Advertisement

     “தமா ஆதியை சீக்கிரம் கூப்பிடு. நாம உடனே மதியை இங்க கூட்டிட்டு வரச் சொல்லணும். அவன் போகலைன்னா நாம போய் கூப்பிடலாம்”, என்று ராயர் சொல்ல “ஏன் அவளா வர மாட்டாளா? அவளை அழைக்க வேற செய்யணுமா?”, என்று கேட்டாள் பார்வதி.

     “அம்மா”, என்று கண்டிப்புடன் அழைத்தார் ராயர்.

     “அம்மாவும் பையனும் எதுக்கு தேவையில்லாம சண்டை போட்டுக்குறீங்க? அதுக்கு அவசியமே இல்லை. ஆதி மதியை நேத்து நைட்டே கூட்டிட்டு வந்துட்டான். இதோ அவங்களே வராங்க”, என்று சொல்ல லிஃப்டில் இருந்து புன்னகை முகமாக வெளிய வந்தார்கள். ஆதியும் மதியும்.

     மதியின் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது. ஆதியின் கம்பீரம் இன்னும் கூடி அவ்வளவு அழகாக இருந்தான். நந்தினி ஓடிச் சென்று அவளை அனைத்துக் கொண்டு “வாழ்த்துகள் அண்ணி, என்னை அத்தை ஆக்கிட்டீங்க”, என்றாள்.

     “தேங்க்ஸ் நந்து”, என்று சொன்னாள் மதி.

     “ஐ நான் சித்தப்பா ஆகப் போறேன்”, என்றான் செழியன். “நானும் தான்”, என்று குதுகளித்த விக்கி ஆதியைக் கட்டிக் கொண்டு “வாழ்த்துக்கள் அண்ணா”, என்றான். செழியனும் அண்ணனை கட்டி அனைத்து வாழ்த்துக்கள் சொன்னான்.

     “மதி வாழ்த்துக்கள் டா. எப்பவும் நீயும் ஆதியும் சந்தோஷமா இருக்கணும்”, என்றார் ராயர்.

     “தேங்க்ஸ் மாமா. நீங்களும் அட்டையும் எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க”, என்று அவர்கள் காலில் விழுந்தார்கள். பாட்டி தாத்தா காலிலும் விழுந்தார்கள்.

     “எனன பாட்டி உங்க சவால் எல்லாம் என்ன ஆச்சு? புட்டுகிச்சா? என்னமோ நான் திரும்பி இங்க வர மாட்டேன்னு பேசுனீங்க?”, என்று சிரிப்புடன் கேட்டாள் மதி.

     “குழந்தை வந்ததுனால தான் அவன் உன்னைக் கூப்பிடவே வந்தான். இல்லாட்டி வந்திருக்க மாட்டான். என்ன இருந்தாலும் உன் வயித்துல வளரது எங்க வீட்டு வாரிசாச்சே?”, என்று பாட்டி நக்கல் அடிக்க “அது தான் இல்லை. அவர் என்னைக் கூப்பிட வந்த அப்புறம் தான் நான் அவருக்கு விசயத்தையே சொன்னேன்”, என்று சொன்னாள் மதி.

     “இதை என்னை நம்பச் சொல்றியா?”, என்று பாட்டி கேட்க “ஏன் நம்ப முடியலை? நான் என் பொண்டாட்டியை பிரிஞ்சு இருக்க முடியாம தான் கூப்பிட போனேன்? எனக்கு அவ தான் உயிர். இன்னொரு தடவை அவளை கஷ்டப் படுத்துற மாதிரி ஏதாவது பேசுனீங்க நான் மனுஷனா இருக்க மாட்டேன்”, என்று சொல்ல பாட்டி கப்பென்று வாயை மூடிக் கொண்டாள்.

     அப்போதும் அடங்காமல் மதிக்கு மட்டும் கேட்கும் வகையில் “ரொம்ப ஆடாத டி. என் பேத்தி அஞ்சனா இங்க வரட்டும். அப்புறம் உனக்கு இருக்கு. கல்யாண விஷயம் கேள்விப் பட்டியா? நான் ஜெயிச்சிட்டேன்”, என்று பெருமை பேச “பார்வதி பாட்டியா கொக்கா?”, என்று சொல்லி விட்டுச் சென்றாள் மதி.

