Advertisement

     “இல்லை மா, எனக்கு ராஜ வம்ஸம்னு கொஞ்சம் கௌரவம் உண்டு. அதான் உன் கிட்ட திமிரா நடந்துக்கிட்டேன்”

     “அதெல்லாம் ஒண்ணும் இல்லை பாட்டி. இந்த வீட்ல எல்லாரும் நல்லவங்க. நீங்க மட்டும் எப்படி கெட்டவங்களா இருக்க முடியும்? இப்ப என்னை பத்தி தெரிஞ்சு எவ்வளவு பெரிய ஆள் என் கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க? நீங்க எப்பவும் கம்பீரமா தான் பாட்டி இருக்கணும்”, என்று சொல்ல “நீ எப்பவுமே எல்லாரும் அண்ணாந்து பாத்து பிரமிக்க கூடிய நிலா பொண்ணு தான் மா. இனிமே நான் உன்னை நிலா பொண்ணுன்னு தான் கூப்பிடுவேன்”, என்று சொல்ல மதிக்கு கண்கள் பனித்தது.

     அனைவரும் இந்த காட்சியை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது “தமயந்தி”, என்று அழைத்தாள் பார்வதி.

     “என்னங்க அத்தை?”

     “அந்த பெரிய பெட்டியை எடுத்துட்டு வா”

     “இதோ கொண்டு வரேன் அத்தை”, என்று சொன்னவள் அதை எடுத்து வந்தாள்.

     பெரிய பெட்டி என்று சொன்னாலும் ஒரு சின்ன பெட்டியை எடுத்து வந்து டேபிளில் தமயந்தி வைத்ததும் அதை திறந்தாள் பார்வதி. பெட்டி முழுக்க நகைகள் தான். அதில் தங்க நகைகளில் வைரம் பதித்து இருந்தது.

     “இது இந்த குடும்பத்தோட பாரம்பரிய நகைகள் மா. இதை எங்க மாமியார் எனக்கு கொடுத்தாங்க. நான் இதை என் மருமகளுக்கு கொடுத்தேன். இப்ப உன் மாமியார் இதை உனக்கு கொடுப்பா. உன் மருமகளுக்கு இதைக் கொடு தமயந்தி”, என்று சொல்ல பிரம்மிப்பாக பார்த்த மதி “நகை எல்லாம் வேண்டாம் பாட்டி. இந்த வீட்டோட மருமகன்னு என்னை நீங்க சொன்னதே போதும். உங்க பேரனை விடவா பாட்டி எனக்கு பெரிய பரிசு இருக்கப் போகுது?”, என்று சொல்ல அன்று அவள் பேச்சால் ஏற்பட்டிருந்த மனச் சுணுக்கம் கூட இந்த நொடி காற்றில் கரைந்து போனது ஆதிக்கு. முதல் முறையாக அனைவரின் முன்னிலையிலும் அவளைக் காதலாக பார்த்தான்.

     “அது வேற இது வேற. இது உன்னோட உரிமை. வாங்கிக்கோ”, என்றாள் பார்வதி.

     “இல்லை பாட்டி, அஞ்சுவும் கூட இந்த வீட்டோட மருமக தானே? அவளுக்கும் கொடுக்கணும் தானே?”, என்று கேட்க அவளின் நியாய மனதை அனைவரும் வியந்தார்கள்.

     “அவளுக்கு என்னோட நகைல இருந்தும் தமாவோட நகைல இருந்தும் பங்கு போகும். அது மட்டுமில்லாம மணியோட குடும்ப நகை நந்தினிக்கு போனாலும் மணியோட நகை அஞ்சுவுக்கும் நந்துவுக்கும் தான். இது இந்த வீட்டோட மூத்த மருமகளுக்கு கொடுக்குறது மா. இது உன் கிட்ட தான் கொடுக்கணும்”

     “இல்லை பாட்டி அது..”, என்று மதி தயங்க “வாங்கிக்கோ. இப்ப ராயர் கூட இன்னொரு பையன் பிறந்திருந்தா அவன் பொண்டாட்டிக்கு கண்டிப்பா கொடுத்துருக்க மாட்டேன். அது தமயந்திக்கு தான். அதே மாதிரி ராயருக்கு அண்ணன் இருந்திருந்தா அவன் பொண்டாட்டிக்கு தான் இது போயிருக்கும். இந்த நகை நல்லவங்க கெட்டவங்க பிடிச்சவங்க பிடிக்காதவங்கன்னு இல்லாம மூத்த மருமகள் யாரோ அவளுக்கு தான் போகும்”, என்று சொல்ல அப்போதும் அவள் தயங்கினாள்.

     “வாங்கிக்கோ டா. உனக்கு எவ்வளவு செஞ்சாலும் தகும்”, என்றார் சேதுராமன்.

