் முகம் ஒரு மாதிரி இருக்க “என்ன ஆச்சு ரேகா?”, என்று கேட்டாள் மதி.

“ஒண்ணும் இல்லைக்கா”

“என்னன்னு சொல்லு ரேகா?”

“இல்லை, நான் இவ்வளவு ருசியா எல்லாம் சாப்பிட்டது இல்லை. அதான் தம்பி நினைவு வந்துருச்சு”, என்றாள்.

“இவ்வளவு தானா? அவனுக்கும் உங்க அம்மாவுக்கும் நான் கொடுத்து விடுறேன்”, என்று சொல்ல “நிஜமாவாக்கா?”, என்று கேட்க அதை எல்லாம் விக்கி கவனித்துக் கொண்டு தான் இருந்தான். 

ஏனோ அவனுக்கு ரேகா மேல் பரிதாபத்தையும் தாண்டி ஒரு ஈர்ப்பு எழுந்தது. மதி ஒரு பெரிய பையில் அவளுக்கான உணவை அடைத்துக் கொண்டு வர ரேகா முகம் மலர்ந்து போனது. கோடி ரூபாய் கொடுத்தால் கூட இவ்வளவு சந்தோஷப் பட மாட்டாள் போல என்று எண்ணினான் விக்கி. 

சந்தோஷமாக அதை வாங்கிக் கொண்டவள் “சரிங்க அக்கா நான் கிளம்புறேன்”, என்றவள் தனித் தனியாக அனைவரிடமும் சொன்னாள்.

ஒரு கையில் புத்தகப்பை, மற்றொரு கையில் சாப்பாடு பை என நின்றவளைக் கண்ட மதி “ஆமா நீ எப்படி போவ?”, என்று கேட்டாள்.

“பஸ் ஸ்டாண்ட் போய் பஸ் பிடிச்சு போயிருவேன்”, என்று சொல்ல “இருட்டிருச்சு, பஸ்ல போகப் போறாளாம்? இரு கார்ல போ”, என்று சொன்ன தமயந்தி ஆதியை அழைத்து அவளை விடச் சொன்னாள்.

“நான் சும்மா தான் இருக்கேன் அண்ணா. நீங்க அண்ணி குட்டி பையன் கூட இருங்க. நான் போய் விட்டுட்டு வரேன். எனக்கு அவ கிட்ட படிப்பு பத்தி சில விஷயம் கேக்கணும்”, என்று வந்தான் விக்கி.

“சரி டா”, என்று ஆதி சொல்ல விக்கியுடன் கிளம்பினாள் ரேகா. போகும் போது அவளிடம் வம்பிழுத்த படியே தான் வந்தான். அவளும் பட் பட்டென்று அவனுக்கு பதில் கொடுத்தாள். 

வீட்டுக்கு கொஞ்சம் தள்ளியே அவன் காரை நிறுத்த “வீட்டுக்கு வாங்க”, என்று அழைத்தாள். 

“இல்லை நான் வந்தா தப்பா போயிரும். உன்னை உங்க அம்மா திட்டிருவாங்க”

“ஆதி சாரோட தம்பினு சொன்னா அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க”, என்று சொன்னதும் அவளுடன் வீட்டுக்கே சென்றான். 

அவளது தாயிடம் அவள் அறிமுகப் படுத்த அவர்களிடம் நன்கு பேசிய விக்கி அவளது தாய் கொடுத்த காபியையும் குடித்து விட்டே அங்கிருந்து சென்றான்.

அன்றில் இருந்து ரேகாவை தனி கவனம் எடுத்து கவனித்தான் விக்கி. அடிக்கடி ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்பான். அவளுக்கு புரியாததை கல்லூரி மரத்தடியில் லைப்ரேரியில் வைத்துச் சொல்லிக் கொடுப்பான்.

அவளும் அவனுடன் தோழமையுடன் பேசினாள். அதையும் விட அவள் மனதில் அவன் மீது ஒரு ஈர்ப்பு தோன்றியதையும் உணர்ந்தாள்.

