Advertisement

அத்தியாயம் 17

உயிரோடிருக்கும் நாள்

எல்லாம் உன்னருகே நித்திரை 

கொள்வதும் வரம் தானே!!!

     திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது. அப்போது யாருக்கோ ஜூஸ் பிழிந்து கொண்டிருந்தாள் அஞ்சனா,

     “என்ன அஞ்சு பண்ணுற?”, என்று கேட்டாள் பார்வதி.

     “அக்காவுக்கு ஜூஸ் போடுறேன்”

     “என்னது?”

     “என்ன பாட்டி? மதி அக்காவுக்கு ஜூஸ் போடுறேன். அவங்க ஸ்கூல்க்கு போகும் போது எடுத்துட்டு போவாங்க”

     “அவளுக்கு நீ என்ன வேலைக்காரியா டி?”

     “நேத்து நைட் அக்கா எனக்கு தோசை சுட்டு தந்தாங்களே. அப்படின்னா அவங்க எனக்கு வேலைக்காரியா?”

     “அதெல்லாம் எனக்கு தெரியாது நீ இனி அவளுக்கு எதுவும் செய்யக் கூடாது. இங்க பாரு அஞ்சு, எல்லாத்துக்கும் வாயை மூடிட்டு இருக்காத. பின்ன உன் தலைல மிளகாய் அறைச்சிருவாங்க. நீ இன்ஜினியரிங் தானே படிச்சிருக்க? அப்படின்னா நீயும் கிளம்பி இன்ஜினியரிங் காலேஜ் போ. அதைப் போய் பாத்துக்கோ”

     “நான் அங்க எதுக்கு பாட்டி?”

     “நீ தான் இனி அதைப் பாத்துக்கணும். ஒழுங்கு மரியாதையா அங்க போய் எல்லா வேலையும் பாரு. அந்த மதியை வெளியே ஏத்தப் பாரு. அதை விட்டுட்டு அவளுக்கு சேவகம் பண்ணிக்கிட்டு இருக்க?”

     “பாட்டி, நீங்க பேசுறது தப்பு”

     “சொல்றதைக் கேளு அஞ்சு. நான் உன் நல்லதுக்கு தான் சொல்லுவேன்”

     “நானா எப்படி அங்க போக? நானா போனா அங்க எப்படி மரியாதை கிடைக்கும்? அது மட்டுமில்லாம என்னால மேனேஜ்மெண்ட் எல்லாம் பாத்துக்க முடியாது. அதுல எனக்கு விருப்பமே இல்லை”

     “பாட்டி சொன்னா எல்லாம் சரியா தான் இருக்கும். போ போய் கிளம்பு போ”, என்று சொல்ல எரிச்சலுடன் அறைக்குள் சென்றவள் என்ன செய்ய என்று தெரியாமல் தடுமாறினாள்.

     “என்ன அஞ்சனா ஒரு மாதிரி இருக்குற?”, என்று கேட்டான் செழியன்.

     “நான் காலேஜ்க்கு போகணுமாம் அத்தான்”

     “காலேஜ்க்கா? எதுக்கு? திருப்பி படிக்க போறியா? நான் ஹனிமூன் போக பிளான் போட்டுட்டு இருக்கேன் டி. கெடுத்துறாத”, என்று சொல்ல அவள் முகம் சிவந்தது.

     அவள் சிரிப்புடன் அவனை முறைக்க “சரி எதுக்கு காலேஜ் போகணும்?”, என்று கேட்டான்.

     “இல்லை இன்ஜினியரிங் காலேஜை நான் பாத்துக்கனுமாம். பாட்டி சொல்றாங்க”

     “வாட்? அது அண்ணி பொறுப்புல இருக்கு. என்னைப் பாத்துக்கச் சொன்னாலும் அண்ணி தான் எல்லாம் பொறுப்பா செய்வாங்க. நான் ஆதி அண்ணனையும் அண்ணியையும் பாத்துக்க சொல்லிட்டேன். எனக்கு பிஸ்னஸ் பண்ணவே நேரம் சரியா இருக்கு. அங்க போய் நீ என்ன பண்ண போற?”

     “எனக்கும் அங்க போகப் பிடிக்கலை. நான் ஒரு ஆப் டெவலப்மெண்ட் ஸ்டடி சென்டர் ஆரம்பிக்கப் போறேன். மதி அக்கா தான் அதுக்கு எல்லா ஏற்படும் பண்ணுறேன்னு சொல்லிருக்காங்க. அதுக்குள்ள இந்த பாட்டி இப்படிச் சொல்றாங்க. அது மட்டுமில்லாம நான் மதி அக்காவை துரத்தணுமாம்”

     “இந்த பாட்டி ஏன் இப்படி பண்ணுறாங்க? சரி விடு நான் பாத்துக்குறேன்”, என்றான் செழியன்.