     “மதி எல்லாரும் சொல்றாங்கல்ல வாங்கிக்கோ. உன் குணத்துக்கு உன் எடைக்கு எடை வைரம் கொடுத்தாலும் ஈடாகாது மா. அம்மா அப்பா சொல்றாங்கல்ல வாங்கிக்கோ. தமா கொடு”, என்றார் ராயர்.

     “வாங்கிக்க டா. நான் உங்க கல்யாணத்துக்கே கொடுக்கணும்னு நினைச்சேன். அத்தை தான் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொன்னாங்க”, என்று தமயந்தி சொல்ல பாட்டி அசடு வழிய அவரை முறைத்தாள் மதி.

     “ஹி ஹி அது அப்ப உன்னைப் பிடிக்காதுல்ல நிலாப்பொண்ணு? அதான் கொடுக்க கூடாதுன்னு சொன்னேன். இப்ப எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு”, என்றாள் பார்வதி.

     “என் பொண்டாட்டி வாயை நூல் எடுத்து தைப்பேன்னு சொன்னியாம்? கோபத்துல அவ வாயை தச்சிறாத மா”, என்று சொன்னார் சேதுராமன்.

     “ஏன் தாத்தா தைக்க வேண்டாம்னு சொல்றீங்க? பாட்டி உங்களுக்கு முத்தம் கொடுக்கணும்னு தானே?”

     “அது இல்லை டா. உங்க பாட்டி பேச்சு தான் எனக்கு தினமும் தாலாட்டு மாதிரி. நீ அவ வாயை தச்சிட்டா நான் எப்படி தூங்க?”, என்று அவர் கேட்க அனைவரும் சிரித்தார்கள்.

     “அடப்பாவி மனுசா தினமும் நான் என் ஆதங்கத்தைச் சொன்னா உங்களுக்கு தாலாட்டு மாதிரி கேக்குதோ?”, என்று கேட்ட பார்வதி கணவனை முறைக்க அங்கே சிரிப்பலை எழுந்தது.

     மீண்டும் தமயந்தி நகையைக் கொடுக்க “வாங்கிக்கோ மதி”, என்று ஆதி சொன்னதும் தான் அதை வாங்கினாள்.

     “ஆதி, என்னை மன்னிச்சிரு பா. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டா. ஆனாலும் உன்னை கஷ்டப் படுத்திட்டேன்”, என்றாள் பார்வதி.

     “என்ன பாட்டி நீங்க. நீங்க இந்த வீட்டோட பெரியவங்க. நான் ஏதாவது பேசிருந்தாலும் மனசுல வச்சிக்காதீங்க. எல்லாத்தையும் விட்டுருங்க. மதி ரொம்ப நல்லவ. அதை நீங்க புரிஞ்சிக்கிட்டதே போதும்”, என்றான்.

     சில மாதங்களுக்கு பிறகு….. மதிக்கு ஏழு மாதம் முடிவடைந்திருந்தது. மதிக்கு பெரிய அளவில் வளைகாப்பு செய்து பரமசிவம் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல இரண்டே நாட்களில் அவளை மீண்டும் தங்களின் வீட்டுக்கே ஆதி அழைத்து வந்து விட்டான். மகள் கணவனுடன் சந்தோஷமாக இருப்பதை தவிர அந்த தந்தைக்கு வேறு என்ன வேண்டுமாம்? தாய்க்கு தாயாக தமயந்தி அவளை பார்த்துக் கொண்டாள்.

     அப்போது நந்தினி கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தாள். ஆனாலும் நிரஞ்சனுடன் காதல் வாழ்க்கை நன்றாகவே சென்றது. அஞ்சனா படித்து முடித்து விட்டு ஒரு ஆப் டெவலப்மெண்ட் சென்ட்ரை ஆரம்பித்தாள்.

     அது ஆரம்பிக்க இன்ஜினியரிங் கல்லூரியிலே இடம் கொடுத்து அதை ஆரம்பித்து வைக்கவும் நிறைய உதவி செய்தது மதி தான். அந்த சென்டர் முழுவதும் அஞ்சனா கட்டுப் பாட்டில் தான் இருந்தது. அஞ்சனாவின் சென்டரில் புதிய ஆப்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் அதில் ஆர்வமாக இருக்கும் மாணவர்களுக்கு குறைந்த பீஸ் வாங்கி கற்றுக் கொடுக்கவும் செய்தார்கள். அவள் செய்த ஆப்களை மதி அந்த கல்லூரி வளர்ச்சிக்காகவும் பயன்படுத்திக் கொண்டாள்.

