Advertisement

     “ஏய் நாங்களும் மனுசங்க தான். நீயும் என் தங்கச்சி மாதிரி தான். நீ வா”

     “வந்தா உள்ள விடுவாங்களா?”

     “அதெல்லாம் விடுவாங்க. உன்னைப் பத்தி எங்க வீட்ல எல்லாருக்கும் தெரியும். நீ என் மகனைப் பாக்க வேண்டாமா? அன்னைக்கு தான் அவனுக்கு பேர் வைக்கிற பங்ஷன். அதனால நீ கண்டிப்பா வரணும்”

     “சரிங்க அக்கா”, என்ற படி போனை வைத்தவளுக்கு அங்கே போக வேண்டும் போலவும் இருந்தது பயமாகவும் இருந்தது.

     அன்னையிடம் அதைச் சொல்ல “போயிட்டு வா டா, இவ்வளவு உதவி செய்றாங்க. அவங்க பேச்சை தட்டினது மாதிரி இருக்க கூடாது”, என்றாள்.

     “சரிங்கம்மா”, என்றாள்.

     அந்த நாளும் வந்தது. ராயர் வீடே பரபரப்பாக இருந்தது. ஆதியோ குழந்தைக்கு பசியாற்றிக் கொண்டிருக்கும் அழகு மனைவியையே ஆசையாக பார்த்திருந்தான். தமயந்தியே மூன்று மாதங்களுக்கு அவளை நெருங்க கூடாது என்று சொல்லி இருக்க அவனோ வெகுவாக திணறிப் போனான்.

     அவன் ஆசை புரிந்தாலும் என்ன செய்ய என்று தடுமாறினாள் மதி. குழந்தை உறங்கியதும் அவனைத் தூக்கி ஆதியிடம் கொடுத்தவள் “இவனைப் பிடிங்க நான் டிரஸ் மாத்திக்கிறேன்”, என்றாள்.

     “என் முன்னாடியே மாத்து”, என்று சொல்ல சிணுங்கினாலும் அதைச் செய்தாள்.

     தயாரானவள் உறங்கும் குழந்தைக்கும் உடை மாற்றி விட்டு “எப்படி இருக்கோம் ரெண்டு பேரும்?”, என்று கேட்டாள்.

     “ரெண்டு பேரும் அவ்வளவு அழகா இருக்கீங்க? எனக்கு கொஞ்சிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு?”, என்ற படி அவள் இதழில் கவி எழுத விருப்பத்துடன் அவன் கைக்குள் அடங்கினாள்.

     பரமசிவம் காலையிலே வருகை புரிந்து விட தாய்மாமன் சீருடன் நிரஞ்சனும் குடும்பத்துடன் வந்து விட்டான். இன்னும் பெரிய மனிதர்கள் எல்லாம் வர விழா ஆரம்பமானது.

     சிறிது நேரம் ரேகாவை எதிர் பார்த்தாள் மதி. செக்யூரிட்டியிடம் கூட அடையாளம் சொல்லி வைத்தாள். ஆனால் அவள் வரவில்லை. விழா ஆரம்பித்தது. குழந்தைக்கு ‘அகில் ஆதித்யா’ என்று பெயர் வைத்தான் ஆதி.

     அனைவருக்கும் அந்த பெயர் பிடித்திருக்க குழந்தையின் காதில் மூன்று முறை சொன்னார்கள். குழந்தைக்கு என்று ஒவ்வொருவராக கிஃப்ட் கொடுத்து விட்டு உணவு உண்ணச் சென்றார்கள். செழியனும் விக்கியும் அனைவரையும் கவனித்துக் கொண்டார்கள்.

     நந்தினி மற்றும் அஞ்சனா இருவரும் மதியுடனே அமர்ந்து குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். விழா நல்ல படியாக முடிந்ததும் அனைவரும் கிளம்பிச் செல்ல வீட்டினர் மட்டும் இருந்தனர்.