     அனைவரும் காலைச் சாப்பாடுக்கு அமர “நீ இன்னும் கிளம்பலையா டி?”, என்று கேட்டாள் பார்வதி.

     என்ன சொல்ல என்று தெரியாமல் அஞ்சனா கணவனைப் பார்க்க செழியனோ பாட்டியை முறைத்தான்.

     “என்ன ஆச்சு செழியா?”, என்று கேட்டார் ராயர்.

     “பாட்டி பண்ணுறது சரி இல்லைப்பா”

     “அம்மா என்ன செஞ்சாங்க?”

     “அஞ்சுவை இன்ஜினியரிங் காலேஜ் பொறுப்ப எடுக்கச் சொல்லிருக்காங்க. அண்ணியை வெளிய அனுப்பனுமாம்”, என்று சொல்ல பாட்டி தலைகுனிய அனைவரும் அதிர்ந்தார்கள். ஆதி எதையும் கண்டு கொள்ள வில்லை. மதியும் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

     “அம்மா என்ன இது? சொந்த குடும்பத்துக்குள்ள பிரச்சனையைக் கொண்டு வரப் பாக்குறீங்களா? நீங்க பண்ணுறது கொஞ்சம் கூட சரி இல்லை”, என்று எரிச்சலுடன் சொன்னார் ராயர்.

     “எனக்கு அந்த காலேஜ் மொத்த பொறுப்பையும் மதி கிட்ட கொடுத்தது பிடிக்கலை. ஆதி மட்டும் தான் வாரிசா? அவன் பொண்டாட்டிக்கு மட்டும் தான் எல்லாம் செய்யணுமா?”, என்று கேட்டாள் பார்வதி.

     “அவ என்னோட மருமக. அவ தான் பாத்துக்குவா. பாத்துக்குற பொறுப்பை மட்டும் இல்லை. அதை மொத்தமா அவ பேர்ல கூட எழுதி வைப்பேன். இதுல வேற யாரும் தலையிட கூடாது. எனக்கு எல்லாரும் ஒண்ணு தான். என் மத்த பசங்களுக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியும். அஞ்சுவுக்கு நல்ல மனசு. அதனால சரியா போச்சு. இதுல வேற பொண்ணு வந்திருந்தா குடும்பத்துல விரிசல் தான் வரும். இன்னொரு தடவை இப்படி நடக்க கூடாது. கவனமா இருந்துக்கோங்க”, என்று கண்டிப்புடன் சொல்ல பார்வதி கண்கள் கலங்கி விட்டது.

     ஆதியை தவிர அனைவரும் பார்வதியை முறைக்க ஆதி மட்டும் அமைதியாக எப்போதும் போல சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதனால் “பாரு ஆதி? உன் அப்பா என்ன பேச்சு பேசுறான்னு?”, என்று பேரனிடம் சொன்னாள் பார்வதி.

     அவன் அப்போதும் பாட்டியைக் கண்டுகொள்ளாமல் சாப்பிட “டேய், உன் கிட்ட தானே டா பேசுறேன்”, என்று சொன்னாள்.

     “நீங்க யாரு?”, என்று நிதானமாக கேட்டான் ஆதி.

     “ஆதி”, என்று பார்வதி அதிர “என் பொண்டாட்டியை ஏத்துக்காதவங்க எனக்கு எந்த உறவும் இல்லை. அவளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தா என் கிட்ட அன்பு இருக்கும். இல்லைன்னா…. அவங்க எனக்கு யாரோ தான்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

     இதற்கெல்லாம் காரணமான மதியை முறைத்த பார்வதி “எல்லாரையும் மயக்கி வச்சிருக்க அப்படி தானே டி?”, என்று கேட்டாள்.

     “இல்லையே, நீங்க என் கிட்ட மயங்கின மாதிரி தெரியலையே? உங்களை மயக்கினா தான் அது பெரிய சக்ஸஸ். நீங்க என்னைக்கு என் கிட்ட மயங்குவீங்க பாட்டி?”, என்று கேட்டு விட்டு சிறு சிரிப்புடன் சென்றாள். அவளை முறைத்து பார்த்தாள் பார்வதி.

