Advertisement

அத்தியாயம் 18

தாரிகையின் பாதச் சுவடு 

பட்டு சிலிர்க்கிறதே நெஞ்சம்!!!

     மதிக்கு எட்டாம் மாதம் முடியும் தருவாயில் இருக்கும் போது ரேகா அவளை அழைத்தாள்.

     “ஹலோ யாரு?”, என்று கேட்டாள். அது லேண்ட்லைன் நம்பர் எண் என்பதால் அவளுக்கு தெரிய வில்லை.

     “மிஸ் நான் ரேகா பேசுறேன். வீட்ல போன் இல்லை. அதான் கடைல இருந்து பேசுறேன் மிஸ்”

     “ஆன் சொல்லு ரேகா, எப்படி இருக்க?”

     “நல்லா இருக்கேன் மிஸ். இன்னைக்கு தான் கவுன்சிலிங்க் முடிஞ்சது”

     “ஓ சூப்பர், எந்த காலேஜ் எடுத்த?”

     “நம்ம காலேஜ் தான் மேம் எடுத்தேன். அது இல்லைன்னா வேற ஊர்ல தான் இருந்தது. எனக்கு அம்மா தம்பியை விட்டுப் போக மனசில்லை”

     “பரவால்ல டா. சரி என்ன குருப்?”

     “டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் மிஸ்”

     “சூப்பர் ரேகா, ஒண்ணும் பிரச்சனை இல்லை. பீஸ் எல்லாம் கவலைப் படாதே. நான் மேனேஜ்மெண்ட்ல சொல்லிக்கிறேன். நீ நல்லா படிச்சு உங்க அம்மாவை உக்கார வச்சு சோறு போடணும் சரியா?”

     “சரி மிஸ்”

     “நீ சூப்பரா படிச்சா நான் அவர் கிட்ட சொல்லி நம்ம ஆஃபிஸ்லே வேலைக்கு எடுத்துக்குவேன் ஓகே வா? ஆனா நல்லா படிச்சா மட்டும் தான்”

     “கண்டிப்பா நல்லா படிப்பேன் மிஸ். எனக்கு உங்களைப் பாக்கணுமே?”

     “அட்மிசன் போடுற அன்னைக்கு காலேஜ் வருவ தானே? அப்ப பாக்கலாம்”, என்றாள்.

     அதே போல அட்மிசன் போடும் அன்று மதி அவளைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல ஆதியே மதியை அழைத்துக் கொண்டு கல்லூரிக்குச் சென்றான். பிரசவதேதிக்கு இன்னும் நாட்கள் இருந்தாலும் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாததால் ஆதி அவளுடனே இருந்தான்.

     ரேகாவை பார்த்து பேசி விட்டு அவளுக்கான பீசையும் மதி தான் கட்டினாள். அங்கே படிக்கும் விக்கியை அழைத்து ரேகாவை அறிமுகப் படுத்தினாள் மதி.

     சாதாரண கட்டான் சுடிதார் அணிந்து ரெட்டை சடை போட்டு நின்ற அந்த பெண்ணை சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்த விக்கி அண்ணன் அண்ணி அருகில் இருந்ததால் “ஹாய், ஏதாவது ஹெல்ப் வேணும்னா என் கிட்ட கேளு”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

     பின் ரேகாவை அவளது வீட்டில் விட்டு விட்டு வீட்டுக்கு வரும் போது மதிக்கு வலி வந்து விட்டது. ஆதி அவசரமாக அவளை மருத்துவமனையில் அனுமதித்தான்.

     அடுத்த அரை மணி நேரத்தில் சொந்தங்கள் அனைவரும் மருத்துவமனைக்கு படை எடுத்து வந்தனர். பார்வதி மற்றும் சேதுராமன் கூட வந்து விட்டார்கள். பரமசிவமோ மகள் நல்ல படியாக குழந்தை பெற்று வர வேண்டும் என்ற வேண்டுதலோடு அமர்ந்திருந்தார்.