     அப்போது தான் ரேகா வீட்டுக்கு வந்தாள். காட்டன் சுடிதார் என்றாலும் விலை உயர்ந்தது இல்லை. ஆனால் பார்க்கும் படி இருந்தது. ஆனாலும் தான் கீழாக இருக்கிறோமோ என்று எண்ண மிட்ட படியே தயக்கத்துடன் தான் வந்தாள். அங்கிருந்த பிரம்மாண்டமே அவளை நிலை குலைய வைத்தது.

     அவளைக் கண்ட ஆதி “ஏய் ரேகா நீ என்ன இவ்வளவு லேட்டா வர? உங்க அக்கா உன்னை அப்ப இருந்து எதிர் பாக்கிறா வா”, என்று அழைத்தான்.

     “பங்ஷன் முடிஞ்சிருச்சா சார்?”, என்று கேட்ட படியே அவனுடன் சென்றாள்.

     “எல்லாம் முடிஞ்சிருச்சு. நீ மதியைப் பாத்துட்டு வந்து சாப்பிடு சரியா?”, என்று சொல்ல மண்டையை ஆட்டினாள்.

     அவளைக் கண்ட மதி “ஏய் உன்னை எப்ப வரச் சொன்னா நீ இப்ப வந்திருக்க?”, என்று கேட்டாள்.

     “நான் அப்பவே வந்துட்டேன் அக்கா. இங்க ரொம்ப கூட்டமா இருந்துச்சா. வெளிய நிறைய கார் நின்னுச்சா? அதான் பக்கத்து தெருவுலே நின்னுட்டேன். சரி குழந்தையைக் காட்டுங்க”, என்று சொல்ல நந்தினி அவளிடம் குழந்தையைக் காட்டினாள்.

     “ஐயோ டா, எவ்வளவு குட்டியா இருக்கான்? கை கால் எல்லாம் பாருங்களேன். சின்ன சின்னதா இருக்கு. ரொம்ப அழகா இருக்கான். இவன் எப்ப அக்கா வளருவான்?”, என்று கேட்க அவளை சிரிப்புடன் மதி பார்த்தாள் என்றால் அவளை ரசனையுடன் பார்த்தான் விக்கி.

     முதலில் இரட்டை ஜடையில் பார்த்ததுக்கும் இப்போதைய அவளது தோற்றத்துக்கும் நிறைய வித்தியாஸம் இருந்தது. ஆனால் அவளது வெகுளித் தனம் மட்டும் குறையவே இல்லை என்று தோன்றியது அவனுக்கு.

     “அக்கா இதையெல்லாம் நீங்க வாங்குவீங்களான்னு தெரியலை. ஆனாலும்….”, என்ற படி ரேகா ஒரு கவரை நீட்ட அதற்குள் குழந்தைக்கு என்று டிரஸ் இருந்தது.

     அதன் விலையை விட ரேகாவின் மனதே அங்கிருந்தவர்களுக்கு பெரிதாக தெரிய “ஏற்கனவே அம்மாவுக்கு கஷ்டம். இதுல இதை வேற வாங்க வச்சியா? சரி கொடு. குட்டிக்கு போடுவோம்”, என்று சொன்ன மதி பல ஆயிரம் ரூபாய் உடையை மாற்றி ரேகா கொடுத்த உடையை போட்டாள். அதைக் கண்டு நெகிழ்ந்து போனாள் ரேகா.

     “சரி குழந்தையைப் பாத்தது போதும். நீ போய் முதல்ல சாப்பிட்டு வா”, என்று சொன்ன மதி அங்கே நின்ற விக்கியை அருகே அழைத்து ரேகாவை சாப்பிட அழைத்துச் செல்ல சொன்னாள்.

     “சரிங்க அண்ணி”, என்றவன் “வா”, என்று அவளை அழைத்தான்.

     இருவரும் இரண்டு அடி எடுத்து வைக்க அப்போது “விக்கி”, என்று அழைத்தாள் மதி.

     “என்ன அண்ணி?”

     “உன்னோட புக்ஸ் கொஞ்சம் ரேகாவுக்கு கொடுக்க முடியுமா?”