     விக்கி கடைசி வருட படிப்பில் இருந்ததால் அவன் முழு நேரமும் புராஜெக்ட் விஷயமாக தான் சுற்றிக் கொண்டிருந்தான். அவ்வ போது அவன் பிரியாவைப் பார்ப்பதுண்டு. ஆனால் சைட் மட்டுமே அடிப்பான். மற்ற படி அது காதல் என்றோ அவளிடம் சென்று பேச வேண்டும் என்றோ எண்ணியது இல்லை.

     இப்போது மதி அனைத்து கல்லூரிகளின் மேனேஜ்மெண்ட்டைப் பார்த்துக் கொண்டாலும் அவள் ஆசைப் பட்ட டீச்சர் வேலையையும் செய்து கொண்டு தான் இருந்தாள். குழந்தையும் அவள் வயிற்றில் நல்ல படியாக வளர காதல் கணவனின் அன்பில் அவள் அழகு இன்னும் கூடி இருந்தது.

     அவளால் ஆதி தான் தினமும் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான். அவள் அழகு அவனை அதிகமாக இம்சிக்க அவன் ஆசைக்கு அவள் வயிறு தடை விதிக்க அவளிடம் புலம்பியே ஒரு வழி ஆனான். ஆனாலும் அவனின் காதல் அவளை சுகமாக தாலாட்டியது.

     அவ்வளவு பெரிய ஆள் எந்த கர்வமும் இல்லாமல் தன்னிடம் கொஞ்சிக் கொண்டும் கெஞ்சிக் கொண்டும் இருப்பது அவளுக்கு பிடித்திருந்தது. எப்படிப் பட்ட கர்வமும் காதலில் அழிந்து தான் போகும் போல?

     ஒரு நாள்  மதி பள்ளியில் இருந்த தனது அறையில் அமர்ந்து ஒரு பைலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளது பள்ளி மாணவி ரேகா அவளைக் காண வந்திருந்தாள். ரேகா பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருந்தாள். அந்த பள்ளியில் தான் படித்திருந்தாள். அவளது குடும்பம் கொஞ்சம் கஷ்டப் பட்டது தான். அது மட்டுமல்லாமல் அவளது தந்தை ஒரு குடிகாரர். அவளது தாய் தான் வேலைக்குச் சென்று ரேகாவையும் அவளது தம்பியையும் படிக்க வைக்கிறார்.

     வீட்டில் தந்தையின் டார்ச்சலால் ஒழுங்காக படிக்காமல் இருந்த ரேகாவை அழைத்து விசாரித்து அவளது தந்தையை மருத்துவமனையில் சேர்த்து ரேகாவை நன்றாக படிக்கும் படி தூண்டியது மதி தான். அதனால் மதிக்கு ரேகாவை மிகவும் பிடிக்கும்.

     “ஹே ரேகா உள்ள வா. எப்படி இருக்க? இன்னைக்கு ரிசல்ட் தானே? ரிசல்ட் பாத்துட்டியா?”, என்று ஆர்வமாக கேட்டாள்.

     “ஆமா மிஸ், ரிசல்ட் பாத்துட்டேன். ஆனா நிறைய மார்க் எல்லாம் இல்லை. கொஞ்சம் கம்மி தான் தொள்ளாயிரத்து ஐம்பது தான் வந்திருக்கு”, என்று சோகமாக சொன்னாள்.

     “உன் சூழ்நிலைல இருந்து படிச்சு நீ இவ்வளவு மார்க் வாங்கினதே பெரிய விசயம் டா. அதனால ஒண்ணும் பிராப்ளம் இல்லை. அடுத்து என்ன பண்ணப் போற?”

     “எனக்கு இன்ஜினியரிங் படிக்கணும்னு ஆசையா இருக்கு மிஸ். ஆனா பணம் இல்லையே?”

     “பணத்தைப் பத்தி எல்லாம் கவலைப்படாதே. நீ கவுன்சிலிங்க் போடு. உனக்கு கிடைக்கிற காலேஜ்ல உனக்கு பிடிச்ச குருப் எடுத்துட்டு என்னை வந்து பாரு. அப்புறம் நான் பாத்துக்குறேன். என் நம்பரை நோட் பண்ணிக்கோ. எப்ப வேணும்னாலும் எனக்கு கூப்பிட்டு பேசு”, என்றாள்.

     “ரொம்ப நன்றி மிஸ்”, என்று சொல்லி விட்டு மதியின் எண்ணையும் வாங்கி விட்டுச் சென்றாள் ரேகா. தன்னுடைய காலேஜில் அவளுக்கு இடம் கொடுக்க ஆசை தான். ஆனால் எதுவும் எளிதாக கிடைத்தால் அதன் மதிப்பு தெரியாதே. முட்டி மோதி தெளிந்து வந்தால் தான் அதன் அருமை தெரியும் என்பதால் தான் அப்படிச் சொன்னாள்.

காதல் தொடரும்…..

Advertisement