     ஆதி மட்டுமே பரபரப்பாகவே அமர்ந்திருந்தான். அவனுக்கு தன்னவளைக் காண வேண்டும் போலவும் அவள் கை பற்றி ஆறுதல் சொல்ல வேண்டும் போலவும் இருந்தது. ஆனால் அவனை அங்கே உள்ளே அனுமதிக்க வில்லை.

     எல்லாரையும் பயப்பட வைத்து விட்டு இந்த பூவுலகில் பிறந்தான் ஆதியின் மைந்தன். நர்ஸ் வந்து அவன் கையில் குழந்தையைக் கொடுக்க அப்படியே அவன் சாயலில் இருந்த மகனைக் கண்டு பிரம்மித்துப் போனான். காலில் இருந்து தலை வரை இருந்த முடிகள் அனைத்தும் சிலிர்த்துக் கொண்டது மகனை கையில் வாங்கியதால்.

     மகனைக் கொஞ்சி விட்டு தாய் தந்தையிடம் கொடுக்க தங்கள் வீட்டு வம்சத்தை அனைவரும் கொஞ்சினார்கள். இருந்த பரபரப்பில் யாரும் பரமசிவத்தை கவனிக்க வில்லை. அவருக்கும் குழந்தையை வாங்க ஆசையாக தான் இருந்தது. ஆனால் எப்படி கேட்க என்று தெரியாமல் நிற்க “சம்பந்தி இந்தாங்க உங்க பேரனைப் பாருங்க”, என்று சொல்லி அவரிடம் கொடுத்தார் ராயர்.

     “எப்போதும் மேன்மக்கள் மேன்மக்கள் தான்”, என்று எண்ணிக் கொண்டு பேரனை வாங்கி உச்சி முகர்ந்தார் பரமசிவம். நர்சிடம் மகளைப் பற்றி அந்த தந்தை விசாரித்தார்.

     நர்ஸ் குழந்தையை வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல அனைவரும் மதியை சாதாரண அறைக்கு மாற்றுவதற்காக காத்திருந்தார்கள்.

     அறைக்கு மாற்றியதும் ஒவ்வொருவராக சென்று அவளையும் குழந்தையையும் நலம் விசாரித்தார்கள். பரமசிவம் மகளின் கையை இறுக பற்றிய படி அமர்ந்திருந்தார். ஆதியோ அவள் தலைப் பக்கம் கட்டிலில் அமர்ந்து அவள் தலையை வருடிய படி இருந்தான்.

     “ஏய் குட்டி பையா நீ என்ன இவ்வளவு குட்டியா இருக்க? சீக்கிரம் பெருசா ஆகிரு. நாம எல்லாம் விளையாடலாம்”, என்று கொஞ்சினான் விக்கி.

     “பட்டுக் குட்டி சித்தப்பா கிட்ட வா”, என்று சொல்லி அவன் கையில் இருந்து வாங்கிக் கொண்டான் செழியன். அஞ்சனாவும் அவனைக் கொஞ்சினாள்.

     மாற்றி மாற்றி குழந்தையைக் கொஞ்சி விட்டு அனைவரும் கிளம்ப தமயந்தியும் ஆதியும் மட்டும் அங்கே இருந்தார்கள். பரமசிவமும் அங்கேயே இருப்பேன் என்று அடம் பிடிக்க ராயர் தான் அவரை வற்புறுத்தி ஓய்வெடுக்க அழைத்துச் சென்றார்.

     மகனும் மருமகளும் மற்றவர்களின் இருப்பில் தனித்து பேச முடியாமல் திணறுவதைப் பார்த்த தமயந்தி “ஆதி ரெண்டு பேரையும் பாத்துக்கோ. நான் வெளிய போய் நந்தினி கிட்ட பேசிட்டு வரேன்”, என்று சொல்லிச் சென்றாள்.

     அன்னை சென்றதும் “அப்பாடி போயிட்டாங்க. கொஞ்ச நேரமாவது பொண்டாட்டியைக் கொஞ்ச விடுறாங்களா?”, என்று எண்ணியவன் மனைவி முகம் எல்லாம் முத்த மழை பொழிய அவன் அன்பில் கரைந்தாள் மதி.