     அன்று முழுக்க பார்வதி ஒரு மாதிரியாகவே இருந்தாள். மதியம் போல் மணிமேகலை கணவருடன் பிறந்த வீட்டுக்கு வந்திருந்தாள். ஒரே மாதிரி ஆனால் வேறு கலரில் இரண்டு புடைவைகளையும் மல்லிகைப் பூவும் வாங்கி வந்திருந்தாள்.

     “என்ன மணி சேலை எல்லாம்?”, என்று கேட்டாள் பார்வதி.

     “அஞ்சனாவுக்கு சேலை எடுக்கப் போனேன்? அதான் கொடுக்க வந்தேன் மா”, என்று சொன்ன மணிமேகலை “அஞ்சு இங்க வா”, என்று சொல்லி அதில் ஒரு சேலையை அஞ்சனாவுக்கு கொடுக்க “இன்னொரு சேலை யாருக்கு மா?”, என்று கேட்டாள் பார்வதி.

     “வேற யாரு நம்ம மதிக்கு தான். அவளும் எனக்கு பொண்ணு மாதிரி தான். நந்துக்கு அஞ்சுவுக்கு மதிக்கு மூணு பேருக்கும் தான் எடுத்தேன்”

     “என்ன டி சொல்ற? மதிக்கு எடுத்தியா? உன் பொண்ணுக்கும் மருமகளுக்கும் எடுத்த சரி? அது என்ன மதிக்கும் எடுக்குறது? அவளும் அஞ்சுவும் ஒண்ணா? அதுவும் ஒரே மாதிரி எடுத்துருக்குற?”, என்று கேட்டாள்.

     “அம்மா என்ன பேசுறீங்க? மதி இந்த வீட்டு பொண்ணு. அவ தான் இங்க எல்லாமே. நம்ம ஆதியோட பொண்டாட்டி. இப்ப இந்த வீட்டோட மூத்த வாரிசை வயித்துல சுமக்குறா. நீங்க இப்படி அவளை அவமரியாதையா பேசுறீங்க? நம்ம அஞ்சனாவை விட அவ எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டா?”

     “எனக்கு அவளைப் பிடிக்கலை. அவ மட்டும் வரலைன்னா அந்த இடத்துல நம்ம அஞ்சு இருந்திருப்பா மணி”

     “அம்மா அவ வரலைன்னா கூட ஆதி கண்டிப்பா அஞ்சுவைக் கல்யாணம் பண்ணிருக்க மாட்டான். அது மட்டும் இல்லாம அவ இல்லைன்னா இப்ப அஞ்சு செழியன் கல்யாணமும் நந்தினி நிரஞ்சன் கல்யாணமும் நடந்திருக்காது. அது மட்டுமில்லாம மதியா ஒண்ணும் ஆதியை தேடிப் போய் பிடிக்கலையே?”

     “என்ன டி உளறுற? இதுல அவ என்ன பண்ணினா? அவ என் கிட்ட ரெண்டு கல்யாணத்தையும் நடத்திக் காட்டுங்க பாப்போம்னு சவால் விட்டா தெரியுமா?”

     “அது சவால் இல்லை மா. அவ உங்களை தூண்டி விட அப்படி பேசிருக்கா மா. ஆனா அவ தான் எல்லாத்துக்கும் காரணம்”, என்று ஆரம்பித்து நடந்ததைச் சொல்ல பார்வதிக்கே வியப்பு.

     “நீ உண்மையா தான் சொல்றியா மணி? அந்த பொண்ணு உன்னைப் பாக்க வீட்டுக்கு வந்துச்சா?”

     “ஆமா. அப்புறம் அம்மா மதி ரொம்ப நல்ல பொண்ணு மா. அவளை இப்படி பேசி ஆதி அன்பை இழந்துறாதீங்க”, என்று சொல்ல பார்வதி யோசனையில் ஆழ்ந்தாள்.

     அன்று சேதுராமனும் பார்வதியை அதிகமாக கடிந்து கொள்ள செஞ்ச தவறு கொஞ்சம் உறுத்த ஆரம்பித்தது.

     அன்று இரவு “என்னை மன்னிச்சிரு மதி. நான் உன்னை சரியா புரிஞ்சிக்கலை. நான் பேசினதுக்கு எல்லாம் என்னை மன்னிச்சிரு”, என்று பார்வதி சொல்ல அனைவரும் வியந்து போனார்கள்.

     “என்ன பாட்டி நீங்க? என் கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு? நீங்க பெரியவங்க. உங்களுக்கு ஏதோ கோபம். இதுல என்ன இருக்கு?”, என்று கேட்டாள் மதி.

Advertisement