     “இவ என்னை பாராட்டினாளா, இல்லை கிண்டல் செய்கிறாளா?”, என்று எண்ணி பார்வதி பாட்டி மட்டும் முறைக்க மற்ற அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

     நாட்கள் அழகாக நகர்ந்தது. மதி குழந்தை உண்டாகி இருப்பது தெரிந்து மணிமேகலை வீட்டில் இருந்து அனைவரும் வந்து பார்த்தார்கள். நிரஞ்சனும் அஞ்சனாவும் அவளுக்கு வாழ்த்து சொன்னார்கள்.

     “உன் குழந்தைக்கு நான் தான் தாய்மாமன் சீர் செய்வேன்”, என்று நிரஞ்சன் அனைவரின் முன்னிலையிலும் சொல்ல மதி நெகிழ்ந்து போய் கண் கலங்கி “தேங்க்ஸ் அண்ணா”, என்றாள்.

     தமயந்தி சாப்பிடச் சொல்ல வில்லையே என்று வருத்தப் பட்டது போய் இப்போது தமயந்தியின் முழு நேர வேலையும் மதியை கவனிப்பது என்றானது.

      ஆதியோ அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான். அது போக தம்பி தங்கையின் திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் ஆதியே பார்த்துக் கொண்டான். மதிக்கு யாரும் ஒரு வேலையும் கொடுக்க வில்லை. அவள் தினமும் பள்ளிக்கு மட்டும் சென்று கொண்டிருந்தாள். மற்ற வேலைகளை நிரஞ்சனும் ஆதியும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

     ஒரு வழியாக திருமண நாளும் வந்தது. மதி சும்மா அமராமல் சின்ன சின்ன வேலைகளைச் செய்ய அதற்கு அனைவரும் அவளை அரட்டினார்கள். தன் மகளை அனைவரும் தாங்குவதைப் பார்த்த பரமசிவத்துக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. பெற்றவருக்கு இதை விட வேறு என்ன வேண்டுமாம்?

     முதலில் நிரஞ்சன் நந்தினியின் கழுத்தில் தாலி கட்ட நாத்தனார் முடிச்சை மதி தான் போட்டாள். அது பார்வதிக்கு கொஞ்சம் கடுப்பை தந்தது தான்.

     அடுத்த அரை மணி நேரம் கழித்து செழியன் அஞ்சனாவின் கழுத்தில் தாலி கட்டினான். நந்தினி நாத்தனார் முடிச்சைப் போட்டாள்.

     அதற்கு பின் இரண்டு ஜோடிகளும் ரிசப்ஷனில் நிற்க மற்றவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

     அன்று இரவு செழியன் அஞ்சனாவுக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அஞ்சனாவை மதி தான் அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.

     அறைக்குள் வந்ததும் செழியன் அவளை ரசனையாக பார்க்க அவன் பார்வையில் அவளுக்கு அதிர்வு தான். இத்தனை நாள் அவள் எவ்வளவு வம்பிழுத்தாலும் அவளை கண்டு கொள்ளாமல் செல்பவன் இன்று பார்வையாலே சாப்பிட்டால் அவளும் தான் என்ன செய்வாள்?

     “அத்தான் என்ன இது?”, என்று அவள் சிணுங்களுடன் கேட்க “என்ன என்ன?”, என்று கேட்டான் செழியன்.

     “எதுக்கு இப்படி பாக்குறீங்க?”

     “முத ராத்திரி அன்னைக்கு எப்படி பாப்பாங்களாம்?”, என்று சொன்னவன் அவளை இழுத்து அணைத்து காதல் செய்வதை தொடங்க அவன் அதிரடியில் திணறி அவனுக்குள்ளே அடைக்கலமானாள் அஞ்சனா.

     அமைதியாக இருக்கும் செழியனுக்குள் இப்படி ஒரு காதல் மன்னனா என்று வியக்கும் அளவுக்கு இருந்தது அவன் செய்கைகள். அதே போல நிரஞ்சன் வீட்டில் வைத்து அவனுக்கும் நந்தினிக்கும் முதலிரவுக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது.

     அழகுப் பதுமை என அறைக்குள் வந்த நந்தினியைப் பார்த்த நிரஞ்சன் “வா நந்து, இங்க உக்காரு”, என்று கட்டிலைக் காட்டினான். அமைதியாக அவன் அருகே சென்று அமர்ந்தவளுக்கு மனம் படபடப்பாக இருந்தது. அவள் படபடப்பை உணராமல் அவன் பேச ஆரம்பித்தான்.