     அப்போது அவர்கள் புதல்வன் பசியில் சிணுங்க அவனைத் தூக்கி அவள் கையில் கொடுத்தான். நர்ஸ் சொன்ன படி அவள் அவனுக்கு பசியாற்ற முனைய அங்கேயே இருந்த ஆதியைக் கண்டு வெட்கமாக வந்தது அவளுக்கு.

     அவள் உணர்வுகள் புரிந்தவன் வேறு ஏதோ பேச்சுக் கொடுக்க அவர்கள் தனிமை மிக அழகாகவே நகர்ந்தது. நந்தினி நிரஞ்சன் என அனைவரும் குழந்தையைப் பார்க்க வந்தார்கள். அடுத்த இரண்டு நாளில் மதியை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள். குழந்தை வந்ததும் அந்த வீடே உயிர்ப்புடன் இருந்தது. அன்னை இல்லை என்ற குறையை தமயந்தி தீர்த்து வைக்க ஆதியும் அவளுடனே இருந்தான்.

     நாட்கள் அப்படியே நகர்ந்தது. பள்ளி கல்லூரி பொறுப்பை ஆதியே கவனித்துக் கொண்டான். அங்கே அவனுக்கு என்ன வேலை இருக்க போகிறதாம்? அங்கே என்ன நடக்கிறது என்று மட்டும் கேட்டுக் கொண்டான்.

     சரியாக ஒரு மாதம் கழித்து குழந்தைக்கு பெயர் சூட்ட முடிவெடுத்தார்கள். அப்போது ஒரு நாள் ரேகா மதியை அழைத்தாள்.

     “மிஸ் நான் ரேகா பேசுறேன்”

     “ஆன் சொல்லு ரேகா, எப்படி இருக்க? படிப்பு எல்லாம் எப்படி போகுது?”

     “நல்லா போகுது மிஸ். ஆனா இங்க்லிஷ்ல படிக்கிறது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு”

     “அது பழகிரும் டா. சரி இன்னும் என்ன மிஸ் மிஸ்ன்னு கூப்பிடுற? ஒழுங்கா அக்கான்னு கூப்பிடு”

     “சரிங்க அக்கா, நீங்க எப்படி இருக்கீங்க? உங்களுக்கு குழந்தை பிறந்துருச்சா?”

     “பிறந்துருச்சு டா. பையன்”

     “என்னைக்காவது அவனை காலேஜ்க்கு தூக்கிட்டு வருவீங்களா? எனக்கு பாக்கணும் போல இருக்கு”

     “ஹா ஹா, சரி கண்டிப்பா கொண்டு வரேன். ஆனா கொஞ்சம் பெரியவனா ஆகட்டும் சரியா?”

     “சரிங்க அக்கா”

     “சரி உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா? உன் கிட்ட போன் இல்லாததுனால என்னால எதையும் கேக்க முடியலை. புக்ஸ்க்கு எல்லாம் என்ன பண்ணுற?”

     “சில புக்ஸ் லைப்ரேரில எடுக்குறேன் அக்கா. ஆனா சில புக்ஸ் கிடைக்கிறது இல்லை. அதனால ஜெராக்ஸ் தான் எடுக்குறேன்”

     “ஏற்கனவே அம்மாவுக்கு கஷ்டம். இதுல இது வேறயா? சரி நீ ஒண்ணு பண்ணு. வர சண்டே எங்க வீட்டுக்கு வா. நான் விக்கி கிட்ட கேட்டு உனக்கு புக்ஸ் எடுத்து தரேன். அவன் எல்லாமே வச்சிருக்கான்”

     “நானா? உங்க வீட்டுக்கா?”

     “என்ன ரேகா?”

     “அக்கா ஒரு நாள் அந்த வழியா வரும் போது உங்க வீட்டைப் பாத்தேன் அக்கா. அதுக்குள்ள எல்லாம் என்னால வரவே முடியாது”

Advertisement