அவளது தந்தை தராத ஆறுதல் அவன் தரும் போதா? அவள் தவறு செய்தால் உரிமையுடன் அவன் தலையில் கொட்டும் போதா? இந்தா அண்ணி உனக்கு இந்த பிரியாணியைக் கொடுக்கச் சொன்னாங்க இன்னும் நல்லா பீப்பா மாதிரி ஆகு என்று கிண்டல் அடிக்கும் போதா? ஏதோ ஒன்று அவளை அவன் பக்கம் இழுத்தது.

ஆனால் அவன் அப்படி ஒன்றும் தவறாக அவளுடன் பழகவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவளை தனிமையில் அவன் சந்திக்கவே இல்லை. ஆனால் அவள் மனதில் சலனம் எழுந்தது. 

இப்படியே நாட்கள் நகர்ந்தது. விக்கி படிப்பு முடிந்து செழியனுடன் சேர்ந்து தொழிலில் இறங்கி விட்டான். ஆனால் ரேகாவுக்கு உதவுவதை மட்டும் அவன் விடவே இல்லை. 

சில வருடங்களுக்கு பிறகு…. படித்து முடித்த ரேகா ஆதி அலுவலகத்தில் விக்கிக்கு கீழே தான் வேலை பார்த்தாள். மதி தான் அந்த வேலையை வாங்கித் தந்தாள். அதனால் ரேகா அந்த குடும்பத்துக்கே நன்றிக் கடன் பட்டிருந்ததால் விக்கி மேல் எழுந்த சலனத்தைக் கூட மறைத்துக் கொண்டாள். 

விக்கியை நினைப்பது அவளுக்கு பேராசையாக தான் பட்டது. ஆனால் அவள் மேல் தனி கவனம் வைத்திருக்கும் மதி அதை கண்டு கொண்டாள். விக்கி மீது அவள் பார்வை ஏக்கமாக படிவதைக் கண்ட மதி அவளிடம் தனியே பேசினாள். 

“உனக்கு விக்கியை பிடிச்சிருக்கா ரேகா?”

“அக்கா”, என்று அவள் அதிர “உன் மனசுல ஏதோ இருக்குனு எனக்கு தோணுது ரேகா”, என்றாள்.

“சாரிக்கா, என்னையும் அறியாம”, என்று அவள் உண்மையை ஒத்துக் கொண்டு தலை குனிய “காதல் தப்புனு நான் சொல்ல மாட்டேன் ரேகா. ஆனா இந்த சமுதாயத்தைப் பாக்கணும். விக்கி மேல இருக்கான் நீ கீழ இருக்கன்னு நான் பாக்கலை. இப்ப விக்கியும் உன்னை லவ் பண்ணினா என் உயிரைக் கொடுத்தாவது உங்களை சேத்து வைப்பேன். ஆனா நீ மட்டும்னா… அது வேற மாதிரி புரெஜெக்ட் ஆகும் டா. நான் முறையா கல்யாணம் பண்ணிட்டு வந்தப்பவே என்னை இவங்களுக்கு சரி இல்லைன்னு பேசினாங்க. இப்ப நீ லவ்ன்னு சொன்னா என்ன சொல்லுவாங்கன்னு யோசி. அது மட்டும் இல்லாம நான் தான் உன்னை இப்படி பண்ணச் சொன்னேன்னு……”, என்று மதி சொல்லும் போதே “எனக்கு புரியுதுக்கா. இது ஒரு சலனம் தான். என் தப்பு இப்ப புரிஞ்சது. என் அப்பாவுக்கு வேலை வாங்கிக் கொடுத்து, என்னைப் படிக்க வச்சு, எனக்கு வேலை வாங்கிக் கொடுத்து, என் தம்பியை உங்க ஸ்கூல்லே படிக்க வைக்கிறீங்க? அப்படி இருக்க உங்களுக்கு கெட்ட பேர் வர விடுவேனா? விக்கி ரொம்ப நல்லவர். அதனால வந்த கிரஷ் தான். சச்சின் தோணி பாத்தா வருமே, அப்படி. உங்களைக் கஷ்டப் படுத்திட்டோமேன்னு தான் எனக்கு கஷ்டமா இருக்கு கா”, என்றாள். 

Advertisement