     “என்னால உன் மனசை புரிஞ்சிக்க முடியுது நந்து. கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் அந்த ரிஷியை தான் மாப்பிள்ளையா நினைச்சு ஆசை வச்சிருப்ப. உடனே என் கூட கல்யாணம்னதும் உன்னால உடனே ஏத்துக்க முடியாது. அதனால உன் மனசு மாறுற வரைக்கும் நான் காத்திருப்பேன். உன்னைக் கஷ்டப் படுத்த மாட்டேன். நீ படுத்துக்கோ”, என்று சொன்னவன் விளக்கை அணைக்க நந்தினிக்கு கடுப்பாக வந்தது.

     நந்தினிக்கு மதி சொன்னது நினைவு வர இந்த எண்ணத்தை தடுக்கணுமே என்று எண்ணி அவனைப் பார்த்தாள். அவன் கட்டிலில் வந்து அமர்ந்தது விடி விளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது.

     “என் மனசுல இப்ப இல்லை முன்னாடி இருந்தே நீங்க தான் இருக்கீங்க? உங்களை தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப் பட்டேன் அத்தான். அந்த ரிஷியை ஒரு நாளும் நான் அப்படி நினைச்சது இல்லை. அப்பா சொன்னாங்க சரின்னு சொன்னேன். அன்னைக்கு உங்க கிட்ட கோபப் பட்டது கூட நீங்க வேற மாப்பிள்ளை பாக்குறேன்னு சொன்னதுனால தான். நீங்க அந்த ரிஷி கெட்டவன் அவனுக்கு பதிலா என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிருந்தா எனக்கு சம்மதம் அப்பா கிட்ட பேசுங்க அத்தான்னு சொல்லிருப்பேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அதனால தான் ரிஷியைப் பத்தி தெரிஞ்சதும் நான் அண்ணி கிட்ட சொல்லி எனக்கு உங்களை கட்டி வைக்கச் சொன்னேன். அதே மாதிரி அண்ணாவும் பேசினாங்க. ஆனா உங்க மனசுல நான் இல்லை போல? அதனால தான் எனக்கு டைம் கொடுக்குறீங்க? பரவால்ல. நான் உங்களுக்கு டைம் கொடுக்குறேன்”, என்று சொன்னவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொள்ள அவள் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான்.

     “ஏய் நந்து என்ன சொல்ற? இப்ப நீ சொன்னது எல்லாம் உண்மையா?”, என்று அவன் எதிர்பார்ப்புடன் கேட்க “எனக்கு தூக்கம் வருது. பேசாம தூங்குங்க அத்தான்”, என்றாள் அவள்.

     “ஏய் தூக்கமா? அது ரொம்ப முக்கியமா இப்ப? எனக்கு பதில் சொல்லு டி. ஏய் எந்திரி பதில் சொல்லு”

     “என்ன சொல்லணுமாம்?”

     “என்னை ஆசைப் பட்டு தான் கட்டிக்கிட்டியா?”

     “சத்தியம் பண்ணிச் சொன்னா நம்புவீங்களா?”

     “ஏய் அப்ப உண்மையா தான் சொல்லுறியா? எப்படி டி? எப்ப இருந்து?”

     “தெரியலை. ஆனா உங்க மேல ஒரு கிரஷ். அடிக்கடி சைட் அடிப்பேன். பேசணும் போல இருக்கும். ஆனா பயமா இருக்கும். உங்களுக்கு அப்படி எல்லாம் இல்லைல்ல? இப்ப எல்லாரும் சொல்லவும் தானே கல்யாணம் பண்ணுனீங்க?”

     “ஏய் உண்மையிலே நான் அப்படி எல்லாம் யோசிச்சது இல்லை டி. உனக்கே தெரியும் நான் அதிகம் பேச மாட்டேன்னு. ஆனா இப்ப நீ என் பொண்டாட்டி. உன்னை விட்டு பிரிஞ்சு இருக்க முடியாது டி”, என்று அப்பாவியாக சொன்னான்.

     “நீங்க தானே டைம் வேணும்னு சொன்னீங்க?”

     “உனக்கு கொடுக்குறேன்னு சொன்னேன் டி?”

     “நான் கேட்டேனா?”, என்று கேட்க அடுத்த நொடி அவள் கையைப் பற்றிக் கொண்டான். அவன் தொடுகையில் அவள் சிலிர்த்து கண்களை மூட அதற்கு பிறகு அங்கே இருவருக்கும் இடையில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால் படித்து முடிக்கும் வரை குழந்தை வேண்டாம் என்று மட்டும் முடிவு எடுத்திருந்தார்கள்.

காதல் தொடரும்…..

Advertisement