     “தரேன் அண்ணி”

     “அப்படின்னா அவளை சாப்பிட வச்சு உன் புக்கை எடுத்துக் கொடுத்துரு”, என்று சொல்ல “சரிங்க அண்ணி”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.

     சாப்பிடும் இடத்தில் மதிக்கு பிடித்த ரேகா என்பதால் அனைவருமே அவளிடம் நன்றாக பேச அவள் தான் திணறினாள். விதவிதமான உணவு வகைகளை அவளுக்கு பரிமாற அதன் சுவையில் மயங்கினாள் என்று சொல்லலாம்.

     அவள் ரசித்து சாப்பிடுவதைக் கண்ட விக்கிக்கு மனம் நெகிழ்ந்து போனது. அவள் உண்டு முடித்து கை கழுவி வர அவளுக்காகவே காத்திருந்தவன் அவள் அருகே வந்து “என் கூட வா, புக்ஸ் எடுத்து தரேன்”, என்று சொல்லி லிப்டில் அவளை அழைத்துச் செல்ல “வீட்டுக்குள்ள லிப்ட் எல்லாம் இருக்குமா?”, என்று வியந்து பார்த்த படி கேட்டாள்.

     “ஏன் இப்படி ஷாக் ஆகுற? லிப்ட் தானே?”, என்று கேட்டான் விக்கி.

     “நான் இன்னைக்கு தான் லிஃப்ட்லே போறேன்”, என்று சொல்ல அப்போது அது ஷேக் ஆக கொஞ்சம் பதறிப் போய் பின் நிலையாக நின்றாள்.

     அவள் செய்கை அவனுக்கு சிரிப்பைக் கொடுக்க “நீ பயந்தாங்கொள்ளியா?”, என்று கேட்டான்.

     அவனை முறைத்துப் பார்த்தவள் “இப்படி ஆடினா எப்படி பயப்படாம இருக்கவாம்?”, என்று ரோஸமாக கேட்டாள்.

     அவளின் பட்டென்ற கேள்வியிலே அவள் அமைதியான பெண் இல்லை என்று புரிந்து கொண்டவன் “ஆமா நீயென்ன இப்படி வந்திருக்க? குளிச்சு எத்தனை நாள் ஆச்சு?”, என்று கேட்டு வம்பிழுத்தான்.

     மீண்டும் அவனை முறைத்துப் பார்த்தவள் “நான் குளிச்சிட்டேன். ரொம்ப நேரமா பக்கத்து தெருவுல வெயில்ல நின்னேன். அதான் இப்படி இருக்கேன்”, என்று பட்டென்று பதில் சொன்னாள்.

     அவள் முறைப்புடன் கூடிய பதிலைக் கேட்டவன் சிறு சுவாரசியத்துடன் “அது எனக்கு எப்படி தெரியுமாம்?”, என்று கேட்டான்.

     “என்ன?”, என்று அவள் புரியாமல் கேட்க “இல்லை நீ இன்னைக்கு குளிச்சியான்னு எனக்கு எப்படி தெரியும்?”, என்று சிறு சிரிப்புடன் கேட்டான்.

     அவன் தன்னிடம் வம்பிழுக்கிறான் என்பது அவனது சிரிப்பில் தெரிய “அடுத்த தடவை குளிக்கும் போது உங்க கிட்ட சொல்லிட்டு குளிக்கிறேன். அப்ப நம்புவீங்க தானே?”, என்றாள் வெடுக்கென்று.

     “ஏய் பாக்க அமைதியா இருந்த? ஆனா வாயாடியா நீ?”, என்று அவன் வியப்பாக கேட்க சிறிது வெட்கம் வந்தது அவளுக்கு. “அப்படி எல்லாம் இல்லை. ஆனா கொஞ்சம்”, என்று சொல்ல ரசித்து சிரித்தான் விக்கி.

     “கொஞ்சமா வாய் இருக்குற மாதிரி எனக்கு தெரியலை”, என்று அவன் சொல்ல அவனை மீண்டும் முறைத்தாள்.

காதல் தொடரும்…..

Advertisement